தங்கையைக் கட்டிக் கொடுத்தாச்சுதங்கவும் கட்டிக் கொடுத்தாச்சு
அங்கமும் பூட்டிக் களித்திடவே
தங்கமும் கொட்டிக் கொடுத்தாச்சு
திங்கக் கெழமை நாள்குறிச்சி
அங்க இங்க கடன் வாங்கி
உங்க எங்க சனங்களுக்கு
திங்க உங்க விருந்தாச்சு
வாப்பா உம்மா மனங் குளிர
உம்மாவின் காக்கா மகனெடுத்து
காக்கா என்தங்கைக்கு வரனாக்கி
தங்கைக்குக் கணவன் கிடைச்சாச்சு
மாறி மாறி அழைச்சாச்சு
மாரி மா(தி)ரி செல வழிச்சாச்சு
பாரி யாகி வள்ளலைப்போல்
வாரி வாரி கொடுத்தாச்சு
மச்சான் மெத்தப் படிச்ச மச்சான்
அச்சம் இல்லாமக் கேட்கும் மச்சான்
எச்சம் அளவும் விட்டுவைக்காமல்
மிச்சம் இல்லாம தொடச்சி வச்சான்
வெட்டி வேலை செய்துவந்த
வேலை வெட்டி இல்லா மச்சான்
காலை மாலை கணக்கில்லாமல்
நாலு வேளை திண்ணும் மச்சான்
வெள்ளையுஞ் சொள்ளையுமா திரியும் மச்சான்
வெள்ளையர் தேசம் விசா வேண்டி
தங்கையின் நகையையும் ஆட்டையை போட்டு
சிங்கைவரை மட்டுமே போயும் வந்தார்
வெட்டி வேலையும் விணையாச்சு
வீட்டில் புதுவரவு கருவாச்சு
வெத்து வேட்டு மச்சானுக்கோ
‘கெத்து’ இன்னும் கூடிப்போயிடுச்சு
சீர்செனத்தி தொடர்கதை யாச்சு
பசியாத்த பரிசோதிக்க பிரவசத்திற்கு
அத்தனை செலவுக்கும் அடகுவைக்க
அண்ணன் தலைக்கு விலையுண்டா?
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

