அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அரசியல் விமர்சனங்களை ஒருபக்கம் தள்ளி வைத்து விட்டு, பதவிக்கு வரும் நாட்களுக்கு முன்னர் தன்னார்வத்துடன் தான் சார்ந்து இருக்கும் பகுதிகளில் மிகச் சிறந்த சமூக முன்னோக்கு பார்வையுடன் சுகாதாரம் பற்றி பேசியும் செயலிலும் ஈடுபட்டு வந்த நமதூர் பேரூராட்சி மன்றத் தலைவர் அவர்கள் பேரூராட்சி மன்ற தலைமைப் பொறுப்பை ஏற்றதும் நிச்சயம் சாதிப்பார் என்பது பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பும் ஏக்கமுமாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.
அதன்படியே, தான் பதவியேற்ற சில தினங்களிலேயே அதிரைச் சுகாதாரத்திற்கு சவாலாக இருக்கும் குப்பைகளையும் ப்ளாஸ்டிக் பைகளையும் அகற்றும் துரித நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். அதற்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆதரவுகள் இருந்தாலும், பெரும்பாலோர் பெருமூச்சு விட்டனர் ஒருவழியாக சீக்கிரத்தில் சுகாதாரம் செழிக்கும், ப்ளாஸ்டிக் பைகள் ஒழிக்கப்படும் என்று நம்பினர்.
அதிகாலை நேரங்களில் தனது சொந்த அலுவல்களைப் போன்று ஊர் நலனை முன்னிருத்தி களப்பணியில் செயல்பட்டார் நமதூர் சேர்மன் அவர்கள். மாஷா அல்லாஹ் ! அவரின் பொதுநல எண்ணத்திற்கு அவரின் தூய செயலுக்கும் இறைவனின் நற்கூலி நிலைத்திருக்கும் இன்ஷா அல்லாஹ் !
நிற்க !
ஒரு தனிமனித பேரூராட்சி மன்றத் தலைவரால் மட்டுமே இது சாத்தியமா என்று ஏளனம் பேசியவர்களும், முட்டுக்கட்டைகள் வெட்டிப் போட்ட வெட்டிகளும் இன்று கைகொட்டிச் சுட்டிக்காட்டுகின்றனர் அதிரையில் மீண்டும் குப்பைகள் ப்ளாஸ்டிக் பைகள் என்று விளம்பரம் தேடும் கயவர்களுக்குரிய சூழலை உருவாக்கிக் கொடுத்தது யார் !?
அரசியல் பழிவாங்களாக நினைத்து, அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவரின் வளர்ச்சி தடுக்கப்பட வேண்டும் என்று தனது கட்டுப்பாட்டில் பே.ம.ஊழியர்களை கட்டுப்படுத்துபவர்களா ?
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் ஒருவரை துணைத் தலைவராக தேர்ந்தெடுத்தக்க ஒன்றிணைந்த சகோதர்களுக்குக்கும் அவர்கள் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும் தூரோகம் விளைவிக்க ஒத்துழையாமை இயக்கம் போல் தனித்தே பளிச்சிட நினைக்கும் பே.ம.துணைத் தலைவரா ?
பே.ம.ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் சார்பாக தான் போட்டியிட்ட வார்டிலேயே தோல்வியைத் தழுவியவர், தேர்தல் நேரங்களில் வசூலுக்கும் வாக்குக்கும் படையெடுக்கும் இஸ்லாமியர்களின் ஒன்று விட்ட சகோதரனைப் போல் வேடமிடும் அந்த கட்சிக் காரரின் சூழ்ச்சியா ?
பேரூராட்சி மன்ற அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிகளா ? அல்லது அங்கே வேலை செய்யும் துப்புறவு தொழிலில் ஈடுபடும் ஊழியர்களா ?
யாரைச் சுட்டுவது !? மேற்சொன்னவற்றிற்கு காரணகர்த்தவாக ஒருசாராரோ அல்லது அதற்கு மேலோ ஒன்றிணைந்துதான் இருப்பார்கள் என்று சந்தேகிக்கவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது சமீபத்திய நிகழ்வுகளில் !
நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட நம் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர் செயல்வீரராக இருக்க பொதுமக்களாகிய நாம் தான் முன்னின்று அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
சரி, என்னதான் செய்ய வேண்டும் !?
அவரின் ஒரே கோரிக்கை, குப்பைகளை அவற்றிக்கென வைத்திருக்கும் தொட்டிகளில் இடுவதும், ப்ளாஸ்டிக் பைகளின் உபயோகத்தை அறவே நிறுத்துவதும் ! இந்த இரண்டையும் முறையாக செயல்படுத்த அந்த பகுதியில் இருக்கும் பொதுமக்களால் மட்டுமே செய்ய முடியும்.
மாறாக, தனது முகத்திலேயே தூப்பிக் கொள்ளும் கேடுகெட்ட பழக்கம் நம்மவர்களிடையேதான் இருக்கிறது. அதுதான் தனது வீட்டு வாசலியிலே குப்பைகளைக் கொட்டிவிட்டு அல்லது அடுத்தவர்களின் வீட்டு வாசலில் கொட்டிவிட்டு அதனைச் சுத்தம் செய்ய பேரூராட்சி மன்றத் தலைவரைத் தேடுவதும் அவரைச் சாடுவதும் எவ்வகையில் நியாயம்.
பூக்களைத் தூவுவதுபோல் வீடுகளில் உருவாகும் கழிவுகளையும் குப்பைகளையும் தான் வசிக்கும் தெரு ஓரத்திலோ அல்லது தனக்கு பிடிக்காதவர்களின் வீட்டு வாசலிலோ போட்டுவிட்டுச் செல்லும் கேடுகெட்ட பழக்கம் ஒழிக்கப்பட வேண்டும்.
நமது சகோதரர் ஒருவரால் மட்டுமே இந்த சுகாதாரத்தை கொண்டு வர முடியாது அதற்கு நம்மக்களாகிய நீங்களும் முழுவதுமாக சுகாதராப் பொறுப்புடன் தனது மற்றும் குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் மனதில் கொண்டு அவசியம் ஒத்துழைக்க வேண்டும்.
முதல் நடவடிக்கையாக பேருராட்சி மன்றத் தலைவரோடு கைகோர்த்து அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து இனியொரு சூழல் இவ்வாறு நிகழாமல் இருக்க ஒத்துழைப்போம் !
வாய்க்காலைக் கண்டால் வாயிலிருப்பதை துப்புவதும், வீதியோரத்தைக் கண்டால் வீசிவிட்டுச் செல்வதும் ஒழிக்கப்பட வேண்டும்.
நமக்கு சுகாதாரம் அவசியம் அதற்கு நமது வீடு சுத்தம் அவசியம். சார்ந்திருக்கும் தெருவின் சுத்தமும் நமது வீடுகளின் சுகாதாரத்தை பேச வைக்கும் !
சிந்திப்போம் அதிரைச் சமூகமே !
பேரூராட்சி மன்றத் தலைவரின் ஒற்றைக் கோரிக்கையை ஒவ்வொருவரும் செயல்படுத்தினால் விரைவில் சுத்தம் நம்மோடு சுகமாக இருக்கும் !
இன்ஷா அல்லாஹ் !
அதிரைநிருபர் பதிப்பகம்