சமீபத்தில் ஒரு சகோதரியின் வலைத்தளத்தில் "ஆட்டு மூளை வறுவல்" செய்யும் முறை பற்றி கொஞ்சம் தலைவாரியாக எழுதியிருந்தார். [இதற்கு விலாவாரியாக என்று எழுதுவது சரியில்லை என நினைக்கிறேன்... விலாவாரி என்றால் "கிட்னி வறுவல்" சார்ந்தது].
இதற்கு சிலபேர் பின்னூட்டமாக 'நல்லா இருந்துச்சி" என்ற ரேஞ்சில் எழுதியிருந்தார்கள். அவர்கள் குறிப்பிட்டது சமயல் குறிப்பா? அல்லது வறுவலா எனத் தெரியவில்லை. எனக்கு உள்ளுர பயம் தான். நாமும் வெள்ளைக்காரன் மாதிரி. "Good!!! taste nice!!' என்று எழுத மனசு வராமல் நானும் எழுதினேன் இப்படி:
இதை சாப்பிட்டால் [கொலெஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள்] 'ஹிந்து'வாக இருந்தால் "சங்கு" நிச்சயம். 'முஸ்லீமாக' இருந்தால் "தலைமாட்டில் ஊதுபத்தி" நிச்சயம்.
ஆனால் என் நண்பனிடமிருந்து [Sabeer Ahmad-Dubai] வந்த மின்னஞ்சல் இப்படி இருந்தது;
"ஏன்டா, நீ ஜோக்கடிக்கறியா பயம் காட்டுறியா?"
"ஏன் கேட்கிறேன்னா, நம்ம பாய்கள் பலபேர் ரசித்து ருசித்து சாப்பிடும் அயிட்டம்டா இது. நான் துபாயில் இருக்கும்போது பெரும்பாலும் உணவகங்களில் இரவு உணவுக்காக காத்திருக்கும்போது காதில் விழுந்த அயிட்டங்களின் பெயர்களில் சிலவற்றையாவது உன் கைல சொல்லலேன்னா நான் சாப்பிடறது செரிக்காது . மூளை ஃப்ரை (fry) , குடல் வறுவல், பல்குத்தி fry (நாம செவரொட்டிம்போம்), கொத்துப் பரோட்டா (அதுவும் பீஃப் (beef) கொத்து, மட்டன் கொத்து, சிக்கன் கொத்துன்னாதான் கொஞ்சம் மரியாதையா பாப்பான். சாதா கொத்துன்னா கழுவாத டம்ள்ரில்தான் தண்ணீரே தருவான்.) ஆட்டுக்கால் பாயா, ஈரல் ஃப்ரை (fry), இப்படி சாப்ட்றாங்னா. அதுவும் உங்கூரு palm oilலதான் செய்வாய்ங்க (கட்ட தோசையும் சட்னியும் ஆர்டர் பண்ணிட்டு wait பன்ற என்னை ஏதோ செத்த எலிய பார்க்கிற மாதிரிதான் பார்ப்பாய்ங்னா).
"தலைமாட்டில் ஊதுபத்தி' நிச்சயம் பயம் காட்றியப்பா."
சமீபத்தில் ஒரு டயட்டிசியனிடம் [National Heart Institute-Kuala Lumpur] பேசிக்கொண்டிருக்கும் போது அவர் சொன்னது' இறைச்சி தாராளாமாக் சாப்பிடலாம், சாப்பிடும்போது இறைச்சி மட்டும் 5, 6 துண்டு அதாவது ஒரு துண்டு ஒரு தீப்பெட்டி அளவு என்றார், மனதுக்குள் சிரித்துக் கொண்டேன் எப்படி சொல்வது இந்த் உண்மையை இங்கு ஒவ்வோருவரும் ஒரு விருந்து என்று வந்து விட்டால் ஒரு தீப்பெட்டி தொழிற்ச்சாலையே சாப்பிடுகிறார்கள் என்று.
எனக்கு தெரிந்த ஒரு டாக்டர் சொன்னது: [ Dr. Bala Subramaniam. Cardiologist osler diagnostic center Chennai] "பொதுவா மட்டன் சாப்பிடலாம்' சாப்பிடும்போது, "பார்ட்ஸ்" தவிர்த்து விடுங்கள்.
" பார்ட்ஸ்னா என்ன டாக்டர்?"
"ஆர்கன்... கிட்னி / ஈரல்...."
"பார்ட்ஸ் சாப்பிட்டா என்னா ஆகும் டாக்டர்?"
"உங்க பார்ட்ஸ் கெட்டுடும்'
இதைவிட தெளிவான பதில் யாரும் சொல்லமுடியாது. பொதுவாக சுவரொட்டி, ஈரல் இவைகளுக்கு என்ன விதமான பட்டை , கிராம்பு, நெய் சேர்க்கலாம் என யோசிக்கும் முன் அதன் செயல்பாடுகள் [உடலில்] என்ன என்பதை தெரிந்து கொள்வது நல்லது. மற்றும் அன்றைக்கு [Physiology] "உடல் உறுப்புகள் & பயன்பாடுகள்" க்ளாஸ் நடக்கும் போது சந்தனக்கூடு பார்த்துட்டு தூங்கிட்டேனப்பா' னு புலம்பவும் கூடாது.
எனக்கு தெரிந்து ஆட்டு மூளையில் என்ன இருக்கிறது என ஒரு பேத்தாலஜி [Pathology] ரிப்போர்ட் பார்த்தால் 'இருப்பது எல்லாம் கொலஸ்ட்ரால்... கொலஸ்ட்ராலை தவிர ஏதுமில்லை' என்று விசாரனைக்கூண்டில் சொல்வது போல் உண்மை சொல்லும். பேத்தாலஜி [Pathology] ரிப்போர்ட் எந்த சூழ்நிலையிலும் பேத்தாது. பொதுவாக கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவு செரிக்க 3 மணி நேரத்துக்கும் மேல் ஆகலாம். [சைவ] சாதாரண உணவு செரிக்க 2 மணி நேரம் ஆகலாம்.
தொடர்ந்து வயிற்றுக் கோளாறு உள்ளவர்களுக்கு நெய்யில் செய்த உணவுகள் செறிக்க சில மணி நேரம் ஆகலாம். அதுதான் சமயத்தில் ‘உர்” சத்தம் வயிற்றிலிருந்து வரக்காரணம். இதைத்தான் தமிழ் சினிமாவில் “ எனக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தை தட்டி எழுப்பிட்டே’னு கண்ணு சிவக்க பேசராய்ங்களா??..
நாம் தினமும் 3 வேலை சாப்பிடுகிறோம். ஆனால் இது வரை எத்தனை முறை ஒரு டயட்டிசியனை பார்த்து பேசியிருப்போம்.?
பொதுவாக இதுபோல் ஈரல் சாப்பிட்டால் நம் ஈரலுக்கு நல்லது கிட்னி சாப்பிட்டால் கிட்னிக்கு நல்லது என நம்பிக்கை உண்டு, இதுவரை நம் ஊர் ஆட்கள் சாப்பிட்ட ஆட்டு முளைக்கு இதுவரை குறைந்த பட்சம் பத்து ஐன்ஸ்ட்டீன் , எட்டு ராமானுஜம், ஆறு தாமஸ் ஆல்வா எடிசன் இது வரை நம் ஊரில் இருக்க வேண்டும், எங்கே போனாணுங்க??
“அதெல்லாமா கதைக்கு ஆவப்போவுது... முன்னேயெல்லாம் இதல்லாம் பார்த்தா சாப்டாங்க?” என சொல்லும் ஊர் பெரிசுங்களை தாராளமாக 3 மண்டலத்துக்கு "அன்னம் தண்ணி யாரும் தரப்டாது" என சொல்லி ஊரை விட்டு தள்ளி வைக்கலாம் [யாரோ சொம்பை லவட்டிடானுங்க.. அவனுக்கு என்ன தீர்ப்பு??]
"நான் தான் இதுவெல்லாம் சாப்பிடுவேனே எனக்கு ஒன்னும் செய்யாதே!" என அடம்பிடித்தால் தனியாக வங்கியில் கணக்கு வைத்துக்கொள்ளவும். வயதான காலத்தில் தஞ்சாவூருக்கும் , பட்டுக்கோட்டைக்கும் ஆஸ்பத்திரி டோக்கன் வாங்க வரிசையில் நிற்க வேண்டிவரும். கையில் ஆளுக்கு ஆள் ஒரு பைலுடன் இன்டெர்வியுக்கு போகிற மாதிரி அலைவது காலக்கொடுமை.
உங்களுக்கு வயது 40ஐ தான்டிவிட்டதா?.. உங்கள் மனைவி இரவு சாப்பாட்டுக்கு
ஆட்டுமூளை / பாயா என சமைத்து வைத்து விட்டு "நீங்களே சாப்பிட்டுருங்க.. நான் காலையில் உள்ள இட்லி மிஞ்சிடுச்சு.. அதை சாப்பிடுகிறேன்" என்று சொல்கிறார்களா.. உங்கள் கல்யாணப் பத்திரிக்கையில் உங்கள் மனைவியின் பெயருக்கு முன்னால் 'தீன் குலச்செல்வி / திருநிறைச் செல்வி" என்று இருக்கும் அதை 'தீத்துக்கட்டும் செல்வி" என்று திருத்தி வாசிக்கவும்.
- ZAKIR HUSSAIN
இந்த ஆர்டிக்கில் நான் போன வருடம் எழுதியது, This is just for your reading pleasure.