அன்புக் கணவா
உன்
அன்பு கனவா?
உனை யெனக்கு
மணம் பேசிய
தினம் வீசிய
நினை விருக்கா?
அந்நாள் முதல்
என் வீட்டுப்பின் முற்றத்தில்
முருங்கைப் பூவில்
முல்லை மலர் வாசம்
வேப்பமரக் காற்றும்
தேனினிக்க வீசும்!
முற்றத்து தோட்டத்தில்
என்னையே
உற்றுப்பார்த்த
ஒற்றை ரோஜாவுக்கு
உன் பெயர் வைத்தேன்!
குட்டிச்சுவர் அணிலும்
சிட்டுக் குருவிகளும்கரையாத காகமும்
கருந்திரள் மேகமும்
சித்தெறும்பு சாரையும்
சிறியதொரு தேரையும்
என
எல்லாமும் நீயாகி
என்னையேப் பார்க்க
வெட்கி முகம் சிவந்தேன்!
கோழிகள் வளர்த்தேன்
தென்னையின் நிழலிலும்
உன்னையே உணர்ந்தேன்!
உன்னையே உண்டு
உனக்காக உடுத்தி
உன் நினைவில் உழன்றுஉன்
நினைவென்ற வட்டத்துள்
என்
உலகம் சுருங்கியது!
கொல்லைப்புறக் காற்றில்
கனத்த உன்
நினைவுகளைச் சுமந்தேன்!வெயிலும் தூறலும்
வானவில் தோரண நாளில்
திருகாணித் தோடணிந்த -என்
மருதாணிக் கை பிடித்தாய்!
என்
பெயர் முதல்
உயிர் வரை
அத்தனையிலும்
உனை இணைத்தாய்...
என்சொல் முதல்
பொருள் வரை
அர்த்தம் மற்றிப்போட்டாய்!
காலையும் மாலையும்
கனவும் நினைவும்
இருத்தலும் இறத்தலும்
இரவும் உறவுகளும்
எல்லாம்
மங்கலாய்த் தெரிய
நீமட்டும் நிலைத்தாய்நெஞ்சமெல்லாம் நிறைந்தாய்!
உன்னுயிரை
எனக்குள் விதைத்து
என்னுயிரைஉன்னோடு கொய்து
எங்கோ போனதும்...
அணில் முதல் ஆடு வரை
இணையோடு நின்றது!திரைகடலோடி நீ
திரவியம் தேட
அலைபேசி எனக்கு
ஆறாம் விரலானது!
கணினித் திரையில்
கற்கண்டு மொழியில்காதினில் இனிப்பாய்!
மற்றுமொரு
வானவில்தினம்
வரும்வரை
உயிரிலும்
வயிற்றிலும் உனையே சுமந்து
காத்திருக்கிறேன்!
காத்திருப்பதுதான்...
கவுரவமான காதல்!
-- சபீர்
-Sabeer.abuShahruk








