சென்னையிலிருந்து அதிரைக்கு, அதிரை அறிஞர் அஹ்மது காக்கா அவர்களுடனும் என் அன்பிற்கும் பிரியத்திற்கும் உரித்தான ஜமீல் காக்கா அவர்களுடனும் பயணிக்கக் அமைந்த சந்தர்ப்பத்தை ஓர் ஆக்கப்பூர்வமான வாய்ப்பாகவே நான் எடுத்துக் கொண்டேன்.
அப்பயணத்தில் இருவருடனான கலந்துரையாடலில் அவர்களுக்குச் சாதாரணமாகத் தோன்றும் பல விஷயங்களில் எனக்குப் பாடங்கள் இருந்ததை மறுக்க முடியாது.
அத்துடன், என் வாழ்நாளில் எத்தனையோ முறை சென்னை அதிரை பயணித்தபோதும் ஒரு நிமிடம்கூட தூங்கி வழியாமல் பயணித்ததும் அப்பயணம் ஒன்றுதான்.
அப்போது அஹ்மது காக்கா சொன்னார்கள், " 'கனவு மெய்ப்பட வேண்டும்' நல்லா எழுதியிருந்தாய். மற்றுமொரு தலைப்பு செய்யுள்களிருந்து தருகிறேன், எழுதுவாயா?" என்றார்கள்.
"முயற்சி செய்கிறேன் காக்கா" என்றேன். அந்தத் தலைப்புதான் இது. தேறினேனா இல்லையா என்று காக்காமார்கள்தான் சொல்ல வேண்டும். ஜஸ்ட் பாஸ் என்றால்கூட சந்தோஷம்தான்.
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
தீதும் நன்றும் பிறர்தர வாரா
தீரும் என்றும் துயர்நீ முயன்றால்
தீயும் நீரும் எதிர்ப்பொருள் தோழா
தீண்டும் முன்னர் உணர்தல் அறிவாம்
தேளும் பாம்பும் வாழும் உலகில்
தேனும் பாலும் தேடும் மனிதா
தென்னை விதைக்கத் தேங்காய் விளையும்
தீங்கை நினைக்கத் தீதே வினையாம்
தீவும் நாவும் நீர்சூழ நடுவில்
தேவைக் கேற்ப ஈரம் நன்றாம்
தேக்கை யொத்த திண்ணம் நாடு
தேகம் போகம் கூடின், குறையே
தேரை ஈந்த பாரியைப் போல
தேடிச் செய்வாய்த் தேர்ந்த உதவி
தோழன் என்னும் எண்ணம் கொண்டால்
தேசம் போற்றும் நேசன் நீயே
தோல்வி வெற்றி வாழ்வில் சகஜம்
தோற்றது என்றும் சிந்தையில் நிற்க
தொய்ந்து ஓய்தல் சாவின் சாயல்
துடித்து எழுந்தால் விடியும் கிழக்கு
தொற்றும் நோயென மடமை அறிவாய்
கற்றுத் தேர்ந்தால் காலம் கைவசம்
பெற்று எடுத்தப் பிள்ளை சிறக்க
வற்றிப் போகா செல்வம் கல்வி
பெற்றவர் தேவை பிள்ளைநீ செய்க
மற்றவர் மறுப்பினும் பெற்றவன் பார்ப்பான்
உற்றவர் உறவினர் சுற்றம் அமைந்திட
அற்றவர் வயிற்றுக்கு ஆகாரம் தந்திடு
உன்னைச் செதுக்க உளியாய் உழைப்பு
உண்மை வடிக்க உலகே மயங்கும்
தன்னைக் காட்டி முழங்கிடத் தலைவா
தகுதி வளர்க்க முனைந்திடல் அறிவாம்
முற்பகல் விதைக்க பிற்பகல் விளையும்
முட்செடி வளர்க்க முட்களே முளைக்கும்
புன்னகை விதைத்து பூசல்கள் ஒழித்திடு
பொன்னகை யொப்ப மின்னும் வாழ்க்கை
கற்றைக் கற்றையாய் செல்வம் பாரம்
சற்று நொடியில் சோகம் நீங்கிட
ஒற்றை இறையின் இல்லம் புகுந்திடு
குற்றமோ குறையோ தீர்ப்பவன் அவனே!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்