புறாக்களின் காலில் கட்டி கடுதாசி அனுப்பிய காலங்களிலும் தகவல் தொடர்பு நன்றாகத்தான் இருந்தது, ஒற்றன் வந்து தகவல் சொல்ல வரும் நேரமும் எதிரி நாட்டுப்படை கதவைத் தட்டும் நேரமும் ஒன்றே அமையப்பெற்ற சூழலும் இருந்திருக்கிறது. பின்னர் அனுப்பிய புறாவை சமைத்துச் சாப்பிட்டுவிட்டு தூங்குபவர்களும் அதிகரித்ததால், அந்த தகவல் தொடர்பும் மெல்ல மெல்ல அறுந்து போனது.
இந்திய தபால் / தந்தி துறையின் மகத்தான பணியை எவராலும் மறக்க முடியாது. எல்லா ஊர்களிலும் தபால் காரர் வீட்டுக்குத் தேடிவருவார்கள் அப்படித்தான் இந்தியாவைப் பார்த்திருக்கிறோம். ஆனால் 80களில் அதிரையில் காலையிலேயே போஸ்ட்மேனைத் தேடிச் சென்று கடுதாசியைக் வாங்கி வருபவர்களே அதிமாக இருந்தார்கள். ஒரே பெயரில் இருப்பவர்களை மேல்புறம் கீழ்புறம் என்று பிரித்துப் பார்க்கும் போஸ்ட்மேனையெல்லாம் இன்னும் மறக்கத்தான் முடியுமா ?
எழுதிய தபால் போய்ச் சேரும் வரை பொறுமை இருந்தது அதற்கு பதில் வரும் வரை காத்திருப்பும் கசக்காமல் இருந்தது, ஆனால் இன்றோ ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு, அல்லது குறுஞ்செய்தி அலைபேசியில் அனுப்பிவிட்டு அது கிடைத்து விட்டதா என்று ஃபோன் போட்டுக் கேட்டுக் கொள்ளும் அவசரம் எதைக் காட்டுகிறது !?
SMS - குறுஞ்செய்தி சிந்திய வினாடிகள் சிக்கென்று பறக்கிறது அங்கே வீடு பூட்டிக் கிடந்தாலும் எல்லையைத் தொட்டு விடுகிறது, தந்தி என்றொரு சேவையே இப்போது இல்லாமல் போகப் போகிறது. இனிவரும் தலைமுறைகளுக்கு அந்தக் காலத்தில் என்று ஆரம்பிக்க தந்தி ஒரு கருவாக இருக்கும்.
சமீபத்தில் நமதூர் சகோதரர் ஒருவர் தனது கூகில் ப்ளஸில் "அந்த காலத்திலேயே ’தந்திய நிப்பாட்டியிருக்கலாம்; பல கெழவிகளின் ‘பகீர்’ பீதி’யான அழுகை அல்லது ஒப்பாரிகளை தவிர்த்திருக்கலாம்;" என்று சொல்லியிருந்தார் !
சரி, அதிருக்கட்டும் நாம பேசுபொருளாக எடுத்துக் கொண்ட ஸ்மார்ட் ஃபோன் (சூசியமான அலைபேசின்னும் வச்சுக்கலாம்) வருகை எண்ணிலடங்கா மாற்றங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆடை விலகினாலும் கிளிக் அதனை மேடையேற்றியும் ஒரு கிளிக், அச்சுறுத்தினாலும் கிளிக் இப்படியாக எத்தனையோ கிளிக்கிக் கொண்டே இருக்கவும் வைத்திருக்கிறது.
அடுப்படிக்கு ஒரு ஸ்டேடஸ், அசலூருக்கு ஒரு ஸ்டேடஸ் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
மேற்சொன்னவைகள் சாம்பிள்தான், இனி நீங்களும்தான் சொல்லனும் ஸ்மார்ட் ஃபோன் வரமா / சாபமா !?
வாருங்கள் விவாதிக்கலாம் !
அதிரைநிருபர் பதிப்பகம்