
பிரதமராக பதவி ஏற்ற களைப்பு தீரும் முன்பே பிரதமர் நரேந்திர மோடி நேபாளத்துக்கும் பூடானுக்கும் அரசுமுறைப் பயணமாக சென்று வந்தார். தேர்தலுக்கு முன்பாக நேபாளத்தையும் பூடானையும் இந்தியாவோடு இணைத்து ஒரு அகண்ட பாரதத்தை இந்து ராஜ்யமாக நிறுவுவோம் என்று மோடியின் பாரதீய ஜனதா பரப்புரை செய்தது. இத்தகைய பரப்புரைகளுக்கும் பிரதமரின் பூடான், நேபாள உடனடி பயணத்துக்கும் நாம் முடிச்சுப் போட்டு பார்க்க விரும்பவில்லை. அத்தகைய உள்நோக்கம் அவருக்கும் அவரை ரிமோட் வைத்து இயக்கும் இயக்கங்களுக்கும் இருந்து இருக்கலாம் . ஆனால் ஜப்பானுக்கு அவர் சென்று வந்தத்தில் இத்தகைய உள்நோக்கத்தின் ஒரு துளி கூட இருப்பதாக நாம் கருத இயலாது. காரணம் அவர் சென்றது ஜப்பானுக்கு. பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானியர்கள் சப்பாணியர்களல்ல. அத்தகைய உள்நோக்கங்கள் இருந்தாலும் ஜப்பானில் அந்தப் பருப்புகள் வேகாது.
தனது அரசு ஒரு வளர்ச்சிக்கான அரசு என்று வர்ணித்துக் கொண்டிருக்கும் மோடி , ஏற்கனவே தானும் வளர்ந்து தன்னை நம்பும் நாடுகளையும் வளர்க்க உதவும் ஜப்பானைத் தேடிப் போவது ஒரு வகையில் தான் வளர்ச்சியை நோக்கிச் செல்ல ஆரம்பித்து இருக்கிறேன் என்று நாட்டோருக்கு அறிவிக்கும் உள்நோக்கமாக – இன்னொரு வார்த்தையில் சொல்லப்போனால் ஒரு காரியத்தை ஆரம்பிக்கும் முன்பு போடப்படும் பீடிகை அல்லது பில்ட் அப் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். இப்படிப்பட்ட பயணங்கள் ஒரு போக்குக் காட்டவா பொழுது போக்கவா அல்லது உண்மையில் பொருளாதாரத்தை வளர்க்கவா என்பதையும் இந்தப் பயணத்தின் வெற்றியையும் இனி வரும் காலம்தான் நிரணயிக்கும். இப்போது இதை நாம் எதிர்மறையாக அல்லாமல் உடன்பாடாகவே இந்தப் பயணத்தைக் கருதலாம். அவ நம்பிக்கை கொள்ளாமல் நம்பிக்கையையே நரேந்திர மோடி மீது வைக்கலாம்.
இந்தியாவுக்கும் ஜப்பானுக்குமான உறவு என்பது நெடுங்கால வரலாற்றுப் பின்னணி கொண்டது. இந்தியாவில் வேதங்களால் ஏற்பட்ட விளைவுகளையும் மத-சாஸ்திர சம்பிரதாயங்களையும் சீர்திருத்துவதற்காக கவுதம புத்தரால் தோற்றுவிக்கப்பட்ட புத்த மதம் தனது வேர்களையும் கிளைகளையும் விரித்த நாடுகளில் ஜப்பானும் ஒன்று . இன்றும் கூட ஜப்பானின் தேசிய மதம் புத்த மதமே. ஆகவே ஜப்பானின் தேசியமதத்தின் பிறந்த இடம் இந்தியா அது புகுந்த இடம் ஜப்பான். எனவே கலாச்சார வழி உறவுகள் நமக்கும் ஜப்பானுக்கும் நெடுங்காலமாக இருப்பதால் இந்தியாவை ஒரே கலாச்சாரமான நாடாக மாற்ற வேண்டுமென்று பயிற்றுவிக்கப்பட்ட நரேந்திர மோடியின் ஆர் எஸ் எஸ் கொள்கைகள் புரையோடிப் போன மனதில், இந்தியா பல்வேறு இன மொழி கொண்ட நாடுதான் என்பதை இந்தப் பயணம் உணர்வதற்கு உரம் போட்டு இருக்கும் என்று நம்பலாம்.
கலாச்சாரத்துக்கு அப்பால், நவீன கால அரசியல் ரீதியாக இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கும் அவரது ஐ. என் ஏ இராணுவ அமைப்புக்கும் அங்கீகாரம் அளித்து வாரி அணைத்துக் கொண்ட நாடுகளில் ஜப்பான் தலையாயது. இந்த வரலாற்றையும் நரேந்திர மோடி ஜப்பானுக்குப் போயாவது உணர்ந்து இருக்கலாம்.
பண்டித ஜவாஹர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமரான காலம் முதல் ஜப்பானுடன் நல்லுறவை வல்லர்த்துவந்தார் என்பதும் ஒரு வரலாறுதான். குறிப்பாக அன்றைய ஜப்பானியப் பிரதமர் நொபுசுகே கிஷிக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவும், 1957-இல் அவரது இந்திய விஜயமும் இன்று நாம் உதாரணமாக காட்டும் அன்றைய இந்தியாவின் பல வளர்ச்சித் திட்டங்களில் ஜப்பானிய ஒத்துழைப்பை நாம் ஒதுக்கிவிட இயலாது. ஜப்பானின் பல பிரதமர்கள் இந்தியாவுக்கும் இந்தியாவின் கிட்டத்தட்ட எல்லாப் பிரதமர்களும் ஜப்பானுக்கும் சென்று வந்து உறவுளை வலுப்படுத்தி இருக்கிறார்கள்.
ஜப்பானுக்கு செல்லாத இந்தியப் பிரதமர்கள் என்று பார்ப்போமானால் மரியாதைக்குரிய வி. வி. சிங் அவர்கள் பிரதமராக செல்ல இயலவில்லை காரணம், மண்டல் கமிஷன் விவகாரத்தால் அவர் முதுகில் குத்தப்பட்டதால் பதவி விலக நேரிட்டதுதான். . அடுத்து சரண் சிங், தேவ கவுடா, சந்திர சேகர், குஜ்ரால் ஆகியோரும் ஜப்பான் செல்லவில்லை. காரணம் ஜப்பான் போவதற்காக விசா ஸ்டாம்ப் செய்வதற்காக இவர்களின் பாஸ்போர்ட் ஜப்பான் எம்பாசிக்கு செல்லும் முன்பே இவர்களின் பிரதமர் பதவி காலியாகிவிட்ட காலக்கிரகம்தான்.
இப்போதும் அமெரிக்கா முதலிய நாடுகளுக்கு செல்லும் முன்பே நரேந்திரமோடி அவர்கள் ஜப்பான் விஜயத்தை தேர்ந்தெடுத்து இருப்பது பல பொருளாதார மற்றும் வெளியுறவுத்துறை அரசியல் இராஜ தந்திரம் என்று சில ஊடகங்கள் வர்ணிக்கின்றன.
ஜப்பானில் ஐந்துநாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் முதலாவதாக தனது சொந்தத்தொகுதியான வாரணாசிக்கு , வரப்பிரசாதமாக ஒரு மேம்பாட்டுத்திட்டத்தை மேற்கொள்ள ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு வந்திருக்கிறார். கங்கையை தூய்மைப் படுத்துவது என்று பட்ஜெட்டில் அறிவித்தத்தன் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தத்தின் ஆரம்பம் இருக்கும் என்று கருதுகிறோம். இந்த ஒப்பந்தத்தின் தொடக்கமே அமர்க்களமாக ஆரம்பமாகி இருக்கிறது. எப்படிஎன்றால் ஜப்பானின் தலைநகரம் டோக்யோ. ஜப்பானின் ஸ்மார்ட் சிடி என்று வர்ணிக்கப்படும் நகரம் கியோட்டா . இந்த கியோட்டா நகரத்தின் அமைப்பின் அடிப்படையில் வாரணாசி நகரமும் அதன் பழமையும் பாரம்பரியமும் மாறாமல் வடிவமைக்கப்படும் என்பதற்கான ஒப்பந்தம் இந்த நகரில்தான் கையெழுத்தாகி இருக்கிறது. வழக்கத்துக்கு மாறாக டோக்கியோவை விட்டு கியோட்டா நகருக்கு வந்து மோடியை வரவேற்றார் ஜப்பான் பிரதமர். இந்த நகரில்தான் ஜப்பானின் பிரதமர் மோடிக்கு விருந்தளித்தார்.
அத்துடன் ஜப்பான் நாட்டு பாரம்பரியப்படி கியோட்டா நகரின் சடங்குகளில் ஒன்றான மீனுக்கு உணவளிக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் மீன்களுக்கான உணவை மோடி தனது கைகளில் வழங்கப்பட்ட தட்டில் இருந்து எடுத்து எடுத்துப் போட்டது கவின் மிகு காட்சியாக இருந்தது.
அதே நேரம், இந்தியாவில் மோடி தான் கலந்துகொள்ளும் அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் அசைவ உணவைப் பரிமாறக் கூடாது என்று அரசு அனுப்பி இருக்கும் சூடான சுற்றறிக்கையும் ஏனோ நமது நினைவில் வந்து தொலைத்தது.
புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்றுவது, ரூ.2.10 லட்சம் கோடி நிதியுதவி, பாதுகாப்புத் துறையில் இருதரப்பும் உதவி என்று தொடங்கி, ஜப்பானிடமிருந்து பல ஆக்கபூர்வமான ஒத்துழைப்பைப் பெறுவதற்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
ஆனால் நீண்டகாலமாக முடிவு காணப்படாத இந்திய - ஜப்பான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இந்த பயணத்திலும் பற்பல சந்திப்புகளிலும் கலந்துரையாடகளிலும் விவாதிக்கப்படவோ தீர்வு காணப்படவோ இயலவில்லை.
பிரதமராகப் பதவி ஏற்ற நூறு நாட்களுக்குள் நரேந்திர மோடி சீனாவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பல வெளியுறவு கொள்கைகளை எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது. இதனால், இந்தியாவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் நிலைக்கு உலக நாடுகள் தள்ளப்பட்டுள்ளன என்று அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கான முன்னாள் இந்தியத் தூதர் ரோனன் சென் தெரிவித்துள்ளார். இதனால்தான் தனது சதுரங்க ஆட்டத்தை ஜப்பானில் தொடங்கி இருக்கிறாரோ பிரதமர் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். சீனா என்பது நம்மால் அவசியம் கவனிக்கப்பட வேண்டிய நாடு என்பதை இந்தியாவில் ஆட்சிக்கு வரும் எந்தக் கட்சியும் மறுக்க இயலாது ; ஒதுக்கிவைக்க இயலாது.
ஆசியாவில் சீனாவின் வளர்ச்சி என்பது ஜப்பான் போன்ற பொருளாதார வளர்ச்சி மிகுந்த நாட்டுக்கும் இந்தியா போன்ற மனிதவளம் (எண்ணிக்கையில் மட்டும்) மிகுந்த நாட்டுக்கும் ஏற்பட்டுள்ள பொதுவான அச்சுறுத்தல்தான் என்பதை இவ்விரு நாட்டுத்தலைவர்களும் உணர்ந்து இருப்பார்கள்.
சீனாவின் வளர்ச்சி இப்படி ஒரு அச்சுறுத்தலை இந்தியா ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஒரே அளவில் ஏற்படுத்தி இருந்தாலும் சீனாவுடனான நட்புச்சுவரை இரண்டு நாடுகளுமே எளிதாக இடித்துத் தள்ளிவிட இயலாது. அந்த வகையில் நண்பனுக்கு நண்பன் நண்பன் என்ற தத்துவத்தையும் பகைவனுக்குப் பகைவன் நண்பன் என்ற தத்துவத்தையும் இரண்டு நாடுகளுமே கையாள வேண்டிய நிலைமையும் இருப்பதை ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும்போது இரு நாட்டுப் பிரதமர்களும் பேசியே இருப்பார்கள்.
சீனாவைப் பற்றி ஜப்பானின் அந்தரங்கமான எண்ணங்கள் ஒரு புறமிருந்தாலும் சீனாவில் ஜப்பானின் முதலீடுகள் ஒன்றும் குறைவானதல்ல என்று எகனாமிக் டைம்ஸ் குறிப்பிடுகிறது. ஆம்! கொஞ்சமல்ல 20,000-க்கும் அதிகமான ஜப்பானிய நிறுவனங்கள் சீனாவில் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. ஜப்பானின் அந்நிய முதலீட்டில் மூன்று லட்சம் கோடி அமெரிக்க டாலர் அளவான தொகை சீனாவில் மட்டும் முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது. மீன் கொத்தும் இடத்தில் தூண்டில் போடுவதும் ஜப்பானிய பொருளாதார அணுகுமுறைதான்.
ஆனாலும் அண்மைக்காலமாக ஜப்பான் சீனாவில் செய்துவந்த முதலீடுகள் கணிசமாக குறைய ஆரம்பித்து இருக்கிறதாம். இப்படி சீனாவில் குறையத்தொடங்கி இருக்கும் ஜப்பானிய முதலீடுகளை இந்தியாவின் பக்கம் திருப்பிவிடுவது பற்றிய ஒரு கோரிக்கையும் பிரதமர் மோடியால் ஜப்பானியப் பிரதமரிடம் வைக்கபட்டிருக்கலாம் . ஆனால் அது பற்றி செய்திகள் வெளிவரவில்லை. இதற்குக் காரணம் இருக்கிறது.
இவ்விதம் மோடியால் கோரிக்கைவைக்கப்பட்டால் ஏற்கனவே அங்கங்கே எல்லைப் பிரச்னையில் சீனாவுடன் மோதிக் கொண்டு இருக்கும் இந்தியாவுக்கும் ஏற்கனவே பல கோடி டாலர்களை சீனாவில் முதலீடு செய்துள்ள ஜப்பானுக்கும் சீனாவால் இன்னும் தொல்லைகள் வர வாய்ப்புண்டு என்று இரு தலைவர்களும் கருதி ‘ ஓடு மீன் ஓட உரு மீன் வரும்வரை வாடி இருக்கும் கொக்கு’களாக காத்திருந்து பார்க்க முடிவு செய்து இருக்கலாம்.
சரிந்து கிடக்கும் இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த வேண்டுமானால் இந்தியா உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது உணவுக்கு உப்புப் போல் அவசியம். அவ்விதம் இந்தியா குறிக்கோள் வைத்து பயணித்தால் குறுக்கே வந்து நிற்பது ஏற்கனவே வளர்ந்து இமய மலை போல் நிற்கும் சீனாதான்.
அதே போல் ஆசியாவில் பொருளாதார வலிமையையும் இராணுவ வலிமையையும் தனது நாடே பெற்றிருக்க வேண்டுமென்று ஜப்பான் ஆசைப்படுவதும் இயல்பே. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவும் ஜப்பானும் நெருங்கி உறவாடுவது சீனாவின் ‘கண்ணைச் சுற்றி பறக்கும் கண் வலி கொசுவாகத்தான்’ சீனா உணரும். இந்த இரு நாடுகளின் நெருக்கத்தை சீனா கவலையுடன் கவனிக்கும் ; இந்த நாடுகள் நெருங்கிவருவது தனக்கு ஆபத்து என்று சீனா அந்தமுயற்சிகளைத் தடுக்கும் ஆயத்தங்களில் இறங்கும்.
பெரிய அளவில் ஜப்பானை சீனா மிரட்ட இயலாது என்றாலும் இன்றளவும், ஒப்பிடும்போது பலவகையிலும் பிற்பட்ட நிலையில் ஜான் ஏறினால் முழம் சறுக்கும் அளவுக்கு நோஞ்சானாக இருக்கும் இந்தியாவை பணியவைக்க சீனா நிச்சயம் முயலும்.
சீட்டுக் கட்டில் கட்டப்பட்ட கோட்டையில் ஒரு சீட்டை உருவிவிட்டால் கோட்டை தகர்ந்துவிடுமென்ற தத்துவத்தை சீனா அறியாமலிருக்காது . அப்படி ஒரு நிலை வந்தால் இந்தியாவை மிரட்ட, இலங்கையை சீனா துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தும் வாய்ப்புண்டு.
அதற்கான அடையாளங்கள் இலங்கையில் தென்பட ஆரம்பித்துவிட்டன. இந்திய இலங்கை நாடுகளின் உறவில் இந்தியாவை இலங்கை மிரட்டும் தொனியிலும் இந்தியா இலங்கையை தாஜா செய்யும் நிலையிலேயே இருப்பதையும் அரசியல் நோக்கர்கள் கவனித்து இருக்கலாம். இந்த நிலமைக்கு இலங்கையின் மீது சீனாவின் செல்வாக்கும் ஒரு காரணம் என்பது யதார்த்தமான பதார்த்தம்.
மொத்தத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பானிய விஜயம் , அந்த விஜயத்தின் போது மேளம் அடித்து தாளம்போட்டு கொண்டாடினாலும் ‘ஆரியக் கூத்தாடினாலும் காசுக் காரியத்தில் கண்வைத்து' தற்போது ரூ.2.10 லட்சம் கோடி நிதியுதவி பெற்று வந்துள்ளதை பாராட்டியே ஆகவேண்டும். ஏற்கனவே கூவம் மணக்கிறது என்ற கோஷத்தை பார்த்துவிட்டோம். இப்போது கங்கை மணக்கப் போகிறது என்பதும் என்னவாகப் போகிறது என்பதையும் பார்க்கலாம். நடப்பவை நல்லதாக நடக்குமென்று நம்புவது இந்தியனின் இயல்பு. அந்த இயல்பின்படி இன்றைய நிலையில் அவ்வளவாக எதிர்மறையாக விமர்சிக்க முடியாத பயணமாகவே இதை இப்போது காணலாம். காலம்தான், இந்த நம்பிக்கைக்கு பதில் சொல்லும்.
ஆனால் அங்கு ஒரு கூட்டத்தில் அவர் பேசும்போது, "இந்தியனின் மரபணுவில் அகிம்சைதான் இருக்கிறது" என்று பேசியதை கூடி இருந்தவர்கள் கைதட்டி வரவேற்றார்கள். ஆனால் அதைப் பார்த்த நமது மனதில் குஜராத் கலவரமும், போலி என்கவுண்டர்களும் , மோடியின் அமைச்சரவையில் இருந்தோர்கள் மீது இன்றளவும் இருக்கும் கொலைக் குற்ற வழக்குகளும் முழுநீள திரைப்படமாக ஓடியதை மறுக்க இயலாது. ஷைத்தான் வேதம் ஓதுகிறது என்றே நாம் நினைக்க வேண்டி இருந்தது. பார்க்கலாம் இந்தப் படம் நூறுநாள் ஓட்டினாலும் இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறது. ஐந்தாண்டுகள் ஓடவேண்டிய இந்தப் படத்தின் இறுதியில்தான் இதன் முடிவு காமெடியா அல்லது டிராஜெடியா என்று தெரியும்.
இபுராஹீம் அன்சாரி