பசியால் வயிறு வற்றிக் காணப்படும் வறியவன் போல், அந்த ஆற்றின் நீரும் வற்றிய வயிறு போல் தேங்கித் தேங்கி ஓடிக் கொண்டிருந்தது. அதன் கரையோரங்களில் ஊர்ந்தும் நீந்தியும் செல்லும் பாம்பும் நண்டும் சின்னச்சின்ன மீன்களும் சந்தோசம் கொண்டாடிக் கொண்டு இருந்தன. அந்த ஆற்றின் ஓரத்தில், பட்டும் படாததுபோல் இந்தப் பதிவின் கதாநாயகனான ஒரு கைத்தடி மிதந்து கரையைத் தழுவித் தடவியது. சூரியன் தன் கதிர்களை சூடாக்க சூடாக்க வறண்டு கொண்டிருந்த நீர் இன்னும் வற்றியது. கைத்தடியும் முக்கி முனங்கிக் கொண்டு புரண்டு புரண்டு ஆற்றின் அலைகளில் அசைந்து கொண்டு இருந்தது. அதற்கும் வயதாகிவிட்டதால், தான் வாழ்ந்த பழைய கதையை தன்னையும் மறந்து புலம்ப ஆரம்பித்தது.
“ பெரிய ஐயா உயிரோடு இருந்து இருந்தால் எனக்கு இந்தக் கதி உண்டாகி இருக்குமா ? போகுமிடமெல்லாம் என்னைக் கையோடு கொண்டு செல்வாரே ! படுக்கையறைவரை என்னைக் கொண்டு சென்று பத்திரமாக சாத்தி வைப்பாரே! படுக்கையை விட்டு எழுந்ததும் என்னைத்தானே அவரின் கைகள் தேடித்தழுவும்? இந்த நாதாரிப் பயல் வந்து என்னை இந்த ஓடும் ஆற்றில் தூக்கி எறிந்துவிட்டானே! எனக்கா இந்தக் கதி வரவேண்டுமென்று வாய்விட்டுப் புலம்பிக் கண்ணீர் வடித்தது. அதுவரைக்கும் இதை மவுனமாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த ஆற்றின் தெறித்த, உடைந்த படிக்கட்டு கைத்தடியின் அவல நிலையைக் கேட்டு , ஒரு ஆர்வத்துடனும் ஆதங்கத்துடனும் கைத்தடியை விசாரிக்க ஆரம்பித்தது.
“ யாரப்பா இப்படிப் புலம்புறது?” என்று படிக்கட்டு கேட்டது.
“ பாவி! யாரப்பா என்றா என்னை நோக்கிக் கேட்கிறாய்? எங்க பெரிய ஐயாவோடு நான் செல்லும் இடமெல்லாம் அவருக்குக் கிடைக்கும் அதே மரியாதை எனக்கும் கிடைக்குமே! அவர் காலடி வைக்குமுன் நானல்லவா முதலடி வைப்பேன் ! இப்படிப்பட்ட இராஜவம்சத்து வாழ்க்கை வாழ்ந்த என்னை அவரின் கொள்ளுப்பேரன் இந்த ஆற்றில் தூக்கி எறிந்துவிட்டானே பாவி! “ என்று வார்த்தையை நிறுத்தி, தேம்பி அழ ஆரம்பித்தது.
“ சரி ! சரி! அழாதே! மனதைத் தேற்றிக் கொள். அது சரி உன் கதைதான் என்ன ?” என்று படிக்கட்டு விசாரிக்க , பொங்கி வரும் கண்ணீர் தண்ணீரோடு கலந்து ஓட, கைத்தடி தனது கதையை சொல்ல ஆரம்பித்தது. “ நான் ... நான் செல்வ ஜமீன்தார் ஜிமிக்கியின் கைத்தடி. அவர் பெயரைச் சொன்னால் இந்த வட்டாரத்துக்கே தெரியும். அவர் இட்டது கட்டளை. சொன்னது தீர்ப்பு. என்னை அவர் கூடவே வைத்து இருப்பார். வாரம் ஒரு முறை அவர் தன் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கிராரோ இல்லையோ எனக்கு ஆலிவ் ஆயில் தடவி பாலிஷ் போட்டு தனது வைரமோதிரம் அணிந்த கைகளில் வைத்து இருப்பார். பஞ்சணையிலும் பட்டு மெத்தையிலும் அவர் படுத்துப் புரளும்போது அவரின் பக்கத்திலேயே மவுன சாட்சியாக இருந்தவன் நான். செல்வமும் செல்வாக்கும் சேர்ந்து செழித்துக் கொண்டிருந்த காலத்தில்தான் இடி ஒலி கேட்ட நாகம்போலத் தவித்தார் என் ஜமீன்தார் எஜமான் “ என்று தொடங்கியது கைத்தடி.
“ அடடே! அப்படி என்ன தலை போகிற விஷயம் ? “ என்று படிக்கட்டு ஒரு கேள்வி கேட்டு வைத்தது.
“ அவசரப்படாதே ! அதைத்தானே உன்னிடம் கொட்ட வந்திருக்கிறேன். கொஞ்சம் பொறுமையாகக் கேள் அந்தக் கதையை “ என்றது கைத்தடி.
“எங்களின் ஜமீனுக்குப் பக்கத்தில் இன்னொரு ஜமீன் இருக்கிறது. அவர்கள் நிலத்துக்கும் எங்கள் ஜமீன் நிலத்துக்கும் இடையில் ஒரு வரப்பு இருக்கிறது. அந்த வரப்புத்தான் இரண்டு ஜமீன்களையும் வீராப்புப் பேச வைத்தது. வரப்பு யாருக்கு சொந்தம் என்று இரண்டு ஜமீன்களுக்கும் மோதல் உருவானது. இரண்டு பக்கமும் தொடர்ந்து பஞ்சாயத்து மற்றும் அடிதடி ரத்தக் களறி என்று இந்த விவகாரம் பரிணாம வளர்ச்சியடைந்தது. இறுதியில் நீதி மன்றத்துக்கு சென்று இதைத் தீர்த்துக் கொள்வது என்று மூன்றாவது ஜமீனால் தீர்ப்பு சொல்லப் பட்டது.
எங்கள் ஜமீன்தார் சப்- மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் இருந்து ஹைகோர்ட் வரைக்கும் உள்ள எல்லாப் படிக்கட்டுகளிலும் என்னையும் கையில் பிடித்துக் கொண்டு ஏறி இறங்கினார். ஒவ்வொரு கோர்ட்டின் படிக்கட்டுகளிலும் என்னை ஊன்றி ஊன்றி ஏறினார். “ என்றது.
உடனே ஆற்றின் படிக்கட்டு “ அடப்பாவி அந்தக் கைத்தடி நீதானா? ஹைகோர்ட் மாடிகளின் படிகளை அலங்கரித்த என்னை நீ காலம் பூரா ஊன்றி நடந்தது நடந்து சேதாரமாக்கி அங்கிருந்து நான் உடைந்து போய்விட்டேன் என்று சொல்லி எனை உடைத்துப் பெயர்த்து எடுத்து இந்தப் பாழாய்ப் போன பாசி பிடித்த ஆற்றங்கரைப் படித்துறையில் ஒரு துர்ப்பாக்கியசாலியாக ஆவதற்குக் காரணமானவன் நீதானா?” என்று கேட்டது படித்துறையின் படிக்கட்டு. இதைக்கேட்டு கைத்தடி அதிர்ந்தது. அந்த நேரம் ,
“ அமைதி! அமைதி!” என்ற குரல் கேட்டு படிக்கட்டும் கைத்தடியும் திரும்பிப் பார்த்தனர்.
“ யார் நீ? இங்கு வந்து எங்களை அமைதிப் படுத்த ? “ என்று ஒத்த குரலில் கேட்டனர்.
“ என்னைத் தெரியவில்லையா? நான்தான் அந்த ஜமீன்களுக்கிடையில் நடந்த வரப்பு வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் உட்கார்ந்திருந்த மேஜையும் நாற்காலியும். என் மீது உட்கார்ந்தது உட்கார்ந்து என் மீது வைத்து எழுதி எழுதி என் மீது ஆர்டர் ஆர்டர் என்று சுத்தியலால் தட்டித் தட்டி என்னையும் உடைத்து , இனி நானும் இலாயக்கு இல்லை என்று இந்த ஆற்றின் கரையில் அனாதையாக தூக்கி வீசிவிட்டுப் போய்விட்டார்கள் “ நானும் கறையான்களால் அரிக்கப் பட்டு கை இல்லை கால் இல்லே ஆண்டவரே என்று கதறும் நிலையில் இருக்கிறேன் “ என்றது கண்களை கசக்கியபடி.
“ சரி கைத்தடி! இருக்கட்டும் நாங்கள் இருவருமே உன்னுடைய சோகக் கதையில் சம்பந்தப் பட்டு இருக்கிறோம் . ஆகவே நீ கதையைத் தொடர்ந்து சொல் “ என்று படிக்கட்டு கைத்தடியிடம் கேட்டது.
“ என் எஜமானும் அடுத்த ஜாமீனும் அன்றைக்கு ஏறிய கோர்ட்டுகளின் படிகள்தான் . இன்னும் வழக்கு தீர்ந்தபாடில்லை. நடந்து நடந்து என் எஜமானுக்கு மூட்டுவலி, மேல் மூச்சு கீழ் மூச்சு . அந்த நேரத்தில் அவர் காலூன்ற கை கொடுத்தவன் நான்தான். கேஸ் போட்ட ஆரம்ப காலத்தில் என் எஜமானுடன் கூட வந்து கொண்டிருந்தவர்கள் காலம் செல்லச்செல்ல வருவதை நிறுத்திக் கொண்டனர். பல நேரங்களில் என் எஜமானுடன் அவர்களும் முழங்காலைப் பிடித்துக் கொண்டு படிக்கட்டுகளிலேயே உட்கார்ந்து விடுவார்கள். கேஸ் போடப் போகும்போது கருபாக இருந்த ஏன் எஜமானின் முருக்கு மீசை வெளுத்துப் போனது. கம்பீரமாக நடந்த அவர் நடை தளர்ந்து போனது. மடிப்புக் கலையாத அவர் உடை கசங்கிப் போனது. இப்படியெல்லாம் அவர் இடுப்பைப் பிடித்துக் கொண்டு நடந்தது, வயலில் ஒரு வரப்பைப் பிடித்துவிடவேண்டுமென்றே.
அன்றொரு நாள். அடுத்த வாய்தா நாள். எங்களின் ஜமீன்தாருக்கு வாதாட அவர் சார்பாக ஒரு கறுப்புக் கோட்டுப் போட்ட இளைஞர் வந்தார். அவரை வக்கீல் என்றார்கள். அந்த இளைஞரைப் பார்த்து எங்கள் ஜமீன்தார் நீங்கள் யார் எப்போதும் எனக்காக வாதாடும் பெரியவர் எங்கே என்று கேட்டார். அங்கு இன்னொரு சோகம் பற்றிக் கொண்டது. மிடுக்குடன் வாதாடவந்த இளைய வக்கீல் சோகம் கொப்பளிக்க சொன்னார் . அவர் என் அப்பாதான். அறுபது வயதான அவர் கடந்த ஆறு மாதம் முன்பு திடீரென்று இறந்துவிட்டார். அவருக்கு பதிலாக அவர் நடத்தி வந்த வழக்குகளை இப்போது நான்தான் நடத்துகிறேன் என்று அந்த இளம் வக்கீல் சொன்னார்.
என் எஜமானுக்கு ஆத்திரத்திலும் அவநம்பிக்கையிலும் வெள்ளை மீசை துடித்தது. அடப்பாவிகளா! எனக்கு ஏன் ஆறு மாதமாக யாருமே சொல்லவில்லை? என்று கோபத்துடன் கேட்டார். ஆறு மாதம் வழக்கு ஒத்திப் போடப்பட்டு இருக்கிறது என்று அப்பா சொல்லி இருப்பாரே ! என்று இளம் வக்கீல் சொன்னார். இதைக் கேட்ட ஏன் எஜமான் இப்படித்தான் போன நாற்பது வருடமாக சொல்லச்சொல்லி என் ஆயுளைத்தொலைத்த உங்க அப்பா இப்போ அவரது ஆயுளையும் தொலைத்துவிட்டு மண்டையை போட்டுவிட்டார். இப்போ நீங்க வந்து என் ஆயுளைத் தொலைக்கப் போகிறீர்களா என்று கோபமாக சப்தமிட்டுக் கொண்டே அவர் கையில் இருந்த அவரது அன்புக்குரிய கைத்தடியான என்னை ஓங்கி அந்த நீதிமன்றத்தின் கடப்பாக் கல் பதிக்கப் பட்ட தரையில் அடித்தார். நான் ஒரு ஓரத்தில் உடைந்து போனேன். ஆனால் ஏன் எஜமான் தனது நாற்பது வயதை தொலைத்த ஆத்திரத்தோடு கீழே தளர்ந்து சரிந்தார்.
உடனே அவரது உயிர் பரலோகம் நோக்கிப் பறந்து சென்று விட்டது.
இதுவரை அரசியல்துறை அவலங்களைக் கண்டுவந்த நாம் நீதித்துறை அவலங்களை கைத்தடி இன்னும் சொல்லும்வரை காத்திருப்போம்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
ஆக்கம்: P. முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc;
உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி.

