அந்தக்கால சிறுவர்களாய் / வாலிபர்களாய் இருந்த நாம் அனுபவித்த மழைக்கால உற்சாகங்களை இந்தக்கால சிறுவர்கள்/வாலிபர்கள் அந்தளவுக்கு மழைக் காலங்களில் அனுபவிக்கிறார்களா? இல்லையா? தெரியவில்லை. எல்லாம் இன்றைய வகை வகையான கையடக்க மொபைல் போன்களில் நல்லடக்கம் செய்யப்பட்டு விட்டதாகவே எண்ண வேண்டியுள்ளது.
முடிவெட்டும் கடையில் தலைமுடி வெட்டும் முன் அதை மிருதுவாக்கி சிரமமின்றி கடைக்காரர் வெட்டி முடிக்க அடிக்கும் ஸ்ப்ரே போல் கொஞ்சம், கொஞ்சமாய் தூத்தல் போட்டு பின் தூவானம் பெரும் அடைமழையை புயலுடன் அள்ளிக்கொண்டு வந்து ஊரே தண்ணீரில் திளைக்கும். தண்ணீர் பஞ்சமென்றால் என்னவென்று கேட்கும் அந்தக்கால மழைக்காலம்.

அதற்கு மரங்கள் தன் தலையை ஆவேசமாய் ஆட்டி ஆரவாரம் செய்யும். தன்னிடம் அடைக்கலம் கொண்டு கூடு கட்டி வாழும் காக்கை,குருவிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். தென்னை மர காய்ந்த தோகைகள் அச்சமயம் பார்த்து மரத்துடன் விடை பெற்று தரை வந்து சேரும். இறுதியில் கீற்று முடையும் தொழிலுக்கு உதவியாய் போய்ச்சேரும்.
மழைக்கால ஆரம்பமாதலால் ஒரு நாள் ஈசல்கள் உல்லாசமாய் எங்கும் பறந்து திரியும். சூரியன் மறையுமுன் மடிந்து போகும்.
தென்னை மரத்து காக்கச்சியும், கொல்லைப்புற கோழிகளும் மழையில் நனைந்து தலைது வட்டிய டவல் போல் கசங்கொண்டு கூனிக்குறுகி சுள்ளென்ற கலகலப்பான வெயிலுக்கு ஏங்கி காத்திருக்கும்.
இராக்கால தவளைகள் இங்கு எழுதிக்காட்ட முடியா ஏதோ ஒரு மொழியில் கூட்டாக கத்தும். சுவற்றுக் கோழிகளும் அதையே பின்பற்றும். அவைகள் அவற்றின் உற்சாகக்கூக்குரலா? வேதனையின் வெளிப்பாடா? அதையும், நம்மையும் படைத்த அந்த அல்லாஹ்வுக்கே நன்கு விளங்கும். மழைக்கால இரவின் அமைதி ஊரையே கண்ணுக்குத் தெரியா ஒரு போர்வையில் போர்த்தி உறங்கச் செய்யும். அந்நேரம் பார்த்து திருடனின் கைவரிசை ஆங்காங்கே அரங்கேறும். கொல்லைப்புற செம்பு சர்வ சட்டிகளும், நீர் இறைக்கும் மோட்டார்களும் காணாமல் போகும்.
நீர் நிரம்பி இருக்கும் ஊரை உயரத்தில் பறந்த படி பார்த்து மீன் ஆகாரம் குறைவின்றி எங்கும் நிறைந்திருப்பது கண்டு சந்தோசத்தில் பொட்டி மடையானும், கொக்கு குருவிகளும் தரைச்சிறுவர்களுக்கு அவர்கள் கேட்கும் அந்த 'மலையான் மலையான் பூவை" போட்டுச்செல்லும்.
மழையில் நனைந்த கடை விறகும், தென்னமட்டைகளும், பூக்கமளையும் அடுப்பங்கரை ஊதாங்குழலுக்கு கூட பயந்து சொல் கேட்காமல் அடுப்பில் எரிய அடம் பிடித்து அடுப்பங்கரை பெண்களுக்கு பெரும் அழிச்சாட்டியத்தை கொடுக்கும். தகதக நெருப்பை தராமல் வெறும் புகையை தந்து தும்மல் வரவழைத்து பொறை ஏறி அவர்களுக்கு தொல்லை கொடுக்கும்.
துவைத்து கொடியில் காயப்போட்ட துணிமணிகள் நன்கு உலராமல் அதில் சிறு குழந்தைகளின் சிறுநீர் போல ஒரு வாடையை வீசச்செய்யும். மின்சாரமும் அவ்வப்பொழுது வந்து போவதால் வீட்டுக்கு வரும் வண்ணாரப்பிள்ளையை எதிர்பார்த்து காத்திருக்கும். அந்த வண்ணானின் சுமை சுமக்கும் கழுதைகள் இன்று கனவில் கூட மறந்தும் வருவதில்லை.
தெரு நண்பர்களுடன் கூட்டமாய் தெரு குளத்திற்கு சென்று கரையிலிருந்து குதித்து கும்மாளம் அடிக்கலாம் என்றிருந்தால் மேக மூட்டமும், மப்பு மந்திரமும் கரையேறி நடுக்கத்தில் சோப்பு போடும் அந்த நினைவை வரவழைத்து எம் உற்சாகத்தை தற்காலிகமாய் தடைசெய்யும்.
சூடான நொறுக்குத் தீணிக்கும், தள்ளு வண்டி நிலக்கடலைக்கும், பொறிச்ச அயிட்டங்களுக்கும் உள்ளம் சுற்றி, சுற்றி திரியும். உடைந்து போன குடைக் கம்பியை சரி செய்ய அப்பொழுது தான் நினைவுக்கு வரும். குடை ரிப்பேரும், ரேடியோ, எமர்ஜென்சி லைட்டு எசவு பண்ணுவதும், அந்நேரம் கொடி கட்டிப்பறக்கும். என் வீட்டு பக்கத்து வீட்டு சேக்தம்பி காக்கா வீட்டின் தரையில் அவைகள் எசவு பண்ண குமிஞ்சி கிடக்கும்.
தபால்காரர் பிற்பகல் 2, 3 மணியளவில் வீடு வந்து தரும் அந்த தபாலுக்கும், மணியார்டருக்கும் பொறுமை காக்காமல் மழை/கிழை வந்து விடுமோ என்ற தொலைநோக்கு சிந்தனையில் காலை 9, 10 மணிக்கே போஸ்ட் ஆபீஸ் சென்று அதை தெரு தபால்காரர் வெளியில் எடுத்து கிளம்பும் முன் வீட்டு அட்ரஸ் சொல்லி அதை கேட்டு வாங்கி வந்து சந்தோசப்படும் அந்த சந்தோசத்தருணங்கள் இன்று எங்கே தொலைந்து போயின???
வெளிநாடு வாழ் சொந்த பந்தங்களுக்கு டேப்ரிக்கார்டர் கேசட்டில் வீட்டில் தனிமையில் இருந்து பேசி பதிவு செய்து கவரில் போட்டு உள்ளுக்குள் குதூகலமாய் போய்ச்சேர வேண்டிய இடம் பத்திரமாய் போய்ச்சேர அனுப்பிய காலங்களில் கோல்ட் ரேட்டும் (விலை), கேன்சர் ரேட்டும் (விகிதம்) மிகவும் குறைவாகவே இருந்து வந்தன. ஆனால் இன்று வாட்ஸ் அப் மூலம் நொடிப்பொழுதில் தகவல்கள் கையடக்க அலைபேசியில் கச்சிதமாய் வந்து விழுந்தாலும் கோல்ட் ரேட்டும், கேன்சர் ரேட்டும் மிகவும் கூடுதலாகவே இருந்து வருவது வேதனையான செய்தியே அன்றி வேறொன்றுமில்லை.
அன்று மழை நீரை இராப்பகலாய் தெரு குளங்களுக்கு பாகுபாடின்றி சிறியவர் முதல் பெரியவர் வரை மொம்மட்டி, குத்துப்பாறை எடுத்து வெட்டி, மண் மூட்டைகள் வைத்து களத்தில் பணியாற்றினோம். ஆனால் இன்றும் அதுபோல் ஆசைகள் அவ்வப்பொழுது வந்தாலும் சட்டைப் பாக்கெட்டில் உள்ள ஐஃபோனும், கேலக்சி நோட்டும் கீழே தண்ணீரில் விழுந்து விடுமே? என பயப்பட வைத்து எம்மை பின்னுக்கு தள்ளி விட்டு விடும்.
இக்காலத்தில் நெருங்கிய சொந்தபந்தங்கள் கூட உறவு முறைகூறி ஒருவருக்கொருவர் சொந்தம்பாராட்டி சந்தோசப்படாமல் அவரவர் வேலையுண்டு, வெட்டியுண்டு என விலகி தூரம் செல்வது போல் கைவிட்டு அள்ளும் தூரம் அருகிலேயே இருந்த ஒவ்வொரு வீட்டு நிலத்தடி நீரும் வெகுதூர ஆழத்திற்கு சென்று விட்டது.
ஊரின் தென் கோடியில் உப்பளங்களிலும், வயல் வெளியிலும் தேங்கி இருக்கும் மழை நீரில் உள்ளானும், மடையானும் கூட்டமாய் வந்து தன் வயிற்றை சிறு மீன் கொண்டு நிரப்ப ஒற்றைக்காலில் நின்றும், ஒய்யாரமாய் நடந்தும் காணும் எம் கண்களுக்கு ரொட்டி,கறியின்றி விருந்து படைக்கும்.
மழைக்கால வீடு கட்டும் பணி கொஞ்சம் அசதி கொள்ளும். கொத்தனார், சித்தாளுக்கு வருமானங்கள் குறையும்.
அக்கால ஓட்டு வீட்டு ஓட்டையினூடே வீட்டிற்குள் சொட்டு,சொட்டாய் வந்து விழும் மழை நீர் தராத சேதாரத்தை இன்று மாடி வீட்டில் சொகுசாய் இருந்தாலும் வேறு ஏதேனும் ஒரு வழியில்/வகையில் தொல்லைகளும், சல்லைகளும் வீட்டிற்குள் வந்து தொலைத்து விடுகின்றன.
பள்ளிக்கூடங்கள் முழு நாள் பாடம் வைக்காது அஞ்சு பிரியடு வைத்து பள்ளி மாணவர்களின் உள்ளங்களுக்கு பால் வார்க்கும். அந்த சுற்றறிக்கை கொண்டு வரும் நேனா பாய், காதராக்காவை உற்சாகத்தில் வாழ்த்தும்.
கடைத்தெருவில் மீன் வரத்தும் குறையும். அதனால் கறிக்கடைக்காரர்களை உற்சாகப்படுத்தும். நுரை ஈரலுக்கும், ஆட்டுத்தலை,கால், குடலுக்கும் ஆர்டர்கள் பலமாய் அவர்களுக்கு வந்து சேரும்.
இராக்கால விண்ணை பிளக்கும் மின்னல்கள் பக்கர்வாய்ஸ், என்.கே.எஸ். உதவியின்றி ஊரை வெளிச்சமாக்கும். அந்த பயங்கர இடிச்சத்தம் பயப்படும் எவரையும் நடுங்க வைத்து பச்சிளம் குழந்தைகளுக்கு திடீர் திடுக்கத்தை தந்து உரை விழ வைத்து அழ வைக்கும்.
காச்சலும், இருமலும், சளித் தொல்லையும் கொஞ்சம் கூடுதலாய் காட்டும். அதற்காக தேங்காப்பால், வெறும் கஞ்சிகளும், (மாங்காய் ஊறுகாய்,வெங்காயம், பச்சமிளகாய், தேங்காப்பாலில் செய்த) ஊறுவாயும், தொட்டுக்கறியும் ஆகாரமாய் வந்து சேரும். அதுவும் கசக்கும் காய்ச்சல் நாக்கிற்கு ருசியாய் தான் இருக்கும்.
இவைகளில் பல மெல்ல,மெல்ல எம்மை விட்டு மறைந்து போனது போல் ஒவ்வொரு முறை விடுமுறையில் ஊர் சென்று இங்கு திரும்பும் பொழுதெல்லாம் என்னை ஆரத்தழுவி நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்தி கண்களில் கண்ணீரை தேக்கி "அடுத்த தடவை நீ ஊர் வரும் பொழுது நான் ஹயாத்தோடு இருக்கிறேனோ? இல்லையோ?" என சொல்லி என் இதயத்தை பாசத்தின் உச்சத்தால் சுக்குநூறாக்கும் என் அருமை உம்மா சொன்னது போலவே என் உம்மாவும் நாம் எல்லோரும் போய்ச்சேர வேண்டிய இடம் போய்ச்சேர்ந்து விட்டது முன்பே. சரியாக ஒரு வருடமும் ஆகிப்போய் விட்டது. என் அருமை உம்மா போல் ஆதம்,ஹவ்வா அலைஹி...முதல் இந்த நொடிப்பொழுது வரை மரணித்துச்சென்ற அத்துனை முஸ்லிமான ஆண்,பெண் அனைவர்களின் கப்ரு, ஆஹிர வாழ்க்கை சிறக்கவும், சுவனபதி மஹ்பிரத்திற்காகவும் து'ஆ செய்யுமாறு இந்த நல் வாய்ப்பை பயன்படுத்தி உங்களையெல்லாம் அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
நெஞ்சம் இருக்கும் வரை நல்நினைவுகளும் அதில் நீந்தத்தான் செய்யும். அதற்கு எந்த அரசு தடை விதித்து எம்மை சிறையிலடைக்க முடியும்???
நல் நினைவுகளுடன்.......
மு.செ.மு. நெய்னா முஹம்மது