Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label இந்திய முஸ்லீம்கள். Show all posts
Showing posts with label இந்திய முஸ்லீம்கள். Show all posts

நேற்று! இன்று ! நாளை! – தொடர் 30 ( நமது கல்வி- 2 ) 17

அதிரைநிருபர் பதிப்பகம் | February 27, 2014 | , , , , , ,

சென்ற வாரத்திலிருந்து முஸ்லிம்களின் கல்வி நிலையின் பிற்போக்கான நிலைமைக்கான வரலாற்றுக் காரணங்களைக் கண்டு வருகிறோம். அந்த சம்பவங்களைத் தொடர்ந்து பதியும் முன்பு , இன்றைய அரசியல் நிலையை சற்று தொட்டுவிட்டுச் செல்ல நினைக்கிறோம். கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கான தற்போதைய சதவீதத்தை உயர்த்தி இன்று தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கும் அரசு தருமென்று மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நமது சமுதாயத்துக்கும் – இதற்காக பெருமளவில் மக்களைத் திரட்டிக் காட்டி போராட்டம் நடத்திய தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் இயக்கத்துக்கும் பதில் அளிக்கும் விதமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை கடந்த 25/02/2014 அன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் வெளியிடப்பட்டு இருக்கிறது. இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு அந்தக் கட்சி எதிரானது என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவே நாம் கருதுகிறோம். அந்த தேர்தல் அறிக்கையின் சாராம்சங்களை அதிமுக தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள் என்ற தலைப்பில் இணைய தளத்தில் தொகுத்து வெளியிட்டு இருக்கிற இந்து ( தமிழ் ) கீழ்க்கண்டபடி குறிப்பிடுகிறது.

சமூக நீதி

“இட ஒதுக்கீட்டுக் கொள்கையை தொடர்ந்து நிலைநாட்ட அதிமுக பாடுபடும். இதே போன்று, அந்தந்த மாநிலங்கள், மாநிலங்களின் நிலைமைகளுக்கு ஏற்ப இட ஒதுக்கீடு பின்பற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.”

அம்மையாரின் இந்த பூசி மொழுகும் நிலைப்பாடு பொதுவாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும் இதைப்பற்றி பெரும் நம்பிக்கை கொண்டு இருந்த சகோதரர்களுக்குத்தான் இந்த நிலைப்பாடு ஏமாற்றம் அளித்து இருக்கும். அடுத்து இருதரப்பிலும் என்ன அறிவிப்பு வரப்போகிறது என்பதைத்தான் எதிர்பார்க்கலாம். வரும் அறிவிப்பு, சமுதாயத்துக்கான நலனுக்காகவும் ஒற்றுமைக்காகவும் இருக்கவேண்டுமென்று அதற்காக து-ஆச் செய்யலாம். இப்போது தொடருக்குள் செல்லலாம். 

கடந்த வாரம் குறிப்பிட்டது போல தமிழகத்தின் பல ஊர்களிலும் முஸ்லிம் கல்வி நிலையங்கள் முளைவிடத்தொடங்கின. இப்போது தலைநகர் சென்னையின் முறை. 1920 - ஆம் ஆண்டு இராமனாதபுரத்தைச் சேர்ந்த பிரபல தோல் வணிகர் மர்ஹூம் ஜமால் முகைதீன் ராவுத்தர் அவர்கள் சென்னை பெரம்பூரில் மதரஸா ஜாமியாவை நிறுவினார். இந்த மதரசாவில் பிக்ஹூ சட்டம் , பாஸில் (இஸ்லாமிய தத்துவம்) , மற்றும் இஸ்லாமியக் கல்விப் பிரிவுகள் போதிக்கப்பட்டன.

அதற்கு முன்பு 1901 –ல். சென்னையில் முஸ்லிம் இஸ்லாமியச் சங்கம் ஒன்று கூடி ஒரு தீர்மானம் போட்டது. அந்தத் தீர்மானத்தின் பிரகாரம், மத சார்பற்ற கல்வியை இஸ்லாமியக் கல்வியுடன் இணைக்க ஒரு புதிய பரிமாணத்தை முன்னெடுத்தனர். இதன் விளைவாக 1902 – ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் MEASI ( Muslim Educational Association of South India ) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் ஆரம்ப நிலை பரிதாபம், ஏனென்றால் தமிழ் அல்லது மலையாளம் தெரியாதவர்கள் இந்த அமைப்பின் தலைமையை ஆக்ரமித்ததுதான். ஜஸ்டிஸ் டியூடர் லாடம் என்ற பெயருடைய ஆங்கிலேயர்தான் இந்த கல்வி அமைப்பின் நிறுவனத் தலைவராக வந்தார். பிரபல பாஷா குடும்பத்தைச் சார்ந்த ஹாஜி பாஷா சாஹிப் அவர்களும் மிர்ஜா ஹாசிம் இஸ்பஹாணி ஆகிய இரண்டு முஸ்லிம்கள் துனைத்தலைவர்களானார்கள். இருவருமே உருது பேசும் முஸ்லிம்கள். இவர்களுக்கு மற்ற தென்னிந்திய மொழிகள் தெரியாது. இஸ்லாமியக் கல்வியுடன் நவீன உலகக்கல்வியை இணைத்த இந்த அமைப்பின் குறிப்பிடத்தக்கவர்களில் திருச்சியைச் சேர்ந்த உருது பேசும் சையித் முர்துஸாவும் அங்கம் வகித்தார். இன்றும் இவர் பெயரில் திருச்சியில் ஒரு பள்ளி நடைபெற்று வருகிறது. அத்துடன் முக்கியப் பங்கு வகித்த ஒரே தமிழ் பேசும் முஸ்லிம்களில் நாகப்பட்டினம் அஹமதுதம்பி மரைக்காயர் ஆவார். இந்த பத்தியில் நாம் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொரு உண்மை இத்தகைய நவீனக் கல்வியை ஆதரித்து அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த முகைதீன் பக்கீர் என்பவர் ஒரு கையேடும் வெளியிட்டார் என்பதே. 

இந்த MEASI – யின் தலைமை மற்றும் முக்கிய அங்கங்களில் உருது பேசுவோர் வீற்று இருந்ததால் தென் இந்திய கல்விக் கழகம் என்பது பெயரளவில் இருந்ததே தவிர , வாய்ப்புக்கள் யாவும் உருது பேசுபவர்களுக்கே அளிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. இதனால் உருது பேசும் வட்டாரங்களில் கல்வி விழிப்புணர்வு ஏற்பட்டது. அதுவும் பணம் படைத்தவர்கள் மத்தியில்தான். அங்கங்கே உப்புக்குச் சப்பாணியாக மற்ற மதரஸாக்களுக்கு சில நேரங்களில் நிதிஉதவிகள் கிடைத்தன என்பதைத்தவிர உருது மொழியே பாலூட்டி வளர்க்கப்பட்டது. இதனால் மொழிவாரி சமத்துவமான பகிர்வுடைய கல்வி வளர்ச்சி தடைப்பட்டது. இதில் உச்சபட்ச முயற்சியாக உருது மொழியை முஸ்லிம்களின் மொழியாக அங்கீகரித்து சென்னை ராஜதானியின் மொழியாகவும் மாற்ற முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் ஆங்கில அரசு இதனை ஏற்க மறுத்துவிட்டது.

1924- ஆம் ஆண்டு பெரம்பூரில் மதரஸா ஜாமியாவைத் தொடங்கிய ஜமால் முகைதீன் ராவுத்தர் வபாத் ஆனதும் அவரது மகனார் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். இங்கு 1925-ல் சையத் சுலைமான் நக்வி என்கிற புகழ்பெற்ற மார்க்க அறிஞர் இறைத்தூதர் நபி ( ஸல்) அவர்களைப் பற்றி உருதுவில் 6 முறைகள் தொடர் உரை நிகழ்த்தினார். உலகமகாக் கவி அல்லாமா இக்பால் அவர்கள் கூட இஸ்லாத்தின் தாத்பரியங்களைப் பற்றி உரையாற்றியதும் குறிப்பிடத்தக்கது; சிறப்பானது. 

முஸ்லிம்களின் கல்வி அறிவை மார்க்கக் கல்வியோடு நிறுத்திவிடாமல் உலகக்கல்வியோடும் இணைத்துவிட வேண்டுமென்று ஆங்கிலேயர்கள் அளவற்ற ஆர்வம காட்டினர். இதற்குக் காரணம் முஸ்லிம்கள் மீது அவர்களுக்கிருந்த பரிவல்ல. ஏற்கனவே கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டதைப் போல மதரஸாவில் கல்வி பயின்றவர்கள் அடக்குமுறைகளுக்கு எதிராகக் காட்டிய வீரமும் தவறுகளைத் தட்டிக் கேட்கும் அவர்களின் தைரியமும் ஆங்கிலேயரை அச்சுறுத்தியது என்பது ஒரு முக்கியக் காரணம். அத்துடன், இந்தியர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியூட்டி அதன் மூலம் கிருத்துவ மதத்தையும் பரப்பினால் மத ரீதியில் இந்தியர்களின் மனதை சுதந்திரத்துக்கு எதிராகத் திரும்பாமல் வென்று எடுக்கலாம் என்கிற இராஜதந்திர முயற்சியும்தான். ஆகவே மதசாக்கள் மீது தனது பிடியை இறுகச் செய்வதற்காக சாம்பியன் திட்டம் என்று அழைக்கப்பட்ட ஒரு திட்டத்தை 1930- 31 – ல் ஆங்கில அரசு கொண்டு வந்தது. 

இந்த சாம்பியன் திட்டம் என்பது ஒரு பசுத்தோல் போர்த்திய புலி. கல்விக் கூடங்களுக்கு அரசும் உதவி செய்ய வேண்டுமென்ற போர்வையில் பள்ளிகளையும் அவற்றின் பாட திட்டங்களையும் அரசின் கட்டுப் பாட்டில் கொண்டுவரும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டதுதான் சாம்பியன் திட்டம். அத்துடன் அரசின் உதவியை எதிர்பார்த்துத்தான் அடி எடுத்துவைக்க வேண்டுமென்ற ஆதிக்க உணர்வுடன் வந்ததே அந்தத் திட்டம். முதலில் உதவுவதுபோல் உதவி, பிறகு உதவிகளை படிப்படியாகக் குறைத்து முஸ்லிம்களின் கல்வி கற்கும் மற்றும் கல்வி நிலையங்களை அமைக்கும் முயற்சிகளை பலவீனப்படுத்தினர். அரசுக்குப் பண நெருக்கடி என்று பஞ்சப் பாட்டு பாடத் தொடங்கினர். இதன் ஒரு நடவடிக்கையாக சிறிய பள்ளிகளை பெரிய பள்ளிகளுடன் இணைக்க ஆரம்பித்தனர். இதன் விளைவாக தெருக்களில் அந்தந்த முஹல்லாக்களில் சிறு அளவில் அடிப்படையாக ஆரம்பிக்கப்பட்ட தொடக்கப் பள்ளிகள், மதரஸாக்கள் ஆகியவை இழுத்து மூடப்பட்டு பெரிய பள்ளிகளுடன் கலப்புக் கல்விக்காக இணைக்கப்பட்டன. பல இடங்களில் கல்வி நிலையங்கள் வெகுதூரங்களில் இருந்த பள்ளிகளுடன் இணைக்கப்பட்டதால் மாணவர்கள் போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் பயணித்துப் படிப்பதைவிட கடைகளில் எடுபிடி வேலை செய்வது நலம் என்கிற நிலைக்குத் தள்ளப் பட்டனர். பொருளாதார நெருக்கடி என்று காரணம் கூறி எப்படி நாளடைவில் கல்விக் கூடங்கள் குறைக்கப்பட்டன என்பதை கீழ்க் கண்ட அட்டவணை பட்டவர்த்தனமாக பறைசாற்றும்.


ஆதாரம்: தொடக்கப் பள்ளிகளின் பொதுக் கல்வி பற்றிய அறிக்கை 1928 to 1940. 

ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து சர்க்கரையும், தேன்மிட்டாயும் வகுப்பில் இருக்கும் அனைவருக்கும் கொடுத்து ( அந்தக் காலத்தில் பள்ளிக் கூடங்களில் சேர்த்துப் பெயர் எழுதினால், முதல் நாள் வகுப்புக்கு வரும்போதே ஒரு தட்டில் நாட்டுச் சர்க்கரை, அல்லது பனைமரத்துக் கருப்பட்டி, அல்லது தேன்மிட்டாய் கொண்டுவந்து வகுப்பில் இருக்கும் எல்லோருக்கும் கொடுப்பார்களாம். ) ஆர்வமுடன் படிக்க ஆரம்பித்த முஸ்லிம் மாணவர்கள் 100 பேர் என்று வைத்துக் கொண்டால் ஐந்தாம் வகுப்பு வரை படிப்பில் நிலைத்து இருந்தவர்கள் வெறும் 7 % தான். மீதி 93% பிள்ளைகள் படிப்பைத் தொடராமல் விட்டுவிட்டார்கள். இதற்குக் காரணங்கள் பல. 

வறுமை, சரியான வழிகாட்டுதல் இல்லாமை, பெண்கள் சற்று புஷ்டியாக வளர்ந்தாலே பள்ளிக் கூடத்தைவிட்டு நிறுத்துவது, அரபி & பாரசீக மொழிகளைப் படித்துக் கொடுக்க எல்லாப் பள்ளிகளிலும் போதிய முன்னேற்பாடு இல்லாமை, குடும்பத்தின் தேவைகள், சகோதரிகளின் சீதனத்துக்காக ஆண்களை இளவயதில் சம்பாதிக்க அனுப்புவது, விவசாயம், நெசவு, பாய் முடைதல் போன்ற கைத்தொழில்கள் கற்றுக் கொள்வது, உள்ளூரில் தொழில் செய்தால்தான் ஜீவனம் செய்ய முடியுமென்ற நிலைமை , பள்ளிக் கூடங்கள் வெகுதூரத்தில் அமைந்துவிடுவது, பாட நூல்களில் மார்க்கத்துக்கு முரணான கருத்துக்களால் மன வெறுப்பு, உலகக் கல்வி கூடாது என்கிற ஒரு சிலரின் பத்வா, போதிய இஸ்லாமியக் கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்கள் இல்லாமை, இப்படிப் பல குறைகள் – காரணங்கள் முஸ்லிம் குழந்தைகளின் படிப்பை மூடி போட்டு மூடிவிட்டன. தடைகளை உடைத்து வெளியே வந்து படிக்க வேண்டுமென்ற தாக்கமும் முயற்சியும் வெகுவாகக் குறைந்து போனது. வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர் நீச்சல் என்று மனதில் உறுதி இல்லாமல் போனது. 

முஸ்லிம்களுக்கு கல்வியில் ஆர்வமில்லாமல் போனதற்கு அன்று நிலவிய இன்னொரு சமூகக் காரணமும் உண்டு. அவர்கள் இயல்பிலேயே “திரைகடலோடியும் திரவியம் தேடும்" இரத்த அணுக்களுக்குச் சொந்தக்காரர்கள். நாகபட்டினத்தில் கப்பலைக் கொண்டு வந்து போட்டுக் கொண்டு மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் வருகிறவர்கள் வரலாம் என்று ஒரு வாசல் திறந்து விடப்பட்டு இருந்தது. ஊருக்கு ஊர் ஒலிபெருக்கி அறிவிப்புகள் என்று சொல்கிறார்கள். அந்தக் காலம், தூரக் கிழக்கு நாடுகளான மலேசியாவும் சிங்கப்பூரும் இன்னும் பர்மாவும் அண்மையில் இருக்கும் இலங்கை கூட பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்ததால் - இந்த நாடுகளில் வசித்த மக்கள் ஒரே ஆளுமையின் கீழ் வந்துவிட்ட காரணத்தால் இக்காலத்தில் உள்ளது போல விசா அது இது என்று பெரிதாக ஒன்றும் தேவைப்படவில்லை. எல்லோரும் பிரிட்டிஷ் குடியுரிமை பெறுவது இலகுவாக இருந்தது. இன்று கூட, அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்திருந்தவர்களின் பிள்ளைகள் தாங்களும் பிரிட்டிஷில் வாழ உரிமை உள்ளது என்று கேட்டு பிரிட்டனில் வாழ்வதைப் பார்க்கிறோம். “கட்டை விளக்குமாறு ஆனாலும் கப்பல் கூட்டும் விளக்குமாறு “வேண்டுமென்று வெளிநாட்டில் பொருளீட்டுபவர்களை உயர்த்திப் பார்க்கும் மனோபாவம் தென்புலத்து மக்களிடம் வளர்ந்தது. இதனால் தொடக்கப்பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்தவர்கள் கூட அக்கரைச்சீமைக்குப் போகத் தொடங்கினார்கள். அவர்களது பிள்ளைகளையும் அங்கேயே அழைத்துக் கொண்டார்கள். இதனால் பலரின் புத்தக மூட்டை பட்டாணிக் கடலைக் கடையைத் தேடிப் போனது. கடிதம் எழுதக் கூட அடுத்தவரை நாடும் அளவுக்குத்தான் இப்படிப் போனவர்களின் கல்வியறிவு இருந்தது. கைகளில் காசு ஏறினாலும் இவர்களின் மூளையில் ஒன்றுமே ஏறவில்லை. 

வடக்கிலோ தோல் தொழிற்சாலைகளில், பீடி சுற்றும் தொழிலில் வேலை கிடைத்தால் போதும் உள்ளூரில் , மனைவி மக்களுடன் சுகமாக வாழலாமென்ற மனோபாவம் வளர்ந்தது. கல்வி கற்று, அரசாங்கப் பதவிகளில் அமர வேண்டுமென்ற ஆர்வம் முழு முஸ்லிம்களின் இரத்த நாளங்களில் இடம்பெறாமல் போனது. விதி விலக்கான சிலர் வீதிக்கு விளக்காயினர். ஆனால் அந்த வெளிச்சம் போதவில்லை. 
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
ஆக்கம் : P. முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc;
உருவாக்கம்: இப்ராஹீம் அன்சாரி

தேசிய கொடியை வடிவமைத்த பெண் - புதைக்கப்பட்ட வரலாறு 9

அதிரைநிருபர் | March 08, 2013 | , , , , ,



இன்று உலக மகளிர் தினமாம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதிவு. 

நாம் இப்போது உபயோகிக்கும் இந்திய நாட்டின் தேசிய கொடியை, சரியான நீள அகலத்தில், சரியான வண்ணத்தில் ஓவியமாக ஒரு துணியில் வரைந்து, தனது கணவரிடம் தந்து, அதை அவர் காந்திஜியிடம் காட்ட, அண்ணல் அதற்கு இசைவளிக்க, அப்படியாக... 1947 ஜூலை 17 அன்று  பிறந்ததுதான் நமது இந்திய தேசிய கொடி..!

வடிவமைத்த அந்த ஓவிய பெண்மணியின் பெயர் ஸுரியா தியாப்ஜி

ஐடியா தந்த அவரின் கணவரின் பெயர் பத்ருதீன் தியாப்ஜி. 

( பலரும்  தவறாக நினைத்துக்கொண்டு இருப்பது போல... அல்லது வேண்டுமென்றே வரலாற்றை திரித்து தவறாக பரப்பப்படுவது போல... இந்திய தேசிய கொடியை வடிவமைத்தது பிங்காலி வெங்கையா அல்ல..! அல்லவே அல்ல..! )


இந்த பத்ருதீன் தியாப்ஜிதான்... இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர்களில் முக்கியமான முதல் ஐவரில் ஒருவரின் பேரன்..!

அந்த ஐவரில் மீதி நான்கு பேரை பள்ளி வரலாற்றில் படித்து இருப்பீர்கள். ஆலன் அக்டேவியன் ஹியூம், வில்லியம் வெட்டர்பன், ஒமேஷ் சந்திர பானர்ஜி, தாதாபாய் நவ்ரோஜி ஆகிய நால்வரை அடுத்த பெயர்தான்... முல்லா தியாப் அலியின் மகன் பாரிஸ்டர்.பத்ருதீன் தியாப்ஜி..!


சர். ஆலன் அக்டேவியன் ஹியூம்,  சர்.வில்லியம் வெட்டர்பன் போன்ற ஆங்கிலேயர்களால், மெத்தப்படித்த இந்தியர்களை அழைத்து, 1885 இல், INC துவக்கப்பட்டது. நோக்கம், பிரிட்டிஷ் அரசுடன் எந்த பிரச்சினை ஆனாலும் சுமுக பேச்சுவார்த்தைக்காக வேண்டி. அதன் முதல் தலைவர்...W.C.பானர்ஜி. 

1886 இல், இ.தே.கா. இன் இரண்டாம் தலைவர்  பாரிஸ்டர். D. நவ்ரோஜி. அடுத்த வருடம், 1887 இல் தலைவரானவர்தான் பாரிஸ்டர். பத்ருதீன் தியாப்ஜி. 

இவர்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் இந்திய பாரிஸ்டர். (1867)
பின்னர் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் இந்திய சீஃப் ஜஸ்டிஸ். (1902)
இவரின் மகன்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் முஸ்லிம் பொறியாளர்.
இவரின் மகளோ முதலில் வெளிநாடு சென்று படித்து வந்த டாக்டர். 

அவரின் பேரன்தான்.... நாம் முதலில் பார்த்தவர்... அவரின் பெயரும் தாத்தாவின் பெயரேதான்..! பத்ருதீன் தியாப்ஜி..!

பிப்ரவரி - 20, 1947 : ஆளும் அதிகாரத்தை இந்தியர்களுக்கு விட்டுவிடப் போவதாக இங்கிலாந்து பிரதமர் கிளிமென்ட் அட்லீ அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்.

ஜூன் 3, 1947 : வைஸ்ராய் மவுன்ட் பேட்டன், பாகிஸ்தான் - இந்தியா என்று இரு நாடுகளாக பிரிப்பது பற்றிய தனது திட்டத்தை காங்கிரஸ் & முஸ்லிம் லீக் கட்சிகளிடம் சொல்கிறார். ஆகஸ்ட் 15 ஆட்சி மாற்றம் நடைபெறப் போவதாகவும் குறித்து தெரிவிக்கிறார்.

அத்துடன், வைஸ்ராய் மவுன்ட் பேட்டன், இந்தியா & பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டின் கொடிகளிலும், தங்கள் பிரிட்டிஷ் நாட்டின் சின்னமான யூனியன் ஜாக்கை (நீள பின்புலத்தில் சிகப்பு வெள்ளையில், ஒரு பெருக்கல் குறி மீது ஒரு கூட்டல் குறி)  தத்தம் கொடியின் மூலையில், பத்தில் ஒரு பங்கு அளவில் வைக்குமாறு கோரிக்கை விடுக்கிறார். ( ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கொடிகளில் தற்போது உள்ளது போல...! )

இதனால், கடுப்பாகிப்போன இருவரும், தங்களுக்கான தனித்துவ கொடி வடிவமைப்பில் முழுமூச்சாக இறங்குகின்றனர். முக்கியமாக அந்த பிரிட்டிஷ் கொடியின்  'யூனியன் ஜாக்' இருக்கவே கூடாது என்று முடிவெடுத்தவர்களாக..!

ஜூன் 23 1947 : கொடி வடிவமைக்க ஒரு அட்ஹாக் கமிட்டி அமைக்கப்படுகிறது. ( Ad-hoc Committee; Dr. Rajendra Prasad (Chairman), Abul Kalam Azad, C. Rajagopalachari, Sarojini Naidu, K. M. Pannikkar, K. M. Munshi, B. R. Ambedkar, S. N. Gupta, Frank Anthony and Sardar Ujjal Singh)

முன்னர், 1916 இல் பிங்காலி வெங்கையாவால் வடிவமைக்கப்பட்ட, சுதந்திரம் வாங்க போராடிய "இந்திய  தேசிய காங்கிரஸ் கொடியே நம் நாட்டின் தேசிய கொடி" என்ற வாதம் வலுப்பெறுகிறது..! 

மேலே  உள்ள இந்திய அரசின் தபால் தலையில் இவர் வடிமைத்த கொடி எவை எவை என்று மிகவும் தெளிவாகவே உள்ளது..!கவனியுங்கள் சாகோஸ்..!


இந்நிலையில், மும்பையில் இருந்து டெல்லிக்கு ஆர்.எஸ்.எஸ். இன் சாவர்கர், முக்கிய காங்கிரஸ் தலைவர்களுக்கு இப்படி ஒரு அவரசர தந்தி அடிக்கிறார். அதில், கொடி முழுக்க காவி நிறம் இருக்க வேண்டும் என்றும்(?!) இராட்டை இடம்பெறவே கூடாது என்றும்(?) வேறு எந்த சின்னமும் இருக்கலாம்(!) என்றும் கூறி..!

வேறு சிலர், புலிச்சின்னம் உள்ள நேதாஜி ஏற்றிய கொடிதான் வேண்டும் என்கின்றனர். இப்படியாக ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லிக்கொண்டு இருக்க, அனைத்து கருத்துக்களையும் அமைதியாக கேட்டு வைக்கிறது அட்ஹாக் கமிட்டி.

இப்போதுதான், முதல் பத்தியில் நாம் பார்த்த பத்ருதீன் தியாப்ஜி, சீனில் என்ட்ரி ஆகிறார்..! அவர், கமிட்டி தலைவர் டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத்தை சந்தித்து, அவரின் தேசிய கொடியின் மாதிரியை சொல்கிறார். தலைவருக்கு இது பிடித்து விடவே, அதற்கு காந்திஜியின் ஒப்புதலையும் பெற்று வருமாறு அனுப்பி வைக்கிகிறார். காந்திஜியிடம், ராட்டைக்கு பதில் அசோக சக்கரம் மாற்றப்படுவதற்கு காரணத்தை இப்படி சொல்கிறார், பத்ருதீன் தியாப்ஜி.


அதாவது, "கிடைமட்டமான சம அளவு மூவர்ணம் கொண்ட இந்திய தேசிய கொடியின் இருபக்கத்தில் இருந்து அதை பார்த்தாலும், இடம் வலம் மாறாமல் கொடி அதே போலவே தெரியவேண்டும். இதற்கு அசோக சக்கரம்தான் சரியாக வரும். இந்திய தேசிய கொடியின் 'இராட்டை' சரியாக வராது" என்றார்..! 

கூர்ந்து கேட்டுவிட்டு இதனை, ஏற்றுக்கொண்ட காந்திஜி, அவரையே உடனே ஒரு 'மாதிரி கொடி' தயார் செய்து கொண்டு வந்து காட்டுமாறு கூறுகிறார்.

மூன்று அளவு நீளமும், இரண்டு அளவு அகலமும் கொண்ட காதி கைத்தறி துணி ஒன்றை வாங்கிக்கொண்டு போய், தனது மனைவி ஸுரியாவிடம் தருகிறார். அவர் ஒரு கைதேர்த்த வண்ணத்தூரிகையாளர்.

கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய அந்த அம்மையார், சிகப்பு+மஞ்சள் கலந்து காவி மேலேயும், கரும்பச்சையை கீழேயும், நடுவில் வெள்ளையில் கரு நீல வண்ணத்தில் 24 கால்கள் கொண்ட அசோக சக்கரமும் மிக எழிலாக வரைந்து தருகிறார்.

தியாப்ஜி அதை கொண்டு போய் காந்திஜியிடம் காண்பிக்க, அதற்கு காந்திஜி இன்முகத்துடன் ஒப்புதல் தந்து அட்ஹாக் கமிட்டிக்கு அனுப்ப, அந்த 'கொடி வடிவமைப்பு கமிட்டி' அதையே சுதந்திர இந்தியாவின் தேசிய கொடியாக அறிவிக்கிறது... ஜூலை 17, 1947 அன்று அதிகாரபூர்வமாக..!

உலக மகளிர் தினத்தில் மட்டுமின்றி, இந்திய தேசிய கொடி பறந்து கொண்டிருக்கும் 365 தினங்களிலும் தேசிய கொடியை வடிவமைத்த அப்பெண்மணிக்கு, கோடி கரங்கள் தடுத்து மறைத்தாலும் வரலாற்றில் தக்க  இடம் நிச்சயமாக உண்டு..!

ஆதார ஆவணங்கள்
Who designed National Flag : Mrs. Badruddin Tyabji
http://www.flagfoundationofindia.in/tiranga-quiz.html  (official site for national flag)
http://muslims4india.com/contribution/freedom/national-flag.html (The wheel of truth, by Mr.K.Natwar Singh)

-- முஹம்மது ஆஷிக்

நன்றி: http://pinnoottavaathi.blogspot.com/2013/03/blog-post_8.html


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு