(எல் எம் எஸ்களும் அலாவுதீன்களும் இன்ன பிற டிவி எதிர்ப்பாளர்கள் இதை விடுத்து அடுத்த பதிவுக்குப் போவது இதயத் துடிப்பை (heart beat) சீராக்கும் :))
'சீரியல் கில்லர்' என்று அடையாளம் காணப்பட்டு தேடி கைது செய்யும் சமுதாயம் இந்த 'கில்லர் சீரியல்'களைக் கண்டுகொள்ளாதது சரியா? நீதமா? தர்மமா? (ஒரு மூட்ல ஆரம்பிச்சிருக்கேன், என்னிடமிருந்து மைக்கைப் பிடுங்கக் கூடாது)
"திங்கள் முதல் வெள்ளிவரை" மட்டுமே ஒரு வாரத்திற்கான தினங்கள் என்று வாரத்தை ஐந்து நாட்களுக்குள் சுருக்கிப் போடுமளவுக்கு தாய்க்குலத்தின் மூளையை பலகீனப்படுத்திவிட்டன மெகாத் தொடர்கள். சனியும் ஞாயிரும் ஏதோ சபீரும் ஜாகிருக்குமான தினங்கள் என புறக்கனிக்கப்பட்டுவிட்டன. பண்டிகைக் காலங்களில் "இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முதலாக”வில் உலகமே மூழ்கிப்போயிருக்க சீரியல் ‘கட்’டான கவலையில் (கோபத்தில்?) தொலைக்காட்சிப் பக்கமே வருவதில்லை சீரியல் தொடர் ரசிகைகளான அம்மணிகள். இதுதான்டா சான்ஸு என்று பிள்ளைகள் பெண் டென்னையோ ஸ்கூபி டூவையோ போட்டுப் படுத்தும்போது "அடுத்தமுறை பச்சைத் தைலம் பெருசு வாங்கனும்" என்று முடிவாகும். (காதக்குடுங்க, டாம் அண்ட் ஜெர்ரின்னா.. ஹிஹி.. நானும் உட்கார்ந்து விடுவேன்)எங்க வீட்டம்மாவுக்கு எல்லாத் தொடர்கள் மீதும் ஈர்ப்பு இல்லை (நல்ல வேளை) எனினும் இரண்டு தொடர்களை விட்டு விடுவதில்லை. எனினும் எப்பவாவது சேனல்களை மாற்றும்போது மற்ற சீரியல்களைக் கடந்து செல்லுகையில் மேடம் ஒரு விநாடி நிதானித்தால்கூட சட்டென சேனல் மாற்றிவிடுவேன். இப்படியாக ஒரு முறை மாற்றும் போதுதான் ஜமாலி காக்காவின்(!!!) சிறப்புரை ஒன்றில் சிக்கி சின்னா பின்னாப்பட்டுப்போனேன். (விளக்கமாக எழுதினால் அமைதியாக ஆண்டு விடுவார்கள். ஐ மீன், நீக்கி விடுவார்கள் அ.நி. குழுவினர்) எப்படித்தான் அத்தனை ஆதாரபூர்வமாகவும் தெளிவாகவும் அவருக்கு எதிராகவே அவரால் பேச முடிகிறதோ! )
நம்ம மேட்டருக்கு வருவோம். எங்கே விட்டேன்? ஆங்… எங்கூட்டம்மா சப்பாத்தி மாவோடு தொலைக்காட்சி முன்னால் அமர்ந்தால் காட்சிகளுக்கேற்ப கையில் வேகம் கூடும் குறையும். கதையின் நல்ல(!?) பெண்களுக்கு சோதனை ஏற்படும் போதெல்லாம் (ஒரு சோதனை, அதற்கான நிவர்த்தி என மூன்று வாரங்கள் ஓட்டி விடுவார்கள்) தீயவர்களுக்கு எதிரான கோபத்தை மாவில் காட்ட அடி குத்து வாங்கிய மாவு கனிந்து அன்றைய சப்பாத்தி மெதுவா சூப்பரா இருக்கும். மெல்லாமலேயே வாயில் கறையும்.
சப்பாத்தியை எடுத்தால் அது விடைப்பாக பப்படம் போல எழுந்து விறைப்பாக தேசிய கீதம் பாடி நின்றால் அன்றைய சீரியலில் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லாமல் கல்யாணம் காட்சியோ விருந்தோ பிரசவமோ நடந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். அதுகூட லேட்டஸ்ட்டா "நிறுத்துங்கள் கல்யாணத்த" என்று கையில் குழந்தையோடு என்ட்ரி கொடுக்க ஏதுவாக சினிமாவில் வாய்ப்பிழந்து போன நடிகைகள் ஏராளமாக வருகிறார்கள்.
சே, எங்கேயோ ஆரம்பிக்க எங்கெங்கோ இழுத்துச் செல்லுது எழுத்து, ரியலி சீரியல் ஒரு கில்லர் தாங்க!.
ஆச்சா? சீரியல் வசனங்கள் காதில் விழுந்து விழுந்து இப்பவெல்லாம் அந்த பாத்திரங்கள் ரொம்ப பரிச்சயமாகிப் போய்விட்டதால் சமயத்தில் ஏதோ நினைவாக வீட்டுக்குள் நுழையும் நானே, "துளசி நல்லாருக்காப்லயா? என்று கேட்டு வைக்குமளவுக்கு, அடுத்த வீட்டு அண்டைய வீட்டு ஜனங்க மாதிரி ஆகிப்போய் விட்டார்கள் நாயகிகள்.
"எல்லாத்துக்கும் காரணம் அவ கொழுந்தன் பொண்டாட்டிதாங்க" என்று ஒரு முறை சொன்ன மனைவியை, இஸ்திரி போடுவதை நிறுத்திவிட்டு இடுப்பில் கையூன்றிப் பரிதாபமாய்ப் பார்க்க, அவளோ கதாநாயகியின் கொழுந்தன் பொண்டாட்டிக்கு எதிராக கோதுமையைப் பிசைந்துகொண்டிருந்தாள்.
விளம்பர இடைவேளைகள் மட்டும் இடையிடையே வாய்க்காவிடில் குடும்பம் பப்பரப்பா என்றாகிப்போய்விடும் அளவுக்கு சீரியல்கள் சீரியஸாக சிந்தையைச் சிதைத்துக்கொண்டிருக்கின்றன.
"நீங்க மட்டும் கிரிக்கெட் பார்க்குறீங்களே" என்று ஒரு முறை கவுன்ட்டர் அட்டாக் செய்த மனைவிக்கு எதிராக பிள்ளைகளையும் என் பக்கம் தந்திரமாக சேர்த்துவிட்டதால் சீரியலில் வரும் கோனாங்கிக் கதாநாயர்களைக் (ஏ ஐயாமார்களா, ஆம்பிளைகளை இப்படித்தான் பெரும்பாலும் காட்டுறாய்ங்க) கண்ட மனைவி நான் சொன்ன சிற்சில பதில்களில் க்ளீன் போல்ட் ஆகிப்போனாள். ஆயினும், எனக்கும் கிரிக்கெட் பார்ப்பது குறித்து கவலை எழாமல் இல்லை.
"தி பால் வாஸ் நாட் கமிங் ட்டு தெ பேட்" எனும் பேட்ஸ்மேனின் வழமையான பதில்களாலும் "மிடில் ஆர்டர் ஹேஸ் ட்டு வொர்க் ஹார்ட்" எனும் கேப்டனின் சால்ச்சாப்புகளாலும் "வி வில் லேர்ன் ஃபிரம் அவர் மிஸ்டேக்" போன்ற புராதன வசனங்களாலும் இப்பவெல்லாம் கிரிக்கெட் பார்க்க கொஞ்சம் பயமாயிருக்கு.
"பால் எந்த காலம்யா பேட்டுக்கு வரும்? பேட்தானையா பாலை அடிக்கனும்" என்றோ, "அப்ப, மிடில் ஆர்டரை மாத்துங்களேன்" என்றோ, "அதுசரி, இதுவரை தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளவேயில்லையா" என்றெல்லாம் நாம் கேட்டால், கிரிக்கெட்டை ஒரு மதத்தைப்போல பாவித்துப் பழகிப்போன இந்தியர்கள் நம்மை நாடு கடத்திவிடுவார்கள்.அன்றைய ஆட்ட முடிவில் தோற்ற வெஸ்ட் இன்டீஸின் கேப்ட்டன், "அடுத்த மேட்சில் இன்டியாவை நிச்சயம் வெல்வோம்" என்று சூளுரைத்தார் என்பதை தலைப்புச் செய்தியில் வாசித்தார்கள். எந்த கேப்ட்டனாவது அடுத்த மேட்சில் நாங்கள் தோற்போம் என்று சொல்லி யிருக்கிறானா? அப்புறம் ஏன் இது ஒரு செய்தி, ஆங்?
ஏது ஏது, இனி இந்திய கேப்டனிடமிருந்து இப்படிக்கூட பேட்டி எதிர்பார்க்கலாம். "நாங்கள் தோற்கவில்லை. இங்கிலாந்து ஜெயித்ததால்தான் எங்கள்மீது தோல்வி திணிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வெற்றியே எங்கள் தோல்விக்குக் காரணம் (?@&$??!!) "
நானெல்லாம் கிரிக்கெட்டுக்கென்று தனியாக நேரம் ஒதுக்குவதில்லை. இஸ்திரி செய்துகொண்டோ வெற்றிடம் செய்துகொண்டொ (வேக்யூம் க்ளீன்பண்றதுக்கு தமிழ் என்னப்பா?) என ஏதாவது வேலை செய்துகொண்டிருப்பேன், கிரிக்கெட் நடந்துகொண்டிருக்கும் அவ்வளவுதான்.
இருந்தாலும் இந்த ரெண்டு அடிக்ஷனிலிருந்தும் வெளியே கொண்டுவர ஏதும் மீட்புமையங்கள் இருந்தால் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி... நம்பர் ஃபைவ், விவேகானந்தர் ஸ்ட்ரீட், துபை குறுக்குச்சந்து, துபை மெயின் ரோடு, துபை!
- Sabeer abuShahruk


