
நானும் என் நண்பர்களும் அப்போது போலீஸ் பள்ளிக்கூடத்தில் முறையே மூன்றாவது வகுப்பும் ஒருவர் நான்காவது வகுப்பும் படித்துக் கொண்டிருந்தோம். ‘போலீஸ் பள்ளிக்கூடம்’ என்றதும் நாங்களெல்லாம் அப்போதே போலீஸ் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்தோம் என்று எண்ணிவிட வேண்டாம். நம் ஊர் மெயின் ரோட்டில் போலீஸ் ஸ்டேஷன் அருகே இருக்கும் Hindu Boys Board School அதாவது H.B.B.S. என்று அன்று சொல்லப்பட்ட ஆரம்ப பாட சாலையில் பையில் சிலேட்டுடனும் சிலேட்டுக் குச்சியுடனும் இரண்டொரு புஷ்தகங்களுடனும் படித்த காலம். சிலேட்டுக் குச்சியின் நீட்டம் அதிக பட்சமா போனால் மூனு இஞ்சிதான். சிலேட்டில் எழுதி வாத்தியாரிடம் கொடுத்தால் அவர் ஒரு வட்டம் அல்லது ரவுண்ட் போட்டு 60 / 100, 30 / 100 என்று மார்க் போட்டு கொடுப்பார் 100 / 100 வாங்கியதாக நினைவு இல்லை. ஆனால் 0/100 100 / 0 வாங்கியவர்களில் நானும் ஒருவன் 0/100 வாங்கியதில் எனக்கு ஒரு திருப்தி என்னவென்றால் 100 / ஒருசைபர் மட்டும் போட்டதுதான். 000 / 100 சைபர் போடாமல் விட்டதே ஒரு சந்தோசமான செய்திதானே? !
எங்களின் காலை BREAK-FAST நீர்ச்சக் கஞ்சி அதில் உரிச்சு போட்ட வெங்காயம். அப்போ சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் என்ற வயசு சைஸ், ஜாதி பாகுபாடு ஏதும் இல்லை. வெங்காயம் என்றால் அது வெங்காயம் தான். அப்போது அதில் சமதர்ம சமத்துவ நிலை நிலவியது. ‘ஒன்றேகுலம்- ஒருவனே தேவன்’ என்பதுபோல ‘ஒரே வெங்காயம் ஒரே கஞ்சி!’ நாங்கள் வெங்காயம் போட்டு கஞ்சி குடிச்சது ஈ.வெ.ரா. பெரியாருக்கு எப்பிடியோ தெரிஞ்போச்சு! அவர் மேடைக்கு மேடை ‘அடே வெங்காயமே!’ ‘அடே வெங்காயமே!’ என்று எங்களை கிண்டலடிக்க ஆரம்பிச்சுட்டார். போறவங்க வர்றவங்களெல்லாம் எங்க முகத்தையே பாக்க ஆரம்பிச்சுட்டங்க. எங்களுக்கோ வெட்கம் பிச்சு திங்க ஆரம்பிச்சிடிச்சு.
எங்களுக்கோ வெட்கம் ஒரு பக்கம் கோபம் ஒரு பக்கம். இப்படியே பெரியாரை பேசவிட்டா சரியா வராது. நாங்க நாலஞ்சுபேர் ஒன்னு சேர்ந்து போய் தி.மு.கவை சேர்ந்த N.S.இளங்கோ அவர்களை கண்டு விசயத்தைச் சொன்னோம். “அப்படியா? நீங்க வெங்காயம் போட்டு கஞ்சி குடிச்சாலும். வெங்காயம் போடாமே கஞ்சி குடிச்சாலும் அல்லது வெங்காயத்தை மட்டும் திண்டாலும் அவரு கஞ்சி-வெங்காயம் ரெண்டையும் மேடைக்குமேடை ஒடை ஓடைன்னு போட்டு ஓடைச்சுகிட்டேதான் இருப்பார்’’ என்றார்.
“கஞ்சி அவருக்கு என்ன பாவம் செஞ்சுச்சு? சாமி’, புராணம்தானே அவருக்கு எதிரிகள்” என்று நான் கேட்டேன். ‘’ஆ... அப்புடி கேளு! நீங்கள்லாம் சின்னபுள்ளைய! விபரம் விளங்காது சொல்றேன் கேட்டுக்கோங்கோ! அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி, நான் எல்லாம் பெரியார் கட்சியிலே இருந்தோம். அப்புறம் அவரை விட்டு விலகி தி.மு.க.ன்னு புதுசா ஒரு கட்சி ஆரம்பிச்சோம். அதனாலே அண்ணா மேலே பெரியாருக்கு கோவம், அண்ணா பிறந்த ஊர் காஞ்சிபுரம். இதை ‘கஞ்சி’ என்றும் சொல்வார்கள். அதனாலே ’காஞ்சி, கஞ்சி ’வெங்காயம்’ என்றால் பெரியாருக்கு அலர்ஜி.. எங்கே போனாலும் எங்களை தாக்க ஆரம்பிச்சுடுவார்.’’ என்றார் N.S.இளங்கோ.
‘’அண்ணா ஊரு காஞ்சிபுரம் அதனாலே ’கஞ்சி’ன்னாலே அவருக்கு புடிக்காதுன்னு சொல்லுறிங்க. சரி! ஒத்துக்குவோம். ஆனா வெங்காயத்தை ஏன் வம்புக்கு இழுக்கிறார். வெங்காயம் அவரை என்ன செஞ்சுச்சு?” இது என் துணை கேள்வி! ‘’அப்புடி கேளுடா என் கப்புட்டி வாயா! என்னை உடமாட்டிய போலே இருக்கே. என்னையும் போட்டு கஞ்சி காச்சுடு வியலோ?’’ என்று செல்லமா ஒரு போடு போட்டுட்டு சொல்ல ஆரம்பிச்சார். ‘’நாங்கள் அவரை விட்டு பிரியும் போது அவர் மீது எங்களுக்கு இருந்த பாசத்தாலே நாங்கள் எல்லாம் அழுதே விட்டோம். அண்ணா அழுதார். இன்றைய தி.மு.க.வின் முன்னணி தலைவர்களை உருவாக்கியவர் பெரியார்தான். அந்த கட்சியில் நாங்கள் தொண்டர்கள் போல் இல்லை அவருடைய பிள்ளைகள் போல நாங்கள் வளர்ந்தோம், அவருக்கு பிள்ளை இல்லை. தன் பிள்ளைகளிடம் காட்ட வேண்டிய அன்பையும் பாசத்தையும் எங்களிடம் காட்டினார் அதேபோல் நடத்தினார் என்று சொல்வதைவிட எங்களைத் தன் பிள்ளை போல் வளர்த்தார் என்றே சொல்ல வேண்டும். பிரிவு வந்தபோது பாசமும் பந்தமும் உடைந்தது. பாசமும் பந்தமும் உடைந்தபோது அது உருகி கண்ணீராய் ஓடியது. பெரியாரும் அழுதார், நாங்களும் அழுதோம். அவர் கண்ணீரும் எங்கள்கண்ணீரும் ஒன்று கலந்து ஆறுபோல் ஓடியது. கண்ணீர் வழியவழிய நாங்கள் தி.க.வை விட்டு வெளியேறினோம். அதனால் எங்களை ’கண்ணீர் துளிகள்’ என்றார். நாங்கள் கண்ணீர் விட்டதெல்லாம் ‘வெறும் நடிப்பு என்றார்.
வெங்காயத்தை உரிச்சா கண்ணில் நீர்வரும் அல்லவா? அதுபோலவே ‘நாங்களும் வெங்காயத்தை உரிசுட்டு கண்ணீர் விட்டோம்’ என்று சொன்னார். அதனால்தான் பெரியார் போற இடமெல்லாம் ’’அடே வெங்காயமே! அடே வெங்காயமே!’’ என்று சொல்கிறார். அவர் தி.மு.க. காரங்களை தான் கிண்டல் பண்றாரே தவிர உங்களை அல்ல. வீட்டுக்கு போய் நிறைய வெங்காயத்தை நோம்பு கஞ்சியிலே போட்டு நல்லா குடிங்க!” என்றார்.
நாடு சுதந்திரம் அடைந்த புதிது, வறுமை, பஞ்சம், பிணி, அறியாமை இவைகளின் ஆட்சியில் நாடே மாட்டிக் கொண்டு இருந்த நேரம் 95% குடும்பங்கள் வறுமையின் பிடியில் சிக்கி வதை பட்ட காலம். பள்ளி செல்லும் எங்கள் பாதங்களுக்கு செருப்பு கிடையாது. பணக்கார முதலாளிகள் கூட செருப்பு போட மாட்டார்கள். காலில் இரண்டு கட்டைகள்தான்.
தொழுகிற பள்ளி வாசலில் குதி உயர்ந்த HIGH HEEL மிதிரிக் கட்டைகள் தான் நிறைய கிடக்கும். ‘’செருப்பால் அடிப்பேன்’’ சப்பாத்தால் அடிப்பேன்’’ என்ற பேச்சே அப்போது கிடையாது. ‘மிதிரி கட்டையால் அடிப்பேன்!”” என்றுதான் சொல்வார்கள். பொதுவாகவே ‘கட்டை’ என்று சொல்வதே வழக்கம் ‘மிதிரி’ கட்டையா அல்லது ‘மிதிறி’ கட்டையா?’ ‘மிதி ஏறி’ கட்டை’ என்ற சொல் திரிந்து ‘மிதிறி’ கட்டை ஆனதோ!. அந்தக் கட்டைதான் இல்லையே அதைப் பத்தி இப்போ நமக்கு எதுக்கு ஆராய்ச்சி. நம்ம நம்ம கட்டைக்கு நாம தேட வேண்டியதை தேடிக் கிடுவோம்.
குறிப்பு: இப்பொழுது பள்ளிவாசல்களில் செருப்புகள் காணாமல் போவது போல் அப்போது கட்டைகள் காணாமல் போனதில்லை; போட்டது போட்டபடி அப்படியே ஆடாமே அசையாமே ‘கட்டையா’ கிடக்கும். காரணம் அந்த காலத்தில் அவங்க அவங்க கட்டைக்கு அவங்க அவங்களே சொந்தமா தேடிக்கிட்டாங்க [Self-Help].
இப்போது நாம் நோன்பு கஞ்சிக்கு வருவோம். நோன்பு மாதம் வந்ததும் கடல்கரை தெருவில் அரை கிடா-சாபு காய்ச்சும் நோன்பு கஞ்சி நினைவுகள் மனத்திரையில் கமகமவென ஓடும். அதை வாங்கி குடிக்க நாங்கள் போட்ட குட்டிக் கரணங்கள் எல்லாம் எனக்கு அந்த நாள் ஞபாகத்தை ஒரு கலக்கு கலக்கியது’ இளமை நினைவுகள் முதுமையில் இன்பம் அது முதுமைக்கும் கொஞ்சம் இளமையையும் ஊட்டுவதே இந்த நினைவுகள்தான்.
ஒரு மனோதத்துவ ஆய்வாளர் சொல்கின்றார் முதுமையை பற்றியே நினைத்துக் கொண்டு இருக்காதீர்கள். ‘இளமையாகவே இருக்கிறோம்’ என்றே எண்ணுங்கள். இளமைக் காலத்தில் அணிந்த ஆடைகளையும் ஆடிய ஆட்டங்களையும் எண்ணி இப்போது கவலைப்படாதீர்கள். அதை நினைத்து அதுபோலவே இப்போதும் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இளவயதினர் அணியும் ஆடைகளையே அணியுங்கள். இளமைச் சிந்தனையை முதுமையோடு பேரம் பேசாதீர்கள்..‘’ இனிமே நமக்கு இங்கே என்ன இருக்கு? வயசாச்சு போய் சேரவேண்டிய இடத்துக்கு போய் சேர வேண்டியது தான்’ என்றும் ‘சட்டி சுட்டதடா ’கை’விட்டதடா’ என்ற பட்டினத்தர் போன்றவர்களின் ‘சிந்தனை’யை விட்டுடுங்கள். ‘அனுபவி ராஜா! அனுபவி!’ வழியில் போகலாமே!. ஆனால், நம்முடைய பாரம்பறிய பிற்போக்கு சிந்தனையாளர்கள் நடுவே நாம் அப்படி நடப்பது கொஞ்சம் கஷ்டமே!
WHEN YOU ARE IN ROME DO AS ROMANS DO என்ற பழமொழியை பொருத்தமில்லாத இடத்திலும் நேரத்திலும் சொல்கிறார்கள். ’பழமொழிகளை மெய்பிக்கவோ அல்லது உயிர்ப்பிக்கவோ’ நாம் உலகில் பிறக்கவில்லை’. என்பதில் நாம் உறுதியுடன் இருக்க வேண்டும்.
இளம் வயதினர்களுக்கு மட்டும் என்று சொல்லப்பட்ட சட்டையை போட்டுக் கொண்டு ஒரு கல்யாணத்திற்கு போனேன்.
"பாருக்! உன் வயசு என்ன? இந்த வயசில் இந்த இளவயசு காரனுவ போடுற சட்டையை போட்டுருக்கியே? நல்லாவா இருக்கு?” என்று அட்வைஸ் செய்தார் ஒருவர்.
நான் சொன்னேன் “கடையில் போய் சட்டை கேட்டால் உங்கள் சைஸ் என்ன என்று தான் கேட்கிறார்களே தவிர பிறந்த வருஷம் மாதம் தேதி கேட்க வில்லையே!” என்றேன். இப்படி சொன்னதும் அவர் முகம் மாறிவிட்டது.
“என்ன நான் சொல்றேன் நீ இப்படி மரியாதை இல்லாமே பதில் சொல்றே?” என்றார்.
“உங்கள் விருப்பத்துக்கு நான் வாழ முடியாது. என் சட்டை உங்களுக்கு ஏதாவது இடைஞ்சல் கொடுக்கிறதா?’’ என்றேன் அந்த இடத்தை விட்டே அவர் போய் விட்டார்.
பக்கத்தில் இருந்தவர் கேட்டார் “நீ என்ன அவரிடம் இப்படி பதில் சொல்லி விட்டாய்?” என்றார்.
“பாஸ்போர்ட் எடுக்கும் போதும் ஜாதகம் பார்க்கும் போதும் தான் பிறந்த தேதி மாதம் கேட்கிறார்கள். சட்டை வாங்கும் போது சைசும் பிடித்த டிஸைன் மட்டுமே” என்று பதில் போட்டேன். மற்றவர்களின் சொந்த விருப்பத்திலும் உரிமையிலும் இன்னொருவர் தலையிடுவது நாகரீகமான செயல் அல்ல.
நோன்பு காலங்களில் பள்ளி கூடம் விட்டதும் புஸ்தக பையை விட்டு எறிந்து விட்டு பள்ளி வாசலுக்கு போய் நாங்கள் நாலஞ்சு பேர் நோன்பு கஞ்சி வரிசையில் ஒட்டிக் கொள்வோம். அப்போ Q-என்பது போன்ற இங்க்லீஷ் வார்த்தைகளை சாதாரண மக்களும் மாணவர்களும் சொல்வதில்லை.! 1947-ம் வருஷம் ஆகஸ்ட் மாஷம் 15-தேதி வெள்ளைகாரன் சுதந்திரத்தை கொடுத்து விட்டு அன்று காலையே ஃபஜருக்கு பாங்கு சொன்னதும் பெட்டி படுக்கைகளை சுருட்டி ஒரு கையிலும் மறுகையில் பெண்டாட்டி பிள்ளைகளை பிடித்துக் கொண்டு ஓட்டமும்-நடையுமா போய் கப்பல் ஏறி இங்கிலாந்துக்கு புறப்பட்டு இருப்பானோ இல்லையோ!’ என்ற சந்தேகத்தின் பேரில் நம்ம ஊர் போன்ற முஸ்லிம்கள் நிறைந்த ஊர்களில் ஒரு இங்க்லீஸ் வார்த்தை கூட யாரும் பேசவில்லை. இது ‘இங்க்லீஷ் படிக்கவே கூடாது’ என்ற ஒருசபதமே தவிர வேறொன்றும் இல்லை.
அரைகிடா சாபு அங்கிட்டும் இங்கிட்டும் போகும் போது ஓரக்கண்ணால் பார்த்து எங்களை ஒரு நோட்டம் இடுவார். அவர் மன ஓட்டம் எங்களுக்கு தெரியும். அவர் அங்கிட்டும்-இங்கிட்டும் போகும் போது நாங்கள் இங்குட்டும் - அங்குட்டும் எச்சியை துப்பி-துப்பி காட்டுவோம். இது ‘நாங்கள் எல்லோரும் ‘நோன்பு’ பிடித்திருக்கிறோம்’ என்பதை அவருக்கு ஜாடையாக தெரியப்படுத்தும் Body Language.’ ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒரு தடவையாவது பள்ளி வாசல் கடிகாரத்தை நாங்கள் நோக்காமல் இருப்பதில்லை. அரக்கடா நோம்பு கஞ்சியின் ருசியும் வாசமும் எங்கள் நபுசை ஆட்டி படைத்தது.
அந்த காலத்தில் கையில் ‘வாட்ச்’ கட்டிக்கொள்ளும் அளவுக்கு வசதி படைத்தவர்கள் ஊரில் யாரும் இல்லை. யார் வீட்டிலும் சுவர் கடிகாரமும் அவ்வளவு இல்லை. அப்போதெல்லாம் கடற்கரைத் தெருவில் அஞ்சு அல்லது ஆறு வீடுகளில்தான் சுவர்கடிகாரங்கள் இருந்தது.
‘’ கார்த்திகை பிறை காணத் தோனுதே-கானலோடிப் புனலெனப் பாயுதே-வேர்த்து மேனி புழுங்கி ’எரியுதே’’என்று தொடங்கும் நம் ஊர் அண்ணாவியார் புலவர் பாடிய ’மழைப்பாட்டு’ பாடலின் ஒரு வரி. (அந்த பாடலின் முழுதும் நினைவில் இல்லை) அது மழை பொய்த்து போனதில் வந்த பஞ்சத்தில் வறுமை கொடிகட்டிப் பறந்த காலம்.
பள்ளிவாசல் கடிகார பெரிய முள் ஏதோ எங்க மனசு தெரிஞ்சு கொஞ்சம் அசைந்து அசைந்து ஓடும். ஆனால் இந்த சின்ன முள் இருக்கே அதுக்கு ‘ஈரமில்லா நெஞ்சு’ வானமே இடிஞ்சு தலைமேல் விழுந்தாலும் அசையவே அசையாது. நின்ற இடத்திலேயே நின்று கொண்டே இருக்கும். ஒரு வேளை சின்ன முள்ளுக்கு சாவி கொடுக்கலையோ என்னமோ? ஏதோ எங்களுக்கு எதிரா சூது நடக்கிறது போல் தெரிந்தது!
அரக்கிடா சாபு நோம்பு கஞ்சி சட்டியை திறந்து ஆப்பையை போட்டு ஒரு கடாசு கடாசும் போது வரும் வாசமோ வாசம். ’அந்த வாசம் வந்திடாதோ? என்று பாட்டு எழுத ஒரு கவிஞனாக பிறக்கவில்லையே என்று’ வருத்தப்பட்டேன். அங்கே வரிசை வரிசையா பறத்தி இருந்த மண்சட்டிகளில் ஆப்பையால் கஞ்சியை அள்ளி அள்ளி அரக்கடா சாபு ஊற்றும் ஸ்டைலே ஒரு ஸ்டைல்தான். இந்தகாலத்து ரஜனிகாந்து பார்த்த அசந்து போயி ‘சிலையா’ நின்னுடுவாரு. ஆப்பையே போட்டு கஞ்சி ஒரு கலக்கு கலக்கும்போது கடல்கரைத் தெரு முழுதும் வியாபிக்கும் கஞ்சிவாசம் நாசியை துளைக்கும். எங்கள் நபுசோ ‘எப்போ வரும் எப்போ வரும்’ என்று தூண்டிலில் மாட்டிய மீனைப்போல துடித்துக் கொண்டிருக்கும்.
அரகிடா சாபு நோன்பு கஞ்சி என்றால் அதிராம்பட்டினமே வந்து ‘’எனக்கு கொஞ்சம் கொடு- எனக்கு கொஞ்சம் கொடு’’ என்று அடிச்சு புடிச்சுக்கிட்டு நிக்கும் படியான பேர் போன கைப்பதம் கொண்ட கஞ்சி. அரக்கடாவின் நோன்பு கஞ்சி ‘நளபாகம்’ நாலா திக்கும் பரவி அவர் புகழ் திக்கெட்டும் கொடிகட்டி பறந்தது.’ கஞ்சியைத்தான் காச்சினாரு அதிலே ருசியே எப்புடி வச்சாரு? !’ என்று குடிச்சவங்கலாம்’ மூக்கின் மேல் விரல் வச்சாங்க’ என்றால் பாத்துக் கொள்ளுங்களேன்!
‘’இவருக்கு அரக்கிடா’ என்று யார் பேர் வச்சது?’’ என்று ஒருவரிடம் கேட்டேன். அவர்ஒரு கதை சொன்னார். அவரு வயறு பெருசு; அதுக்கு மேச் ஆகும்படி உடம்பும் பெரிசு. ஒரு செம்பு சட்டி நோன்பு கஞ்சியை வாளியில் அள்ளி அள்ளி ஊற்றினாலும் ஊற்றிய கஞ்சி எல்லாம் எங்கே போச்சின்னு யாருக்கும் தெரியாது. வயிரோ போட்டது போட்ட படி அப்படியே கிடக்கும். கொஞ்சமாவது உப்பனுமே ஊகும் முடியாது. கழுதையா கத்தினாலும் வயறு நேத்து பாத்த அதே வயருதான்.
‘‘வெண்ணாறு மடை உடைச்சு விடிய விடிய பாஞ்சாலும், விடிஞ்சு பாத்தா வீராணம் ஏரிக்கு விரக்கடை அளவுதான்’ என்ற ஒருசொல் வழக்கு உண்டு. சென்னைக்கு அருகில் உள்ள வீராணம் ஏரி கடல் போல் பெரிய ஏரி. இதன் உண்மை பெயர் ‘ வீர நாராயணன் ஏரி’. இது நாளடைவில் மெல்ல மெல்ல மருவி ‘வீராணம் ஏரி’ என்று மாறிவிட்டது. வீர நாராயணன் என்ற சோழ மன்னன் வெட்டியதாக கல்கியின் ‘ பொன்னியின் செல்வன்’ கதையில் காணலாம். இது ஒரு உப்பில்லா கடல் என்று சொல்லும் அளவுக்கு பொருத்தமான பெரிய ஏரி.
வெண் ஆற்றுத் தண்ணீர் ஒரு இரவு முழுதும் வீராணம் ஏரியில் பாய்ந்தாலும் அடுத்த நாள் காலையில் பார்த்தால் ஒரு விரல் அளவு கூட உயர்ந்து இருக்காதாம். அவ்வளவு பெரிய ஏரி. அதை போல அரைகிடாவின் வயிறும் பெரியது. எத்தனை ஆடுகளை அறுத்து போட்டாலும் நேற்று பார்த்த அதே வயறுதான் இன்றும். இன்று பார்த்த அதே வயறுதான் நாளையும். என்ன ஆனாலும் அது வளர் பிறையும் அல்ல; தேய் பிறையும் அல்ல. ஆக ‘என்றும் பவுர்ணமியே!’
ஒரு பந்தயம் நடந்ததாம். ‘’அரை (ஆட்டுக்)கிடாவை ஆக்கி கொடுத்தால் உன்னால் சாப்பிட முடிமா?’’ என்று ஒருவர் அரகிடா சாபுவிடம் சவால் விட்டாராம். எந்த தயக்கமும் இல்லாமல் ‘’கொண்டுவா அந்த கடாவை! திண்டு காட்டுகிறேன்!’’ என்றாராம். அடுத்த நாள் வந்தது ஒரு பெரிய கடா. வந்த கடாவை வெட்டி முழுசாகவே செம்பு சட்டியில் போட்டு சமைத்து அப்படியே சகனில் அரகிடா சாபு முன் வைத்தார்களாம்.
தெரு நாட்டாமைகள் முன்னிலையில் சரியாக அரை கிடாவை தின்று முடித்து துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு எழுந்தாராம்.
அங்கேநின்றுபார்த்தவர்கள் எல்லாம் ஆச்சரியத்துடன் மூக்கின் மேல் விரல் வைத்தார்களாம். அரகிடா சொன்னாராம் ‘’அடே! என் கிட்டயா சவால் விடுறிய! மிஞ்சி இருக்கிற பாக்கி அரை கிடாவையும் நானே சாப்பிட முடியும்டா! பாவம் நான் சாப்பிட்டதை பார்த்த உங்கள் நபுசும் துடிக்கும். அதனால் தான் அந்த அரகிடாவையும் மிச்சம் வைத்தேன். பிஸ்மில்லாஹ் பாக்கி அரை கிடாவையும் நீங்களே சாப்பிடுங்கள்!’’ என்று பெருந்தன்மையுடன் சொல்லி விட்டு எழுந்தாராம். இவ்வளவுக்கும் ஒரு ஏப்பம் கூடவிடலையாம். அன்று முதல் அவருக்கு "அறைக்கிடா’ என்று ஊரார் முன்னிலையில் பெயர் விட்டார்களாம். இது வாய் வழி வந்த செய்தி.
கஞ்சி சட்டிகளை எடுத்து வொவ்வொருவருக்காக அரக்கிடா கொடுத்து வருவார். எங்கள் அருகே அவர் நெருங்க-நெருங்க எங்கள் நெஞ்சு படக் படக் கென்று அடிக்கும். கஞ்சி ‘கிடைக்குமோ’ கிடைக்காதோ?’ என்ற பயம். இந்த கஞ்சி குடிக்க நாங்கள் போட்ட திட்டங்கள் நிறைய. இரண்டு நாள் சாப்பிடாதது போல முகத்தில் ஒரு செயற்கையான வாட்டத்தை பரவ விட்டு, உதட்டை நன்றாக தேய்த்து வரண்டு போன உதடு போல் காட்டினோம். ஒரு உண்மையான நோன்பாளி எப்படி இருப்பாரோ அதை விட இருமடங்கு நாங்கள் எங்களை மாற்றினோம். இது எல்லாம் நாங்கள் கஞ்சிக்காக போட்ட வேஷம்.
அரகடா எனக்கு அருகே வந்தார் சட்டி காஞ்சியில் கைவைத்தவர் ‘நோம்பாடா?’’ என்றார் நான் பரிதாபமாக ‘’ஆமாம் சாபு! நெசமா நோன்பு!’’ என்றேன். ‘’பொய் சொல்றேடா! எங்கே நிய்யத்து சொல்லு?’’
அடுத்த பகுதியில் மீதியைச் சொல்கிறேன் இன்ஷா அல்லாஹ் !
S.முஹம்மது பாரூக்
அதிராம்பட்டினம்.