‘பூ’வின் வாடைதான் மூக்கிற்குத் தெரிந்ததே தவிர ‘பேய்’ கண்ணுக்கு தெரியவில்லையே என்று பேயைக் காட்ட வந்தவரிடம்,
“என்ன காக்கா, பூ வாடைதான் வருது பேயைக் காணோமே?” என்றதும்…
“ நான் பல தடவை பேயை இங்கே பார்த்திருக்கிறேன் இன்னைக்கி பூ வைத்துக் கொண்டு வந்த பெண் பேய் நம்ம எல்லோரையும் பார்த்து பயந்துகிட்டு கடல் கரை பக்கம் போச்சு” என்றார்.
அது போச்சு என்றதும் நமக்கு தைரியம் வந்துரிச்சு. திருப்பி அவரிடம்…
“ நம்மளை பார்த்து பேய் ஏன் காக்கா பயப்படனும்?” என்று வினவ..
“நம்மளோடு யாரோ ஒருவன் நெருப்பு ராசிக்காரன் இருக்கான் அதான் பேய் பயந்து கிட்டு கடல் கரை பக்கம் போச்சு” என்றார்.
நாங்களும் தைரியத்தை தூக்கலாக வரவழைத்து கொண்டு அவர் வரமாட்டார் என்ற நம்பிக்கையில், “சரி வாங்க காக்கா கடல் கரைக்கு போய் அந்த பேயை பார்த்து விடுவோம்” என்று கூப்பிட்டதும்.
“சரி வாங்கடா போவலாம்” என்று ஸ்டடியாக நின்றதும் எங்களுக்கெல்லாம் தூக்கி வாரி போட்டது.
இப்போ கடல் கரையை நோக்கி நடை பயணம் தொடங்கியது.
கஸ்டம்ஸ் பில்டிங் அந்த இருட்டில் தலைவிரி கோலமாய் காட்சி அளித்தது அதற்கு காரணம் உடைக்கப்பட்ட ஓடுகளும் களவாடப்பட்ட கதவுகளும் பேய் வீட்டை நினைவு காட்டியது. அங்கே நின்ற பாதாங்காய் மரத்தை காட்டி “இந்த மரத்தில்தான் பூ வாடையோடு போன அந்த பெண் தூக்கு போட்டு கொண்டு இறந்தது” என்று மேலும் எங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துக் கொண்டே கடற்கரை ரோட்டில் உள்ள முதல் பாலத்தை கடந்தோம் கடலை நெருங்க நெருங்க பயமும் எங்களை நெருங்கிக் கொண்டே வந்தது.
“ஏன் காக்கா அந்த பெண் தூக்கு போட்டு கொண்டு செத்தது?” என்று நூறு நாள் நிற்காமல் ஓடின அந்தக்கால ரெக்கார்டு சத்தத்தில் கேட்டதுதான் தாமதம், சட்டென்று அவரே தொடர்ந்தார்
“அந்த பெண் ஒரு கல்லுரி மாணவனை காதலித்ததாம் அவன் இந்த பாதாங்காய் மரத்தடியில் இருந்து தான் படித்துக் கொண்டிருப்பானாம். அவன் படிக்க வரும்போதெல்லாம் இந்த பெண்ணுக்கு பூ வாங்கிக் கொண்டு வருவானாம். இவர்கள் இருவரும் வேறு வேறு ஜாதியம், அதனால் வீட்டில் எதிர்ப்பு கிளப்பியதால் இந்த பெண் இந்த பாலங்காய் மரத்தில் தூக்கு போட்டுக் கொண்டு செத்துவிட்டது”
என்று ஒரு முன் கதை சுருக்கம் சொன்னார்.
கதையைக் கேட்ட நண்பன் “காதலால் வாழ்ந்தது கொஞ்சம் பேராத்தான் இருக்கும் காதாதலால் செத்தது அதிகம் பேரா இருக்குமோ?” என்று முணுமுணுத்தான்.
இந்த முணுணுப்போடு நாங்கள் இரண்டாவது பாலத்தை நெருங்கும் போது மணி சரியாக ஒன்று. இரண்டாவது பாலத்தை தாண்டி கடல் கரையை நெருங்கியதும் கொஞ்சம் தூரத்தில் கடல் தண்ணீருக்கும் கரைக்கும் நடுவே ஒரு நிழல் போல் ஒரு உருவம் தென்பட்டது பேயை காட்ட வந்தவரோ…
”டேய் அங்கே பாருங்கடா பேய் நிற்கின்றது” என்றார்
அங்கே தென்பட்ட உருவத்தை காட்டி அனைவரும் அதையே உற்று நோக்கி கொண்டிருக்கையில் நடந்தது, அந்த ஆச்சர்யம் நின்ற உருவம் லேசாக அசைந்து அசைந்து ஆடியது நின்ற இடத்திலேயே.
எங்களுக்கோ பயத்தில் வியர்க்க ஆரம்பித்து விட்டது பக்கத்திருந்த நண்பன் சொன்னான்.
“அந்த பேய் உயரம் கம்மியா இருக்கே இது பேயா அல்லது கடல் மோகினியா” என்ற சந்தேகத்தை கொத்திக் கிளைப்பினான்.
மற்ற நண்பனோ “இது மோகினிதான் இது நம்மளை சும்மா விடாது நல்ல மாட்டிக்கிட்டோம்” என்று மேலும் பயத்தை பத்தற்றதோடு கலந்தான்.
எங்களில் ஒருவன் மட்டும் வாயே திறக்காமல் வாயில் முனுமுனுத்தவாறு இருந்தான் “என்னடா முனுமுனுக்குறே” சீண்டியதுதான் தாமதம்.
“என்னை காப்பாத்திக் கொள்ள யாசின் ஓதி கொண்டிருக்கின்றேன்” அதே முனுமுனுப்போடு.
“அடப்பாவி ஒனக்கு மட்டும் ஒதிக்கிறியோ இது நியாயமா எல்லோருக்கும் சேத்து ஒதுடா” என்றதும் யாசினை சத்தமிட்ட உரக்க ஓத ஆரம்பித்தான்.
பேயை காட்ட வந்தவர் “பேயை பாத்தாச்சு வாங்கடா போவலாம்” என்றார்.
இவ்வளவு நேரமும் அமைதியா இருந்த இன்னொருவன் “அது பேயாக தெரியவில்லை வேறு ஏதோ” என்றான்.
பேயை காட்ட வந்தவரோ “அப்போ நீ அது கிட்டேயே போய் பாரு அது கொடுக்குற அறையிலே ரெத்தம் கக்கி சவாய்” என்று பயமுறுத்தினார்.
“அடிக்கப் போறது நானா என்று பார்ப்போம்” என்று சொல்லி கடல் கரை ஓரம் நின்று கொண்டிருந்த தோணியில் போய் ஒரு கம்பை உருவிக் கொண்டு வந்து அந்த அசைந்து ஆடிக் கொண்டிருந்த உருவத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் பின்னால் நானும் நடக்க தொடங்கினேன்…!
தொடரும்
Sஹமீது