
வனமெல்லாம்
வாசம் மிகைக்கும்
மலரெல்லாம்
மொட்டவிழும் மலர் கண்டு -ரீங்கார
மெட்டவிழ்க்கும் இளம் வண்டு
தண்டுவழி வண்டூர
தன் னூற்றில்
தேன் சுரக்கும் மலர்
இதழ்விரித்தப் புன்னகையாய்
மடல்விரித்து மலர்ந்திருக்க
சின்னஞ்சிறு சிறகடித்து
மின்னலென வண்டுவரும்
வீண் குடியில் வீழ்ந்துபோன
மாந்தரைப் போலல்லாமல்
தேன் குடித்துத் திளைக்கும் வண்டு
தேன் கொடுத்துக் களிக்கும் மலர்
சட்டத் தடுப்புகளோ
சமூக வரம்புகளோ
கட்டுப்படுத்த இயலாத
கன்றுக் குட்டியென
துள்ளிக் குதித்து
வாய்த்த பூக்களிலெல்லாம்
வாய் வைக்கும் வண்டு
பூக்களைச் சொல்லிக் குற்றமில்லை
வண்டுகளுக்குத்தான்
வாலை
ஒட்ட நறுக்க வேண்டும்
மகரந்தத் தூள் பரப்பி
மலர்களின் சூல் நிரப்பி
இன விருத்திக்கு
தின முழைக்கும் வண்டு
வாசமோ வண்ணமோ
வண்டினைச்
சுண்டியிழுக்க
பூக்காடு காய்க் காய்க்கும்
புசிக்கக் கனி கிடைக்கும்
புடவையின் வண்ணமோ - கூந்தல்
பூக்களின் வாசமோ
சுண்டியிழுக்கும் பெண்மை
கண்டுயிளிக்கும் ஆண்மை
வனவாசம் விட்டொழித்து
சனநாயக சட்டமேற்று
பூக்கரம் பிடித்தால்
கட்டிவைத்துக் காத்திருந்த
பூச்சரம் உதிரும்
புதுச் சந்ததி விதிரும்
மகரந்தகத்திற்குத்தான்
மலர்த்தோட்டம்
மண அந்தரத்திற்கு
ஒற்றைப்பூவே உகந்தது!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்