(2007 ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த ‘அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில்’ இயற்றியளித்த ஆய்வுக் கட்டுரை. வலைத்தள வாசகர்களின் வசதியைக் கருதி, சில தகவல்களை விடுத்தும், சில தகவல்களை எடுத்தும் உருவாக்கப்பட்டது, இத்தொடர்.)
“உம் இரட்சகனின் பாதைக்கு மக்களை நுண்ணறிவைக் கொண்டும் அழகிய நல்லுரையைக் கொண்டும் அழைப்பீராக!” (அல்குர்ஆன்-16:125) எனும் இறைவசனத்தில் இடம்பெற்றுள்ள ‘ஹிக்மா’ (நுண்ணறிவு) என்ற சொல்லையும், “இன்ன மினஷ் ஷிஅரி ஹிக்மா” (திண்ணமாக, கவிதைகளில் நுண்ணறிவு பொதிந்துள்ளது. - இப்னு மாஜா) என்ற நபிமொழியையும் பொருத்திப் பாருங்கள்.
“உண்மையும் அழகுணர்வும் நிறைந்த சொற்களால் வாழ்க்கையைச் சொல்லோவியமாகத் தீட்டிக் காட்டுவதே கவிதை” என்று கூறுகின்றார் இலக்கிய மேதை ஒருவர். (இலக்கியக் கலை – பக்கம் 46) “ஊடுருவி நிற்கும் உண்மைப் பொருளை உணர்த்த வல்லது கவிதை” என்பர் ஆய்வாளர்கள்.
ஓரிறைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியில் கவிதைக்கென்று ஒரு கட்டுப்பாடான இலக்கணமே வகுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ‘கவிதைகளெல்லாம் பொய்’ என்ற பொதுவான கருத்தை மக்கள் கொண்டிருப்பதாலும், கற்பனைகளையே மூலதனமாகக் கொண்டு முற்காலக் கவிஞர்கள் கவி பாடியதாலும், இஸ்லாமியத் திருமறை குர்ஆன், “கவிஞர்களை வழிகேடர்கள்தாம் பின்பற்றுவர்” (26:224) என்று கூறுகின்றது.
என்றாலும், இறைவன் அல்லாஹ் இறக்கிய வேதமும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பேசிய மொழியும் அரபியாக இருப்பதால், குர்ஆனிய வசனங்களும் நபிமொழிகளும் சில இடங்களில் கவிதையின் இலக்கியத் தரத்தில் அமைந்திருக்கக் காண்கின்றோம். அரபி இலக்கியத்தில், இஸ்லாத்திற்கு முந்திய ‘ஜாஹிலிய்யா’ எனும் அறியாமைக் காலத்திலிருந்தும், கவிதைகள் மலிந்து கிடக்கின்றன. இம்ரஉல் கைஸ்,
உமைய்யத் இப்னு அபிஸ்ஸல்த், லபீத் போன்ற புகழ் வாய்ந்த கவிஞர்கள் அன்று இருந்துள்ளனர். ஆனால், அத்தகைய கவி வல்லாரையும் மலைக்க வைக்கும் விதமாக, “மா ஹாதா கலாமுல் பஷர்” என்று கூற வைத்தது அல்குர்ஆன்!
மக்காவில் தொடக்கமாக இறங்கிய இறைவசனங்கள் மக்கத்து இலக்கிய விற்பன்னர்களுக்கும் அறிவில் முதிர்ந்த குறைஷியருக்கும் வாயாப்புக் கொடுக்கும் விதத்தில், இனிய ஓசையுடன் கவிதைகளைப் போன்று அமைந்திருப்பதை நாம் காண முடிகின்றது. இதற்குச் சான்றாக, அன்றாடத் தொழுகைகளில் நாம் ஓதும் சிறு சிறு அத்தியாயங்கள் ஓசை நயத்துடன் உள்ளதை நாம் உணரலாம்.
இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் நல்ல கவிஞர்களை ஊக்கப் படுத்தியுள்ளார்கள்! சிறந்த கவிதைகளைச் செவி மடுத்துப் பாராட்டியும் உள்ளார்கள்! கவிஞர்களைக் கவி பாடத் தூண்டியும் உள்ளார்கள்! ஏன், அவர்களே சில வேளைகளில் கவி பாடியும் உள்ளார்கள்! நபிமொழி இலக்கியங்களையும் நபி வரலாற்றையும் நன்கு ஆராய்பவர்கள் இதற்கு ஏராளமான சான்றுகளை அவற்றில் காண முடியும்.
மாநபியவர்கள் மக்கத்துக் குறைஷிகளின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து சென்றபோது, மதீனாவில் அவர்களை எதிர்கொண்டு அன்பாதரவுடன் சிறுவர் சிறுமியர் கூடிப் பாடிய இசைப் பாடல் நாம் அனைவரும் அறிந்த ஒன்றல்லவா? அது இதோ:
“தலஅல் பத்று அலைனா, மின் தனிய்யாத்தில் வதாஇ
வஜபஷ் ஷுக்று அலைனா, மா தஆ லில்லாஹி தாஇஅய்யுஹல் மபுஊது ஃபீனா, ஜுர்த்த மன் இலைஹி தாஇ”
* சான்றுகள்: பைஹகீ, அபூதாவூத்
இந்த வாழ்த்துக் கவிதை வரிகளைக் கீழ்க் கண்டவாறு தமிழ்க் கவிதை வடிவில் ஆக்கலாம்:
“எங்கள் மீதே ஒளிவீச எழுந்து வந்த வெண்ணிலவு
மங்கா தனியத் துல்வதாவின் மருங்கி ருந்து வந்ததுவே.
அல்லா வின்பால் அழைப்பாளர் அழைக்கும் போது நாங்களெலாம்
வல்லா னுக்கே நன்றியினை வழங்கக் கடமைப் பட்டுள்ளோம்.
இறைவ னனுப்பிய தூதரிலே இறுதித் தூதாய் வந்தவரே!
குறையில் லாவும் நேர்வழியில் கூடி யுமக்குக் கீழ்ப்படிவோம்.”
இறை உவப்பையும் நபி நேசத்தையும் இதயத்தில் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் இது போன்ற கவிதை வரிகளில் இன்பத்தைக் காண்பார்கள் என்பதில் ஐயமுண்டோ?
‘தாரகுத்னி’ என்ற நபிமொழித் தொகுப்பில் இடம்பெறும் நபிமொழிப் பகுதியொன்று நற்கவிதைகளுக்குக் கட்டியம் கூறுவதைப் பாருங்கள்:
“கலாமுன் ஃப ஹசனுஹு ஹசனுன்; வ கபீஹுஹு கபீஹுன்.”
(நற்கருத்துடைய சொற்கள் கவிதைகளாகும். தீய கருத்துள்ளவை தீயவையாகும்.)
*** இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்







