Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label பள்ளிவாசல். Show all posts
Showing posts with label பள்ளிவாசல். Show all posts

பிரயாண வழியில்...! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | September 15, 2016 | , , , , , ,

பிஸ்மில்லாஹ்...

சென்னையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக ஊர் சென்றபோது; ஒரு நல்ல செய்தியைக் கேட்கவும், காணவும் நேர்ந்தது. அதைப் பற்றி உங்களிடையே பகிர்ந்து கொள்ளவும் மேலும், அவ்வழியில் முஸ்லீம்களாகிய நாம் இன்னும் பல பயன்கள் பெரும் வகையில் - முன்னேற்றப் படுத்திக் கொள்ளலாம் என்ற யோசனையை முன் வைக்கவுமே இந்த அனுபவ பதிவு !

சென்னைக்கு உள்ளேயும் சரி, நாம் பயணிக்கும் திருச்சி வரியிலான மேம்படுத்தப்பட்ட நெடுஞ்சாலைகளாகட்டும், ஒவ்வொரு ஊரின் வலது அல்லது இடது பக்கமாக சிறியதும் / நடுத்தரதுமான ஏதேனும் ஒரு பள்ளிவாசல் காணக் கூடியதாக இருக்கிறது. அந்தக் காட்சிகள் நம் கண்களுக்கு குளிர்ச்சியை தந்து மனதுக்கு இன்பமாக இருக்கிறது.

பல பள்ளி வாசல்களின் அருகில் மரக்கறி உணவு ரெஸ்டரண்டுகள் அமைந்து இருப்பதால், வக்து நேரத்தில் (பயணிகளுக்கு ஜம்மு / கஸ்ரு சலுகையுண்டு) தொழுதுவிட்டு அருகில் உள்ள உணவகத்தில் உணவருந்தி விட்டு மீண்டும் பயணம் செய்ய இதமகாவும், வசதியாகவும் இருக்கிறது அப்படிப்பட்ட பள்ளியைத்தான் புகைப்படத்தில் காண்கிறீர்கள்.


இது திண்டிவனம் நுழைந்தவுடன் இருக்கிறது பள்ளியின் பெயர் சல்மான் ஜும்மா பள்ளி, இதன் அருகிலேயே ஒரு மரக்கறி உணவகம் இருக்கிறது. இந்தப் பள்ளியில், பெண்கள் தொழவும் தனி இடவசதியுண்டு. 

மேலும் பள்ளிவாசளின் இமாம் கூறியது “இந்த பள்ளிவாசலுக்கு சலவைக்கல், ஒலிபெருக்கி கருவிகள், பள்ளிவாசலின் பெயர் பலகை என்று இவை அனைத்தையும் தன்னார்வத்துடன் செய்து கொடுத்தது அதிராம்பட்டினத்தைச் சார்ந்த மூன்று சகோதரர்கள்தான்” என்றார். நம்மூர் மக்களின் நல்ல எண்ணங்களை அறிந்து மனம் மகிழ்வடைந்தது அல்ஹம்துலில்லாஹ் !



வரும் வழியில் white mosque ”வெள்ளை மஸ்ஜித்” என்ற பெயரில் அழகான ஒரு பள்ளி தென்பட்டது, கடந்து வந்த ஊர் பெயர் அறிய முடியவில்லை.

சில பள்ளி வாசல்களில் பெண்களுக்கு என தனியிட வசதி இல்லை, மேலும் சில பள்ளிகளில் பெண்கள் தொழும் இடம் பள்ளிவாசலை விட்டு ஒதுங்கி உள்ளதால், பெண்கள் தனியே சென்று தொழ தயங்குகிறார்கள். அவற்றையெல்லாம், சரி செய்து பெண் பயணிகளுக்கும் இயற்கை உபாதைகளை நிறைவு செய்து கொள்ளவும் தொழவும் வாய்ப்புகளை பரவலாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

ஆனாலும், மேற்சுட்டிய நிறைகளில் சில குறைகளை களைய இலட்சங்கள் செலவாகும், அந்தந்த ஊர் பள்ளிவாசல்கள் அமைந்திருக்கும் மக்கள் வசதி படைத்தவர்களல்லர். மேலும் அவ்வாறான வழித்தடங்களில் பயணங்களில் ஈடுபடும் இஸ்லாமிய அன்பர்கள் ஒன்றினைந்தோ / தனித்தோ சென்னை வரை செல்லும் வழித்தடங்களில் இருக்கும் பள்ளிவாசல்களை புணரமைப்பு செய்ய முன் வந்தால் இறைவனின் நற்கூலி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை இன்ஷா அல்லாஹ் !

இன்னும்...

வழித்தடங்களில் அமைந்திருக்கும் பள்ளிவாசல்கள் ஒவ்வொன்றிற்கு அருகிலும் அதிரையின் ஐந்து கறி சோறும், கீழக்கரை கோழி குறுமாவும், காயல்பட்டினத்து நெய்நோறும் கிடைத்தால் இன்னும் சுகமாக இருக்கும் அல்லவா !?

உணவுவிடுதி தொழிலில் ஆர்வம் உள்ளவர்களும் சிந்திக்கலாமே...

தீனுக்கு அருகில் ’த்தீனும்’ கிடைக்க !

அ.ர.அ.ல.

காலைநேர நடையும் பள்ளியில்லாக் கவலையும் 12

அதிரைநிருபர் பதிப்பகம் | August 08, 2016 | , , , , , ,

பிஸ்மில்லாஹ்...

கடந்த ஆண்டு விடுமுறையில், இதே ஆகஸ்டு மாதம்!

தினமும் ஃபஜ்ர் தொழுதுவிட்டு ஓதவேண்டிய தஸ்பீஹ், திக்ர் மற்றும் துஆ
யாவும் முடித்துவிட்டு நடைப்பயிற்சிக்கு செல்வது வழக்கம்.

தினமும் ஒவ்வொரு பகுதி, ஒவ்வொரு திசை.

ஒருநாள் முத்துப்பேட்டை சாலையில் நசுவினி ஆற்றுப்பலம் வரை. மறுநாள் ராஜாமடம் ஏரி வரை. அடுத்த நாள் மதுக்கூர் சாலை. இப்படியாக பல பகுதிகள், பல திசைகளில் நடை.

அன்று ஒரு நாள் C M P லைன் வழியாக பக்கத்து கிராமத்தை அடைந்து திரும்பி வரும் வேலையில் ஃபாரூக் மாமாவை சந்தித்து என்னை நானே அறிமுகம் செய்துகொண்டு (காரணம் பல ஆண்டுகள் கழித்து சந்திதோம்) தெருவில் நடந்த நிகழ்வுகள், குடும்ப செய்திகள் யாவற்றையும் நின்று கொண்டே சுமார் ஒரு மணி நேரம் பேசி, நடைப் பயிற்சியை மறந்தோம். அவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். எனக்கும் பிரிந்த சொந்த மொன்று வந்து சேர்ந்த சந்தோஷம். இழந்த ஒன்றை பெற்ற மகிழ்ச்சியை அவர்கள் அடைந்தது போன்ற ஓர் உணர்வை அவர்களின் முகத்திலிருந்து நான் அறிந்துகொண்டேன்.

சவூதிக்குப் புறப்படுவதற்கு முன் ஒரு நாள்! கால்கள் நடந்தது ஊரின் பெரிய ஜுமுஆ பள்ளி எனப் போற்றப்படும் மேலத் தெரு ஜுமுஆ பள்ளியைத் தாண்டி நடந்தேன். சானாவயல் வந்தது. அதனையடுத்து ரயில்வே கேட் வரைச் சென்று திரும்பினேன். திரும்பி வரும்போது ஓர் ஆழ்ந்த கவலை மேலிட்டது. மாஷா அல்லாஹ் ஊர் பல்கிப் பெருகிவிட்டது. குறிப்பாக மேலத் தெருவின் பெருக்கம் பக்கத்து கிராமம் வரை சென்றுவிட்டது. அல்ஹம்து லில்லாஹ்! ஆனால், "ஜுமுஆ பள்ளியைத் தவிர வேறு எந்த பள்ளிவாசலும் இங்கே இல்லையே. தொழுவதற்கு சுமார் 1 கி.மீ. தூரம் வரை செல்ல வேண்டியுள்ளதே" என்பது தான் அந்தக் கவலை !

இந்தக் கவலையை யாரிடம் சொல்வது என்ற நினைப்பிலேயே திரும்பி வந்துகொண்டிருந்தேன். இதற்குச் சரியான ஆள் சகோ. ஹலீம் தான் என்று நினைத்துக்கொண்டு வந்தேன். தூரத்தில் ஒருவர் நடைப்பயிற்சிக்கு ஏற்றாற்போல் ஷூ அணிந்து வருவது தெரிந்தது. நெருங்கி வந்த போதுதான் ஆச்சர்யம், நான் நினைத்து வந்த அதே சகோ. ஹலீம். வழக்கமாக நான் அவரை செயலாளர் என அழைப்பேன். காரணம் ABM தமாம் கிளையின் சிறந்த செயலாளராகப் பல ஆண்டுகள் பொறுப்பேற்று செயல்பட்டார் என்பதற்காக! கிட்டே வந்ததும் சலாம் கூறி நலம் விசாரித்து என்னுடைய கவலையைச் சொன்னேன். அதற்கு அவர்கள்: அதோ சுடுகாடு தாண்டி ஓர் இடம் பள்ளிக்காக ஒதுக்கி இருக்கிறார்கள். கூடிய விரைவில் கட்டுமானப் பணி தொடரும் எனக் கூறினார். மகிழ்ச்சி! அவசரகமாக தொடங்குங்கள் எனக் கூறிவிட்டு விடைபெற்றுத் திரும்பினேன். 

அடுத்த நாள் பயணம், சவூதி வந்து சில மாதங்கள் கழிந்தது. நமதூர் வலைத்தளத்தில் ஒரு செய்தி: "சானாவயல் பகுதியில் ஒரு சகோதரர் தனது சொந்த இடத்தில் பள்ளிவாசல் நிர்மானித்துள்ளார்" என்பது தான் அது! மிக்க மகிழ்ச்சியடைந்து அந்தச் செய்தியில் எனது கமென்ஸ்ஸும் போட்டேன். அந்தச் சகோதரருக்கு எனது துஆவும் பாராட்டும்.

அதேபோல், இந்த வருட விடுமுறையில் ஷாதுலிய்யா புதுப்பள்ளியில் லுஹர் தொழுது கொண்டிருக்கும் போது ஆட்டோவில் ஒரு விளம்பரம்: சானாவயலில் அன்னை ஃபாத்திமா (ரழி) மஸ்ஜிது என்ற செய்தி மிகவும் ஆச்சரியமான மகிழ்வைத் தந்தது. கடந்த ஆண்டு நாம் கவலைப்பட்டோம். அல்ஹம்துலில்லாஹ்! இந்த வடரும் அந்தப் பகுதியில் இரண்டு இறையில்லங்கள்.

சரியாக, போனவருடம் போல் புறப்படுவதற்கு முன் ஒரு நாள் அதே பகுதிக்குச் சென்று இரண்டு இறையில்லங்களையும் பார்வையிட்டு வந்தேன். அல்ஹம்துலில்லாஹ்! 

இதற்கிடையில் ஒரு சகோதரர் சொன்னர் "அடுத்த வருடம் வரும்போது இன்ஷாஅல்லாஹ்  இன்னுமோர் மஸ்ஜிது கூடுதலாக இருக்கும் என்று!

ஆம்! மஸ்ஜிது தேவையான பகுதிதான் அது. கூடிய விரைவில் திறப்பு விழா அழைப்பிதழ் வரும்.

பள்ளிவாசல்கள் பல்கிப் பெருகுவது சந்தோஷமே! அவற்றில் பித்அத்கள் இல்லாதவையாகத் திகழ வைப்பது அந்தந்த நிர்வாகிகளின் பொறுப்பாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது எண்ணங்களைத் தூய்மையாக்கி, இஹ்லாஸுடன் பணிகளாற்ற அருள்புரிவானாக. ஆமீன்.

அபூஹாமித்
அல்லாஹ் நாடினால் மீண்டும் சந்திப்போம்…

பதவிகள் இல்லாத நாற்காலிகள்... – அச்சம் ! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | May 04, 2016 | , , ,


பாரம்பரியம் மிக்க அதிரைப்பட்டினம், நம் சமுதாய மக்களின் நன்னெறிகளாலும் அவர்களின் இயல்பான பண்பாலும் அதன் சுற்று வட்டாரத்திலும் கோலோச்சினார்கள், அதிமுக்கியமாக மார்க்க விஷயத்திலும், நல்ல விடயங்களை முன்னெடுத்து செல்வதிலும். காலச் சூழல், இளமையை தொலைத்திட வெளிநாடு/வெளியூர் சென்ற இரண்டு தலைமுறை சமுதாயம், அவரவர்களின் இருப்பிடம் திரும்பி நிம்மதியாக இருக்கலாம் என்று திரும்ப நினைத்தாலும் அச்சமே அவர்களை ஆட்கொள்வதாக பரவலாக இருக்கும் புலம்பல்கள்.

இளமையின் இரகசியம் அறியாதவர்கள் இவ்வுலகில் எவரும் இல்லை, ஆனாலும் இப்படித்தான் வாழவேண்டும் என்று சட்டமாக்கப்படாத சாபத்தின் சஞ்சலங்களை கட்டாய கடமை போன்று பின்பற்றி அதன் போக்கிலேயே கடந்த இரண்டு தலைமுறை தொலைத்தது தனது இளமையை என்று சொன்னால் மறுக்க யாரும் கொடிதூக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

அவ்வாறான சூழ்நிலைகள் இனியும் நிகழாவண்ணம், இனிவரும் தலைமுறை / இப்போது தலையெடுக்கும் தலைமுறை என் குடும்பம், என் வீடு, என் ஊர், என் நாடு என்று வட்டங்களிட்டு அவைகளுக்குள் சுழல கற்றவர்களாக எழுந்து வருவது ஆரோக்கியமே, இதனை அவ்வாறே நிலைத்திடவும் உறுதி கொள்ளவேண்டும் இன்ஷா அல்லாஹ் !

மேற்சொன்னவைகள் தலைப்பிற்கு எவ்வித சம்பந்தமில்லாதது போன்று தோன்றினாலும், அன்றைய அல்லது அவைகளை கடந்து வந்த தலைமுறைகள் அனுபவிக்கும் இன்றைய சூழலின் கஷ்ட நஷ்டங்களை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை....

15 வருடங்களுக்கு முன்னால் பள்ளிவாசல்களில் நாற்காலிகள் என்று இருக்கும் அவைகள் தொழுகை அல்லாத நேரங்களில் பயன்படுத்தவும் அல்லது அதில் ஏறி நின்று மோதினார் ஒட்டடை அடிக்கவும், அல்லது கடிகாரத்தின் முட்களை சரியாக நிமிரித்தி வைக்கவும் என்றுதான் இருந்தது. அவைகளில் வெளிப் பள்ளியில் ஒன்றோ இரண்டோ இருக்கும் அல்லது மோதினார் தங்கியிருக்கும் அரையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.

இன்றைய சூழலில், தொழுகைக்கான சஃப்பிலும் மற்றும் இதர காரியங்கள் பள்ளிவாசல்களில் நடைபெற்றால் அங்கேயும் சரி நாற்காலிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது. இதில் வயது பேதமில்லை, இளயவர்களும் முதியவர்களும் என்று அதிகரித்திருப்பது சொல்லாமல் எதனையும் சுட்டிக் காட்டவில்லை, தலையில் அடித்து சொல்வது ஆரோக்கியத்தினை பற்றிதான்.

தொழுகைக்காக பள்ளிக்குள் நாற்காலிகள் ஓரத்தில் வரிசையாக வைக்கப்ப்பட்டிருந்தது, அதன் அருகில் ஒரு நடுத்தர வயதுடையவர் தொழுது கொண்டிருந்தார் ஜமாத்தாக... அதன் பின்னர் இரண்டாவது ரக்காத்தில் இணைந்து கொள்ள மற்றொரு சகோதரர் அங்கே நெருங்கியபோது பின்னால் நின்ற அந்த சகோதரருக்கு முன் சஃப்பில் இருந்த நாற்காலியின் பாதிபாகம் பின் சஃப்பில் இருந்ததால் அதனை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு தக்பீர் கட்டிவிட்டார் அப்போது அது யாருக்கும் பெரிதாக தெரியவில்லை அனைவரும் தொழுகையில் ஈடுபட்டிருந்த்தால்...

தொழுகை முடிந்ததும், நாற்காலியில் முன்னே தொழுத நடுத்தர வயது சகோதரர் சற்றே கோபத்துடன் ‘யார்ரா இங்கிருந்த நாற்காலியை எடுத்தது’ என்று நாற்காலி(!!?) பறிபோன கோபத்தில் கேட்டார், பின்னால் நின்ற சகோதரர் தொடர்ந்து தொழுது கொண்டிருந்ததால் அவரின் தொழுகையை முடித்ததும், ‘நான் தான் செய்தேன், நீங்கள் நிலையாக நின்று தொழுது கொண்டிருந்தீர்கள் அதோடு பின்னால் இருந்த சஃப்பிற்கு இடமில்லாமல் இருந்தது அதனால்தான் மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்றார்... அவரும் பரவாயில்லை என்று அமைதியாக சென்று விட்டார்....

அதன் பின்னர் பள்ளியை விட்டு வெளியில் வரும்போது, நாற்காலியில் அமர்ந்து தொழுதவரோடு பேசிக் கொண்டிருந்தவர் அருகில் இருந்தவரிடம் "தரையில் அத்தஹ்யாத்தில் நீண்ட நேரம் உட்கார முடியவில்லை அதனால்தான் சேர் போட்டு தொழுகிறேன் என்றார் அதற்கு அவரின் நண்பர் "உனக்கு எந்த வியாதியும் இல்லையே, வெளிநாட்டிலும் இப்படித்தான் சேர் போட்டு தொழுவியா என்று... ?" அவரோ "அங்கேயெல்லாம் சஃப்பில் நின்றுதான் தொழுவேன் ஊருக்கு வந்ததும் மூட்டு வலி தொடர்ந்து இருக்கிறது....." என்றார்..

இவ்வாறான உரையாடல்களை கேட்டு விட்டு அங்கிருந்து நகரும்போது பழைய நினைவுகளை நோக்கி (MSM-n மற்றும் ஜஸீலா காலத்து அப்பாக்களை) அசைபோட்டேன்.... அதிகமான வயதுடைய மூத்தோர் எவரையும் அப்போது நாற்கலிகளில் அமர்ந்து தொழுகையை நிறைவேற்றியதாகவோ அல்லது, மார்க்க பயான்கள் கேட்டதாகவோ அதிகம் நினைவில் இல்லை... அது அவர்களின் ஆரோக்கியத்தையும் உழைப்பையும், காட்டியது.

எத்தனையோ பெரியவர்கள் தரையில் அமர்ந்தபடியே தொழுவதை கண்டிருக்கிறோம் அன்றும் இன்றும், நாற்காலி போட்டு அமர்வதற்கு ஒரே காரணம் தரையில் அமர்ந்தால் எழுந்திருக்க முடியாத சூழல், கால் மடக்கி உட்கார முடியாத நிலை, நீண்ட நேரம் கால் மடக்கி அமர்ந்தால் எழுந்து நடப்பதில் சிரமம்... ? இவைகள் எதனால் ?

ஏன் இப்படியான நிலை? அச்சமாக இருக்கிறது !

அபுஇபுறாஹிம்

இவர்கள்...! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | August 31, 2015 | , , , , ,

பிஸ்மில்லாஹ் !

ஏக இறைவனைத் தொழ வேண்டும் என்ற உயரிய எண்ணத்தினால், கட்டப்பட்ட பள்ளி வாசல்கள். அந்தப்  பள்ளியின் பெயர் மாநிலமெங்கும் பரவவேண்டும் என்ற ஆர்ப்பரிப்பில் ஆடம்பர வேலைப் பாடுகள். இந்தியாவின் எந்த மாநிலத்தில் எந்தக் கல் கிடைத்தாலும் - அதைக் கொண்டு தரைகள், தூண்கள் இத்யாதி இத்யாதிகள்!

"ஒரு காலம் வரும்போது, பள்ளி வாசல்களைக் கட்டி, பெருமைப்பட்டுக் கொள்வார்கள்" என்ற கருத்தில் உள்ள அண்ணல் நபிகளின் `பொன்மொழி இங்கு நினைவுகூர்தல் வேண்டும்.

இப்படி பார்த்து, பார்த்து,பள்ளி வாசல் கட்டியாயிற்று ! ஐங்காலத் தொழுகையும் நடைபெறுகிறது. அனைத்தும் அமர்க்களமாய் நடைபெறும் சந்தோஷ தினங்கள் தான் என்றென்றும் ! இறைவனை தியானிப்பதின் மகோன்னதம், அது மிக உயர்ந்த பாக்கியம் அல்லவா ?

எல்லாவற்றையும் செய்து விட்டு, மிக முக்கிய, இஸ்லாத்தின் உன்னத பதவியான,தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உத்தம சஹாபாக்கள் பார்த்த அந்த பணியை செய்யும் "இவர்களை" ஏனோ நம் மக்கள் மறந்து விட்டார்கள். 

ஆம் ! கொடுமையான தண்டனையின் உச்சம் அது ! சுடுமணல்! வெற்றுடம்பு,தீக்காயங்கள், சுடும் பாறை நெஞ்சின் மீது வைத்து, `ஏக இறைவனை மறு` என்று சொன்ன இறைநம்பிக்கை அற்ற அந்த மக்கத்து குரைஷிகளைப் பார்த்து "ஏகன் ஒருவனே ! ஏகன் ஒருவனே! என்று முழங்கிய பிலால் (ரலி) அவர்கள் செய்த அந்தப் பணி அல்லவா? அது !

இரண்டு கண்களும் தெரியாது, சமுதாய அந்தஸ்து கிடையாது. ஆனால், ஈருலக தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் - அந்த நல்ல மனிதரை உயரிய பணிக்கு நியமித்தார்கள். அவர்கள் தான் உம்மி மக்தூம் (ரலி). அந்த இரு பெருந்தகைகளும் செய்த பணி "முஅத்தின்" தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் பெரிய பணி. இஸ்லாத்தின் மணி மகுடமாய் விளங்கும் அற்புத பணிஅல்லவா அது!

 பாங்கு சொல்வதற்குள்ள நன்மையையும், முதல் சஃபில் நின்று தொழும் நன்மையையும் ஒருவர் அறிந்தால் அதை அடைய சீட்டு குலுக்கி போட்டு பெற முயற்சிப்பார்கள் என்ற ஹதீசும், பாங்கு சொன்னவர் மறுமையில் கழுத்து நீண்டவராக வருவார் என்ற் ஹதீசும், பாங்கு சொன்னவருக்காக அவர் பாங்கின் ஒலியைக் கேட்ட ஜீவராசிகள் எல்லாம்  அவருக்காக வேண்டி, சாட்சி சொல்வார்கள் என்ற ஹதீசும், பாங்கின் மகிமையை, அதை சொல்லும் "முஅத்தின்"களின் உயர்வை எடுத்துக் காட்டும் வகை அல்லவா ?

அந்த அருமையான பணியை செய்யும், அந்த ஆத்மாக்களின் வாழ்வு சுபிட்சமாக உள்ளதா? இல்லை ! இல்லை ! இல்லவே இல்லை ! ஏன்?

அந்த நல்ல பணியை செய்யும் அவர்களை நாம் எந்த இடத்தில வைத்திருக்கிறோம்.நாம் அனைவரும் சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம்.

நாம் அந்த உன்னத பணியை விளங்கவில்லை, அல்லது மறந்து விட்டோம்."முஅத்தின்" என்ற பெயரையே மோதினாராக்கி, களங்கப்படுத்திவிட்டோம். அவர்கள் பாங்கு மட்டும் சொல்லவில்லை. அதிகாலையில் எழுந்து , தன் அடிப்படைதேவைகளை முடித்து மழையோ, குளிரோ எதையும் பொருட்படுத்தாமல்,பள்ளிவாசல் கதவு திறந்து லைட் போட்டு, ஹவுளில், கக்கூஸில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்து கொண்டுவிட்டு, பாங்கு சொல்லும் நேரம் வந்ததும் அந்த குறித்த நேரத்தில் பாங்கு சொல்ல வேண்டும்.

ஒவ்வொருவராக தொழவரும் நபர்களின் கண்ணுக்கு ஏனோ ஒன்று உதாரணமாக,தண்ணீர் தேங்கியிருப்பது குறையாகத் தெரியும் (குறைகள் மட்டும்தான் தெரியும்) அதற்கு அந்த பள்ளியின் மோதினாரைத்தான் ஒரு பிடிபிடிப்பார்கள். முத்தவல்லி ,தொழவைக்கும், இமாம், நாற்காலிகளில் தொழும் நல்லவர்கள், ஏன் எல்லோரும் அந்த "முஅத்தினை" கேட்கவேண்டிய கேள்விகள் கேட்டு துளைத்தெடுப்பார்கள்.நாம் அதை சரி செய்து,உதவலாமே என வருபவர் மிக மிக சிலரே.

தொழுகை முடிந்தவுடன், பள்ளி வாசலை சுத்தம் செய்தல், கழிவறைகளை கண்காணித்தல்  இப்படியான சில வேலைகளில் நேரங்கள் நகரும் !

காலை, பகல்,  இரவு உணவுக்கு தனது அடுக்குச் சாப்பாட்டு செட்டைத்  தூக்கிக் கொண்டு அன்றைய பொழுதிற்கு உணவளிக்கும் வீட்டிற்கு சென்று ,அலைந்து திரிய வேண்டும்.பள்ளிவாசலின் மின்விசிறியை ஜமாத் தொழுகை நேரம் முடிந்ததும்  ஒரு குறிப்பிட்ட அவகாசத்தில் நிறுத்திவிடுவார்(பள்ளி ரூல்ஸ்), ஜமாத் தொழுகை முடிந்து லேட்டாக தொழவரும் நபர் தன்னிச்சையாக மின்விசிறியை போட்டுக் கொண்டு தொழுது விட்டதை யாரும் பார்த்துவிட்டால அதனை முத்தவல்லியிடம் சொல்லி இவருக்கு திட்டும் வாங்கிக் கொடுக்கும் ஒரு கூட்டமும் பள்ளியில் அமர்ந்துதான் இருக்கும்.

சொந்த் வீடு, மக்களை பார்க்க போதிய நேரம் ஒதுக்க இயலாது, லீவு கிடைப்பது இல்லை, சம்பளமும்  சொல்லிக் கொள்ளும்படியாக பெரும்பாலான பள்ளிவாசல்களில் கிடையாது. இன்றையச் சூழல் விலைவாசியில் அந்த சம்பளத்தைக் கொண்டு 10 நாட்கள்கூட வாழ்க்கையையை ஓட்ட இயலாத சூழல்.

இன்னும், அவர்களுக்கு மன உளைச்சல்கள் , காயங்கள், ஏச்சுப் பேச்சுகள் ஏராளம்.

மார்க்கத்தின் உயர்ந்த பணி செய்யும் அம்மக்களைப் பற்றி, நாம் சிந்தனை செய்தோமா ? நம் அருகில் உள்ள் அப்பள்ளியின், முஅத்தின்களை அரவணைத்திருக்கிறோமா ? இதுவரை இல்லை என்றாலும் பரவாயில்லை !இனியாவது, இன்ஷா அல்லாஹ் அந்த முஅத்தின்களின் தோள்களில் தோழமையுடன் கைபோட்டு, அவர்களின் சுகதுக்கங்களில் பங்கு கொண்டு அவர்களின் குடும்ப உறுப்பினர்களை அணுகி, அவர்கள் பிள்ளைகளின் கல்வி மேம்பாடு போன்றவற்றில் அனுசரனையாக விளங்கி, அந்த உயர்ந்த பணி செய்யும் அவர்களுக்கு தோள் கொடுப்போம். ஏனெனினில் அவர்கள் நீண்ட கழுத்துடன் மறுமையில் (தனி அந்தஸ்துடன்) வருவார்கள் ! எல்லா ஜீவராசிகளும் அவர்களுக்காக சாட்சி சொல்லும் !

நாம் !?

இப்னு அப்துல் ரஜாக் 

(‘முஅத்தின்’களின் இப்பிரச்சனையை  நாம் எவ்வாறு களைய வேண்டும்?அவர்களின் சம்பள உயர்வுக்கு என்ன செய்ய வேண்டும் ?போன்ற கருத்துக்கள் பரிமாறி,அதை எப்படி முன்னெடுப்பது?அதற்கு நாம் எவ்வாறு பங்களிக்கலாம் என கருத்துக்கள் தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்,நன்றி)

பதவிகள் இல்லாத நாற்காலிகள்... – அச்சம் ! 6

அதிரைநிருபர் | August 14, 2014 | , , , , , ,


பாரம்பரியம் மிக்க அதிரைப்பட்டினம், நம் சமுதாய மக்களின் நன்னெறிகளாலும் அவர்களின் இயல்பான பண்பாலும் அதன் சுற்று வட்டாரத்திலும் கோலோச்சினார்கள், அதிமுக்கியமாக மார்க்க விஷயத்திலும், நல்ல விடயங்களை முன்னெடுத்து செல்வதிலும். காலச் சூழல், இளமையை தொலைத்திட வெளிநாடு/வெளியூர் சென்ற இரண்டு தலைமுறை சமுதாயம், அவரவர்களின் இருப்பிடம் திரும்பி நிம்மதியாக இருக்கலாம் என்று திரும்ப நினைத்தாலும் அச்சமே அவர்களை ஆட்கொள்வதாக பரவலாக இருக்கும் புலம்பல்கள்.

இளமையின் இரகசியம் அறியாதவர்கள் இவ்வுலகில் எவரும் இல்லை, ஆனாலும் இப்படித்தான் வாழவேண்டும் என்று சட்டமாக்கப்படாத சாபத்தின் சஞ்சலங்களை கட்டாய கடமை போன்று பின்பற்றி அதன் போக்கிலேயே கடந்த இரண்டு தலைமுறை தொலைத்தது தனது இளமையை என்று சொன்னால் மறுக்க யாரும் கொடிதூக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

அவ்வாறான சூழ்நிலைகள் இனியும் நிகழாவண்ணம், இனிவரும் தலைமுறை / இப்போது தலையெடுக்கும் தலைமுறை என் குடும்பம், என் வீடு, என் ஊர், என் நாடு என்று வட்டங்களிட்டு அவைகளுக்குள் சுழல கற்றவர்களாக எழுந்து வருவது ஆரோக்கியமே, இதனை அவ்வாறே நிலைத்திடவும் உறுதி கொள்ளவேண்டும் இன்ஷா அல்லாஹ் !

மேற்சொன்னவைகள் தலைப்பிற்கு எவ்வித சம்பந்தமில்லாதது போன்று தோன்றினாலும், அன்றைய அல்லது அவைகளை கடந்து வந்த தலைமுறைகள் அனுபவிக்கும் இன்றைய சூழலின் கஷ்ட நஷ்டங்களை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை....

15 வருடங்களுக்கு முன்னால் பள்ளிவாசல்களில் நாற்காலிகள் என்று இருக்கும் அவைகள் தொழுகை அல்லாத நேரங்களில் பயன்படுத்தவும் அல்லது அதில் ஏறி நின்று மோதினார் ஒட்டடை அடிக்கவும், அல்லது கடிகாரத்தின் முட்களை சரியாக நிமிரித்தி வைக்கவும் என்றுதான் இருந்தது. அவைகளில் வெளிப் பள்ளியில் ஒன்றோ இரண்டோ இருக்கும் அல்லது மோதினார் தங்கியிருக்கும் அரையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.

இன்றைய சூழலில், தொழுகைக்கான சஃப்பிலும் மற்றும் இதர காரியங்கள் பள்ளிவாசல்களில் நடைபெற்றால் அங்கேயும் சரி நாற்காலிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது. இதில் வயது பேதமில்லை, இளயவர்களும் முதியவர்களும் என்று அதிகரித்திருப்பது சொல்லாமல் எதனையும் சுட்டிக் காட்டவில்லை, தலையில் அடித்து சொல்வது ஆரோக்கியத்தினை பற்றிதான்.

தொழுகைக்காக பள்ளிக்குள் நாற்காலிகள் ஓரத்தில் வரிசையாக வைக்கப்ப்பட்டிருந்தது, அதன் அருகில் ஒரு நடுத்தர வயதுடையவர் தொழுது கொண்டிருந்தார் ஜமாத்தாக... அதன் பின்னர் இரண்டாவது ரக்காத்தில் இணைந்து கொள்ள மற்றொரு சகோதரர் அங்கே நெருங்கியபோது பின்னால் நின்ற அந்த சகோதரருக்கு முன் சஃப்பில் இருந்த நாற்காலியின் பாதிபாகம் பின் சஃப்பில் இருந்ததால் அதனை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு தக்பீர் கட்டிவிட்டார் அப்போது அது யாருக்கும் பெரிதாக தெரியவில்லை அனைவரும் தொழுகையில் ஈடுபட்டிருந்த்தால்...

தொழுகை முடிந்ததும், நாற்காலியில் முன்னே தொழுத நடுத்தர வயது சகோதரர் சற்றே கோபத்துடன் ‘யார்ரா இங்கிருந்த நாற்காலியை எடுத்தது’ என்று நாற்காலி(!!?) பறிபோன கோபத்தில் கேட்டார், பின்னால் நின்ற சகோதரர் தொடர்ந்து தொழுது கொண்டிருந்ததால் அவரின் தொழுகையை முடித்ததும், ‘நான் தான் செய்தேன், நீங்கள் நிலையாக நின்று தொழுது கொண்டிருந்தீர்கள் அதோடு பின்னால் இருந்த சஃப்பிற்கு இடமில்லாமல் இருந்தது அதனால்தான் மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்றார்... அவரும் பரவாயில்லை என்று அமைதியாக சென்று விட்டார்....

அதன் பின்னர் பள்ளியை விட்டு வெளியில் வரும்போது, நாற்காலியில் அமர்ந்து தொழுதவரோடு பேசிக் கொண்டிருந்தவர் அருகில் இருந்தவரிடம் "தரையில் அத்தஹ்யாத்தில் நீண்ட நேரம் உட்கார முடியவில்லை அதனால்தான் சேர் போட்டு தொழுகிறேன் என்றார் அதற்கு அவரின் நண்பர் "உனக்கு எந்த வியாதியும் இல்லையே, வெளிநாட்டிலும் இப்படித்தான் சேர் போட்டு தொழுவியா என்று... ?" அவரோ "அங்கேயெல்லாம் சஃப்பில் நின்றுதான் தொழுவேன் ஊருக்கு வந்ததும் மூட்டு வலி தொடர்ந்து இருக்கிறது....." என்றார்..

இவ்வாறான உரையாடல்களை கேட்டு விட்டு அங்கிருந்து நகரும்போது பழைய நினைவுகளை நோக்கி (MSM-n மற்றும் ஜஸீலா காலத்து அப்பாக்களை) அசைபோட்டேன்.... அதிகமான வயதுடைய மூத்தோர் எவரையும் அப்போது நாற்கலிகளில் அமர்ந்து தொழுகையை நிறைவேற்றியதாகவோ அல்லது, மார்க்க பயான்கள் கேட்டதாகவோ அதிகம் நினைவில் இல்லை... அது அவர்களின் ஆரோக்கியத்தையும் உழைப்பையும், காட்டியது.

எத்தனையோ பெரியவர்கள் தரையில் அமர்ந்தபடியே தொழுவதை கண்டிருக்கிறோம் அன்றும் இன்றும், நாற்காலி போட்டு அமர்வதற்கு ஒரே காரணம் தரையில் அமர்ந்தால் எழுந்திருக்க முடியாத சூழல், கால் மடக்கி உட்கார முடியாத நிலை, நீண்ட நேரம் கால் மடக்கி அமர்ந்தால் எழுந்து நடப்பதில் சிரமம்... ? இவைகள் எதனால் ?

ஏன் இப்படியான நிலை? அச்சமாக இருக்கிறது !

அபூஇப்ராஹீம்
இது ஒரு மீள்பதிவு

இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா...? 10

அதிரைநிருபர் பதிப்பகம் | June 18, 2014 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
அன்பானவர்களே!

புதன்கிழமை தோறும் எனக்கென்று ஒதுக்கி தொடர் எழுத அதிரைநிருபர் தளம் அனுமதித்திருந்தது. கடந்த வாரத்தோடு “அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும்” தொடர் நிறைவுற்றிருந்தாலும், என் பதிவுகளை வாசித்து பயனடைந்து வரும் சகோதரர்களின் ஊக்கமும், உற்சாகமும் என்னை மேலும் ஒரு தொடர் எழுத தூண்டுகிறது. இனிவரும் வாரங்களில் என்னால் இயன்றவரை “இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா ?” என்ற தலைப்பில் நம் சமுதாய நலநோக்கோடு முயற்சி செய்கிறேன். இன்ஷா அல்லாஹ்.

"அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! அவனையே நாம் புகழ்கிறோம். அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். அல்லாஹ் வழி காட்டிய வரை கெடுப்பவன் இல்லை. அவன் வழிகேட்டில் விட்டவரை நல்வழிப்படுத்துபவன் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்றும்,  முஹம்மது (ஸல்)அவர்கள் அவனது அடியார் என்றும், அவனது தூதர் என்றும் உறுதி கூறுகின்றேன்” என்று நம்முடைய வாழ்வின் வழிகாட்டி, நம் உயிரினும் மேலான உத்தம நபி முஹம்மது (ஸல்) அவர்கள் தம்முடைய ஒவ்வொரு உபதேசத்திலும் மக்களுக்கு எடுத்துச் சொன்ன அதே உபதேசத்தை உங்கள் அனைவருக்கும் நான் நினைவூட்டியவனாக இந்த வார பதிவுக்கு செல்லுகிறேன்.

உலக மாந்தர்க்கெல்லாம் முன்மாதிரி நம் அருமை இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) என்பதில் நம் யாருக்கு மாற்றுக் கருத்தில்லை, ஏன் பிற மதத்தை பின் பற்றுபவர்கள் பலருக்கும் தெரியும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டும் தான் இந்த மனித இனத்திற்கு முன்மாதிரிகளில் முதன்மையானவர் என்று. ஆனால் முன் மாதிரி, முன் மாதிரி என்று வெறும் பேச்சளவில் மட்டுமே நாம் சொல்லுகிறோமே தவிர அவர்கள் நமக்காக அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்த வஹியான திருக்குர்ஆனின் கட்டளைகள், அல்லாஹ்வின் கட்டளைப்படி மார்க்கமாக்கப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் இவைகளை நம் வாழ்வில் கடைப்பிடித்து இறை மார்க்கமான “இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா ?” என்ற வினாவோடு இந்த பதிவை துவங்குகிறேன்.

“இறை இல்லங்களை கவணிக்கிறோமா?”

இஸ்லாமிய வரலாற்றை நாம் எடுத்துப் பார்த்தால், நபி(ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்த காலம் தொடங்கி அவர்கள் மரணிக்கும் காலம் வரை இந்த தூய இஸ்லாத்திற்காக, தங்களின் உடல், பொருள், உயிர் என்று தங்களில் ஒட்டு மொத்த வாழ் நாட்களை அர்ப்பணித்த உத்தம நபியின் உன்னத தோழர்கள் ஏராளம். இவர்களில் முன்னனியில் குறிப்பிடத்தக்கவர்களில் உம்முல் முஃமினீன் அன்னை ஹதீஜா(ரலி), சித்தீக் என்று நபி(ஸல்) அவர்கள் அன்போடு அழைக்கப்பட்ட மூத்த ஸஹாபி அபூபக்கர் சித்தீக் (ரலி), இவர்களை தொடர்ந்து உமர்(ரலி), உஸ்மான்(ரலி) அலி(ரலி) ஆயிசா(ரலி), ஃபாத்திமா(ரலி), ஹசன்(ரலி), ஹுசைன்(ரலி), உம்மு சுலைம்(ரலி), சுமைய்யா(ரலி), யாசிர்(ரலி), பிலால்(ரலி), காலித் பின் வாலீத்(ரலி) என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

அல்லாஹ்வின் படைப்பினங்களில், கண்ணியமான படைப்பினம் மனித இனம், இந்த மனித இனத்தில் மிகவும் கண்ணியமானாவர்கள், அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்ற ஓரிறைக் கொள்கையில் உள்ள முஸ்லீம்கள். நம்மை இவ்வுலகில் படைத்து முஸ்லீமாக படைத்து, வாழ இருப்பிடம் கொடுத்து, உணவு தண்ணீர் கொடுத்து, நிம்மதியான உறக்கம் தந்து, சந்ததிகள் கொடுத்து, ஹலாலான பொருளாதாரத்தை நாம் கேட்கமலே அள்ளித்தந்து, சந்தோசமாக வாழும் அனைத்து சூழல்கள் உருவாக்கித் தந்து இவ்வுலகிலும் நம்மை கண்ணியப்படுத்தி, இவ்வுலக வாழ்வில் அவனுடைய கட்டளைகளின் படி வாழ்ந்தால், நாளை மறுமையில் நம்மை கண்ணியப்படுத்த இருக்கிறான் அந்த ரப்புல் ஆலமீன். இப்படி எல்லாம் நம்மை இவ்வுலகிலும் மறுவுலகிலும் கண்ணியப்படுத்தும் அந்த அல்லாஹ்வின் இல்லங்களை நாம் கண்ணியப் படுத்துகிறோமா? என்பதை கொஞ்சம் நிதானமாக நாம் சிந்திக்க வேண்டும்.

இன்று முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்களில் பள்ளிவாசல்கள், அழகாகவும், உயரமாகவும், அதிகப் பொருட்செலவிலும் கட்டப்பட்டுள்ளது, மேலும் கட்டப்படுகிறது அல்ஹம்துலில்லாஹ். இதை யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆனால் அப்படி கட்டப்படும் இறையில்லங்களின் பராமறிப்புகள்  சரிவர செய்யப்படுகிறதா என்பதில் தான் குறைகள் எழுகிறது. உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களிடம் லட்சங்கள் திரட்டி அழகிய பள்ளிவாசல்கள் கட்டிவிடப்படுகிறது. இதனை பராமரிக்க கமிட்டி அமைக்கப்படுகிறது ஆனால் அந்த பள்ளிவாசல் பராமரிப்புக்காக வருடா வருடம் ரமழான் மாதங்களில் பள்ளிவாசல்களின் நிர்வாகம் பொதுமக்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை நாம் யாரும் மறுக்க முடியாது. ஒரு சில பள்ளிவாசல்களின் நிர்வாகத்தில் உள்ள ஒரு சிலர் மட்டும் வெளியில் கேட்க வெட்கப்பட்டு தங்களுடைய பெருளாதாரங்களை வருடக்கணக்கில் அல்லாஹ்வுக்காக செலவழித்து வருகிறார்கள். ஒவ்வொரு இறையில்லங்களில் சுற்றியுள்ள நாம் நம்முடைய முஹல்லாவில் உள்ள அல்லாஹ்வின் இல்லத்திற்காக என்ன வகையான அர்ப்பணிப்பை, உதவியை செய்திருக்கிறோம் என்பதை என்றைக்காவது சிந்திருக்கிறோமா?

இன்றைய சூழலில் இஸ்லாமிய ஊர்களில் குறிப்பாக அதிரை போன்ற ஊர்களில் பள்ளிவாசல்கள் எதிர்க்கொள்ளும் சவால்களில் முக்கிய பங்கு பொருளாதாரமும், சுத்தம் சுகாதாரமும்.
  • இமாம் மற்றும் முஃஅத்தின் இருவரும் நம்மைப் போன்ற மனிதர்கள், அவர்களுக்கும் குடும்பம் உள்ளது. இவர்களுக்கு இன்று கொடுக்கப்படும் சம்பளம் உண்மையில் போதுமானதுதானா என்பதை என்றைக்காவது நம்முடைய முஹல்லா பள்ளி நிர்வாகத்திடம் கேட்டு விசாரித்து நம்முடைய பங்களிப்பை செய்திருப்போமா?
  • பள்ளிவாசல்களுக்கு என்று பராமரிப்பு செலவுகள் என்று உள்ளது, குறிப்பாக கழிப்பறைகள் சுத்தம் செய்வது, மின் விளக்கு, மின் விசிரி, பழுதடைவது, தண்ணீர் எடுக்கும் மோட்டார் பழுதடைவது இவைகளை சரி செய்வதற்கான செலவுகள் என்று இப்படி ஏராளமான செலவுகள் இருக்கிறது, இவைகளை என்றைக்காவது நம்முடைய பள்ளி நிர்வாகத்திடம்  கேட்டு விசாரித்து நம்முடைய பங்களிப்பை செய்திருப்போமா?
  • பெரும் பொருட்செலவில் கட்டப்படும் பள்ளிகளாட்டும், சிறிய பெருட்செலவில் கட்டும் பள்ளிகளாட்டும், குறைந்தபட்சம் இரண்டு வருடத்திற்கு ஒரு முறையேனும் புதிய பெயிண்டுகள் அடித்து அழகுப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இன்று அதிரைப் போன்ற பள்ளிகள் சில பல வருடங்களாக பெயிண்டு அடிக்காமல், வெளி தோற்றத்தில் பாசி படிந்து கருப்பு நிறங்கள் சூழ்ந்துள்ளதை பார்த்து “நம்மை படைத்த அல்லாஹ்வின் வீடு இப்படி உள்ளதே” என்று என்றைக்காவது கண்ணீர் வடித்திருக்கிறோமா?
  • பள்ளிவாசல் பராமரிப்பில் உள்ள அடக்கஸ்தலங்களுக்கு ஒரு ஜனாஸா அடக்கம் செய்ய செல்லும் நாம், அங்கு காடுபோல் வளர்ந்திருக்கும் புல் செடிகளை கண்டு பள்ளி நிர்வாகத்தை பல முறை குறை கூறியுள்ளோமே, என்றைக்காவது இது ஏன் சுத்தம் செய்யப்படவில்லை, நம்முடைய முஹல்லாவுக்கு செந்தமான பள்ளியின் அந்த அடக்கஸ்தலம் சுத்தம் செய்ய நம்மால் முடிந்த ஏதாவது ஓர் உதவி செய்ய முன் வந்திருக்கிறோமா?
  • ரமழான் மாதத்தில், நோன்பாளிகளுக்காக தாயாரிக்கப்படும் நோன்புக் கஞ்சிக்கான செலவுகள், ஒரு சில வசதியானவர்கள் குடியிருக்கும் பள்ளிகளுக்கு 30 நாட்களுக்கு ஸ்பான்சர் கிடைத்து விடுகிறது. மேலும் மீடியாக்களை கையில் வைத்துள்ள இயக்கங்கள் நடத்தும் பள்ளிகள் தங்களின் ஊடக பரப்புரை மூலம் 30 நாட்களுக்கும் தங்களுக்கு தேவையான பெருளாதாரத்தை திரட்டி விடுகிறார்கள். ஆனால் இவைகளுக்கு அப்பாற்பட்ட பள்ளிகள் அதிரைப் போன்ற ஊர்களில் உள்ளது. அதை சார்ந்த முஹல்லாவாசிகளாக நாம் இருப்போம், என்றைக்காவது நம்முடைய முஹல்லா சார்ந்த பள்ளிவாசல்களுக்கு ரமழானில் நோன்பு கஞ்சிக்காக ஆகும் செலவில் பள்ளி நிர்வாகத்தை தானாக தொடர்பு கொண்டு நாமும் பங்கெடுத்திருக்கிறோமா?
இவ்வாறு கேள்விகள் அடுக்கிக் கொண்டே செல்லலாம். லட்சக்கணக்கில் பணம் செலவழித்து நாம் கட்டும் வீட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட,  அல்லாஹ்வின் இறையில்லத்தை பராமரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

முதலில் நீங்கள் சார்ந்திருக்கும் முஹல்லா பள்ளிவாசல் நிர்வாகத்தை உடனே தொடர்பு கொண்டு, பள்ளிவாசலுக்கு தேவையானவைகள் என்னவென்பதை பற்றி விசாரியுங்கள், உங்களால் முடிந்த உதவியை செய்ய முன் வாருங்கள். நம்மை படைத்த ரப்பின் வீட்டை பாராமரித்து பாதுகாப்போம்.

பல மையில் தூரத்தில் உள்ள பாபர் மசூதி, மத வெறியர்களால் தகர்க்கப்பட்ட போது வெகுண்டெழுந்தோம், இன்றும் அதற்காக போராடுகிறோம். ஆனால் நம் கண் எதிரே நம்மை சுற்றி இருக்கும் இறையில்லங்கள் பராமரிப்பு இன்றி தவிக்கிறதே, இதற்காக நாம் நம்மால் முடிந்த உதவிகள் செய்ய வேண்டும். இதற்காக நாம் நம்முடையை பங்களிப்பை, அர்ப்பணிப்பை செய்ய வேண்டும், இது போன்ற அர்ப்பணிப்புகள் செய்ய நம்மை சார்ந்த பிறரையும் தூண்ட வேண்டும்.

புதிய பள்ளிவாசல்கள் கட்டப்பட வேண்டும் என்பதில் நாம் காட்டும் ஆர்வம், நம் முஹல்லாவில் இருக்கும் பள்ளிவாசல்களை பராமரிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதை நாம் ஒவ்வொருவரும் ஒத்துக்கொள்ள வேண்டும். ஒருவர் மாதம் 10,000 ரூபாய் சம்பாதிக்கிறார் என்றால், அவர் ஒரு சதவீதம் 100 ரூபாய் தம்முடைய முஹல்லாபள்ளி வாசலுக்காக கொடுப்பதில் நிச்சயம் சிரமம் இருக்காது. மாதம் 1,00,000 ரூபாய் சம்பாதிப்பவர்கள், பள்ளிவாசலுக்காக மாதம் 1000 ரூபாய் நிச்சயம் கொடுக்க முடியும். அல்லாஹ்வுக்காக ஏன் இதை செய்யக்கூடாது என்று கேள்வியை நீங்கள் கேட்டுப்பாருங்கள். அந்த தொகையை நீங்கள் சார்ந்திருக்கும் இறையில்லங்களுக்கு அல்லாஹ்வின் பொருத்த்த்தை நாடி மட்டுமே கொடுத்தப் பாருங்கள். அதில் கிடைக்கும் திருப்தி வேறு எதிலும் கிடைக்காது.

நம் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களும், உத்தம சஹாபாக்கள் செய்த தியாகத்தில், அர்பணிப்பில் நம் வாழ் நாட்களில் இஸ்லாத்திற்காக ஒரு சதவீதமாவது நாம் அர்ப்பணிப்பு செய்திருக்கிறோமா? என்ற கேள்வியை நம் ஒவ்வொரு நிமிடமும் நம்மிடம் கேட்டுக்கொள்வோம். நம்மை இஸ்லாத்திற்காக முழுமையாக அர்ப்பனிப்போம். இன்ஷா அல்லாஹ்..

இலங்கையில் பள்ளிவாசலை பாதுகாக்க, போராடி பொதுபல சேனா என்ற அயோக்கிய அமைப்பின் தாக்குதலால் உயிர் நீத்த இரண்டு இலங்கை முஸ்லீம் சகோதரர்களுக்காக நாம் இந்த தருணத்தில் துஆ செய்வோமாக. இந்த செய்தி தொடர்பான சுட்டிக்கு சென்று பாருங்கள் https://www.facebook.com/photo.php?v=645776845491900&set=vb.140589952677261&type=2&theater

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M.தாஜுதீன்

யாருண்டு வந்து காட்டு கேக்கிறேன்... - அப்பா ! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | March 13, 2012 | , , , , , , ,

அப்பா பேரனை இஷா தொழுகைக்கு அழைக்கிறார்கள்....

அப்பா: தம்பி இகாமத் சொல்லிடுவாக சீக்கிரமா வாங்கமா......

பேரன்: நா அந்தப் பள்ளியாசளுக்கு போறேன். நீங்க இங்கே போங்கப்பா..

அப்பா: யான் கிட்டன வுள்ளத வுட்டுட்டு அங்கே போறன்க்ரிய   

பேரன்: மக்ரிப் தொழுவ போம்போது ஒரு ஆம்புள வெரட்டி வுட்டுட்டாருப்பா

அப்பா: அப்புடியா யாருண்டு வந்து காட்டு கேக்கிறேன்..

[இருவரும் பள்ளியை வந்தடைகிறார்கள்]

பேரன்: அந்தோல ஒளு செஞ்சிட்டு தொடச்சிக்கிட்டு போறாஹளே அவ்வோதான்

அப்பா: அட நம்ம அன்சாரி தம்பில, நம்ம புள்ளையில யா வெரட்டுனச்சு.. சரி, தொழுவ முடிஞ்சு கேட்டுக்கலாம். நீ ஒளு செஞ்சிட்டு சுருக்கா வந்துடு...

[தொழுகை முடிந்து வெளியேறும்போது அப்பா அன்சாரியை பாத்துர்ராஹ]

அப்பா: என்ன தம்பி உங்களை பாக்கவே முடியலையே.. வேல ஜாஸ்தியோ.? சுஹமாயிருக்ரியலா, நானும் இந்த தடவை ஹஜ்ஜூக்கு போவலாம்னு இருக்கிறேன். துஆ செய்ங்க தம்பி.கொஞ்ச நேரம் உட்காந்து பேசலாமே...

அன்சாரி: அல்ஹம்துல்லில்லாஹ்! அல்லாஹ் ரஹ்மாத்தாக்கித் தருவான். சரி, உங்களோட பேசியும் ரொம்ப நாளாச்சு.

அப்பா: தம்பி எதுவும் நெனச்சிக்கிடாதிய புள்ளயளுவ்ள மக்ரிப்ள வெரட்டி வுட்டுடியலாம்ல.எம்பேரன் வந்து சொன்னானே..?

அன்சாரி: ஆமா எங்கயோ வெளையாண்டுட்டு 5, 6 புள்ளயளுவ பேசி சிரிச்சுக்கிட்டு, எதோ முடிவெட்டுற கடைக்கு வர்ர மாதிரி ஒரு அதபில்லாம தலைல ஒத்தரும் தொப்பியில்லாமே வந்துச்சுவோ அதான் வெரட்டிவுட்டேன்.. சரிதானே அதுவும் கம்ப்ளைண்டாச்சா..

அப்பா: நீங்க செஞ்சது சரிதான் இப்ப நெறைய புள்ளயளுவ தொப்பியில்லாமதா வருதுவோ. யா இப்புடி செய்துவோண்டு தெரியல. அன்னைக்கி கூட எம்பேரனோட வந்த பத்தரூட்டு புள்ளைய நம்ம ஆமாத்தும்மா மொவனாண்டு கேட்டுப்புட்டேன். நம்ம புள்ளயளுவ புத்திசாலி புள்ளயளுவதான் நீங்க கூப்புட்டு எடுத்து சொன்னா கேட்டுக்கிடும்தானே.

அன்சாரி: நீங்க ஒன்னு இப்புடி நாலஞ்சு புள்ளயளுவ்ள நாம சீரியஸா வச்சு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே அவனுவளுக்குள்ளேயே ஒத்தனுக்கு ஒருத்தே கிண்டிவுட்டுக்கிட்டு சிரிச்சிக்கிட்டு கடைசியிலே நமக்கு ஒரு  பட்டப்பேரு வச்சுட்டு போயிடுங்க. தனியா சொன்னா அது ஒரு கணக்கு.

அப்பா: நீங்க இந்த வயசு புள்ளயளுவ்ள வெரட்டுனதால இதோட முடிஞ்சிடுச்சு. கொஞ்சம் வளர்ந்த லேசா தாடி வந்த புள்ளைய சொன்னீய அப்புறம் உங்க பாடு அவ்வளவுதான்...

அன்சாரி: நீங்க கரெக்ட்டா சொன்னிய அன்னக்கி ஒரு லுஹருக்கு தொப்பியில்லாம வந்த பையனே பாத்து... ஏம்பா தொப்பியில்லாம வர்ரியேன்னு கேட்டுபுட்டேன். அவ்வளவுதான் அஸர்ல ரெண்டு பேரோடு வந்து என்னென்னமோ சொல்லிப்புட்டு போயிட்டானுவ. அப்புறம் மஃக்ரிப்ல சம்மந்தமே இல்லாத ஒரு பையன் வந்து என்னா அன்சாரியாக்கா அஷர்ல ஒரே சவுண்டாயிருந்துச்சே என்னாண்டுதான் கேட்டான், உடனே யாரு அஷர்ல என்னெட்ட சவுண்டு போட்டவன் என்னையும் சேத்துக்கிட்டு எங்களுக்குள்ளே உள்ளது நீ வேலையே பாத்துக்கிட்டு போன்னு அவன்ட்ட  சொன்னதும். உங்களுக்குள்ள எதுயிருந்தாலும் பள்ளிக்கு வெளியே வச்சுக்கிடுங்க என்னையும் சேத்து கத்திட்டுப் போயிட்டான். பிறகு,  இஷாவ்ல ஒரு ரெண்டு மூணு பேரு தொழுகை முடிஞ்சு என்ன அன்சாரியாக்க அவனுவளுக்கு சண்டை போட இதான் எடமாக்கும் சொல்லி வைங்க இல்லாட்டி அவனுவளோட உங்களையும் சேர்த்து சீடி. போட்டுவுற்றுவோம்னு சொல்லிப்ட்டணுவ பாருங்களேன். நம்ம புள்ளய்வோதான் எல்லாரும் நல்லாதொழுவத்தான் செய்துவோ இப்புடி பிரிஞ்சி நிக்கிதுவோல அல்லாஹ்தான் நல்ல புத்தியை கொடுக்கணும்.

அப்பா: இப்பவல்லாம் புள்ளைவோ ஒரு மாதிரியாத்தான் இரிக்கிதுவோ நீ மொதல்ல அல்லாஹ்க்கு சுக்கூர் செயிங்க. ஏண்டாக்கா அப்ப சீடி பார்ட்டியோட நின்ருடுச்சு இல்லன்டா மூஞ்சில துண்டு கட்டிக்கிட்டு வந்து அடியப்போடுற புள்ளையலும் வந்துடும். ஒரு மோட்டார் சைக்கிள்ளே மூணு நாலு பேரா வர்றது ரெண்டு ரெண்டு போனு வச்சுக்கிறது. ரசூலுல்லாஹ் என் உம்மத்துக்கள் 70 க்கு மேல் பல பிரிவுகளாய் இருப்பார்கள் என்று சொன்னதாக சொல்வதுண்டு நமூர்லையே 50 தேறிடும்போல தெரியுது. நல்லவேளை நானும் ஒரு தொப்பி போடாம  வந்த புள்ளயை கண்டிச்சேன்தான் ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி. ஆனா இவ்ளவு உங்களுக்கு நடந்த மாதிரி நடக்கல. ஏன்டா அப்ப உவ்வல்லாம் ஒன்னாத்தான் இருந்தாக.. இப்பவ்ள பல தினுசா போய்டுச்சுவ.....

அன்சாரி: இன்ஷா அல்லாஹ்.நம்ம புள்ளைவ ஒரு நாளைக்கு ஒத்துமையாத்தான் இரிக்கப்போவுதுவ.  ஆஹா!!! கெரண்டு போயிடுச்சே. சரி,  இருட்டுல உங்களுக்கு செரமமாயிருக்கும் வூடு வரைக்கும் வந்து விடுறேன் 

அப்பா: இந்த கெரண்டுவேற குருவியில்ல போய் வரவனாட்டம் எப்ப போவுது எப்ப வருதுன்னு தெரியல.சரி வாங்க.

[அப்பாவை வீட்டில்விட அன்சாரி இருட்டில் போய்க்கொண்டிருக்குபோது எதிரில் வரும் நபர் யாரு அன்சாரியா என்கிறார்]

அன்சாரி: ஆமா என்ன நீயா இந்நேரத்தில போறே...

நபர்: தஞ்சாவூருக்கு போனேன் இப்பதா பஸ் வந்துச்சு. அதான்.

அன்சாரி: சரி உவ்வள வூட்டுல வுட்டுட்டு வந்துடறேன்... நீ போ ..

அப்பா: யாரு அது நல்லா செண்டு கமாளிக்குது... ஏது வெளிநாட்டுல இருந்தாவ்லா....

அன்சாரி: ஆமா! லண்டனோ, ஆஸ்திரேலியாவுலையோ பெரிய ஊர்லேந்துதான் வந்திக்கிறாப்ள.....

அப்பா: தொப்பி போட்டிக்கிரஹளா...

அன்சாரி: ம் நீங்க பாக்கலையா அழகான மலேஷியா தொப்பி போட்டிருந்தாப்ள...

அப்பா: இருட்டுல நா கவனிக்கல [மனதிற்குள் ஹூம். அப்றானி அன்சாரியா இரிக்கிதே நா கேட்ட தொப்பி எதுண்டு தெரியலையே]

அன்சாரி: வூடு வந்துடுச்சு போய்ர்ரியல வர்றேன் அஸ்ஸலாமு அலைக்கும்

அப்பா: அலைக்கும் வஸ்ஸலாம். ஃபிஅமானில்லாஹ்...

-ZAEISA


அப்பா பேரனுக்கு இடையே ஊடுருவும் தனிநபர்களின் பெயர்கள் ஊர் நடப்புகளை எடுத்துரைக்க கையாண்ட கற்பனைப் பெயரே அன்றி தனிநபர் யாரையும் குறிப்பதற்கு அல்ல. 


அதிரைநிருபர்-குழு

"தக்வா மதரஸா மஸ்ஜித்" புதிய பள்ளிவாசல் 2

அதிரைநிருபர் | July 30, 2010 | , ,

நம் பக்கத்து ஊர் மதுக்கூரில் புதிய பள்ளிவாசல் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி (01.08.2010) அன்று திறக்கப்பட உள்ளது.                                                     

இது பற்றிய செய்தியை நம் அதிரை நிருபரில் பதிவு செய்கிறோம்.  புதிதாக பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு நம்மூர் மக்கள் அதிகம் கலந்துக்கொள்ள வேண்டுகிறோம்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இன்ஷா அல்லாஹ் வரும் 01 ஆகஸ்ட் 2010 ஞாயிறு காலை 9 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் மாநகரில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாலும், கண்மணி நாயகம் ரசூல்(ஸல்) அவர்களின் துஆ பரக்காத்தாலும் புதிதாக உருவாக்கப்பட்ட "தக்வா மதரஸா மஸ்ஜித்" பள்ளிவாசல் திறக்கப்படவுள்ளது. இன்ஷா அல்லாஹ் விழா சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனிடத்தில் தூஆச் செய்யுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறோம்.

திறப்பு விழா சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது அதன் விழாவும் சிறப்படைய தூஆச் செய்யுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறோம்.





இப்படிக்கு,

தக்வா மதரஸா மஸ்ஜித் விழாக் குழு மற்றும்
சிறப்பு மலர் வெளியீட்டு குழு,
மதுக்கூர்.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு