அதுஎது?
அது
ஒரு திரவக் கத்தி
குரல்வளை துவங்கி
குதம்வரை இயங்கி
கூராகக் கீறி வைக்கும்
அது
உஷ்ணம் உரைந்தத் தீ
உள்ளே சுட்டெரித்து
உடற்செல்களின் கட்டழித்து
உட்காயங்களை உருவாக்கும்
எல்லாவித
தடுப்புகளையும் தகர்த்து
பாதுகாப்புகளைப் பிய்த்துப்போட்டு
புற்றுப்புற்றாய்ப்
புண்களைத் திணிக்கும்
அது
உடுக்கை நழுவினாலும்
உணர விடாது
படுக்கை நாடாமல்
பாதையில் கிடத்தும்
பார்வையைப் பிடுங்கி – வாழ்க்கைப்
பயணத்தையே முடக்கும்
நடை தடுமாற
உடை இடம் மாற
சாலைகளில் தள்ளாடவிட்டு
சாக்கடையில் வீழ்த்தும்
அது
சுயமரியாதைக்குச்
சாவு மணி அடிக்கும்
பயமில்லா பாவணையில்
நேருக்கு நேராக
வாகனத்தில் மோதும்
அது
கால்களைப் பலப்படுத்தும்
கட்டிய மனைவியை
எட்டி உதைக்க மட்டும்
கைகளை வலுவாக்கும்
பெற்ற பிள்ளையின்
பிடறியில் அடிக்க
அது
அகால மரணத்திற்கான
அழைப்பிதழ்
முதிர்வதற்குள்
மூச்சை நிறுத்த வேண்டி செலுத்தும்
முன்பணம் அதன் விலை
அது
உழைப்பை உறிஞ்சும்
உண்மை தெரிந்தும்
உடலை உருக்க்கி
உயிரை மாய்க்கும் வரை
உணரவிடாது
அது
மூடிவைத்துப்
பூட்டியிருக்கும் புட்டி
திறக்கும் வரைக் காத்திருக்கும்
பூதம்
அது
அருந்தும்போது ஆட்டம் – எண்ணி
வருந்தும்போது அடக்கம்
அது
மது!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

