Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label சிந்தனைக் கோளாறு. Show all posts
Showing posts with label சிந்தனைக் கோளாறு. Show all posts

என் இதயத்தில் இறைத்தூதர் - 7 - சிந்தனைக் கோளாறுகள்! 26

அதிரைநிருபர் பதிப்பகம் | April 20, 2014 | , , ,

ஒரு இரயில் பயண சம்பவத்தின் வடிவில்...

சென்னையிலிருந்து அந்த ரயில் புறப்பட்டு, வேகமெடுக்க ஆரம்பித்தது. பயணிகள் ஒவ்வொருவராக தங்கள் உடமைகளை பத்திரப்படுத்தி விட்டு, ரயில் பரிசோதகரிடம் தங்கள் டிக்கெட்டுகளைக் காட்டி ஓப்புதல் பெற்று கொண்டிருந்த்தனர்.

பண்டிகைகள் இல்லாத கால கட்டமாக இருந்ததால், கூட்டம் அவ்வளாக இல்லை. ரயில் ஓடிக் கொண்டிருந்தது. பயணிகள் ஒருவருக்கொருவர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டும், சிலர் பத்திரிகைகளை புரட்டிக் கொண்டுமிருந்தனர்.

பஷீர் காக்காவிற்கு பொதுவாக ஊர், உலக நடப்புக்கள் பற்றி பேச, அலச பிடிக்கும். அதற்குத் தோதாக ஆட்கள் அமைந்து விட்டால், போதும் விடமாட்டார். ஆனால் அவர் பேச்சில் கண்ணியம் இருக்கும். நளினம் இருக்கும்.வீண் சச்சரவு,வாக்குவாதம் என்று போக மாட்டார்.ஏனென்றால் அவர் எந்த இயக்கத்திலும் உறுப்பினர் கிடையாது.

தம்மை தாமே அறிமுகப்படுத்த எண்ணிய பஷீர் காக்கா, அவர் இருக்கைக்கு முன் இருந்த இருவரிடமும், "ஹலோ, நான் பஷீர், சென்னையில் இருக்கிறேன். சொந்த தொழில் செய்கிறேன்!" உங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா ? என்று நளினமாகக் கேட்டார். 

"ஓ... யெஸ்! என் பெயர் ஷம்சுதீன், நான் மதுரை, DRY FISH WHOLESALE வியாபாரம் செய்கிறேன்,அது விஷயமாக சென்னை வந்து செல்கிறேன். உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!" என்றார்.

இருவரும் சலாம் பரிமாறிக் கொண்டு, அந்த பெயர்கள் இரண்டும் அவர்கள் ஒரே மார்க்கம் என்பதை உணர்த்த, அவர்களை அறியாமலே இரண்டு பேரின் இதயங்களும் குளிர்ந்து போயின !அடித்துக் கொண்டாலும்,பிடித்துக் கொண்டாலும், என்ன அச்சுறுத்தல் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் இருந்தாலும் இங்கே வாழ்ந்தாலும்-வீழ்ந்தாலும் ஒன்றாக கலக்க வேண்டியவர்கள் அல்லவா!ஒரே மார்க்கம் என்பதால்.

"உங்கள் பெயர் என்ன என்று அறிந்து கொள்ளலாமா ?" என அருகில் இருந்த மற்ற பயணியிடம் பஷீர் காக்கா விசாரிக்க, அவர், என் பெயர் கதிரவன், தூத்துக்குடி என் சொந்த ஊர்" என்றவரைப் பார்த்த இருவரும் "வாழ்த்துக்கள்" சொல்லி அந்த சகோதரருக்கும் புன்னகைத்தனர்.

ரயில் ஓடிக் கொண்டிருந்தது. பஷீர் காக்கா, ஷம்சுதீன், கதிரவன் மற்ற பயணிகள தத்தமது உணவுப் பொட்டலங்களைப் பிரித்து, உணவுண்ண ஆரம்பித்தனர். பஷீர் காக்கா அதை இரண்டு ப்ளேட்டுக்களில் வைத்து, ஒரு தட்டை கதிரவனிடம் கொடுத்து "ஐயா ! இது இடியப்பமும், பாயாவும், தயவு செய்து சாப்பிட்டு பாருங்கள்" என்று அவரிடம் நீட்ட அதை மறுக்காமல் வாங்கிய கதிரவன், தன்னிடம் இருந்த பிரியாணி பொட்டலத்தை பஷீர் காக்காவிற்கு நீட்டினார்.

இன்னொரு தட்டில் இருந்த உணவை பஷீர் காக்காவும், ஷம்சுதீனும் ஒன்றாக அதில் இருந்து எடுத்து உண்ண ஆரம்பித்தனர். ஷம்சுதீன் கொண்டு வந்த, பரோட்டாவும், கறியும் கதிரவனுக்கு தனியே பிரித்து கொடுத்து விட்டு, அவர்கள் இருவரும் ஒரே தட்டில் சாப்பிட்டு முடித்தனர். இடையிடையே பிஸ்மில்லாஹ்வில் ஆரம்பித்து, அல்லாஹ்வை புகழ்வதை ஞாபகமூட்டியவர்களாக திருப்தியாக தங்களை பசியை ஆற்றிக் கொண்டார்கள். கதிரவன் ஒரு பிளாஸ்கில் தேநீர் கொண்டு வந்திருந்தார். ஆனால், அவரிடம் இருந்ததோ இரண்டு குவளைகள் மட்டுமே. அதனால், அந்த தேநீரை ஊற்றி, ஷம்சுதீன் மற்றும் பஷீர் காக்காவிடம் நீட்டவே, "சார், ஒரு கப் மட்டும் கொடுங்கள், நாங்கள் ஒரே கப்பில் குடித்துக் கொள்கிறோம்" என்று சொல்லி இருவரும் ஒரே கப்பில் தேநீரை அருந்தி முடித்தனர். பிறகு பஷீர் காக்கா பாத்ரூம் செல்வதாகக் கூறி, கதிரவன் கொடுத்த மட்டன் பிரியானியை, அவர் பார்க்காத வண்ணம் எடுத்துச் சென்று, மற்ற பயணியிடம் விசாரித்து, அதை உண்ணக் கொடுத்து விட்டு கை கழுவி வந்தார். தூக்கம் அனைவரையும் தழுவிக் கொள்ள ரயில் அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு ஸ்டேஷனிலும் பயணிகள் இறங்கிக் கொள்ள, பஷீர் காக்கா, ஷம்சுதீன், கதிரவன் ஆகிய மூவர் மட்டுமே அந்த பெட்டியில் இருக்கும்போது, பஜ்ர் தொழுகை நேரத்துக்கான அழைப்பொலி பஷீர் காக்காவின் செல்பேசியில் ஒலிக்க, மெதுவாக எழுந்து 'உளூ' செய்து விட்டு ஷம்சுதீனை மெதுவாக தட்டி எழுப்பி, இன்ஷா அல்லாஹ்,வாருங்கள் ஜமாத்தாக இருந்து இருவரும் சுபுஹு தொழுகையை முடித்து விடலாம்" என தூங்கிக் கொண்டிருக்கும் கதிரவனுக்கு தொந்தரவு வரக்கூடாது என்று பவ்யமாக சொன்னார். இருவரும் ஜமாத்தாக சுபுஹ் தொழுது முடிக்கும் நேரத்தில், கதிரவன் விழித்துக் கொள்ள, இருவரையும் முறைத்துப் பார்த்து விட்டு பாத்ரூம் சென்று விட்டு திரும்பினார் கதிரவன்.

காலை நேரத்தில் என்ன ஓதவேண்டும் என ஷம்சுதீன், பஷீர் காக்கா இருவரும் ஒருவருக்கொருவர் ஞாபக மூட்டிக் கொண்டிருக்கும்போது, கதிரவன் பாத்ரூமிலிருந்து வெளியே வந்து, ஒரு விரிப்பை எடுத்து விரித்து, "அல்லாஹு அக்பர்" என்று சொல்லி - தக்பீர் கட்டிக் கொண்டார். பஷீர் காக்காவும், ஷம்சுதீனும் ஒருவரை ஒருவர் வியப்போடு பார்த்துக் கொண்டனர்.

கதிரவன் அமைதியான முறையில் சுபுஹ் தொழுகையை முடித்து, துஆவும் செய்து விட்டு, இருவர் முன்னாளும் அமர்ந்து கொண்டார். கண்கள் ஏனோ, சற்று சிவந்திருந்தது. பஷீர் காக்காவும், ஷம்சுதீனும் இன்னும் அந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அவர் முஸ்லீமா ? நாம் அவரை "பிறமத சகோதரன்" என்றுதானே எண்ணியிருந்தோம் என்று இருவர் மனதிலும் ஒரே எண்ணம் ஓடிக் கொண்டிருக்க, கதிரவனே பேச ஆரம்பித்தார். "ஐயா ! பெருமக்களே ! இது நியாயமா? நான் ரயில் ஏறியது முதல் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். "இருவர் மட்டும் சலாம் பரிமாறிக் கொண்டீர்கள், எனக்கு "வாழ்த்துக்கள்" என்றீர்கள்."ஒரே தட்டில் வைத்து உண்டீர்கள், எனக்கு தனியே சாப்பிடவிட்டீர்கள், தேநீரும் அப்படியே ! நான் தந்த பிரியாணியை, எனக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு போய் மற்ற பயணியிடம் கொடுத்து விட்டு, நீங்கள் உங்கள் உணவை மட்டுமே உண்டீர்கள். இப்போது, சுபுஹ் தொழுவதற்கு என்னை எழுப்பாமல், நீங்கள் இருவர் மட்டுமே எழுந்து ஜமாத் செய்தீர்கள் ! நானும் ஒரு முஸ்லீம்தானே ! ஏன் இவ்வாறு செய்தீர்கள்?" என்று கொஞ்சம் காரமாகவே கேட்ட, கதிரவனை இருவரும் பரிதாபமாகப் பார்த்தனர்.

இருவரும் ஒரே குரலில், "நீ.... நீங்க என்ன முஸ்லிமா?" என்று கேட்க "ஆமாம், அதனால்தானே, இப்படிக் குமுறுகிறேன்", என்று கதிரவன் சூடாக சொன்னார்.

கொஞ்சம் அமைதியாக இருந்து விட்டு, பஷீர் காக்கா ஆரம்பித்தார் "மிஸ்டர் கதிரவன்! நடந்த வகைகளுக்கு நாங்கள் இருவருமே உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். ஆனால், தப்பு எங்களுடையது அல்ல, உங்களுடையது. நானும் வேட்டி, சட்டை போட்டிருக்கிறேன். நீங்களும் அதே! மூவரும் தாடி வைத்திருக்கிறோம், இதே போலத்தான் பிற மத சகோதரர்கனும் இருக்கிறார்கள். இந்த நம் இந்திய, தமிழக பூகோள ரீதியான பழக்கங்களும், உடைகளும் பொதுவாக எல்லோருக்கும் பொதுவானதே !

ஒரு வெள்ளை வேட்டி, ஜிப்பா, தொப்பி, தாடி வைத்துக் கொண்டு ஒரு இந்து, பள்ளிவாசலில் பிச்சை எடுத்தால் அவரை முஸ்லிம் என்றுதானே எண்ணுவோம். அதே நபர் தொப்பியை மட்டும் கழற்றி விட்டு ஒரு சிலுவையை கழுத்தில் தொங்கவிட்டு, சர்ச் வாசலில் நின்றால் அவரை கிறிஸ்தவன் என்றுதான் எண்ணுவார்கள். அவனுடைய அந்த சிலுவையை அகற்றிவிட்டு, அவன் நெற்றியில் திருநீறு பூசி கோவில் வாசலில் நிற்க வைத்தால், அவன் ஒரு இந்து என்றுதான் எண்ணத் தோன்றும்.

ஆக, மிச்சமிருக்கிற ஒரே அடையாளம் நம்முடைய பெயர்.முஸ்லிம்களை பொருத்த வரை, திருக்குர்ஆன், அரபி மொழியில் இறக்கியருளப்பட்டது. இறைவனின் இறுதி இறைத்தூதர் பேசிய மொழி அரபி, எனவே நம் தாய், தந்தை நமக்கு அரபியில் அழகாக பெயர் வைத்தார்கள். அந்தப் பெயரில் நாம் உலா வரும்போது, என்னை முஸ்லிம் என்று எல்லோருக்கும் தெரியும். எனக்கு சலாம் சொல்வார்கள். ஒன்றாக சாப்பிடும் சூழலில் ஒரே தட்டில் கை வைத்து உண்ணச் சொல்வார்கள். 

ஆனால், பிற மதத்தவர்கள் அவைகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். முஸ்லிம்கள் 'ஹலால்' உணவைத்தான் உண்ண வேண்டும். நீங்கள் கதிரவன் என்றோ அல்லது கருணாநிதி என்றோ தரும் உணவை, எப்படி ஹலாலாக இருக்கும் என எண்ண முடியும் ? உங்கள் பெயர் ஒரு அப்துல் சமதாக,அப்துல் காதராக இருந்தால், பிஸ்மில்லாஹ் சொல்லி அதை அறுத்து இருப்பீர்கள் என நம்ப முடியும்.நீங்கள் கதிரவன் என்று நாங்கள் அறிந்த நேரத்தில் தந்த அந்த மட்டன் பிரியாணியின் இறைச்சியை ஹலாலான முறையில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி அறுக்காமல் இருந்திருந்தால் எப்படி முஸ்லீமான நான் உண்ண முடியும் ? அதனால்தான், அதை பிற மத சகோதரனுக்கு கொடுத்தேன். அதேபோல், இன்னும் கலிமா சொல்லாத கதிரவனை எப்படி சுபுஹு தொழுகைக்கு எழுப்ப இயலும்"நீங்களே சொல்லுங்கள்" என்று படபடவென்று பேசிவிட்டு நிறுத்தினார்.

உடனே, சம்சுதீன் தொடர்ந்தார், "சகோதரரே, இது சாதாரணமாக உள்ள ஒரு பெயர் பிரச்சினை என்று மட்டும் எண்ணி விடாதீர்கள். ஒரு அரை நாள் ரயில் பயணத்திலேயே இப்படி முஸ்லிமுக்கு கிடைக்க வேண்டிய சிலவற்றை இழந்து விட்டீர்கள். இதுவே, கதிரவன் என்ற பெயரிலேயே நீங்கள் உங்களை மரணம் தழுவியிருந்தால் நீங்கள் முஸ்லிம் என்று சாட்சி சொல்ல எப்படி மனது இடம் கொடுக்கும், உங்களை சுடுகாட்டில் எரிக்கத்தான் செய்திருப்பார்கள். அல்லாஹ் நம் அனைவரையும் அதுபோன்ற இழி நிலையிலிருந்து காப்பாற்றி, கண்ணியமான வாழ்வையும், முஸ்லிமான நிலையில் மரணத்தையும்,முஸ்லிமான முறையில் நல்லடக்கமும் செய்ய அருள் புரிய வேண்டும், நான் தவறாக பேசியிருந்தால், அல்லாஹ்வுக்காக மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று சொல்ல கதிரவன் தன்னை அறியாமலேயே கண்கலங்க, அதைப் பார்த்த இருவரின் கண்ணகளும் கண்ணீர் சிந்தின.

"கைசேதமே ! தமிழ்,தமிழ் என்று என் சிந்தனையில் ஆழமாக பதிந்து, எது அசல், எது போலி, எது என் மரணம் மற்றும் அதற்கு பின்னாலும் வரும், எது இடையில் நின்று போகும் என்ற சிந்தனை இல்லாமல் என் அழகான என் அப்துல் காதர் என்ற பெயரை, கதிரவனாக்கினேன். இந்த சிறு பயணத்தில் எனக்கு வல்ல ரஹ்மான் பாடம் கற்பித்து தந்துவிட்டான்." 

இன்ஷா அல்லாஹ், இனி என் மரணம் வரை முஸ்லிம் என்ற அடையாளத்துடன் வாழ்வேன், இன்றே என் பெயரை 'அப்துல் காதர்' என்று திருத்திக் கொள்கிறேன். நீங்கள் அல்லாஹ்விடம் எனக்காக துஆச் செய்யுங்கள்" என்று கூறி இருவரது கைகளையும் பற்றிக் கொண்டார்.

"கவலைப்பட வேண்டாம் சகோதரா அப்துல் காதர்! அல்லாஹ் மிக்க இரக்கமுள்ளவன், மன்னிப்பவன்" என்று தழுதழுக்க சொன்னார் பஷீர் காக்கா.

தூத்துக்குடியை எட்டிப் பிடிக்க இன்னும் கொஞ்சம் தூரம் தான் இருக்கிறது என ஆசை ஆசையாய் அந்த ரயில் இன்னும் ஓடிக் கொண்டிருந்தது.
--------------------------------------------------------------------------

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "தன் தந்தையை சபிப்பவனை அல்லாஹ் சபிக்கிறான், அல்லாஹ் அல்லாதவர் பெயரில் அறுப்பவனை அல்லாஹ் சபிக்கிறான், மார்க்கத்தில் புதிய விஷயங்களை உருவாக்குபவனுக்கு அடைக்கலம் அளிப்பவனை அல்லாஹ் சபிக்கிறான், நிலத்தில் வைக்கப்படும் எல்லை அடையாளங்களை மாற்றி அமைப்பவனை அல்லாஹ் சபிக்கிறான்" - அறிவிப்பாளர் : அலீ(ரலி), ஆதாரம் : முஸ்லிம் 4001

இறைவன் நாடினால் தொடரும்...

இப்னு அப்துல் ரஜாக்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு