Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label அறிவுரை. Show all posts
Showing posts with label அறிவுரை. Show all posts

பள்ளிக்கூடம் திறந்தாச்சு - பெற்றோர்களுக்கான அறிவுரை 1

அதிரைநிருபர் | June 01, 2015 | , , , , ,

இரண்டு மாத விடுமுறையை மாணவர்கள் நன்றாகவே அனுபவித்தார்கள். அதன் பலனையும் பெற்றோர் நன்கு அனுபவித்துவிட்டனர். தேர்வுகள் நடக்கும்போது விடுமுறை வராதா என்று மாணவர்கள் எண்ணுவதும், விடுமுறை வந்தபின் பள்ளி திறக்கமாட்டர்களா என்று பெற்றோர் ஏங்குவதும் ஒரு வேடிக்கையான வாடிக்கை!


விடுமுறைக் காலத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டும் 51 நாட்கள் நடந்தது. மாணவர்களின் உள்ளத்தை ஆட்கொண்டு, அவர்களின் செயல்களையும் பள்ளிச் சிந்தனைகளையும் முடக்கி வைத்தது. இதில் பழகிவிட்ட மாணவர்கள் மேலும் விளையாட்டுகளையே தேடி அலைகின்றனர். விளையாடுவதற்காக அவர்கள் வீட்டை விட்டு அவுட்டாகிவிட்டால் பின் அவர்கள் கேட்சு ஆவது மிகவும் சிரமம்.


பள்ளிகள் திறந்தாயிற்று, கல்வி தொடர்பாக நாட்டில் என்ன நடக்கிறது என்பதை பெற்றோர், செய்திகள், செய்தித்தாள்கள் மூலம் அறிந்து கொள்ளவேண்டும்.


பள்ளி திறந்த நாளிலிருந்து என்ன பாடம் நடக்கிறது என்பதை மாணவர்களிடமிருந்து பெற்றோர் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்.


தம் பிள்ளையை எந்த துறையில் வல்லுனர்களாக வரவேண்டும் என்பதை நாம் அவ்வபோது  அழகிய முறையில் நினைவூட்டிக் கொண்டே வரவேண்டும்.


பொதுத் தேர்வுகளில் அதிக பதிப்பெண்கள் பெற்று மாநில மற்றும் மாவாட்ட அளவில் வெற்றிபெற்ற நமதூர் மாணவ மாணவிகளை உதாரணம் காட்டி, தம் பிள்ளைகளை ஊக்கப்படுத்த வேண்டிய பொறுப்பை பெற்றவர்கள் உணர வேண்டும்.

பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நிறைய பெற்றோர் கவனம் செலுத்த தவறுகிறார்கள். குறிப்பாக காலை உணவு சாப்பிட வைத்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பெற்றோர் தம் பிள்ளைகளின் படிப்பைவிட அவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.


பிள்ளைகளுக்கு சாலை விதிகளை எடுத்துச் சொல்லி சாலை விபத்துக்கள் பற்றி அவ்வபோது அக்கறையோடு எச்சரிக்கை செய்வது பெற்றோர்களின் கடமை என கருத வேண்டும்.


மாணாக்கரை வீணாக்கும் சாதனங்களில் முக்கியமானது தொலைக்காட்சி. அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும.


விடுமுறை நாட்களில் பயன்படுத்திய ஸ்மார்ட் செல்போனை அவர்களிடமிருந்து பிடுங்கிவிடவேண்டும். பெற்றோர் மாணவர்களை மாலையில் மட்டும் விளையாட அனுமதிக்கவேண்டும்.

பெண் மக்களின் கல்வியைப் பற்றி பெற்றோர் கவலைப்படும் சூழ்நிலை இல்லை. தனக்கு உதவியாக இல்லாமல் எப்போதும் படித்துக்கொண்டே இருக்கிறாளே என்பதுதான் தாயின் கவலை. அதற்கு மாறாக மகனைப் பார்த்து, “நீ வெளி வேலைக்கெல்லாம் போகவேண்டாம்; வீட்டிலிருந்து படி” என்று பெற்றோர் சொல்லும் நிலை! பெற்றோர்கள் மனம்திறந்து தங்களின் பிள்ளைகளிடம் நண்பர்கள் போல் பழகி பேசவேண்டும். அப்போது தான் அவர்கள் தங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை நம்மிடம் பகிர்ந்துக்கொண்டு மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியும். ஹிட்லர் ராஜியத்தை உங்கள் பிள்ளைகளிடம் காட்டி அவர்களிடையே மன உலைசலை ஏற்படுத்தி அவர்களின் மனதை சிதைத்துவிட நீங்களும் காரணமாகிவிடாதீர்கள்.

நீங்கள் பெற்ற பிள்ளைகளிடம் மனம்விட்டு பேசுவதில் என்ன தவறு உள்ளது? பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் எவ்வகையான பிரச்சினைகள் சந்திக்கிறார்கள் என்பதை அறிந்து அதற்கான தீர்வுகளை கண்டறிந்து, மன உளச்சல் இல்லாத நிம்மதியான சூழலை படிக்கு நம் பிள்ளைகளுக்கு பெற்றோர்களான நம் எல்லோரின் கடமை. கல்வியிலும், சமூகத்தில் உயர்ந்தவர்களாக உருவாக்க வேண்டுமானால் பெற்றோர்களே மனம் திறந்து பேசுங்களேன் உங்கள் பிள்ளைகளிடம்.

இனி எந்தப் புதிய பாடத் திட்டம் வந்தாலும் அதை நன்கு படித்து வெற்றி பெற எல்லா உதவிகளையும் பெற்றோர் செய்யவேண்டும்.

நிறைவாக மிக முக்கியமாக, தம் பிள்ளைகளின் மார்க்க அறிவு மற்றும் கல்வி அறிவு அதிகரிக்க அல்லாஹ்விடம் பெற்றோர்கள் து ஆ செய்ய வேண்டும்.

வீட்டின் உயர்வில் மட்டுமல்ல, நாட்டின் உயர்விலும் மாணவர்களின் பங்கு அதிகம். அவர்களை நெறிமுறைப் படுத்துவது பெற்றோர் என்ற முறையிலும், குடிமக்கள் என்ற முறையிலும் மக்களுக்குக் கடமை. கடமை உணர்ந்து மக்கள் செயலாற்றுவார்களாக!

- வாவன்னா

மற்றும் தாஜுதீன்

பெற்றோர்களே ! 10

அதிரைநிருபர் | July 01, 2011 | , , ,

வயசுக்கு வந்த பிள்ளையை வளர்க்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு என நைஸாக நழுவும் அப்பாவா நீங்கள்? கொஞ்சம் நில்லுங்கள். உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை நீங்கள் தான். திருதிருவென்று முழிக்காதீங்க... உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான் என்கிறார் ஒரு .ஃபிரான்ஸ் நாட்டு அறிஞர்.


தந்தையின் நேசம் கலந்த வழிகாட்டுதல் இல்லாத இளம் வயதுப் பெண்கள் பல்வேறு சிக்கல்களில் விழுகிறார்கள். சிறுவயதிலேயே அவர்கள் பாலியல் ரீதியாக பலவீனப்படுகிறார்கள். தேவையற்ற தாய்மையைப் பெற்றுக் கொள்கிறார்கள். இதையெல்லாம் விரிவான ஆராய்ச்சி ஒன்று சொல்கிறது.
இந்த ஆராய்ச்சியை முன் நின்று நடத்தியவர் நியூசிலாந்திலுள்ள கேண்டர்பர்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான புரூஸ் ஜே எல்லிஸ். டீன் ஏஜ் பருவத்திலேயே பாலியல்ல் பிரச்சினைகளில் மாட்டி கர்ப்பமாவது அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் சர்வ சாதாரணம். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என அவர்கள் அலசி ஆராய்ந்தபோது தான் சிக்கியிருக்கிறது இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை. தந்தையின் சரியான வழிகாட்டுதல், அன்பு, அரவணைப்பு இல்லாதது தான் எல்லா பிரச்சினைக்கும் மூல காரணமாம். இப்போது சொல்லுங்கள், டீன் ஏஜ் பெண்ணின் வளர்ச்சிக்கு நீங்கள் தேவையா இல்லையா ?

ஒரு டீன் ஏஜ் மகளுக்கு அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல. ஒரு நண்பன், பாதுகாவலன், ஊக்கமூட்டுபவர், உற்சாகப்படுத்துபவர், தன்னம்பிக்கை வளர்ப்பவர், நம்பிக்கை ஊட்டுபவர், பண்புகளை ஊட்டுபவர், வழிகாட்டி என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும். ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே? அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவருடைய அளவீடுகளைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள். எனவே மகள் மழலையாய் இருக்கும் போதே எல்லா வகையிலும் முன் மாதிரியான வாழ்க்கை வாழவேண்டியது அப்பாவின் கடமையாகிறது.


சின்ன வயதில் மழலையாய் சிரித்துச் சிணுங்குகையில், அழகழகாய் ஆடைகள் வாங்கிக் கொடுப்பதானாலும் சரி, பென்சில், ரப்பர் வாங்குவதானாலும் சரி ரொம்பவே ஈடுபாடு காட்டுவீர்கள். எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்குவீர்கள். பாப்பாவும் ரொம்பவே சமர்த்தாய் உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் தருவாள். திடீரென ஒரு நாள் பார்த்தால், சட்டுபுட்டுன்னு வளர்ந்து நிர்ப்பாள். "என் டாடி சூப்பர்" என்று சொல்லிக் கொண்டிருந்தவள், "டாடிக்கு ஒரு மண்ணும் தெரியாது" என்று பல்டி அடிப்பாள். மூக்குத்தியை எடுத்து நாக்கில் மாட்டுவாள். டென்ஷன் ஆகாதீர்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அவளுடைய உடல், மன மாற்றங்கள் தான்.
என் பொண்ணுக்கு என்னைக் கண்டாலே புடிக்கல. அவளுக்கு நான் இனிமே தேவையில்லை என்றெல்லாம் உளறிக் கொட்டாதீர்கள். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மகள் உங்கள் மகள் தான். உங்கள் மீதான பாசமும், அன்பும், கரிசனையும் எப்போதுமே அவளிடம் நிரம்பி இருக்கும். ஆனால் அவளுடைய வெளிப்படுத்தல்களில் தான் எக்கச் சக்க மாற்றங்கள் முண்டியடிக்கும்.

"டாடி பிளீஸ்.... டாடி... வாங்கிக் கொடுங்க டாடி" என்று சின்ன வயதில் கெஞ்சிய மகள் "டாட்.... எனக்கு இது வேணும். முடியுமா முடியாதா?" என பிடிவாதம் பிடிப்பாள். உடனே நீங்கள் பதட்டப்படுவீர்கள். ஆனால் உண்மையில் அவள் உங்களுடைய அனுமதியை எதிர்பார்த்து நிற்கிறாள். அப்பாவின் அனுமதி இருந்தால் தான் அவளுக்கு அதில் ஒரு ஆத்ம திருப்தி. நீங்க பாட்டுக்கு எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு நிராகரித்துத் தள்ளாதீர்கள். "நல்லதுன்னா அப்பா ஒத்துப்பார்" எனும் நிலமை தான் இருக்க வேண்டுமே தவிர "அவர் கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்காவாது" என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவே கூடாது.இது ஒரு நீச்சல் போல. கரையில் இருந்து கொண்டே நீங்கள் ஆர்டர் போட முடியாது. இன்னும் சொல்லப் போனால் டீன் ஏஜ் பருவத்தினருக்கு அட்வைஸ் எனும் வார்த்தையே அலர்ஜி. காரணம் பெரும்பாலும் அவளுடைய விருப்பத்துக்கு நேரானதாகத் தான் இருக்கிறது அப்பாக்களின் அட்வைஸ். அதற்காக நல்ல விஷயங்களைச் சொல்லக் கூடாதா என்பதல்ல. அதை செயலில் காட்டவேண்டும். அல்லது நாசூக்காக விளக்க வேண்டும். பேசுவதை விட மிக மிக அதிகமாய் மகள் பேசுவதைக் கேட்கவேண்டும். அது தான் முக்கியம்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், "என் அப்பா டெக்னாலஜியில் என்னைப் போல ஹைடெக்.." என கருதுவதில் உங்கள் மகளுக்கு இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது. நீங்கள் அந்த டெக்னாலஜி உலகுக்குள் நுழைந்தால் தான் அதிலுள்ள நன்மை தீமைகளை நாசூக்காக உங்கள் மகளுக்குச் சொல்லவும் முடியும்! அதை விட்டு விட்டு, "என்ன இவ சாப்பிடும்போ எஸ் எம் எஸ் அடிக்கிறா, பேசிகிட்டே எஸ் எம் எஸ் அடிக்கிறா, ஆர்குட், பேஸ் புக் என்னன்னவோ சொல்றா...." என புலம்பித் தள்ளாதீர்கள்.இன்னொரு விஷயம், உங்கள் மகள் பருவத்துக்குரிய வனப்புடன் வளர்கிறாள் என்றதும் தள்ளியே நிற்காதீர்கள். அது மன அளவில் உங்கள் டீன் ஏஜ் மகளைப் பாதிக்கும் என்கின்றனர் உளவியலார்கள். உங்கள் மகளின் தோளைத் தட்டிப் பாராட்டுவதோ, தலையைக் கோதிப் பாராட்டுவதோ, செல்லமாய் அரவணைத்துக் கொள்தலோ அவளுக்கு ரொம்பவே தேவை.அடிக்கடி வெளியே கூட்டிப் போங்கள். ஐஸ்கிரீம் பார்லர் போன்ற இடங்களுக்கு ஜாலியாகப் போய் வாருங்கள். மகளுடன் நிறைய நேரம் செலவிடுங்கள். நிறைய நேரத்தை நீங்கள் அவளுடன் செலவிடும்போது அவளுக்கு இயல்பான உரையாடல் சாத்தியப்படுகிறது. நினைத்ததை எப்படியேனும் வெளிப்படுத்தி விடுவாள். அவள் பள்ளியிலோ, கல்லூரியிலோ ஏதேனும் விழா நடக்கிறது , அழைக்கிறாள் என்றால் தவற விடாதீர்கள். வெறுமனே நீங்கள் அவளுடன் இருந்தால் போதும் அவள் உங்களை ரொம்பவே கொண்டாடுவாள்.நீங்கள் அவளை அன்பு செய்கிறீர்கள். சரி! மதிக்கிறீர்கள். சரி! ஆனால் அதை அவளிடம் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீர்களா? இல்லையேல் அதைச் சொல்லுங்கள் முதலில்.

டீன் ஏஜ் மனது எதிலும் வெளிப்படையாய் இருக்க விரும்பும் மனது. சுற்றி வளைத்து எதையும் பேசாமல், உங்கள் மகளை நீங்கள் மதிக்கிறீர்கள், அன்பு செய்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள்.டீன் ஏஜ் மகளின் தினசரிகள் பல்வேறு அனுபவங்களால் நிரம்பி வழியும். ஆனந்தம், கவலை, எரிச்சல், சோகம் என எக்கச் சக்க உணர்வுகள் நிரம்பி வழியும். சக தோழிகளின் கிண்டல், படிப்பு, அழகு என கண்டதுக்கும் கவலைப்படும் வயது அது. அதை முதலில் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். "எதுவானாலும் கவலையில்லை .... அப்பா இருக்கிறார்" எனும் நம்பிக்கையை நீங்கள் உங்கள் மகளிடம் ஊற்ற முடிந்தால் அதை விடப் பெரிய விஷயம் ஏதும் இல்லை. அதற்கு மகளிடம் உண்மையாய் இருக்க வேண்டியது உலக மகா தேவை!மகளிடம் நீங்கள் எந்த அளவுக்கு உண்மையாய், நம்பிக்கைக்குரியவராய் இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு அவள் உங்களிடம் வெளிப்படையாய் பேசுவாள். உண்மையை உள்ளபடி பேசுவாள். அப்படி மனம் திறந்து பேசும் போது எந்தக் காரணம் கொண்டும் அவளைத் திட்டாதீர்கள். அவள் என்னதான் மிகப்பெரிய தவறு செய்திருந்தாலும் சரி, உணர்ச்சி வசப்படாதீர்கள். பிரச்சினைகள் விளைவுகள் தீர்வுகள் என சிந்தியுங்கள்.

நீங்கள் பதட்டப்பட்டு உங்கள் கோபத்தையும், ஆத்திரத்தையும் மகளிடம் காட்டி விட்டால் போச்சு. அது வீட்டைப் பூட்டி சாவியை தூர எறிவதற்குச் சமம். உங்கள் மகள் அதன் பின் உங்களிடம் எதையும் பேசுவாள் என்று சொல்வதற்கில்லை.எப்போதும் அவளிடம் தோழமை உணர்வுடன் பழகுங்கள். அடிக்கடு உங்கள் மூடு மாறாமல் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். "அப்பா எப்போ அமைதியா இருப்பாரு, எப்போ எரிஞ்சு விழுவாருன்னு தெரியாது" எனும் நிலமை வந்தால் சிக்கல் தான். அவளுடைய படிப்பு, நட்பு, எல்லாவற்றிலும் உங்கள் அளவான ஈடுபாடு இருக்கட்டும். "அவளுக்கு இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை" என்று மட்டும் எப்போதும் நினைக்காதீர்கள். குறிப்பாக ஆண்களைப் பற்றியும், ஆண்களின் குணாதிசயங்கள், சிந்தனைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றியும் அவளுக்குப் புரியும் வகையில் அவ்வப்போது சொல்வது அவசியம். வெளுத்ததெல்லாம் பாலல்ல, பாய்சன் கூட உண்டு என்பதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும், அதான் விஷயம்.இந்த அப்பா மகள் பந்தத்தில் யாருக்கு அதிக பொறுப்பு என நினைக்கிறீர்கள்? அப்பாவுக்கு என்று சொன்னால் நீங்கள் ஒரு பொறுப்பான அப்பா என்று அர்த்தம்.

டீன் ஏஜ் மகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு பொறுமையாக வழிகாட்ட வேண்டியது உங்கள் கடமை. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். டீன் ஏஜ் பருவம் தொட்டால் வெடிக்கும் பருவம். அதனால் அவளை உசுப்பேற்றும் எந்த சண்டையையும் நடத்தாமல் இருப்பது நல்லது. குறிப்பாக அவளுடைய தோற்றம், அழகு, ஆடைகள் போன்றவற்றைக் கிண்டலடிக்காதீர்கள். மாறாக, பாராட்டுங்கள். பாராட்டுக்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். அவளை வலுவாக்கும்.சமூகம் சார்ந்த பல அறிதல்களையும் நீங்கள் தான் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும். அவற்றைப் பற்றிய தெளிவை மகளுக்குத் தரும் பொறுப்பும் உங்களிடமே.ஒரு ஆச்சரிய உண்மை என்னவென்றால், பதின் வயதுத் தொடக்கத்தில் இருக்கும் மனோபாவம் நாள் செல்லச் செல்லப் பக்குவப்படும். பெண்ணின் திருமண வயது வரும்போது "அப்பா தான் உலகம்" எனும் நிலைக்குப் பெண்கள் வந்து விடுவார்கள். அதுவரை சலிக்காத வழிகாட்டலும், பொறுமையான அணுகு முறையும், நிபந்தனையற்றை அன்பும் நீங்கள் காட்ட வேண்டியது அவசியம்.சின்ன வயதிலிருந்தே தந்தையின் வழிகாட்டுதலிலும், அன்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல மன வளர்ச்சி அடையும் என்கிறார் எழுத்தாளரும் மருத்துவருமான மெக் மீக்கர். "ஸ்ட்ராங் ஃபாதர்ஸ், ஸ்ட்ராங் டாட்டர்ஸ்" எனும் நூலில் அப்பாவின் வழிகாட்டுதலே டீன் ஏஜ் பெண்களுக்கு மிக மிகத் தேவை என்கிறார். "என் பொண்ணோட வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் நான்" எனும் எண்ணம் அப்பாக்களுக்கு வரவேண்டியது தான் முதல் தேவை என்கிறார் இவர்.


இன்னொரு முக்கியமான விஷயம், நீங்கள் உங்கள் மகளை எப்படி நடத்துகிறீர்கள் என்பதை வைத்து மட்டும் உங்கள் மகள் உங்களை எடை போடுவதில்லை. உங்கள் மனைவியை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள், மற்றவர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதையெல்லாம் அவள் கூட்டிக் கழித்துப் பார்ப்பாள். நீங்கள் எல்லா இடத்திலும் வலுவாக இல்லையேல் நீங்கள் அவளிடம் காட்டும் அன்பை போலித்தனம் கலந்ததாக அவள் கருதிக் கொள்ள வாய்ப்பு உண்டு.கடைசியாக ஒன்று. "என் அப்பாவைப் போல நல்ல ஒரு ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும்" என உங்கள் மகள் நினைக்க வேண்டும். அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள்! வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தன் மகள் இந்திரா காந்திக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கினார் என்பது வரலாறு. அவர் தனது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் எதிர்காலத்தில் அவரை முதல் பெண் பிரதமராக மிளிர்வதற்கு துணை நின்றது என்றுகூட சொல்லலாம். சிறையில் இருந்தபோதுகூட தன் மகளான இந்திராவுக்கு கடிதம் எழுத நேரு தவறியதில்லை.

அன்புடன்...

ஷேக் முஹம்மது
Courtesy - Tamil Muslim Brothers group mail"

தகவல் : M.S.அப்துல் கஃபூர்

விடுமுறையும், மாணவரை நெறிப்படுத்தும் வழிமுறையும் ! 6

அதிரைநிருபர் | June 15, 2011 | , , , ,



இரண்டு மாத விடுமுறையை மாணவர்கள் நன்றாகவே அனுபவித்தார்கள். அதன் பலனையும் பெற்றோர் நன்கு அனுபவித்துவிட்டனர். தேர்வுகள் நடக்கும்போது விடுமுறை வராதா என்று மாணவர்கள் எண்ணுவதும், விடுமுறை வந்தபின் பள்ளி திறக்கமாட்டர்களா என்று பெற்றோர் ஏங்குவதும் ஒரு வேடிக்கையான வாடிக்கை!

பெற்றோரின் ஏக்கத்தில் ஒரு தேக்கத்தை ஏற்படுத்தியது சமச்சீர் கல்விப் பிரச்சினை. வந்தது அறிவிப்பு: பள்ளி திறப்பு, தள்ளி வைப்பு! இந்த இரண்டு மாத விடுமுறைக் காலத்திற்குள் எத்தனை நிகழ்வுகள் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தின!

தேர்தல் வந்தது. பெற்றோர் பிள்ளைகள் மீது வைத்திருந்த கவனம் சிதறியது. பிள்ளைகளின் அன்றாடச் செயல், ஒழுங்கு இவற்றின்மீதுள்ள கவனம் மாறியது. இதே விடுமுறைக் காலத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டும் 51 நாட்கள் நடந்தது. மாணவர்களின் உள்ளத்தை ஆட்கொண்டு, அவர்களின் செயல்களையும் பள்ளிச் சிந்தனைகளையும் முடக்கி வைத்தது. இதில் பழகிவிட்ட மாணவர்கள் மேலும் விளையாட்டுகளையே தேடி அலைகின்றனர். விளையாடுவதற்காக அவர்கள் வீட்டை விட்டு அவுட்டாகிவிட்டால் பின் அவர்கள் கேட்சு ஆவது மிகவும் சிரமம்.

பள்ளிகள் திறந்தாயிற்று. என்ன பாடத்திட்டம் என்று அறியாமல் பெற்றோரும் ஆசிரியர்களும் குழம்பிக் கொண்டிருக்கும் நிலை. மூன்று வாரங்களுக்குப் பின்தான் பாடத்திட்டம் பற்றிய உண்மை நிலை புரியும்.

மற்ற ஆண்டுகளைவிட பெற்றோர் இந்த ஆண்டு பிரச்சினைகளை எதிர் நோக்கி இருக்கிறார்கள். மூன்று வாரங்களுக்குப் பிறகு சமச்சீர் புத்தகங்கள் நடை முறைக்கு வந்தால் எதிர்பார்ப்பு இருப்பதால் பாதிப்பு இருக்காது. பழைய பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் புத்தகங்கள் இனி அச்சாகி மாணவர் கைக்குக் கிடைக்க தாமதமாகும. குறிப்பாகப் பாதிக்கப்படுபவர்கள் புதிய பாடப் புத்தகங்களை முன்கூட்டிடே படித்துக் கொண்டிருக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள்தான். எனவே மாணவர்களின் தன்னம்பிக்கை தளர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர் பொறுப்பாகிவிட்டது.

கல்வி தொடர்பாக நாட்டில் என்ன நடக்கிறது என்பதை பெற்றோர், செய்திகள், செய்தித்தாள்கள் மூலம் அறிந்து கொள்ளவேண்டும். பாடங்கள் நடக்காத இந்த மூன்று வாரங்களில் வகுப்பு எப்படி நடக்கிறது என்பதை மாணவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்.

மாணாக்கரை வீணாக்கும் சாதனங்களில் முக்கியமானது தொலைக்காட்சி. அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும. செல்போனை அவர்களிடமிருந்து பிடுங்கிவிடவேண்டும். பெற்றோர் மாணவர்களை மாலையில் மட்டும் விளையாட அனுமதிக்கவேண்டும்.

பெண் மக்களின் கல்வியைப் பற்றி பெற்றோர் கவலைப்படும் சூழ்நிலை இல்லை. தனக்கு உதவியாக இல்லாமல் எப்போதும் படித்துக்கொண்டே இருக்கிறாளே என்பதுதான் தாயின் கவலை. அதற்கு மாறாக மகனைப் பார்த்து, “நீ வெளி வேலைக்கெல்லாம் போகவேண்டாம்; வீட்டிலிருந்து படி” என்று பெற்றோர் சொல்லும் நிலை!

இனி எந்தப் பாடத் திட்டம் வந்தாலும் அதை நன்கு படித்து வெற்றி பெற எல்லா உதவிகளையும் பெற்றோர் செய்யவேண்டும். வீட்டின் உயர்வில் மட்டுமல்ல, நாட்டின் உயர்விலும் மாணவர்களின் பங்கு அதிகம். அவர்களை நெறிமுறைப் படுத்துவது பெற்றோர் என்ற முறையிலும், குடிமக்கள் என்ற முறையிலும் மக்களுக்குக் கடமை. கடமை உணர்ந்து மக்கள் செயலாற்றுவார்களாக!

உமர்தம்பி அண்ணன்

நன்றி: உமர் தென்றல்

தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம் 9

அதிரைநிருபர் | February 01, 2011 | ,

உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன. என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?

ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.

வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.

கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். "அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?"

அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். "நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"

வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"

"தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்"

வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"

திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.

வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.

இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?

எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.

புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.

தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.

எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.

அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு, இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்!!

பகிர்வு: மு செ மு நெய்னா முகம்மது.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு