மனிதகுலம் ஈடேறஇஸ்லாம்...
இந்த
மார்க்கத்திற்கே மகுடம்
ரமலான்!
இறையருள்
ததும்பி வழியும் மாதம்...
இது
இளையவர் முதியவர்
யாவரும் விரும்பும் மாதம்!
அமல்களால்
பகலெனத் துலங்கும் இரவுகள்...
இதில்
வணங்கியும் துதித்தும்
வல்லோனைப் போற்றும் மாதம்!
மனிதற்கு மனிதர்
முகமன் இயல்பு,
மாதத்திற்கே முகமன்
மாந்தர் யாவரும்
மகிழ்வோடு முழங்கும் மாதம்!
ஷைத்தான் கட்டப்பட்டு
மெய்தான் மிளிரும் மாதம்...
இதில்
மனங்கள் கட்டுப்பட்டு
வணங்கும் வாழ்த்தும் நாளும்!
புசிப்பதைத் தவிர்த்து
பசியினை விரும்பும் மாதம்...
இது
தாகம் தகிப்பினும்
தணிக்கத் துணியா மாதம்!
இறைமறை ஓதி
நபி வழி பேணி
இறையச்சம் மீறிடும் மாதம்...
இது
இரட்டிப்பு நன்மை
இலவசமாய் அருளும்
இரக்கம் மிக்க மாதம்!
வாயையும் வயிற்றையும்
கட்டுவதோடு...
இது
பொய்யையும் புரட்டையும்
விரட்டிடும் மாதம்!
கணக்கிட்டுக் கொடுக்கும்
தர்மம்
தனக்கென்று சிறக்கும் மாதம்..,
இது
ஏழை எளியவர்
மேன்மை பெற்றிட
ஈகையை போதிக்கும் மாதம்!
இறைமறை இறங்கிய
இரவினைக் கொண்ட மாதம்...
இது
ஆயிரம் இரவுக்குச்
சமமென முழங்கிய மாதம்!
பசிதாகம் பொறுத்து
பாவங்கள் ஒழிந்த மாதம்...
இது
பொறுமைக்குப் பரிசாகப்
பெருநாளைத் தந்திடும் மாதம்!
பாவங்கள் மன்னிக்கவும்
நண்மைகள் எண்ணிக்கவும்
அடிமனம் நேசிக்கும் மாதம்...
இதை
அனைவரும் வரவேற்போம் வாரும்!
Sabeer AbuShahruk

