பெருநாள் தினம் காலை உணவில் அதிமுக்கியமாக ஒன்று இல்லாவிடின் அந்தப் பெருநாளில் ஏதோ சிக்கல் இருப்பது போன்ற பிரம்மை ஏற்படுவது நம் அதிரையர்களுக்கு மட்டுமா அல்லது மற்ற ஊர்காரர்களுக்குமா என்று யோசிக்க வைத்தது.
இடியப்பம் இப்போதெல்லாம் பாக்கெட்டில் வந்து விட்டதால் இலகுவாக வேண்டிய ஹைபர் மார்கெட், சூப்பர் மார்கெட்டில் கிடைக்கிறது, ஆனால் பெருநாள் காலங்களில் அதன் தேவைகள் அதிகமாவதால் அதற்கும் நிரம்பவே அலைய வேண்டிய நிலையும் ஏற்பட்டுவிடுகிறது.
நேற்று முன் தினம், இங்கு துபாயில் இடியப்பம் வாங்க வழக்கமாக செல்லும் சூப்பர் மார்கெட்டில் "கழிஞ்சு போயில்ல" என்ற பதில் வந்ததும். அடுத்த படையெடுப்பு "அண்ணபூர்னா" இடியப்பம் ஃபேக்டரியை நோக்கித்தான். இஷா தொழுகைக்கு பிறகு அங்கு சென்றதும் வரிசையில் நின்ற கார்களையும், பைக்கையும் பார்த்ததும். ஆஹா ! இன்றைக்கு அவ்வளவுதான் என்ற நினைப்பு என்ற அலுப்பு தட்டியது.
அதெப்படி இவ்வளவு தூரம் வந்து விட்டு வாங்காமல் செல்வதா ? நமதூர் "அந்தக் கால" ரேஷன் கடையில் வரிசையில் நிற்பது போன்று காத்திருந்து கிடத்தட்ட 80 நிமிடங்கள் கழிந்ததும் வேண்டிக் கொண்ட இடியப்பம் கிடைத்தது.
இது பேச்சுலர் வாழ்கைக்கு மட்டும்தான் என்று எண்ணிவிட வேண்டாம், குடும்பம் சகிதமாக காத்திருந்து வாங்கிச் செல்லவும் நம்மவர்கள் அங்கே குழுமியிருந்தனர். இன்னும் சிலரோ, சின்ன புள்ளைய அனுப்பினால் சீக்கிரம் கிடைக்கும் என்று குழந்தைகளையும் அழைத்து வந்து அவர்கள் உதவியுடனும் வாங்கிச் சென்றனர்.
சரி இந்த இடியப்பம் ஏன் அப்படியொரு முக்கியத்துவம் பெறுகிறது ? அதில் என்ன விஷேஷம் !?
நம்ம விக்கியானந்த இடியப்பம் பற்றி சொல்வது "இடியப்பம் அல்லது இடியாப்பம் என்பது அரிசி மாவினால் தயாரிக்கப்படும் ஒருவகை உணவாகும். இந்தியாவில் கேரள மாநிலத்திலும், இலங்கையிலும் அதிக அளவில் உண்ணப்படுகிறது. இலங்கைத் தமிழர் மத்தியில் இது ஒரு முக்கிய உணவு வகையாக உள்ளது. இது அரிசி மாவிலேயே செய்யப்படுகின்றது. கோதுமை மாவும் பயன்படுகிறது. இடியப்பம் பிழிவதற்கான சிறு உபகரணம் இடியப்ப உரல் ஆகும்."
உங்க அனுபவம் எப்படிங்க ?
அரிசி இடித்து, சல்லடை போட்டு, வறுத்து, மாவு எடுத்து, சுடுதண்ணீர் வைத்து, மாவு இட்டு, கைகடுக்க குழைத்து, உரலில் இட்டு, நூல்போல் வலைப் பின்னி, ஈடுஈடாக இடியப்ப தட்டில் பிதுக்கி எடுத்து அதனை அவித்தா இடியப்பம் செய்வீங்க ?
தெரிந்ததைச் சொல்லுங்க தொரியாதவங்க கியூல நில்லுங்க... இடியப்பம் கிடைக்கும்.
அபூஇப்ராஹீம்

