சென்னை : காதலை ஏற்க மறுத்ததால் மென்பொருள் பொறியாளரான வினோதினி மீது கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் தேதி அன்று சுரேஷ் ஆசிட் ஊற்றினார். ஆசிட் வீச்சில் பார்வை இழந்த வினோதினி சிகிச்சைக்காக சென்னை கீழ்ப் பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த இரு நாட்களாக மூச்சுத் திணறல் காரணமாகச் வினோதினி சிரமப்பட்டு வந்தார். மூச்சுத் திணறல் கடுமையாக இருந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை வினோதினி மரணம் அடைந்தார்.
நன்றி : www.inneram.com
ஆசிட் வீச்சில் பலியான வினோதினி அப்பா கதறல் பேட்டி
வினோதினி அப்பா ஜெயபால் கூறியதாவது: காரைக்காலில் தனியார் நிறுவன வாட்ச்மேனாக இருக்கிறேன். எனக்கு ஒரே மகள் வினோதினி. மகளை படிக்க வைத்து பெரிய பதவிக்கு கொண்டு வரவேண்டும், நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். மகள் சாவதற்கு முன், ‘அப்பா.. நான் எவ்வளவு துடிதுடித்து கஷ்டப்படுகிறேனோ அதுபோல் என் மீது ஆசிட் வீசிய கொடூரனும் அனுபவிக்க வேண்டும்.
அவனை தூக்கில் போட கூடாது. தூக்கில் போட்டு விட்டால் ஒரு நிமிடத்தில் உயிர் போய் விடும். அவன் முகத்திலும் ஆசிட் வீச வேண்டும். அப்போதுதான் அந்த வேதனை என்னவென்று அவனுக்கும் புரியும். அதேபோல் உலகம் முழுவதும் அந்த சுரேஷ் போல் உள்ள மற்றவர்களுக்கும் நான் பட்ட கஷ்டம் புரியும்' என்றாள். மகள் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்றால் என் மகள் வாழ்க்கையை அழித்த கொடூரனை சித்ரவதை செய்து கொல்ல வேண்டும்.இவ்வாறு ஜெயபால் கதறி அழுதபடி கூறினார். திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாய்மாமன் ரமேஷ் கூறுகையில், ‘மருமகள் வினோதினி சாவு போல் நாட்டில் எந்த பெண்ணுக்கும் ஏற்பட கூடாது. அவள் எப்படியாவது பிழைத்து விடுவாள் என்று நினைத்தோம். எங்களை விட்டு பிரிந்து விட்டாள். கடந்த ஒரு மாதமாக பேச முடியாமல் தவித்தார் வினோதினி. ஆசிட் வீசப்பட்டதால் முகம் வெந்துவிட்டது. தினமும் கொடுமையை அனுபவித்தாள். சுரேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
அதிரைநிருபரில் சென்றவார செய்தியில் வினோதினி பற்றி வெளியான செய்தித் தொகுப்பு.
பரிந்துரை : அதிரைநிருபர் பதிப்பகம்