உறுதி யான தொரு
எண்ணமே கொள்ளனும்
இறுதி யாத்திரைக்கு
முன்னமேச் செல்லனும்
புனித ஹஜ்ஜுக்குப்
போய் வரவேனும்
மனிதப் புனிதத் தூதர்
ஜனித்த மக்கா நகர்
எளிமையான ஓர் ஆயத்தம்
இதயமெல்லாம் ஒரே நிய்யத்தும்
கடனே இல்லா வாய்மையோடும்
கடமை கழித்த தூய்மையோடும்
இலக்கை அடைந்தபின் குளிப்பும்
இன்றியமையாத ஒலூவும்
இஃக்ராம் எனும் ஈருடையும்
இஃக்லாஸ் எனும் இறையச்சத்தோடும்
இரண்டு ரக்காத்துகள் தொழனும்
உரக்க உறைக்கனும் நோக்கத்தை
தழ்பியா எனும் முழக்கத்தை:
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்
லப்பைக் லாஷரீக்க லக்க லப்பைக்
இன்னல் ஹம்த
வன்னிஃமத்த
லக்க வல்முல்க்க
லா ஷரீக்க லக்
வழியெல்லாம் முழங்கனும்
வளியெல்லாம் ஒலிக்கனும்
மக்கா அடைந்ததும்
ஹரத்தைக் கண்டதும்
ஊனோடு உயிரும்
உருகுதல் போலொரு
உணர்வு வியாபிக்க
உண்மை உறைக்கனும்
உலகை வெறுக்கனும்
எல்லாப் பயணங்களும்
இலக்கில் முடியும்
ஹஜ் மட்டுமே
இலக்கில் துவங்கும்
கஃபாவைச் சுற்றியும்
தொங்கோட்டம் ஓடியும்
ஹஜ்ஜின் கிரியைகளை
கவனமாய்ச் செய்யனும்
மினாவில் தங்கனும்
வீண்பேச்சுத் தவிர்க்கனும்
சகிப்புத் தன்மையோடு
சகலமும் பகிரனும்
அரஃபாத்தை அடையனும்
அல்லாஹ்வை அஞ்சனும்
அ முதல் அ ஃ வரை
அத்தனை துஆக்களும்
அங்கேயே கேட்கனும்
அழுது தொழுது
ஆண்டவனை இரைஞ்சனும்
அரஃபாத் பெருவெளியில்
அனைவரும் மனவலியில்
மறைத்து செய்த பாவமெல்லாம்
நினைத்து நினைத்து அழுதிடுவர்
கிடைக்குமோ கிடைக்காதோவென
கெஞ்சிக் கெஞ்சிக் கேட்போர்
மன்னிப்போரில் மிகப்பெரியோன்
மன்னித்தாலே மீள்வர்
அந்திசாயக் கிளம்பினால்
அடுத்துள்ளது முஸ்தலிஃபா
அருமையான மலைகளிடை
அன்றிரவைக் கழிக்கனும்
கூழாங்கற்கள் பொருக்கி
ஷைத்தான் மீதான
கோபம் சற்று அடக்கி
மினாவுக்குச் செல்லனும்
ஷைத்தானை அடிக்கயில்
ஹாஜிகள் காயமின்றி
கவனமாய் எரியனும்
சுவனமே விரும்பனும்
தலைமுடி மழிக்கனும்
ஈருடை அவிழ்கனும்
இவ்வுலக உடைதரித்து
தவாபும் செய்யனும்
எஞ்சிய கிரியைகள்
எல்லாம் நிறைவேற்றி
கடமை முடிந்ததும்
மதினாவும் செல்லனும்
நபவியில் தொழவேண்டும்
நபிவழி வாழ்ந்த
நல்லோர்கள் அடங்கிய
மையவாடி காணவேண்டும்
நபியும் நற் தோழர்களும்
தொழுத பள்ளிகளில்
ஜியாரத் செய்தபடி
தொழும் பாக்கியம் வேண்டும்
எல்லாம் நிறைவேற்றி
இல்லம் திரும்பியபின்
இன்ஷா அல்லாஹ்
ஹாஜியாய் வாழ்ந்திடனும்
ரப்பனா ஆத்தினா
ஃபித்துன்யா ஹஸ்னா
வ ஃபில் ஆக்ஹிரத்து ஹஸ்னா
வகினா
அதாபன்னார்!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
புகைப்படம்: S ஹமீது