அல்லாஹ்வின் திருப்பெயரால்..

இஸ்லாமிய வரம்பு என்பதை நாம் இஸ்லாமிய கொள்கை, இஸ்லாமிய சட்டங்கள், இஸ்லாமிய நெறிமுறை. இவைகளில் நன்மையானவைகளுக்கு மற்றும் தடுக்கப்பட்டவைகளுக்கு என்று வரம்புகள் இஸ்லாத்தின் கோட்பாடுகளுட்பட்டே இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்தில்லை.
இஸ்லாமிய வரம்பு என்று சொல்லி நாம் எதை எடுக்கிறோம் என்பதில் தான் நம்முடைய ஈமானின் பலம் மற்றும் பலகீனத்தை எடைபோடமுடியும்.
எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு. (திருக்குர்ஆன் 4:14)
“வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள்; (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டதாரின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன், தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக! (திருக்குர்ஆன் 5:77)
முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ள, பரிசுத்தமான பொருட்களை ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்; இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 5:87)
(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 7:55)
மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக! (திருக்குர்ஆன் 9:112)
வரம்பு என்ற வார்த்தையோடு மேல் குறிப்பிட்ட சில இறைவசனங்களைத் திரும்ப திரும்ப வாசித்தால், நமக்கு இரண்டு விசயங்கள் மட்டுமே புலப்படும், அல்லாஹ்வின் கட்டளையும் அவன் தூதரின் வழிகாட்டல்களும் என்பது மட்டுமே.
நபி(ஸல்) அவர்கள் சுயமாக இஸ்லாமிய கட்டளையை இடவில்லை, அவர்களுக்கு அல்லாஹ் வஹீமூலம் அறிவித்ததையே சட்டமாக்கினார்கள் என்பதற்கு பின் வரும் இறைவசனம் சாட்சியாக உள்ளது.
விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக! உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை; அவர் தவறான வழியில் செல்லவுமில்லை.அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 53:1 முதல் 53:4 வரை)
திருக்குர்ஆனின் வழிகாட்டல்களும் நபி ஸல் அவர்களின் வழி முறைகளின் அடிப்படையில் வகுக்கப்பட்ட சட்டங்களும் கொள்கைகளும் மட்டுமே இஸ்லாமிய மார்க்க வரம்பாக கருத்தப்படுமே தவிர. இவைகளுக்கு மாற்றமாக எவருடைய வார்த்தைகளும், எந்த நிறுவனங்களின் பத்வாக்களும் இஸ்லாமிய வரம்பாக முடியாது என்பதை நம் மனதில் வலுவாக நிலை நிறுத்திக் கொண்டால் இதில் எந்தவிதக் குழப்பமும் இருக்காது.
ஆனால் இங்கு நாம் தவறவிடுவது என்னவென்றால், இஸ்லாமிய வரம்பு சட்டம் என்று ஒருவர் சொல்லிவிட்டால் அதை ஆய்வு செய்வது கிடையாது. அந்த பெரியவர், அந்த ஆலிம், அந்த மகான் சொல்லுவது சரி தான் என்று கண்மூடித்தனமாக நம்பி வரட்டு பிடிவாதத்துடன் அதனை நிலைநிறுத்த வியாக்கியானம் பேசி இதுதான் இஸ்லாமிய வரம்பு என்று மல்லுக்கட்டுவதில் தான் மிகுந்த அக்கறை செலுத்துகிறோமே தவிர நம்முடைய மார்க்க அறிவை வளர்த்து, இஸ்லாமிய வரம்புகள் எவை என்பதை ஆய்வு செய்வதில் அக்கறை செலுத்துவதில்லை.
ஒரு காலத்தில் அரபு மொழியைக் கற்றவர்கள் அல்லது கற்ற பின்னர் மட்டுமே மார்க்க அறிவை பெறமுடியும் என்ற நிலை இருந்தது, ஆனால் இன்று அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஒவ்வொருத்தரின் தாய் மொழியிலேயே நம்முடைய அடிப்படையான மார்க்க மூலங்கள் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தின் மூலம் மார்க்க அறிவை வளர்க்க, மார்க்க வரம்புகள் என்னவென்பதை அறிய, வேறு எந்த சந்ததிகளுக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பை அல்லாஹ் நமக்கு தந்துள்ளான் எனபதை நம் சிந்தனையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாம் ஆய்வு செய்தோமேயானால், அன்மையில் நடந்தேறிய இசை கச்சேரி கலந்த வர்த்தக கண்காட்சியாகட்டும் அல்லது கந்தூரிக் கன்றாவியாகட்டும், மார்க்க வரம்புக்கு உட்பட்டு உள்ளதா என்பதை அடுத்தவர்கள் சொல்லி அறியாமலே சுயமாக நாம் அறிந்துக் கொள்ளலாம்.
ஒருவன் ஒரு செயலை தடுக்கும் போது, இது மார்க்க வரம்புக்கு உட்பட்டு நடக்கவில்லை என்று சொல்லும் போது ஏன் மார்க்க வரம்புக்கு உட்பட்டு இல்லை என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்க வேண்டும். அது போல் ஒரு செயலை இது மார்க்க வரம்புக்கு உட்பட்டு நடைபெறுகிறது என்றால், குர் ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அவற்றை நியாயப்படுத்த வேண்டும். வெறுமனே மார்க்க வரம்பு என்று வார்த்தை அளவில் மேலோட்டமாக கருத்துச் சொல்லுவது அது தனிமத கருத்தே அன்றி மார்க்க அடிப்படையில் எடுத்து வைக்கப்படும் முடிவாக ஏற்க இயலாது.
இசை கச்சேரி கலந்த, ஆணும் பெண்ணும் கலக்கும் கண்காட்சிகள்/ பொருட்காட்சிகள். கந்தூரி எனும் கன்றாவிகள், தர்கா வழிபாடுகள் இவைகள் அனைத்தும் ஏன் கூடாது என்பதை மார்க்க வரம்புகளுடன் மற்றுமொரு பதிவில் விரிவாக பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ்..
அதிரைநிருபர் பதிப்பகம்