
இப்போழுதெல்லாம், "இந்த இடத்தில் எப்படி தர்கா வந்திருக்கும் ? இந்த இடத்தில் இருப்பவர் யார்" என வரலாறுகளை தேடச் அதே மனது சொல்கிறது! இப்போதைய நம் அறியாமைக்குப் பின்னால், வேரின் ஏதோ ஒரு நுனியில், நியாயங்கள் ஆழமாய் புதைந்திருக்கும் என சிந்திக்க வைக்கிறது.
இதோ நிகழ்கால உதாரணம் ! இப்போது அப்துல் கலாம் அடுத்த அவுலியாவாக தயாராக்கி விடப்பட்டிருக்கிறார். அப்துல்கலாம் துணை- என விளம்பர பலகைகள் பரவலாகிவருகின்றன. நம் மூன்றாவது தலைமுறையில் "இவர் விஞ்ஞானி" என அடையாளப்படுத்துதல் குறைந்து "இவர் மகா மகான். ஞானப்பேரொளி, இவரை வழிபட்டால் அறிவு லிட்டர் லிட்டராக பெருகி ஆறாக ஓடும் " எனச் சொல்லும் போக்கு மிகைத்திருந்தாலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.
துரதிஷ்டமாக, தர்காகொள்கைகளை தூக்கி பிடிப்பவர்கள் பலரிடத்திலும் வரலாறுகளே இல்லை ! பலர் ஒப்பிப்பதெல்லாம் கட்டுக்கதைகளோடு பின்னிப்பிணைந்த மிதமிஞ்சிய கற்பனைக் காவியங்களாகவே உள்ளது.
இதில் அடங்கியிருப்பவர் யார் என கேட்டால்- ஒருகிலோமீட்டர் நீளத்துக்கு பேரை சொல்வதற்கும், இந்த மரத்தில் துணிகட்டினா குழந்தை பிறக்கும், இந்த மண்ண தண்ணில கலக்கி சாப்பிட்டா கஷ்ட்டம் நீங்கும்னு கூமுட்டை தனமான பதில்களைச் சொல்வதற்குமான ஆட்கள் தான் நிர்வாகிகளாகவும் வேலையாட்களாகவும் தர்காக்களில் இருக்கிறார்கள்.
இவ்வாறு இருக்கையில் நமது பார்வைக்கு ஓரு தகவல் கண்ணில் பட்டது. தென்பாண்டிய நாட்டிற்கு வந்த செய்யிது இபுறாஹீம், மொரோக்கோவில் பிறந்து இஸ்லாத்தை பரப்புவதற்காக இந்தியா வந்தார். பாண்டிய மன்னர் குலசேகரன் சார்பாக மற்றுமொரு பாண்டிய மன்னர் விக்கிரமனுடன் போரில் ஈடுபட்டு இப்போரின் விளைவாக அரசாட்சி சையித் இப்ராஹிம் கையில் வந்தது. ஏர்வாடியில் அடக்கம் செய்யப்பட்டவரின் வரலாறு இது. தமிழ் நாட்டின் ஒரு பகுதியை அரசாண்ட முதல் முஸ்லிம் மன்னர் இவர்.
இன்னொறு தகவலும் அறிய நேர்ந்தது!
கடற்பகுதி வழியே கேரளாவில் போர்த்துகீசியர்கள் இந்தியாவுக்குள் நுழைய, கப்பல்படை தளபதியாகிய குஞ்சாலிமரைக்காயர் அவர்கள் துரத்தினார்கள். பின்னர் தென் தமிழகத்துக்கு அந்த அந்நியப்படை வருகிறது. அப்போது நாகூரை ஆட்சி செய்துகொண்டிருந்தவர் (இன்றைய அவுலியா ) ஷாஹூல் ஹமீது. தன் நண்பர் குஞ்சாலி மரைக்காயரின் உதவியுடன் 51 கப்பல்கள்-8000 வீரர்கள் கொண்டு போர்ச்சுக்கீசியர்களை விரட்டியுள்ளார்கள்.
சமகாலத்தில் வாழ்ந்த குஞ்சாலி மரைக்காயர் இந்திய தபால் துறையில் ஸ்டாம்பாகி விட்டார். போர்க்கப்பல் ஒன்றுக்கு இவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது... கேரளாவில் வரலாற்று திரைப்படம் ஒன்றும் (மம்முட்டியோ / மோகன்லாலோ..) எடுக்கப்பட்டுள்ளது. அவரின் இருப்பிடம் நினைவுச்சின்னமாய் பராமரிக்கப்பட்டு வருகிறது... அவர் பயன்படுத்திய வாள், கேடயம் இன்னும் பலவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பெரும் போர் வீரராக சரித்திரத்தில் மங்காத இடம் பெற்றார்.
நாம்?
புனைவுக்கதைகளில் கட்டிடத்துக்கு வண்ணமிட்டு உண்மை வரலாறுகளை மண்ணோடு மக்கிடச் செய்துள்ளோம். மண்ணறையை கல்லறையாக்கி, பச்சை போர்வை போர்த்தி, கமகம சாம்பிராணி போட்டு, மனநிலை சரியில்லாதவர்களை உலாவவிட்டு, உண்டியல் வைத்து பூஜித்துக் கொண்டிருக்கிறோம்.
அவர்களின் உடல் மண்ணோடு மட்கி எலும்புகளும் கரைந்துவிட்டதுபோல், உண்மைகளும் ஜீவசமாதிகளாக்கப்பட்டுவிட்டது! மிகைபடுத்தப்பட்ட புனைவுக்கதைகளால் வரலாறுகளை கேலிக்கூத்தாக்கியது மட்டுமே இப்போதைய தர்கா வழிபாடுகளின் மகத்தான சாதனை ! நம் சரித்திரங்கள் நமக்கே தெரிந்திடாத பொழுது, இருட்டடிப்பு செய்கிறார்கள் என வரலாற்றாசிரியர்களை மட்டும் குறை கூறிக்கொண்டிருப்பது வேதனை !
வழிபாட்டை வழக்கொழித்து வரலாற்றை வாழவைக்கும் சமூகம் தலையெடுக்கட்டும்.. 'அரபுநாட்டு அந்நியனே, என்ன செய்தாய்' என கேட்போர் முன் கூனிகுறுகுவதை விடுத்து, வஞ்சிப்போரையே தலைக்குனியச் செய்திடும் தகவல்களை விரல்நுனியில் அடக்குவோம் !
ஆமினா முஹம்மத்