ஏதோவொரு மூலையில்
முடங்கிய என் மீது
நீங்கள் தான் வெளிச்சம் பாய்ச்சினீர்கள்
பத்துபைசாவிற்குக்கூட பிரயோஜனமற்ற
என் சிறுபிள்ளைத்தன கேள்விகளுக்கும்
மதிப்பளித்து விடையளித்தீர்கள்
பொறுப்பான தந்தையாய்
கேலி செய்யும்
குட்டிச்சுவர்வாசிகளும்
தெரு ஆக்ரமிப்பு ஜந்துக்களும்
எனைமட்டும் சீண்ட
பயங்கொள்ளச் செய்தீர்கள்
காவல்வரும் சகோதரனாய்
கற்றது போதுமென
உங்களை கரம்கோர்த்தபோது
அதே கரத்தில் ,
லட்சியங்களை நிறைவேற்ற
சத்தியபிரமாணம் வாங்கிகொண்டீர்கள்
வழிகாட்டும் கணவனாய்
அடுப்படி மேலாண்மை பயில
ஆவல்கொண்ட போது
யுவான்ரிட்லியையும், தவக்குல் கர்மானையும்
அறிமுகப்படுத்தி
எனக்குள் சாதிக்கும் வெறியை விதைத்தீர்கள்
பெண்மை மதிக்கும் ஆசானாய்
புத்தகமெனும் உற்றத்தோழனை
பரிசளித்து
என்னை மெல்ல மெல்ல செதுக்குனீர்கள்
உயர்ந்த தோழனாய்
கண் கொத்த கழுகுகளும்
வீழ்த்தி விட வல்லூறுகளும்
படையெடுத்து காத்திருக்கையில்
பாதுகாப்பு அரணாய் எனை காத்தீர்கள்
பொறுப்புள்ள சமுதாய அங்கத்தவனாய்
போதுமென முடங்கி கிடந்தபோதெல்லாம்
பாதைகளை வகுத்து பயணிக்கச் செய்தீர்கள்
உன்னதமான வாழ்க்கை வழிகாட்டியாய்
குறைகளை பக்குவமாய் சொன்னீர்கள்
என் கோபங்களில் ஒளிந்திருக்கும் நியாயங்களை புரிந்தீர்கள்
திமிரினை ரசித்தீர்கள்
என் பேச்சுக்களுக்கு ரசிகனாய் இருந்தீர்கள்
பெண்ணின் மனதை
பெண்ணால் தான் அறியமுடியுமென்ற
வாழையடி வாழை நம்பிக்கைகளையெல்லாம்
வேரோடு சாய்த்து
என் ஆதங்கங்களையும் ஆசைகளையும் உணர்ந்தீர்கள்
நான் யார் என்பதையே
நீங்கள் தான் அறியத் தருகிறீர்கள்
என் ஒவ்வொரு வளர்ச்சியிலும்
உங்கள் பங்களிப்பே ஆக்ரமித்திருக்க
எப்படி என் வாயால் பேசுவேன்
ஆண்களை மட்டும் குறை கூறும் பெண்ணியத்தை ???
ஆமினா முஹம்மத்