புலர்காலைப் பொழுதினிலே கிழக்கு நோக்கிப்
புறப்பட்டேன் நடைபயில வீட்டை விட்டு
மலர்மாலை கோத்ததுபோல் மக்கள் கூட்டம்
மருங்கினிலே நடந்துசெலும் காட்சி கண்டேன்
சிலர்வருவார் சிலர்போவார் எல்லா ருக்கும்
சிந்தனையோ நடைபயிலல் ஒன்றே யாகும்
பலர்வாழும் நம்நாட்டின் பெருமை எல்லாம்
பதிவாக நான்எண்ணி நடந்து சென்றேன்.
பக்கத்து நெல்வயலில் நாற்றின் காட்சி
பசுமையுடன் தோன்றியதை மகிழ்ந்து கண்டேன்
கொக்கொன்று எங்கிருந்தோ பறந்து வந்து
குறியாக வயல்நடுவில் அமர்ந்த பின்னர்
பொக்கென்று பின்பற்றிக் கொக்கின் கூட்டம்
புதிதாக அணியணியாய் அமர்ந்த தன்றே
இக்காட்சி இதயத்தில் பதிந்த போதில்
இன்னொன்றும் நடந்ததங்கு வியக்கும் வண்ணம்!
சிந்தனையின் வயப்பட்டேன் கிழக்கு வானில்
செங்கதிரால் இவ்வுலகை வண்ணம் தீட்டச்
செந்தழலின் உந்திவரும் இனிய தோற்றம்
செழுமையுடன் தோன்றிடவே உவகை கொண்டேன்
உந்தியெழும் உணர்வாலே பெருமை கொண்டேன்
உலகெங்கும் புகழ்பரப்பி உயர்ந்து நிற்கும்
இந்தியாவின் மூவண்ணக் கொடியைப் போன்றே
இக்காட்சி இருந்ததனை உளத்தில் கொண்டேன்.
கொடிநடுவில் சக்கரத்தைக் காணோம் என்று
கூர்ந்தேயான் வெண்ணிறத்தைப் பார்த்த போது
துடிப்பான பையனொரு கல்லைத் தூக்கித்
தொலைவிருந்து கொக்குகளை நோக்கி வீச
நடுப்பகுதிக் கொக்கெல்லாம் பறந்த போது
நன்றாக வட்டமொன்று சக்க ரம்போல்
வடிவாகக் கண்டதனை வியந்து நின்றேன்
வயல்நடுவில் மூவண்ணக் கொடியைக் கண்டேன்!
அதிரை அஹ்மது