உம்மா வோடும் வாப்பா வோடும்
ஊரை விட்டுப் புறப்பட்டோம்
சும்மா இருந்து பஸ்ஸுக் குள்ளே
சுகமாய்ப் பயணம் செய்தோமே.
பட்டுக் கோட்டை முதலில் வந்து
பரவச மாகப் போயதனை
விட்டுச் சென்ற பின்னர் ஓட்டுநர்
விளக்கை அணைத்தார் ஊர்திக்குள்.
பார்வை ஓய்ந்து பயணம் தொடரப்
பசியும் நீங்கிக் கண்ணயரப்
போர்வை கொண்டு போர்த்திக் கொண்டு
பொதியைப் போன்று கிடந்தோமே.
நடுராத் திரியில் நின்றது பஸ்ஸும்
நாங்கள் விழித்துப் பார்க்கையிலே
படியில் இறங்கிப் போனார் சிலபேர்
பார்த்தான் காக்கா ஹாமீதும்.
வாப்பா மதராஸ் வந்தது” வென்று
வாயால் கத்திக் கூப்பிட்டான்
போப்பா இன்னும் வரவிலை” என்று
போர்த்திய வாப்பா கண்ணயர்ந்தார்.
பாதிப் பயணம் முடித்த பஸ்ஸும்
பாய்ந்தது பெட்ரோல் ஊற்றியபின்
மீதிப் பயணம் தொடர்ந்த போது
மீண்டும் உறங்கிப் போனோமே.
தாம்பரம், சென்னை விமான நிலையம்
தாண்டிய போது கண்விழித்தோம்
மாம்பலம் தாண்டி மண்ணடி வந்து
மகிழ்வோ டிறங்கி நடந்தோமே.
அதிரை அஹ்மது