
அகம் திலங்கும் பாலகர்களே
'அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...'
சென்றுவந்த தளங்களில்
வென்றுவந்த இறையருள்
நின்று நிலைக்கட்டுமாக
என்றும் இருக்கட்டுமாக
மக்கமா நகர்தன்னில்
மக்களோடு மக்களாக
மாண்புமிகு கஃபாவை
மனதாரக் கண்டிருப்பீர்
முதன்முதலில் கண்டபோது
முகம் மலர்ந்திருக்கும்
கண்களும் கலங்கி
கண்ணீர் உகுந்திருக்கும்
கண்டதும் கையேந்தி
கேட்ட துஆ நினைவுண்டா
நிறைவேற்றித் தருவான்
இறைவனென நம்புவீராக
கஃபாவைச் சுற்றிவந்து
தவாபைச் செய்ததுவும்
சஃப்வா மர்வாவுக்கிடை
சயீ செய்த நினைவுகளும்
இறக்கும் காலம்வரை
மறக்க மனம் ஒப்பாது
இறக்கி வைத்த பாரமென
இன்னல்கள் விலகட்டுமாக
திறவா அருட்கதவும்
அரஃபாவில் திறக்கவைக்கும்
கரமேந்திக் கேட்டுவந்த
தரமானப் பிரார்த்தனைகள்
அரஃபாத் பெருவெளியில்
அபரித வணக்கங்கொண்டு
அழுதழுது கேட்டவற்றை
அல்லாஹ் தருவானாக
ஷைத்தானுக்குக் கல்லெறிந்து
பொய்த்தான் அவன் என்றொழித்து
முடிமழித்து மொட்டையிட்டு
பலி கொடுத்தத் தியாகங்களும்
ஈருடைதனைக் களைந்து
இயல்புடைக்குள் நுழைந்து
மினாவில் நிகழ்ந்ததெல்லாம்
கனாவில் தொடர்ந்துவரும்
கடைசிக் கிரியையென
விடைபெறும் காலத்தில்
தவாபில் மனம் கணத்து
தவிப்போடு பயணித்ததும்
மாநபி(ஸல்)யின் நவபியிலே
மதினத்து அமைதியிலே
தொழுதுநின்ற நேரங்களில்
அழுதக் கண்ணில் அர்த்தமுண்டு
எல்லாவற்றையும் கண்டு வந்தும்
ஏங்க வைத்தக் குறையாக
தங்க நபி(ஸல்)யைக் காணாத
உங்கள் குறை நீங்கிடுமா
இனிச் செய்யும் செயல்யாவும்
இறைப் பொருத்தம் கிடைத்திட்டால்
மறுமையும் சிறந்திடும்
மதிப்புமிக்க ஹாஜிகளே
தங்கள் ஹஜ்ஜை
அல்லாஹ்
ஏற்றுக் கொண்ட ஹஜ்ஜாக்க
அதிரை நிருபரின் துஆ
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
அதிரைநிருபர் பதிப்பகம் - wwww.adirainirubar.in