டில்லியில் ஆட்சி மாற்றமா? அரசியல் மாற்றமா?
வானத்தில் வால் நட்சத்திரம் தோன்றினால் ஆட்சியாளர்களுக்கு ஆபத்துவருமென்பது காலம்காலமாக மக்களிடையே நிலவி வரும் நம்பிக்கை. அது மூட நம்பிக்கைகளில் முதல் நம்பிக்கை என்பது ஒரு புறமிருக்க, இன்று கெஜ்ரிவால் என்கிற வால் நட்சத்திரம் தலைநகர் டில்லியில் தோன்றியதன் விளைவாக காங்கிரஸ் மற்றும் பாஜக போன்ற ஆட்சியாளர்களுக்கு பெரும் குடைச்சலைக் கொடுத்துவிட்டது. ஆம் ஆத்மிக் கட்சி என்பது யானையின் காதுக்குள் புகுந்த சிற்றெறும்பாக மாறி விட்டது.

இந்த மரம் உலுக்கப்படும்போது , ஆம் ஆத்மி என்கிற சாதாரண மனிதன் ஏந்தி நின்ற துணியில் 67 பழங்களும் ரத கஜ துரக பதாதிகள் மற்றும் கார்பரேட் கம்பெனிகளின் துணையுடன் நின்ற பாஜக என்ற அரசியல் மலைமுழுங்கி, ஏந்தி நின்ற துணியில் 3 பழங்களும் விழுந்தன. ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி’ என்ற நிலையில் காங்கிரஸ் ஏந்தி நின்ற துண்டில் மரத்தின் சருகான இலைகள் கூட உதிர்ந்து விழாமல், “ யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்றபின்னே வாங்கடா வாங்கடா வாங்க” என்று துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டது, இந்தியாவைக் கட்டியாண்ட காங்கிரஸ்.
கொஞ்சம் வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. டில்லியில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிஜேபிக்கு 32 இடங்களும் முதன்முதலாக அடையாளப்படுத்தும் விதத்தில் ஆம் ஆத்மிக்கு 29 இடங்களும் அன்று ஆட்சியில் இருந்த காங்கிரசுக்கு எதிர்காலத் தோல்வியை அடையாளப்படுத்தும் விதத்தில் 8 இடங்களையும் டில்லி மக்கள் வழங்கினர். காங்கிரசின் ஆதரவுடன் வேண்டாவெறுப்புடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது. ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மியை ஆதரவு தந்தவர்கள் என்ற பெயரில் காங்கிரசும் ஆட்சிக்கு வரப் போகிறோம் என்கிற மமதையில் பிஜேபியும் தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்தன. அரவிந்த் கேஜ்ரிவால் தனது முதலமைச்சர் பதவியை விட்டு விலகினார். அன்றே அவருக்கு ஆதரவாக , பொதுமக்கள் தங்களது ஆதரவை அரவிந்த் கேஜ்ரிவாலின் அரசியல் வங்கிக் கணக்கில் செலுத்த ஆரம்பித்து விட்டனர்.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் டில்லியைப் பொருத்தவரை மொத்தம் 7 இடங்களையும் ஒட்டு மொத்தமாக பாஜக கைப்பற்றியது. 2013 சட்டமன்றத் தேர்தலில் 33.7 சதவீதம் மட்டுமே பெற்ற பாஜக 46 சதவீத வாகுகளைப் பெற்று ஏழு இடங்களையும் பெற்று 13 சதவீத வாக்குகளை அதிகம் பெற்றது. இந்த அதிக வாக்குகளும் வளர்ச்சியும் பாஜகவின் ஆணவக் கணக்கைத் தொடங்கிவைத்தது. ஆனால் இப்போது நடைபெற்றுள்ள 2015 தேர்தலில் 32.3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று தனது சரிவுக் கணக்கை சந்தித்து மூன்று இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.
வளர்ச்சியின் நாயகன் என்று வர்ணிக்கப்பட்டவரும் அவரது விளம்பர யுக்திகளும் அரசு இயந்திரங்களும் அமைச்சர் பெருமக்களும் ஆர் எஸ் எஸ் மற்றும் அவர்களின் அடிவருடிகளும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, உலகத்தில் யாருமே உளறமுடியாத வார்த்தைகளை எல்லாம் உளறி இனவெறியையும் மதவெறியையும் தோண்டியும் தூண்டியும் பெற்றது மூன்று இடங்கள் மட்டுமே.
காங்கிரசின் நிலையை நாம் பெரிதாக எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் தேர்தலுக்குப் பொறுப்பாளராக நியமத்த அஜய் மக்கன் அசத்தும் மக்கானாக இல்லாமல் ஒரு அசந்த மாக்கானாகவே செயல்பட்டார். காங்கிரசின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது லூசான சட்டையை இழுத்து இழுத்து விட்டுக் கொண்டு கூட்டங்களில் பேசும்போதே காங்கிரசுக்கு இந்தத் தேர்தலிலும் வாக்குகள் கிடைக்காது என்பது தெரிந்துவிட்டது. அரசியலில் இன்னும் பாடம் படிக்க வேண்டிய மாணவராகவே ராகுல் காந்தி பத்திரிகைகளுக்கும் மக்களுக்கும் இன்னும் தென்படுகிறார். இத்தனை பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்த இவரது அரசியல் பிளைட், டேக் ஆப் ஸ்டேஜுக்கு வர இன்னும் தாமதமாகிறது. மேலேகிளம்புமா அல்லது பிரியங்கா காந்தி வந்து பைலட் சீட்டில் உட்கார வேண்டுமா என்பது தெரியவில்லை. போகட்டும்.
ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் உடைய அணுகுமுறை தனிப்பட்ட ரீதியாக இருந்தது. எளிமை, இனிமை என்கிற வகையில் அவர் மப்ளரைக் கட்டிக் கொண்டு மக்களைக் கவர்ந்தார். வீட்டுக்கு வீடு சென்றார். மற்ற கட்சிகள் பணக்காரர்களையும் உயர்சாதிக்காரர்களையும் தேடிப் போய் வாக்குக் கேட்டபோது , சேரிகளையும் எளிய மக்கள் வாழும் குடியிருப்புகளையும் தேடித் தேடிப் போய் வாக்கு சேகரித்தார் கெஜ்ரிவால்.
1989 ஆம் ஆண்டு சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கனசங்க் பரிஷத் மாநில சட்டமன்றத்தின் மொத்தத் தொகுதிகளான 32 தொகுதிகளையும் வெற்றி கொண்டது. அதன்பின் இந்திய தேர்தல் சரித்திரத்தில் இப்போது எதிர்க் கட்சிகளுக்கு பேர் சொல்ல மூன்று பிள்ளைகளை மட்டும் விட்டு விட்டு ஆம் ஆத்மி டில்லியில் பெற்றுள்ளது. ஏற்கனவே 49 நாட்கள் தான் புரிந்த ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டிய அடிக்கல், ஒரு அரண்மனையாக மாறவேண்டுமென்றே மக்கள் இவ்வளவு பெரிய ஆதரவை அவருக்கு அளித்து இருக்கிறார்கள். மேலும் காங்கிரசுக்கு அளிக்கும் வாக்குகள் விழலுக்கு இழைத்த நீர் என்று வாக்குகள் பிரிந்து போகாமல் அவற்றைத் திரட்டி ஆம் ஆத்மிக்கு அளித்து அருமையாக திட்டமிட்டு வாக்களித்து இருக்கிறார்கள்.
நாட்டின் மற்ற இடங்களில் நடைபெறும் தேர்தலுக்கும் டில்லி பிரதேசத்தில் நடைபெறும் தேர்தலுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. டில்லி பன்னாட்டு தூதராலயங்களால் சூழப்பட்ட இடம் என்பது நாம் சொல்லித் தெரிய வேண்டியதல்ல. தேர்தல் நடைமுறைகளும் தேர்தல் முடிவுகளும் அனைத்து நாடுகளாலும் அங்குலம் அங்குலமாக கவனிக்கப்படும். பதவி ஏற்ற நாளிலிருந்து வெளிநாடுகளிலேயே அதிகம் சுற்றி வந்த வளர்ச்சியின் நாயகன் மோடியின் முகத்தில் இப்போது வழியும் அசடை பன்னாட்டுத் தூதராலயங்கள் தங்களின் நாடுகளுக்குப் படம் பிடித்துக் காட்டிவிட்டன. கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த சொல்லும் எத்தனை நாளுக்குத் தாக்குப் பிடிக்கும்? எல்லோரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்றிக் கொண்டே இருக்க இயலாது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கும் மோடிக்கும் உணர்த்தி விட்டன. அவர்கள் உணர்ந்தார்களா என்பதை காலம்தான் சொல்லும்.
ஆர் எஸ் எஸ் அடிவருடிகளுக்கு ஆசீர்வாதம் செய்து நாட்டை பிளவுபடுத்தும் கருத்துக்களுக்கு முதல் அடியை டில்லி மக்கள் தொடங்கி வைத்து இருக்கிறார்கள். இது ஒரு அரசியல் அடி . அதிலும் அரிச்சுவடியான அடி. இந்த அடியைத் தொடங்கிவைத்துள்ள தலைநகரின் குடிமக்களுக்கு நாடே நன்றி செலுத்துகிறது.
மதக் கலவரங்களைத் தூண்டும் விதத்தில் சிறுபான்மை மற்றும் தாழ்த்தப் பட்டோருக்கு எதிரான விஷக் கருத்துக்கள் இந்த எட்டு மாதங்களுக்கு இடையில் எவ்வாறெல்லாம் தூவப்பட்டன என்பதை நாடே அறியும் .
இந்துக்கள் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரு சாமியார் சொன்னார். விட்டேனா பார்! என்று இன்னொரு சாமியார் போதாது போதாது பத்து குழந்தைகள் பெற வேண்டுமென்றார். குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் சங்கதிகள் பற்றி சாமியார்கள் பேசுவது கண்டு தலைநகரில் வாக்காளர்கள் முகம் சுளித்தனர். வாக்களிக்கும்போது பாஜகவின் சின்னத்தை சுளித்துக் கழித்தனர்.
பகவத் கீதையை நாட்டின் புனித நூலாக அறிவிக்கவேண்டுமென்று நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சொன்னார். பாராளுமன்றம் ஸ்தம்பித்தது. பார்த்துக் கொண்டிருந்த தலைநகரத்து மக்கள் தக்க சமயத்தில் பதில் தந்தார்கள்.
தேசத் தந்தை காந்தியை சுட்ட கோட்சேயை தேசபக்தன் என்றார்கள். கோட்சேக்கு நாடெங்கும் சிலை வைக்க வேண்டுமென்றார்கள். தலை நகரின் மக்கள் இந்த அருவருப்பான சொற்களுக்கு பதிலளிக்கக் காத்திருந்தனர். தருணம் வந்தது தண்டனை தந்தார்கள்.
இராமனைக் கடவுளாக ஏற்றவர்கள்தான் நாட்டின் உண்மையான தகப்பனுக்குப் பிறந்தவர்கள்; மற்றவர்கள் தவறாகப் பிறந்தவர்கள் என்று நாட்டு மக்களின் தன்மானத்தை சுரண்டிப் பார்த்தார்கள். தலைநகரின் மக்கள் சாட்டையால் அடித்து இருக்கிறார்கள்.
இராமனைக் கடவுளாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறட்டுமென்று முழங்கினார்கள். யார் நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென்று ஜனநாயக முறையில் மக்கள் அறிவித்து இருக்கிறார்கள்.
ஆட்சிக்கு வந்த இரண்டு வாரங்களில் உலகெங்கும் இருக்கும் கறுப்புப் பணத்தைக் கைப்பற்றி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் பதினைந்து இலட்சம் என்று பறையறிவித்துவிட்டு ஆட்சிக் கட்டில் ஏறியதும் பதுங்கியவர்களுக்கு, மக்கள் தேர்தலில் படுகுழிவெட்டி இருக்கிறார்கள்.
இந்தியாவில் இருக்கும் அனைவரும் இந்துக்கள், அனைவரும் தாய் மதத்துக்கு திரும்ப வேண்டும் , போன்ற பொறுப்பற்ற கோஷங்கள், ஆக்ராவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களை இந்துக்களாக்கிய தவறான செயல்கள், தலைநகரில் பல தேவாலயங்களை தாக்கியது, பொருளாதார மந்தம், வானில் ஏறிய விலைவாசி அங்கேயே சுழன்று கொண்டிருப்பது, இஸ்ரேல் போன்ற பாசிச நாடுகளுடன் நேசம் காட்டும் வெளிநாட்டுக் கொள்கை , ஒபாமா காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டது, ஆஸ்திரேலியாவுக்கு அதானியை அழைத்துப் போய் அவருக்கு ஆறாயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுத் தந்தது, அமித்ஷா போன்ற அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டதுடன் அவரைத் தலைவராகவும் ஆக்கியது , மேக் இன் இந்தியா என்று சொல்லிவிட்டு பத்து லட்சம் ரூபாய் பெறுமான கோட்டும் சூட்டும் லண்டனில் தைத்து வந்து ஒருநாள் கூத்துக்கு மொட்டை அடித்த விஷயம் இவைகள் எல்லாம் மக்கள் மன்றத்தில் மணலை அள்ளி அடித்த வேளையில் பிரதமர் பாராளுமன்றத்துக்கே வராமல் பாதாம்கீர் குடித்துக் கொண்டிருந்தது ஆகிய அனைத்தும் மக்களால் கவனிக்கப்பட்டன; பாஜாக பாசாகாது என்று மக்கள் சவுக்கடி கொடுத்து யமுனை நதியின் சாக்கடையில் தள்ளிவிட்டார்கள்.
முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு, ஒரு முன்னாள் ஐ. பி. எஸ் பெண் அதிகாரியைத் தேடிப் பிடித்ததில் ஆரம்பித்தது பாஜகவின் சறுக்கல் அல்ல கிறுக்கல். பதவி ஆசையில் மோடியைத் தேடி வந்த கிரண்பேடி, தான் போட்டி இட்ட தொகுதியிலேயே மண்ணைக் கவ்வி இருப்பதை ஆள்பிடிக்கும் பாஜகவுக்குக் கிடைத்த மரணஅடி என்றுதான் கூற வேண்டும். கிரேன்பேடி தேர்தலில் மட்டுமா தோற்றார்? Indian Police Service-ல் பாசானவர், Indian Political Service- லும் தோற்றார். ஊழலை ஒழிக்கும் இயக்கமான அண்ணா ஹசாரே நடத்திய இயக்கத்தில் இணைந்து தன்னை வெளிப்படுத்திய கிரேன்பேடி ஊழலில் திளைக்கத் தொடங்கி இருக்கும் பாஜகவில் சேர்ந்த பாசாங்கை மக்கள் ஆரம்ப நிலையிலேயே அழித்துவிட்டார்கள். இனி கிரேன்பேடியை Crane வைத்துத் தூக்க இயலுமா என்பது வினாக்குறிதான்.
2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி தனது முதலமைச்சர் பதவியை விட்டு விலகிய கெஜ்ரிவால் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி மீண்டும் முதலமைச்சராக கனத்த பெரும்பான்மையுடன் பதவியேற்கிறார். இவரை வா! ராஜா! வா! என்று இந்திய நாடே வாழ்த்தி வரவேற்கிறது. ஒரு முன்னாள் அரசு அதிகாரி என்ற முறையிலும் படித்த இளைஞர் என்ற முறையிலும் டில்லி மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடே இவரிடமிருந்து பல நன்மைகளை எதிர்பார்க்கிறது. இவரது செயல்பாடுகளின் வெற்றியில் இவரது எதிர்காலமும் இருக்கிறது.
டில்லி ஒரு மத்திய அரசின் நேரடிப் பார்வையில் இருக்கும் ஒரு மாநிலம்தான். முழு மாநில அந்தஸ்து பெற்ற மாநிலமல்ல. ஆகவே ரசம் வைக்க வேண்டுமென்றாலும் உப்புக்கும், புளிக்கும் மத்திய அரசிடம்தான் கேட்க வேண்டும். டில்லியை சுற்றியுள்ள மாநிலங்கள்தான் டில்லிக்கு தேவைப்படும் நீர், மின்சாரம் போன்றவற்றைத் தந்து உதவ வேண்டும். டில்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் உ. பி தவிர மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சிதான் நடைபெறுகிறது. மத்தியில் பாஜக; சுற்றிலும் தோல்வியால் கருகி, கருவிக் கொண்டிருக்கும் பாஜக.
ஆகவே அரவிந்த் கேஜ்ரிவால் உடைய கரங்களில் தரப்பட்டிருப்பது செங்கோல் அல்ல ; சர்க்கஸில் கம்பி மேல் நடப்பவர்கள் கைகளில் வைத்திருப்பார்களே அந்த வகை அடையாளக் கோள்தான். ஒரு துடைப்பத்தை மந்திரக் கோலாக வைத்து மாபெரும் சாதனைகளை அவர் நிகழ்த்திக் காட்ட வேண்டும். ஆண்டாண்டுகாலமாக ஆண்ட காங்கிரசுக்கும் இன்னும் இந்த நாட்டை நாம்தான் ஆள்வோமென்று ஆணவ எண்ணம் கொண்ட பாஜகவுக்கும் எதிர்காலங்களிலும் இந்தியா முழுதும் இதுபோல் உருவாகும் புதிய மாற்று அரசியல் சக்திகளுக்கு தன்னுடைய செயல்பாடுகளின் நிருபணத்தால், ஆம் ஆத்மி தலைமை தாங்காவிட்டாலும் வழிகாட்டியாகத் திகழவேண்டும்.
புதிதாகத் தோன்றும் கட்சிகள் பெரும் வெற்றியை ஈட்டுவது இந்திய வரலாற்றில் புதிதல்ல. அசாம் கன பரிஷத் இப்படித்தான் வென்றது. இன்று அதன் அட்ரசைத் தேட வேண்டி உள்ளது. தமிழ்நாட்டில் ஊழலை எதிர்த்து கட்சி ஆரம்பித்த எம்ஜியார் பெற்ற வெற்றியும் இந்தக் கணக்கில் வரும். ஆனால் இன்று அதே கட்சியின் முதல்வர்தான் ஊழல் குற்றவாளியாகி பதவி இழந்து நிற்கிறார். இதே போல் புதிதாக கட்சியை ஆரம்பித்த என் டி ராமராவும் தெலுங்கு தேசத்தில் பெரும் வெற்றியைப் பெற்றவர்கள்தான். பாண்டிச் சேரியில் என் . ஆர் காங்கிரசும் இவ்வாறு பெரும் வெற்றி பெற்ற கட்சிகளின் பட்டியலில் அடங்கும். ஆனால் போகப் போகத் தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் என்ற நிலையில் அவர்களது தொடக்கம் தந்த வெற்றியையோ புகழையோ அவர்களால் தக்க வைத்துக் கொள்ள இயலவில்லை. இந்த வரலாறுகளை கெஜ்ரிவால் கவனத்தில் கொள்ள வேண்டும் .
ஒருபுறம் வேடன் ; மறுபுறம் நாகம்; இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான் என்கிற நிலையில் பதவி ஏற்கும் அரவிந்த் கேஜ்ரிவால் தனது மிதமிஞ்சிய உற்சாகத்தின் காரணமாக ஏற்படும் உணர்வுகளைக் கட்டுப் படுத்திக் கொண்டு தனது நல்லாட்சியால் புகழ் பெற வேண்டும். கெஜ்ரிவாலின் தவறுகள் ‘புதிய பேயை விட பழைய பூதமே பரவா இல்லை’ என்கிற எண்ணத்தை மக்களுடைய மனதில் தப்பித் தவறிக் கூட தோற்றுவித்துவிடக் கூடாது. அவ்விதம் ஒரு தோற்றம் துரதிஷ்டவசமாக உண்டாகிவிடுமானால் ஜனநாயகத்தின் மீதும் மாற்று அரசியல் மீதும் நாட்டு மக்கள் வைத்த நம்பிக்கை நசிந்துவிடும்.
நல்லதையே நினைப்போம்! நாடு வாழ வாழ்த்துவோம்! இறைவனை இறைஞ்சுவோம்!
ஆக்கம் : முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc.,
கலந்தாய்வு & உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி