"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல காலவகையினாலே" என்று ஒரு கவிஞன் குறிப்பிட்டான்.
உலகம் வளரும்போது புதிய மாற்றங்கள் உருவாகும். மாற்றம் ஒன்றே மாறாதது என்று ஒரு குறிப்பும் உண்டு.
சில நாடுகள் தங்களின் அடிப்படை கலாச்சார, பண்பாடுகளை மட்டும் எந்த காலத்திலும் இழந்துவிடவில்லை. பெல்ஜியம் நாட்டில் நடைபெறும் காளைச் சண்டை, சுவிஸ் நாட்டில் நடைபெறும் தக்காளித் திருவிழா ஆகியவற்றோடு, நமது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும், பெரம்பலூர் மீன்பிடி திருவிழாவும், உலகம் தனது பண்பாட்டின் சாயலை முற்றிலுமாக இழந்துவிடவில்லை என்பதை பறைசாற்றுகின்றன.
ஆனாலும் கலாச்சாரம், பண்பாடு, பண்டைய நடைமுறைகளில் பலவற்றை வரலாற்று சிறப்புடைய அதிரைப்பட்டினம் இழந்து நிற்பதை வேதனையோடு குறிப்பிடவே வேண்டும்.
முக்கியமாக கலரிகளில் பாலும் சோறு மறைந்துவிட்டது. அதன் இடத்தை வடநாட்டு பிர்னி ஸ்ட்ராங்கா ஆக்கிரமித்து சமீபகாலமாக பன்-ஸ்வீட் கலரிகளில் அரசால்கிறது. நமக்கெல்லாம் ஒரு ஆறுதல் கத்தரிக்காய் பச்சடியும் உருளைக்கிழங்கும் இன்னும் அமுலில் இருக்கிறது, உருளைக்கிழங்கில் அந்தக் கொழுப்பும் கிட்னியும் கலந்து கிடக்கிறது என்பதே. ஒரு சந்தோஷமான செய்திதானே !
அந்தக் காலத்தில் விலைக்காரத் தெருவில் கிராமத்து தின்பண்டங்களை - குறிப்பாக சுட்ட பனங்காயும் சக்கரவள்ளி கிழங்கு, பொட்டி கிழங்கு இன்னும் பல சமாச்சாரங்களைக் காணோம். அதை விற்றவர்களையும் காணோம் . அதற்கு பதிலாக மாசா, செவன்-அப், பெப்சி, மவுண்டன்-டூ பாட்டில்கள் / டின்கள் சனல்களில் தூக்கு போட்டு தொங்குகின்றது
நமது உம்மா, பெரியம்மாமார்களின் காதுகளில் அலுக்கத்து என்று ஒரு வகை நகை பவுன் வளையங்களாக வரிசையாக குத்தி அழகுபடுத்தி இருப்பார்கள். இப்போது அவைகளைக் காணோம். பதிலாக எல்லா வயதினரும் கிளிக்கூண்டு ஜிமிக்கி போட்டு இருக்கிறார்கள்.
சில வீடுகளின் கொள்ளை புறத்தில் இருக்கும் கிணறுகளைக் காணோம் அதற்கு பதிலாக வாட்டர் டேங்குகள் முளைத்துள்ளன.
பத்தாயம் மற்றும் நெல் கொட்டி வைக்கும் குதிர்கள் இவைகளை காணோம் அரிசி எல்லாம் பிளாஸ்டிக் பக்கட்டில் குடிபுகுந்து விட்டன.
மாவு அரைக்கும் குடைக்கல் மற்றும் அம்மிகளைக் காணோம் ஆனால் நாம் எல்லோரும் குடைக் கல்லை நினைவு படுத்துவது போல் உடலால் பெருத்து உள்ளோம் அடுப்பங்கரையில் நிரந்தரமாக மிக்ஸியும் கிரைண்டரும் இடம் பிடித்துக்கொண்டன
வீட்டு கொல்லைப்புறத்தில் இருக்கும் கழனிப்பானையைக் காணோம் அது போன இடம் தெரியவில்லை..
உம்மம்மாவும் வாப்புச்சாவும் வைத்திருக்கும் விசிறியைக் காணோம் தலைக்கு மேல் ஃபேன் தொங்காத வீடு இல்லை இப்போ.
மணலைக் குவித்து அதில் நீர் தெளித்து வீட்டு கூடத்தின் மூலையில் இருக்கும் புகை போட்ட அந்த மண்குடங்களைக் காணோம். அது போய் இப்போது குளிர் சாதனப் பெட்டியின் கிர்ர் என்ற சப்தம்தான் வருகின்றது (இந்த சப்தம் கூடுமா கூடாதான்னு பெரலிய கெளப்பிராதிய வாப்பாமாரா)
மாவு இடிக்கும் உரலையும் காணோம் அதன் கூட இருக்கும் உலக்கையையும் காணோம் (அதில் உட்கார வைத்துதானே நமக்கெல்லாம் சுன்னத் செய்தார்கள் )
கோழிப்பொட்டியும் காணோம் அதை பிடிக்கவரும் கீரிப்பிள்ளையையும் காணோம். கோழிக் கழுத்தை பிடித்த கள்ளன்கள் நகைக் கழுத்தில் கைவைக்க ஆரம்பித்து விட்டனர்.
தெருவில் சிறு வதில் ஓட்டிய சைக்கிள் டயர் வண்டியையும் காணோம் நொங்கு வண்டியும் காணோம்.
மண் பானையில் ஈ மொய்க்கும் பதனியையும் காணோம் மோர் பானையையும் காணோம்.
வீட்டின் கொல்லைப்புறத்தில் அடைத்திருக்கும் வேலியில் முளைத்திருக்கும் முள்ளு முருங்கை மரத்தையும் காணோம் அதன் கூடவே முளைத்துவரும் வாவை மரத்தையும் காணோம்.
இதையும் சேர்த்துச் சொல்லவில்லை என்றால் MSM கோவிச்சுக்குவார் அதனால் மேற்சொன்னவைகளோடு சேர்ந்து அந்த கம்பன் ரயிலையும் காணோம்.
இப்படி பல பலசுகளையும் காணோம் என்று தேட காரணம் நம்ம MSM நெய்னா வை ஊரில் நேரில் சந்தித்ததே காரணம்
இன்னும் பல காணாமல் போனவைகளைப் பற்றிய பின்னூட்டங்களை எதிர் பார்த்தவனாக.
இப்படியாக என் நினைவுக்குத் தெரிந்த வரை பட்டியலிட்டுள்ளேன். மேலும் பலரிடம் இதைவிட அதிகமாக காணாமல் போன சரக்குகள் நினைவலையில் பதிந்து கிடக்கும் அவைகளை அறியத் தாருங்களேன் இன்ஷா அல்லாஹ்.
Sஹமீத்



