
என்ன செய்துவிடமுடியும் ?
உன்னால்
என்னதான் செய்துவிடமுடியும்?
உறுப்புக் கெட்டுபோனால்
உன்னுறுப்பை
அறுத்துக் கொடுப்பாய்,
இரத்தம் திரிந்துவிட்டால்
நித்தம் கொடுப்பாய்,
உயிரைப் பகிர
உம்மாவுக்குப் புகட்ட
உன்னால் முடியுமா?
கண்ணுக்கு இமையென
உம்மாவைக் காத்தாய்
கண்மூடிய பின்பும்
கண்ணான உன்னைக்
காக்கும் உன்தாயின் துஆ
அகவை முதிர்ந்த உம்மாவைப்
பறவை தன் குஞ்சைச்
சிறகைக் கொண்டு காப்பதுபோல்
உறவைக் கொண்டு பார்த்தாய்
சொற்களாகவும் செயல்களாகவும்
உன்னுள் வாழும் உம்மா
இறப்பதில்லை சகோதரா
உள்ளத்தை உருக்கி
கண்ணீராய் உதிர்க்கும் நீ
உம்மாவின் நினைவை
உதறிவிட முடியாது என
பதறிவிடாதே
பறிகொடுத்ததை எண்ணி
தன்னிலைச்
சிதறிவிடாதே
நீ
அடக்கம் செய்து வைத்த
உம்மா
உன்னைத்
தொடக்கம் செய்துவைத்தது
முடக்கம் கொள்ளவல்ல
தந்தவன் எடுத்துக்கொள்வதும்
வந்தவர் செல்வதுவும்
கணக்குச் சரிதான் என்று
தனக்குத் தானேசொல் ஆறுதல்
உன்னை மொய்த்துக்கொண்டிருக்கும்
உம்மா நினைவிலிருந்து
மீண்டுவா சகோதரா
எல்லா துஆக்களும்
ஒலித்து ஓயும்
உம்மாவின் துஆ மட்டுமே
நிலைத்து நீளும்
வாழ்க்கை
இன்னும் மிச்சமிருக்கிறது!
(அவனிடமிருந்தே வந்தோம்; அவனிடமே மீளுவோம்)
அதிரைநிருபர் பதிப்பகம்.