அதிரைநிருபர் வலைத்தளம் இணைந்து நடத்திய ஆசிரியர் தினம்...
கடந்த 05-09-2014 அன்று நாடெங்கும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் அன்று வெள்ளிக் கிழமை என்பதால் அதிராம்பட்டினத்தின் கா. மு. ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விடுமுறை . ஆகவே ஆசிரியர் தினத்தை, பள்ளியின் இலக்கிய மன்றத் தொடக்க விழாவுடன் இணைத்து 07- 09- 2014 ஆம் தேதி ஞாயிறு அன்று நடத்த முடிவு செய்யப்பட்டது.
இவ்விரு நிகழ்வுகளையும் பள்ளியின் நிர்வாகத்துடன் இணைந்து சென்ற ஆண்டைப் போலவே அதிரைநிருபர் வலைதளம் சிறப்புடன் நடத்தியது.
அன்று மாலை நான்கு மணிக்கு இந்த உற்சாகத்திற்கும் ஆசிரியர்களின் தியாகத்திற்கும் நேரம் குறிக்கப்பட்டது. பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர்களின் முழுக் கட்டுப்பாட்டில் மாணவமணிகளை ஒப்படைக்கபட்டு ஒழுங்காக அணிவகுத்து அமரவைக்கபட்டனர். நிகழ்ச்சியின் வெற்றிக்கு இந்த கட்டுப்பாடு கட்டியம் கூறியது.

விழாவிற்கு காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை
ஆசிரியர் ஹாஜி. ஏ. மகபூப் அலி தலைமை வகித்தார். கா. மு. கல்லூரியின் முதல்வர் ஜலால் அவர்கள் முன்னிலை வகிப்பதாக அறிவிக்க பட்டிருந்தாலும் முக்கிய அரசுத் தொடர்பான பணியின் நிமித்தம் அவர் வெளியூர் சென்று விட்டதால் கலந்து கொள்ள இயலவில்லை. வாழ்த்துரை வழங்க அதிரைநிருபரின் மூத்த பங்களிப்பாளர் இப்ராஹீம் அன்சாரியும் அவருடன் பள்ளியின் முன்னாள் மாணவரும் பயில்கின்ற காலத்தில் பள்ளியின் சார்பாக பல பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும் பரிசுகளையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த நாவலர் நூர் முகமது அவர்களும் கலந்து கொள்ள, சிறப்பு சொற்பொழிவாற்ற பேராவூரணி அருகில் உள்ள சித்தாதிகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவி. தாமரைச் செல்வன் அவர்களும் கலந்து கொண்டனர். வரவேற்புரையை பள்ளியின் தலைமை தமிழாசிரியர் முனைவர் அஜிமுதீன் அவர்களும், நன்றியுரையை தமிழ்த்துறையில் பணியாற்றும் உமர் பாரூக் அவர்களும் ஆற்றும் பொறுப்பை ஏற்று இருந்தனர்.
அதிரைநிருபரின் மூத்த பங்களிப்பாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் தனது இரத்தினச் சுருக்கமான வாழ்த்துரையில் பள்ளிக்கு முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்புடனும் அதிரைநிருபர் வலைதளத்தின் ஒத்துழைப்புடனும் ஒரு கலையரங்கம் கட்டித்தர முயற்சிகள் நடப்பதாக பலத்த கரகோஷங்களுக்கு இடையே அறிவித்தார். அத்துடன் அதிரைநிருபர் வலைதளத்தின் சார்பாக பள்ளியின் முன்னாள் ஆசிரியர்களான S.K.M. ஹாஜா முகைதீன் சார், வாவன்னா (A. அப்துல் காதர்) சார், அலியார் சார், ஹனிபா சார், சண்முகம் சார், ராமச்சந்திரன் சார், ஷாகுல் ஹமீது சார், ரோசம்மா டீச்சர், ராஜேந்திரன் சார், சீனிவாசன் சார், ஹாஜி முகமது சார், ஆகியோரை கவுரவித்தார்கள். முன்னாள் ஆசிரியர்களை கவுரவிக்கும்போது அந்தப் பள்ளி வளாகத்தில் வங்கக் கடலின் அலைகளையும் அடக்கும் வண்ணம் எழுந்த கரவொலிகள் காதைப் பிளந்தன. உணர்ச்சிகள் அலை மோதின; கண்கள் பனித்தன. வாவன்னா சார் அவர்கள் வரும்போது அவர்களை ஹாஜி முகமது சார் கைப் பிடித்து அழைத்து வந்தது பலரை உணர்ச்சி வசப்பட வைத்தது.
இதை தொடர்ந்து வாழ்த்துரை வழங்க வந்த கல்வியாளர் 'நாவலர்' நூர் முஹம்மது அவர்கள் 11/11 என்பது ஒவ்வொரு ஆண்டின் அரசு அறிவித்த 'கல்வி தினம்' என்றும் அந்த நாள் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மவுலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாள் என்றும் கூறி அந்த நாளையும் ஆண்டுதோறும் கல்வி விழிப்புணர்வு நாளாகக் கொண்டாட வேண்டுமென்றும் கூறினார். நாவலரின் நாவன்மையை அனைவரும் அமைதியுடன் ரசித்தனர்.
சிறப்புரை ஆற்றிய தாமரைச்செல்வன் அவர்கள் கொளுத்திப் போட்ட சிரிப்பு வெடிகள் மாணவர்களை மிகவும் உறசாகப்படுத்தியதுடன் சிரிக்க வைத்த அளவுக்கு சிந்திக்கவும் வைத்தது. அவர் பேசிய அரைமணி நேரமும் சிரிப்பொலி மட்டும் அடங்கவே இல்லை. பெருமானார் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை அவர் முத்தாய்ப்பாக வைத்து தனது சொற்பொழிவை நிறைவு செய்தது மிகவும் சிறப்பாக இருந்தது.
பள்ளியின் வளாகத்தில் புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைத்திட பள்ளியின் முன்னாள் மாணவரும் எவர்கோல்டு வணிக வளாகத்தின் ஊரிமையாளருமான செல்வம் அவர்கள் வழங்கிய ரூபாய் 1 லட்சத்திற்கான காசோலையை அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், திமுக நகர செயலாளர் இராம்.குணசேகரன், அதிரை நகர காங்கிரஸ் தலைவர் MMS அப்துல் கரீம் ஆகியோர் இணைந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மகபூப் அலி அவர்களிடம் ஒப்படைத்தனர்.
பள்ளியின் சார்பில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை நிகழ்த்திய மாணவர்கள் மற்றும் உடற் பயிற்சி ஆசிரியர் ஆகிய அனைவரும் மேடைக்கு அழைத்துப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.
இதைத் தொடர்ந்து அதிரைநிருபர் வலைத்தளம் சார்பில் இந்த நிகழ்வுகளின் நினைவுப் பரிசாக தயாரிக்கப்பட்ட தரமான ஒரு பயணப் பையும் அதனுள் அதிரைநிருபர் வலைதளத்தின் மிக மூத்த பங்களிப்பாளர், அதிரை அறிஞர், பன்னூலாசிரியர், அதிரை அஹமது அவர்களால் மொழியாக்கம் செய்து வெளிவந்த “அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம்“ என்ற அற்புதமான நூலும் அதிரைநிருபரின் ஆஸ்தான கவி சபீர் அஹ்மது அபூசாஹ்ருக் அவர்களால் ‘ஆசிரியர் தினத்துக்காக; எழுதப்பட்ட இரண்டு கவிதைகளின் அச்சுப் பிரதிகளும் வைக்கப்பட்டு அந்த நினைவுப் பரிசு, பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் அலுவலக ஊழியர்களுக்கும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த நினைவுப் பரிசை பள்ளியின் முன்னாள் மாணவர் தலைவரும் கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் ஆலோசகருமான பேராசரியர் A.S. அப்துல் காதர் M. A. அவர்களை வழங்கும்படி இப்ராஹீம் அன்சாரி அவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டு அவற்றை அவர் இன்முகத்துடனும் அன்புடனும் வழங்கினார்.
மாணவர்களுக்கு அதிரைநிருபர் வலைதளத்தின் சார்பாக PARLE – G பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பெரியவர் எஸ். முகமது பாரூக், அதிரை அஹமது, அண்ணா சிங்காரவேல் , ஜெமீல் எம் சாலிகு, அதிரை அன்வர், எல்.எம்.எஸ். அபூபக்கர் ஆகியோருடன் அதிரையின் சக இணைய தளங்களின் சகோதரர்களும் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்களும், அதிரையின் அனைத்து முஹல்லாக்களிலிருந்து பல பிரமுகர்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும், கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் ஊர் பொது மக்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை அதிரை இணைய தளங்களின் பங்களிப்பாளர்களும், அதிரைநிருபருக்காக சகோதரர் மீடியா மேஜிக் நிஜாம் அவர்கள் தங்கள் குழுவினருடன் வந்திருந்து காணொளியாகப் பதிவு செய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் அதிரைநிருபர் வலைத்தளம் தனது நன்றியினை பகர்கிறது.
மொத்தத்தில் அன்று மாலை மகிழ்ச்சிக் கடல் பொங்கி வழிந்ததா என்று வியக்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் நிறைவேறின. அனைவரின் முகங்களிலும் மகிழ்வையே காண நேர்ந்தது இந்த நிகழ்வுகளின் வெற்றியே !
இந்த சிறப்பான நிகழ்வுகளின் காணொளி விரைவில் இன்ஷா அல்லாஹ் !
அதிரைநிருபர் பதிப்பகம்