அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதற்கு காரணமாக பொருளாதார நோக்கர்கள் குறிப்பிடும் காரணிகள்.
1. வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்கி இருந்த கடன் பத்திரங்கள் முதிர்ச்சி அடைந்து வருவதால் அவற்றின் முதிர்வு தொகையை இந்திய நிறுவனங்கள் அமெரிக்க டாலர்களாக திருப்பிச் செலுத்த வேண்டி இருக்கிறது.
2. வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் இந்திய வணிகச் சந்தையில் முதலீடு செய்த தொகைகளை திரும்பப் பெற்று தாய் நாடுகளுக்கு அதிக அளவில் அனுப்ப தொடங்கியுள்ளன.
3. குளிர் காலங்களில் வழக்கமாக கச்சா பெட்ரோலிய எண்ணெயை இந்தியா சர்வதேச சந்தையில் அதிக அளவு வாங்கும்.
மேற்கண்ட காரணங்களால் டாலரின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்கிறது.
அதனால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது.
இவற்றையும் விட நமது நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யும் பொருள்களின் மதிப்பை விட இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் மதிப்பு மிகவும் அதிகமாக இருப்பதால் டாலரில் செலுத்த வேண்டிய பட்டியல் தொகையின் வெளிவர்த்தக பற்றாக்குறை சற்றேறக்குறைய 20 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு நவம்பர் வரை மதிப்பிடப்பட்டுள்ளது.
நமது மத்திய அரசு, மாநில அரசு, ஆளும் கட்சி, எதிர்கட்சிகள் இவைகள் போலவே நமது பொருளாதார நிலையும் சீர் கெட்டு கிடக்கிறது.
ஆனாலும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு பேங்க் ரேட் குறைந்து வருவதில் ஒரு மகிழ்ச்சி.
ஆனால் அது உண்மையான மகிழ்ச்சியாக இருக்காது. காரணம் இந்தியாவில் இந்த மாற்றத்தை அனுசரித்து இன்னும் உபயோகிப்பாளர் பொருள்களின் விலை ஏறும் விலைவாசியை குறை என்று இன்னும் பத்து நாள் பாராளுமன்றம் முடங்கும்.
விலைவாசி உயர்வை காரணம் காட்டி சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் , ஓய்வூதியம் பெறுவோர்களின் அகவிலைப்படி & ஊதியம் உயர்த்தப்படும் . பணவீக்கம் அதிகரிக்கும். மீண்டும் விலை உயரும்.
விலைவாசியை குறை என்று மீண்டும் பாராளுமன்றம் முடங்கும் !!!!!!
வெளிநாடுவாழ் இந்தியர்கள் பேப்பரில் பேங்க் ரேட் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.
- இப்ராகிம் அன்சாரி - துபை.

