நூறாண்டு பழமையான மதறஸா, 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படும் பள்ளி/கல்லூரி. கல்விக்காக வாரிவழங்கும் செல்வந்தர்களுக்குப் பஞ்சமில்லாத ஊர்.தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதியான அதிராம்பட்டினம்தான் அது. அதிரையிலிருந்து ஆண்டுதோறும் நூற்றுக்கணக்காணோர் அரசு பொதுத்தேர்வு எழுதி சராசரியாக 85-90% தேர்ச்சி விகிதம் பெற்றபோதிலும் மாநில அளவில் அதிரையைச் சார்ந்த எவரும் இதுவரை சாதனைபடைக்கவில்லை என்ற அதிரையர்கள் பெரும்பாலோருடைய ஏக்கத்திற்கு சற்று ஆறுதல் கிடைத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
சென்னை மண்ணடி அங்கப்பன் நாயக்கன் தெருவிலுள்ள மியாஸி மெட்ரிகுலேசன் பள்ளியில் +2 கணிதப்பிரிவு படிக்கும் யூனுஸ் அரபுமொழிப் பாடத்தில் 192 மதிப்பெண்களுடன் தமிழக அளவில் மூன்றாம் இடம் பெற்று, மாநில அளவில் முத்திரை பதித்த அதிரையைச் சார்ந்த முதல் மாணவன் என்ற சிறப்பைப் பெற்றுத்தந்து உள்ளார்.
மர்ஹூம் அபூபக்கர் ஆலிமின் கொள்ளுப்பேரனும், மர்ஹூம்.அப்துல் ரஹ்மான் (லக்கி) ஹாஜியார், மர்ஹூம். முஹம்மது அலிய் ஆலிம் இவர்களின் பேரனுமாகிய யூனுஸ், சென்னை அங்கப்பன் தெருவிலுள்ள ஸலாமத் பதிப்பக குழுமத்தைச் சார்ந்த ஹாபிழ்.முஹம்மது இலியாஸின் மூத்த மகன். யூனுஸின் பெற்றோர்கள் அதிகம் படித்தவர்களல்லர் என்றபோதிலும் மாநில அளவில் தங்கள் மகனை தேர்ச்சிபெறச்செய்துள்ள வகையில் பெரும்பாலான அதிரை பெற்றோர்களுக்கு நல்ல முன்னுதாரனமாகத் திகழந்து,சாதனை படைக்க பெற்றோர்களின் ஊக்கம் இருந்தாலே போதும் என்ற செய்தியைத் தந்துள்ளனர்.
இதுகுறித்து மாணவர் யூனுஸ் கூறுகையில்,"பத்தாம் வகுப்பில் 500 க்கு 440 மதிப்பெண்கள் பெற்றபோது +2வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கத் திட்டமிட்டிருந்தேன். எனினும், அல்லாஹ்வின் நாட்டப்படி அரையாண்டுத் தேர்வு சமயத்தில் மஞ்சல்காமாலை நோயால் பாதிக்கப் பட்டு அதற்கு சிகிச்சை பெற்றபோது, ஓய்வெடுக்கும்படி மருத்துவர் அறிவுறுத்தியதால் பள்ளி செல்ல முடியாமல் கொஞ்சம் மதிப்பெண்கள் குறைந்தது. எங்கள் உம்மா-வாப்பா அதிகம் படித்திருக்கவில்லை. அனேகமாக எங்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரி நானாக இருப்பேன். +2 வுக்குப் பிறகு யூனானி மருத்துவத்தில் பட்டப்படிப்பு படிக்க திட்டமிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.
+2 முடித்துவிட்டு ஏதாவதொரு பட்டப்படிப்பை முடித்தோ முடிக்காமலோ வெளிநாடு செல்லும் அதிரையர்களுக்கு மத்தியில் பெற்றோரின் ஊக்கத்தால்,அதிரையர்கள் அதிகம் தொடாத அரபு மொழிப்பாடத்தில் மூன்றாமிடம் பெற்று மாநிலளவில் சாதித்துள்ள யூனுஸ் அதிரைக்கு முன்மாதிரி என்றால் மிகையில்லை.
அதிரை கல்வி நிலையங்களிலிருந்து மாவட்ட/மாநில அளவில் சாதனை படைக்கும் மாணாக்கர்களை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் 'அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்கள்' சார்பில் கடந்த ஆண்டு முதல் கல்விவிருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நமதூர் கல்வி நிலையங்களில் படிக்கவில்லை என்றாலும், அதிரையிலிருந்து மாநில அளவில் முத்திரை பதித்ததைப் பாராட்டி, அதிரை எக்ஸ்பிரஸின் திட்டத்திற்கு உந்துதலாக இருக்கும் மாணவர் யூனுஸுக்கு 2012-13 ஆம் ஆண்டுக்கான கல்வி விருது நிகழ்ச்சியில் சிறப்பு பரிசு வழங்கப்படும்.
தேர்வு முடிவு வெளியான நேரம் மாணவர் யூனுஸ் கோவையில் ஜமாஅத்தில் இருந்துள்ளார். முடிவை இணையத்தில் பார்த்துள்ளார். அதே நேரம், அவரது பள்ளி ஆசிரியர் தொலைபேசியில், யூனுஸ் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த செய்தியை மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டிருக்கும் போது, தினமலர் செய்தியாளர் மியாஸிக்குச் சென்று மாணவனைப் பற்றி விசாரித்துள்ளனர். அப்போது செல்ஃபோன் மூலம் ஜமாத்தில் இருந்த யூனுசிடம், தொலைபேசியிலேயே நேர்காணல் செய்துள்ளனர். அவரைப் பற்றி தினமலர் சென்னைப் பிரிவில் வந்த செய்தி இணைப்பு:
மேலும் இதுகுறித்து இந்நேரம் செய்தித் தளத்தில் வந்த இணைப்பு:
நமதூருக்குப் பெருமை சேர்த்துள்ள மாணவன் யூனுஸுக்கு 9566716169 எண்ணில் வாழ்த்துசொல்லி ஒரு குறுஞ்செய்தியை (SMS) தட்டிவிடலாமே!
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்

