தென்னைக்கேத் தெரியாமல்
தேங்காயைத் திருடினோம்
அன்னைக்கேத் தெரியாமல்
அடுப்பங்கரையில் திருடினோம்

மாமரம் அயர்ந்தபோது
மாங்காயைத் திருடினோம்
கைக்கெட்டும் கிளையிலிருந்து
கொய்யாவையும் கொய்தோம்
சொடுக்குப் போடும் நேரத்தில்
கொடுக்காப் புளி கவர்ந்தோம்
முடுக்கு வழி புகுந்தோடி
அடுக்களைக்குள் பதுங்கினோம்
உப்பு விளையும் பாத்தியிலே
உல்லான் குருவி பிடித்தோம்
மதில்மேலே ஏறி நின்று
மாதுளம்பழம் திருடினோம்
நோன்புப் பிடித்து நாள் முழுதும்
சோம்பிப்போய்க் கிடந்தோம்
ஹிசுபு ஓதி முடித்தபின்பும்
குசும்பு செய்தே திறிந்தோம்
ரெண்டு மிதி சைக்கிளையும்

நாலு காலால் மிதித்தோம்
சாலையோர மரத்திலெல்லாம்
ஆட்டையைத்தான் போட்டோம்
பெருசுகளை கண்ணைக்குத்தி
புளியங்காயைத் திருடினோம்
பேச்சு பேச்சா இருக்கும்போதே
பேரீட்சையில் கைவைத்தோம்
பார்வையைப் பறிகொடுத்து
பார்வைகளைத் திருடினோம்
வேர்வையோடும் நாட்களிலும்
போர்வைக்குள்ளே புலம்பினோம்
காரணமே இல்லாமல்
கண்டதெல்லாம் சுட்டோம்
கவனமாக ஓதிப் படித்து
நல்லபிள்ளை யென்றானோம்
கிளித்தட்டு கிட்டிபில் போல்
விளையாட்டாத்தான் திருடினோம்
பெற்றவங்க மனம்குளிர
நல்லாபேரையும் திருடினோம்
- சபீர்
---------------------------------------------------------------------------------
பின்னூட்ட ஊர்வலம் !
தூண்டில் போட்ட கவிக் காக்கா அவர்களே ! வழக்காடு மன்றமே செல்லாமல் வழக்காடி வெற்றி வாகைச் சூடிய வரைகலை வைகறை தம்பி MSM(மீ) அவர்களே ! மற்றும் பின்னூட்ட மேடையில் அமர்ந்திருக்கும் இன்னும் வரவிருக்கும் அன்பிற்கினியவர்களே !
இன்னும் ஒருவாரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கவிருப்பதால் அதுவரை அரசியல்வாதிகள் கொடுத்த வாக்கு(றுதி)களை எண்ணிக் கொண்டிருக்கும் கழக கண்மனிகளே (அட இன்னும் நல்லா கைதட்டுங்க) !
இதென்னடா இப்படி கிளம்பிட்டாய்ங்களேன்னு உச்செல்லாம் கொட்(டாவி)ட வேனாமே !
அன்றொரு நாள் அதிரைப்படினத்தில் தென்றலும் தெம்மாங்கும் கூட்டாக வருடிய நேரமதில் நண்பர்கள் / மச்சான்ஸ் / சகோதரர்கள் என்று புடைசூழ அல்லது தனித்தோ அறிந்தும் அறியா வயதில் அறியாமல் நிகழ்ந்த நிகழ்வுகளுக்கு பின்னூட்ட ஊர்வலம் ஒன்றினை நடத்தலாமென்ற ஆலோசனையை தம்பி MSM(மீ) வைத்திருந்தார் அட ! நல்லாத்தானே இருக்குன்னு களத்தில் இறங்கியாகிவிட்டது.
சரி பின்னூட்ட ஊர்வலத்தில் அறிந்தும் அறிய வயது குசும்புகள்தான் கோஷமாக இருக்க வேண்டும், மாற்றுக் கழகக் கண்மனிகளை வசைபாடக் கூடாது, அதேநேரத்தில் நினைவுகளை அசைபோடலாம், அன்றைய பெருசுங்களுக்கு நீங்கள் வில்லன்களாக தெரிந்திருக்கலாம் அதன் பின்னர் அவர்கள் வீட்டுக்கே ஹீரோவாக சென்றிருக்கலாம் அல்லது இருந்திடலாம் இப்போதும்.
பின்னூட்ட ஊர்வலம் கலகலப்பாக இருப்பது உங்கள் கையில் இருக்கிறது அதற்காக நம்ம கைதானே என்று கைகலப்பில் இறங்கிட வேண்டாம், நமக்கு நாமே பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அவர்களின் பின்னூட்ட உடமைகளுக்கும் உட்கருத்துக்களுக்கும் அவர்களே பாதுகாப்பாகவும் பொறுப்பாகவும் இருக்கனும்.
ஊர்வலத்தை அலங்கரிப்பதில் உங்கள் எல்லோருக்கும் சொல்லியா தரனும்... ஆதலால் ஊர்வலம் செல்லும் வழியில் கல்லெரியோ அல்லது சொல்லெரியோ நடந்தால் அமைதி காத்திடவும் எல்லா வற்றையும் CCTVல் நெறியாளர் கண்கானித்துக் கொண்டிருப்பார் அசம்பாவிதமென்று அறியவந்தால் ஊர்லவத்திலிருந்து விளக்கி வைத்திடுவார் என்பதையும் அன்புடன் தெரிவித்திடவும் சொன்னார் அதையும் இங்கே சொல்லிபுட்டேன்.
- அபுஇபுறாஹீம்