என்னிடம் சில
வார்த்தைகள் இருப்பிலுண்டு
இவற்றால்
வாழ்க்கையை வடித்தெடுக்க
வாகாக உங்களிடம்
வார்ப்புகள் வைப்பிலுண்டா?
படிவங்களில் நிரப்பி
பத்திரப்படுத்த அல்ல
அடித்துத் திருத்திப் பின்
அலங்கோலப் படுத்தவுமல்ல
வடிவங்களாய் வார்த்து
எடுத்துக் காட்ட
படிப்பினை புகட்ட
பகிரங்கப் படுத்திப் பயிலரங்கம் நடத்த
சீரான வாழ்க்கையைச்
சிறப்பாகச் சொல்லித்தர
நேரானப் பாதையை
நிறைவாகக் காட்டித்தர
வாழ்ந்து அனுபவித்த
மாதிரி வார்ப்புகள்
கைவசம் உள்ளனவா?
பெய்து முடித்த ஒரு
பெருமழையின் பலனைப் போல
நெய்து எடுத்தப் புது
நேர்த்தியானத் துணியைப் போல
கொய்து தொடுத்த நறு
குளிர்மலர்கள் சரத்தைப் போல
செய்து முடித்த நற்
செயல்களின் வார்ப்புகளுண்டா?
உங்கள் முன்
ஏந்திய கைகளில்
மீந்தவை கொண்டேனும்
ஈந்ததாய் வார்ப்புண்டா?
உகுந்த கண்ணீரை
தகுந்த நிவர்த்தியால்
மிகுந்த கருணையோடு
துடைத்த விரல்கள் உளவா?
ஒட்டிய வயிறுகளின்
பட்டினிப் பிணி நீக்க
உணவளித்து உதவியதாய்
உமது நினைவில் இருப்புண்டா?
கூரையின்றி நலிந்தோர்க்கு
தாழ்வாரம் தாமாகி
வாழ்வாதாரம் வழங்கி
புகலிடம் தந்த வார்ப்புண்டா?
நீர்த்துப்போய் நிலவறையில்
நிரந்தரமாய் கிடத்துமுன்
தீர்ப்பு நாளை அஞ்சி
திருத்தங்கள் செய்ததுண்டா?
நகலெடுக்கத் தகுதிவாய்ந்த
நல்ல பழக்கங்களும்
வார்த்தெடுக்கப் பொருத்தமான
வாழ்வியல் வழக்கங்களும்
உலகுக்கு அறிவிக்க
முன்மாதிரி வடிவங்களாய்
வாருங்கள்
வாழ்ந்து காட்டுவோம்!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்


