Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label அதிரையின் முத்திரை. Show all posts
Showing posts with label அதிரையின் முத்திரை. Show all posts

அதிரையின் முத்திரை - (Version - 2) 27

அதிரைநிருபர் பதிப்பகம் | May 24, 2015 | , ,

அருளாளன் அன்புடையோன்
'அல்லாஹ்'வின் ஆசியுடன்
அதிரையெனும் அழகூரின்
அருமைதனை அறியவைப்பேன்

அதிகாலை அழைப்பொலிகள்
அகஇருளை அதிரவைக்கும்
அறிவுடையோர் அணியணியாய்
'அவன்'இல்லம் அடைந்திடுவர்

இதயமெலாம் இதமாக
இயல்பாக இறைவணங்கி
இறைவேதம் இன்னிசைக்க
இளங்காலை இலங்கிடுமே

இத்தினமும் இனியென்றும்
இன்பமுற இருந்திடவே
ஈடில்லா இணைகளற்ற
ஈருலகின் இறையருளால்

ஊரோரம் ஊர்ந்தோடும்
ஊர்தியொலி உயிருசுப்பும்
ஊதலொலி ஊரெழுப்ப
உள்ளமெல்லாம் உவகையுறும்

ஊர்போன உறவினரும்
உடன்சென்ற உற்றாரும்
ஊணுருக உழைத்தலுத்து
ஊர்திரும்பும் உற்சாகம்

எடைகனத்தோர் எட்டுவைத்து
எதிரெதெரே ஏகிடுவர்
எட்டுமணி எட்டிவிட்டால்
ஏடெடுத்தோர்  எழுதச்செல்வர்

எத்தனையோ ஏழையெல்லாம்
எனதூரில் ஏற்றம்பெற்றார்
எண்ணப்படி எப்படிப்பும்
ஏற்றெழுதி எழுச்சிபெற்றார்

ஐவேளை ஐயமற
ஐயாமார் தொழுதிடுவர்
ஒற்றுமையாய் ஓரணியாய்
'ஒருவனிடம்' ஒன்றிடுவர்

ஓடைத்தண்ணீர் ஓட்டத்தைப்போல்
ஒழுக்கத்தையும் ஓம்பிடினும்
ஒவ்வொன்றாய் ஓய்ந்துவர
ஒவ்வாமை ஓங்கிடுதே

அத்தனையும் அங்குமிங்கும்
அலைகழித்து அழிந்துவர
அதிரையென்னும் பெயருண்டு
அஃதொன்றே மாற்றமில்லை

கண்குளிர கண்டுவந்த
கதிர்விளையும் கழனியெலாம்
கட்டடமாய்க் காட்சிதரும்
காசுடையோர் கைங்கர்யம்

கிணறூறும் கொள்ளையில்லை
கனிசுமக்கும் கிளைகளில்லை
கொத்துக்கொத்தாய் காய்காய்க்கும்
கொய்யாயில்லை குருவியில்லை

சாளரத்தின் சாரலிலே
சொக்கிநின்ற சந்தோஷம்
சடுதியிலே சிதைந்ததுவே
சோகமனம் சோர்ந்திடுதே

சாலையெலாம் சகதிமிக
செருப்பில்சிக்கி சேற்றுத்துளி
சிதறிஅது சிறுபுள்ளியாய்ச்
சட்டையிலே சாயமிடும்

தோப்புகளில் தொங்கிவந்த
தென்னங்குலை தடிமனற்று
தொற்றுநோயால் துவண்டுவிட
தேங்காய்கள் தினமுதிரும்

வழித்தடம்போல் வாய்க்கால்கள்
வளர்ந்துவிட்ட விஷக்கொடிகள்
வெப்பத்திலே வெடிப்புகண்டு
வற்றிவிட்ட வெறும்குளங்கள்

வெளிநாட்டில் வேலைதேடி
வாலிபத்தை வீணடித்து
வங்கிகளில் வட்டிகட்டி
வறுமையிலே வீழ்கின்றவர்

அதிரையுண்டு அழகுயில்லை
ஆட்களுண்டு அன்புயில்லை
இதயமுண்டு இரக்கமில்லை
ஈட்டியதை ஈவதில்லை

உறவுவுண்டு உணர்வுயில்லை
ஊருணியில் ஊற்றுயில்லை
எல்லாமுண்டு எதுவுமில்லை
ஏக்கமுண்டு ஏற்றமில்லை

எத்திசையில் சென்றாலும்
என்னுலகம் அதிரையன்றோ
என்னிறைவா எனதூரின்
எழில்மீட்டு எமக்கருள்வாய்

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

அதிரையின் முத்திரை ! 42

அதிரைநிருபர் பதிப்பகம் | January 06, 2015 | , ,


நெல்மணி விளையும் வயல்வெளியும்
உவர்மணி விளையும் உப்பளமும்
நெத்திலி நீந்தும் கடற்கரையும்
நெத்தெனக் காய்க்கும் தோப்புகளும்

குளிரலைக் கொஞ்சும் குளக்கரையும்
குளித்தபின் சிலுப்பும் குருவிகளும்
குரல்வளை கனத்த தவளைகளும்
குரல்வழி அழைத்த பாம்பினமும்

பாங்கொலி எழுப்பும் விடியல்களும்
பயமின்றிப் புழங்கும் வீதிகளும்
பல்லிகள் நடக்கும் சுவறுகொண்ட
பள்ளியில் நடத்தும் தொழுகைகளும்

நடக்கையில் நீளும் சாலைகளும்
கடக்கையில் காணும் காட்சிகளும்
தூரத்தில் உதிக்கும் சூரியனும்
ஈரத்தை உலர்த்தும் இலைதழையும்

கிழக்கிலே விடிந்த வெளிச்சம்கண்டு
விளக்கினை அனைத்த கம்பங்களும்
இலக்கிலே பறக்கும் பறவைகளும்
பிழைக்கவே விழிக்கும் சொந்தங்களும்

அடுப்பிலே கொதிக்கும் பால்குடிக்க
இடுப்பிலே இருக்கும் குழந்தைகளும்
உடுப்பிலே தனித்த தோரணையில்
விடுப்பிலே மகிழும் வாலிபரும்

புத்தகம் கனக்க பிள்ளைகளும்
புத்தியை வளர்க்க பள்ளிகளும்
பக்தியில் திளைத்த பிரார்த்தனையால்
புக்ககம் நுழைந்த மணமக்களும்

மல்லிகை மணக்கும் இரவுகளும்
மனதினிற் கினிய உறவுகளும்
மதிமுகம் சிவந்த மங்கையரும்
மனமகிழ் வளிக்க ஆடவரும்

பழகியே களித்தத் தோழர்களும்
பார்த்துத்தான் சிரித்த பிரியங்களும்
விலகியே பிரிந்துச் சென்றாலும்
உலகிலே நிலைக்கும் ஊர்நினைவு

மஸ்ஜிது மிகுந்த தெருவழகும்
தஸ்பிஹு சொல்லும் வீடுகளும்
முஸ்லிமாய் மூமீனாய் நிறைவாக
விஸ்தார மன்றோ எம்சமூகம்

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு