நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மக்கள் நிலை - தெருவில் ! 30

அதிரைநிருபர் பதிப்பகம் | புதன், பிப்ரவரி 29, 2012 | , , ,


அதிரையில் சமீபத்தில் நடந்த வன்முறைச் சம்பவம் பெரும்பாலான வெளிநாடு வாழ் சகோதரர்களை மட்டுமல்ல ஊரில் இருக்கும் சொந்தங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சகோதர வலைத்தளங்களில் வெளியான ஒரு செய்தி - அதுதான் சகோதர இயக்கங்கள் இரண்டுக்கிடையே கைகலப்பு அதனைத் தொடர்ந்து ஊரில் நன்கு அறியப்பட்ட சகோதரர் ஒருவரை, முகத்தை மூடிக் கொண்டு இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இருவர் சரமாரியாக தாக்கிவிட்டு ஓடிவிட்டதாகவும் அதன் பின்னர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியாகியிருந்தது.

சம்பவம் நடந்தது ஏதோ வெறிச்சோடிப்போன ஆள் நடமாட்டமில்லாத இடத்திலோ அல்லது, ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திலோ அல்ல, நமது பெண்டிரும் குழந்தைகளும் சரளமாகவும் நிம்மதியாகவும் புழக்கத்தில் இருக்கும் அமைதியான சூழலில் ஊருக்கு நடுவில் இருக்கும் தெருவில்தான் நடந்திருக்கிறது.

சகோதர இயக்கங்களுக்கிடையே சமுதாயத் தொண்டாற்றுவதிலும், அவரவர்களின் செயல்பாடுகளில் கருத்தொற்றுமை இல்லாவிடினும் போட்டி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது அது என்றாவது ஓர் நாள் ஒன்றிணைவார்கள் என்ற ஏக்கம் இருப்பதை அவர்கள் உணர்ந்து திருந்தும் வரை அதனை ஒருபக்கம் வைப்போம்.

ஏன் இந்த வெறியூட்டும் செயல்பாடுகள் எங்கிருந்து கற்றார்கள் ? நம்மைச் சார்ந்த ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கும் சகோதரர்களை எளிதில் எதிரியாக்கியது எது !?

துண்டு துண்டாக இருக்கும் இயக்கங்கள் அனைத்துமே போட்டி போடுகிறீர்கள் சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு வகையில் நல்லதைச் செய்யனும் சமுதய மக்களிடம் நல்லவர்களாக பெயரெடுத்து தாங்கள் மட்டுமே நிலைத்திருக்கனும் என்று. நல்லவர்களாக வெளிக்காட்டிட முயலும் உங்களால், உங்களது செயல்களால் ஏன் அப்படி நடந்து கொள்ள முடியவில்லை ?. எங்கே இடறுகிறீர்கள் ?  இந்த வெறியூட்டும் செயல்களுக்கு எது காரணம் ?

இனவெறியையும் அடிமைத்தனத்தையும் அடியோடு ஒழித்தொழித்த இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்கும் நம்மிடையே ஏன் இயக்க வெறி ? இதனால் இழந்தைவகளை நீங்களே பட்டியலிட்டுப்பாருங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலமே மிஞ்சுகிறது.

அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை மட்டுமே நாடி சமுதாயப் பணியாற்ற உருவெடுத்த இயக்கங்கள் இன்று அரசியல் ஆதாயங்களை முன்னிருத்தி இழந்து கொண்டிருப்பதோ நமது ஒற்றுமையை. எதனைப் பெற முயல வேண்டிய இளைய சமுதாயம், மூன்றாம் தர வேலைகளிலும், கூலிப்படைகளால் அரங்கேற்றப்படும் காட்சிகளைப் போன்று தங்களின் கரங்களில் எடுத்துக் கொண்டு ஈடுபடுவதை எண்ணி நம் சமுதாய இளைஞர்களின் நிலைமை கவலையளிக்கிறது.

மனித நேயத்தை பறைசாற்றி, சகிப்புத் தன்மையின் உச்சம் எதுவென்று உலகுக்கு எடுத்துக்காட்டிவரும் எளிய மார்க்கத்தில் இருந்து கொண்டு இவ்வாறான வன்முறைகளால், உடன் பிறந்த சகோதரர்களுக்கும் நம் வீட்டுப் பெண்களுக்கும் அச்சத்தையூட்டும் காரியங்களிலிருந்தும் விடுபடுங்கள். உங்களின் எதிர்காலத்தையும் உங்களை நம்பியிருக்கும் குடும்பங்களையும் மனதில் நிறுத்தி சகிப்புத் தன்மையை கையாளுங்கள்.

போராட்ட குணம் வேண்டும், அது எவ்வகையில் அவசியம் என்பதை இனிய மார்க்கம் கற்று தரும் பாதையில் நிதானத்தை கடைபிடித்து சானக்கியமாக செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் வலிமை தருவானாக.

சிந்தியுங்கள் அன்புச் சகோதரர்களே !

-அதிரைநிருபர்-குழு

படிக்கட்டுகள்... ஏற்றம் - 8 16

ZAKIR HUSSAIN | செவ்வாய், பிப்ரவரி 28, 2012 | , , ,

வாக்கு கொடுத்தல்.

எந்த விதமான விசயமாக இருந்தாலும் சரி வியாபார விசயங்கள் என்று வந்து விட்டாலே 'வாக்கு" என்பது மிக முக்கியம். இதில் வேலையாட்கள் சம்பந்தப்பட்ட வாக்குகளாக இருந்தாலும் அதே முக்கியத்துவம்தான். ஏனெனில் வாக்குக்கு பணமதிப்பீடு என்று ஒன்று இருக்கிறது.

பணம் வாங்கிக்கொண்டு கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை என்றால் அவை எந்த அளவு நெருக்கமான உறவாக இருந்தாலும் இனிமேல் அப்படியே அந்தரத்தில் தான். உங்கள் நல்ல பெயர் கெட்டு குட்டிச்சுவராக எளிதான வழி....' கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் நடந்து பாருங்கள்" . இதை ஏன் இவ்வளவு நெகட்டிவ் ஆக எழுதி புரிய வைக்க வேண்டும் என நினைக்கலாம். இதில் ஏற்கனவே சம்பாதித்த நல்ல பெயர்களும் புயலில் அடித்துக்கொண்டு போகும் மரம் மாதிரி நம் பெயரும் வேரோடு அறுத்து எறியப்படும் எனும் நிதர்சனம்தான்.


தொழிலில் மட்டுமல்ல குடும்ப உறவுகளிலும் வாக்கு மிக முக்கியம். தொடர்ந்தாற்போல் உங்கள் வீட்டில் இருக்கும் சின்ன பிள்ளைகள் கேட்கும் பொருட்களை ' வாங்கித்தர்ரேன்' என சொல்லி அதை வாங்கி கொடுக்காமல் இருந்து பாருங்கள்... வீட்டில் இருக்கும் பல்லிக்கு உள்ள மதிப்பு கூட நமக்கு இருக்காது.

இன்னும் சொல்லப்போனால் சில பெரிய தொழில்களில் எத்தனையோ ப்ராஜக்ட் நடந்தேராமல் போனதற்கு காரணம் அதை வழிநடத்தும் அந்த கார்ப்பரேட் லீடர்களின் வாக்கு சுத்தமில்லாமல் இருப்பதுதான். இங்கு [மலேசியாவில்] சில நிறுவனங்கள் சாலை / நெடுஞ்சாலை கட்ட கான்ட்ராக்ட் எடுக்கும்போது அதற்கான அறிவிப்பு பலகையில் [Project Board]   இல் வேலை தொடங்கும் தேதி / முடிவுறும் தேதி என குறிப்பிடுவார்கள்.  அதில் இப்போதைக்கு 100 % ப்ராஜக்ட்,  முடிவுறும் தேதிக்கு முன்னால் ப்ராஜக்ட் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடுவிடுகிறது. இங்குள்ள இது போன்ற நிறுவனங்கள் 'முடிவுறும் தேதி" க்குள் வேலையை முடிப்பதைத் தனது நிறுவனத்தின் கெளரவமாக கருதுகிறார்கள். நிறுவனங்களுக்கே இப்படி என்றால் 'உப்பு /மிளகாய் சேர்த்துக்கொள்ளும் நமக்கு அது அதிகமாக இருக்கவேண்டும்.

Image maker

நமது எண்ண ஒட்டங்களை ஒரு வெண்திரைக்கு ஒப்பிடலாம். அதில் நீங்கள் என்ன விதமான காட்சிகளையும் ஓட்டலாம்.
  • ஒரே சோகம் / பணப்பற்றாக்குறை.
  • 'என்னை நிந்தித்து விட்டார்கள், / “என்னை வச்சி முன்னேறி என் முதுகில் குத்திட்டாய்ங்க!!” [பேக்ரவுன்ட் ம்யூசிக் யாரை வேண்டுமானாலும் நீங்கள் பணியமர்த்திக்கொள்ளலாம் ]
அல்லது
  • நான் முன்னேறிக்கொண்டிருக்கிறேன். இறைவன் எனக்கு ஓவ்வொரு விசயத்திலும் உதவி செய்துகொண்டே இருக்கிறான்.
  • எனது தொழிலில் வரும் சவால்கள் பிறகு என்னை உயர்த்த காரணமாக இருக்கிறது.
  • எனக்கு நல்ல குடும்பத்தையும்,நண்பர்களையும் இறைவன் அருளியிருக்கிறான்.

இப்படியும் காட்சிகளை திரும்ப திரும்ப ஓட்டலாம் . The CHOICE  is YOURS.

வாழ்க்கையில் முன்னேர ஏணிமரத்தையும் , எஸ்கலேட்டர்களையும் நாம் தயாரித்துக்கொண்டிருக்கும்போது நம் கைகள் நமக்கு 'பள்ளம்' தோண்டாமல் பார்த்து கொள்ள வேண்டும். இங்கு நம் கைகள் என சொன்னது நமது எண்ணத்தை.

முதன் முதலில் நாற்காலி எப்போது கண்டு பிடித்து இருப்பார்கள்?. தரையில் உட்கார்வதில் சிரமத்தை உணர்ந்த போது. அந்த நாற்காலியை வடிவமைத்தவர் நிச்சயம் நம்பியிருப்பர். நாற்காலியில் உட்கார்ந்தால் சிரமம் குறையும் என்று..அப்படியானால் நாற்காலியை செய்து முடிக்குமுன் அதன் தோற்றத்தை அவர் பார்க்க முடிந்தது.  அப்படித்தானே?....அப்படி யென்றால் உங்களின் சந்தோசமான / ஆரோக்யமான / வசதியான வாழ்க்கையை பார்க்க உங்களினாலும் முடியும். அப்படி பார்க்க முடியவில்லை என்றால் தடையின் காரணம் நாமாகத்தான் இருக்க முடியும். பதிலை வெளியில் தேடி புண்ணியமில்லை எனவே நீங்கள் எப்படி உருவாகப்போகிறீர்கள் என்பதை புத்தாக்கம் [CREATE] செய்வதும் “நீங்கள்” தான். Creativity யின் வகைகளை பிறகு வரும் வாரங்களில் படிக்கலாம்.

உங்களைப்பற்றிய எண்ணங்கள் தொடர்ந்து ரிஜிஸ்டராகும் ப்ராசஸ் Sub conscious Mind க்குள் பதிவாகி விட்டால் அதை மீறி நீங்கள் செயல்படுவதில்லை. மற்றும் தொடர்ந்து எண்ணப்படும் எண்ணங்கள் செயலுருவமாகிறது. எனவே மனைவியை கைநீட்டி அடித்துவிட்டு சில [வீர] கணவன்மார்கள் "திடீர்னு' ஆத்திரம் வந்துடுச்சி என்பதெல்லாம் போலீஸ் பயன்படுத்தும் Lie Detector  கருவியில்லாத தெனாவெட்டாக இருக்கலாம்.

Image Maker ல் எளிய வழியும் உண்டு. அதுதான் copycat. மற்றவர்கள் செய்வதை அப்படியே செய்து முன்னேறுவது. இதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு உடன்பாடில்லை என்பதற்காக அது வொர்க் அவுட் ஆகாது என அர்த்தமில்லை. வாழ்க்கையில் முன்னேறியவர்கள் என்ன செய்தார்கள் என்று பார்த்து அப்படியே அதை நாமும் செய்வது. இதற்கு நாம் ஒருவரை Mentor  ஆக ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர் எப்படி தொழில் செய்யும்போது பேசுகிறார்/ எப்படி உடை உடுத்துகிறார் / இப்படி எல்லாவற்றையும் ஈயடிச்சான் காப்பியடிப்பதுதான் இதன் சிஸ்டம். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் நினைக்கும் சாதனை களை ஒரு 70% நிறைவேற்றிவிடலாம். ஒன்றும் செய்யாமல் வழியும் தெரியாமல் 'பேய்முழி" முழித்துக் கொண்டிருப்பதற்கு இது தேவலாம் எனும் ரேஞ்சில்தான் பெரும்பாலான விற்பனை நிறுவனங்கள் Multi Level Marketing /   தொழில்துறைகள் / வெள்ளைக்காரர்களின் செமினார்கள் சொல்லிக்கொடுக்கிறது.  

எனக்கு ஏன் இதில் உடன்பாடில்லை என்கிறேன் என்றால்.. நமது வேலைகளில் தனித்தன்மை போய்விடும். உங்களுடைய ஸ்டைல் என்று எதையும் சொல்ல முடியாது.

எப்போது ஒருவரை நாம் Mentor ஆக ஏற்றுக்கொண்டோமோ அதிலிருந்து நமது புத்தி நம்மை " Second Best’  என்று சொல்லும்"  அப்படியானால் யார் அந்த “First Best’ நீங்கள் ஏற்றுக்கொண்ட அந்த Mentor தான். 

உங்களை தாழ்த்தி அவரை உயர்த்தி இறைவன் படைத்திருப்பான் என்று சொல்ல / எழுத என்னால் முடியாது.

மற்றும் ஒரு வழிகாட்டியாக / தலைவராக ஏற்றுக்கொள்ள எம்பெருமானார் நபி முஹம்மத் [ ஸல் ] அவர்களைத்தவிர யாரும் அந்த நிலைக்கு என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதை நான் முஸ்லீமாக இருப்பதற்காக எழுதவில்லை. எம்பெருமானாரின் வாழ்க்கையை , ஆட்சித்திறமையை , சுபிட்சத்தை நோக்கி தன் மக்களை நடத்திச்சென்ற ஒப்பற்ற Leadership quality ஐ ஓரளவு படித்தவர்கள் அப்படித்தான் எழுதமுடியும்.

See you in next episode…. with lot of light readings…
ஏற்றம் தொடரும்...
-ZAKIR HUSSAIN


குடும்ப அட்டை (Family Card) பெறுவது எப்படி !? 14

அதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், பிப்ரவரி 27, 2012 | , , ,

புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ?

தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள்.

குடும்ப அட்டை பெற விண்ணப்பம் படிவம் எங்கு கிடைக்கும் ?

தமிழக அரசு விண்ணப்ப படிவங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்னையித்துள்ளது. இவை அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் கிடைக்கும். மேலும் http://www.tn.gov.in/tamiltngov/appforms/ration_t.pdf என்ற அரசு இணை தளத்திலும் தரைஇறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?

அந்தந்த தாலுக்கா அலுவலங்களில் உள்ள வட்ட உணவுப் பொருள் வழங்கல் அதிகாரி ( TSO ) அவர்களிடம் தாக்கல் செய்யவேண்டும்.

விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் எவை ?

விண்ணப்ப படிவத்தில் அதில் கோரப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்து கையொப்பம் இட வேண்டும். முழுமையற்ற படிவம் நிராகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

தேவையான ஆவணங்கள் :

1.  இருப்பிடச் சான்று
2.  தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை
3. வீட்டு வரி செலுத்திய / மின்சார கட்டணம் செலுத்திய / தொலைப்பேசி கட்டணம் செலுத்திய போன்றவைகளின் ஏதாவது ஒரு ரசீதுகள் / வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் / பாஸ்போர்ட் நகல் ( இதில் ஏதாவது ஓன்று மட்டும் போதுமானவை )
4. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கு அதிகாரியிடம் ( TSO )  பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.
5. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் அதற்கான “ குடும்ப அட்டை இல்லா “ சான்று.
6. எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர்.
7. விண்ணப்பதாரரின் தனது விண்ணப்பம் குறித்த தகவல்கள் பெற இலகுவாக தங்களின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவும். அல்லது சுய முகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.

மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா ?

1.       தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க அல்லது மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.
2.       வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மனு பெறப்பட்ட நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் தணிக்கை அதிகாரிகளால் மனுதாரரின் விண்ணப்பத்தின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள மனுதாரரின் வீட்டிற்க்கே வந்து ஆய்வு செய்வார்கள்.
3.       விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?

அரசால் ரூ 5 /- கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை உணவு வட்ட வழங்கல் அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும்.

அணுக வேண்டிய முகவரி : ( தஞ்சை மாவட்டதாரர்களுக்கு )

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் :-
மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி ( DSO )
Tel :  04362   231336
Mobile : 9445000286
E-mail : dso.tnj@tn.gov.in மற்றும் dso.tntnj@nic.in

பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகம் :-
வட்ட உணவு வழங்கல் அதிகாரி ( TSO )
Tel : 04373  235049
Mobile :  9445000293

குறிப்பு : சகோதரர்களே, புதிய குடும்ப அட்டை பெற வேண்டி தரகர்களிடம் செல்வதை தவிர்த்து கொள்ளுங்கள். மேலும் கையூட்டு கொடுப்பது என்பது இந்திய சட்டப்படி குற்றமாகும்.

இறைவன் நாடினால்! தொடரும்...
-சேக்கனா M.நிஜாம்

மனிதம் - 2050 45

அதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, பிப்ரவரி 26, 2012 | , , , ,

தூசு கூடி காற்று யெல்லாம்
மாசு பட்டுப் போகும்
காசு டைத்த ஆளின் சொற்கள்
பேசு பொருள் ஆகும்

ஏசு புத்தன் காந்தியெல்லாம்
பூசு மூடு என்றாகும்
பாசு கெட்டு பாசம் நேசம்
லேசு பட்டுப் போகும்

ஓஸோன் ஓட்டை விசாலமாகி
உஷ்ணம் ஏறிப் போகும்
பூமிப் பந்து பொரித்துவைத்த
 'பூரி' போல வேகும்

துருவப் பகுதி உருகிஉருகி
பருவம் மாறிப் போகும்
கடலின் மட்டம் பெருகிபெருகி
கரையை அலைகள் தாவும்

போக்குவரத்து நெரிசல் கூடி
பயண நேரம் நீளும்
பாதி மனிதப் பழக்கவழக்கம்
வாகனத் துள் வாழும்

இயற்கை உணவு பஞ்சமாகி
இதயம் கெட்டுப் போகும்
செயற்கை தீனி தின்றுதின்று
சீக்குப் பிணி கூடும்

தேவைகளும் கூடிப் போக
சேவை நோக்கம் குறையும்
மனசாட்சி மடிந்து போய்
பணத் தாட்சி நிறையும்

உழைப்பின்மேல் நாட்ட மின்றி
ஊரும் கொள்ளைப் போகும்
கொடுத்துதவும் குணம் குன்றி
குற்றத் தொல்லைக் கூடும்

ஏற்றத் தாழ்வு மலிந்து மனிதம்
நாற்ற மாக நாறும்
போற்றத் தக்க தலைவன் இல்லா
தோற்ற கூட்டம் மாளும்

கற்ற கல்வி மறந்துபோக
பெற்ற அறிவு விரயம்
மற்ற எந்த விலங்கைப் போலும்
சுற்ற மின்றிப் போகும்

சோர்ந்து தோற்கும் முன்பதாக
கூர்ந்து எண்ணிப் பார்த்தால்
தேர்ந்த நெறி ஒன்றைத் தேடி
தாகம் கொள்ளும் மனிதம்

ஒற்றை இறைக் கொள்கை தனில்
ஒருங்கி ணைந்தால் மட்டும்
ஈருலக வாழ்க்கை யிலும்
மனிதம் மிக்க நிலைக்கும்

-சபீர்

எல்லாப் புகழும் இறைவனுக்கு! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | சனி, பிப்ரவரி 25, 2012 | , , , ,


திருச்சியின் சுகந்தம் அதன் எல்லையினை உணர்த்தியது.

சென்னையிலிருந்து இரவு கிளம்பிய பேருந்து, காலை சுமார் ஆறேகால் மணிக்கு திருச்சியின் எல்லையினை அடைந்தது.

பேருந்து ஓட்டுனர் இரவு விளக்கினை அணைத்துவிட்டு 'ஆல் இந்தியா ரேடியோ' வினைத் திருப்பிக்கொண்டிருந்தார்.

"ஸலாதுல்லாஹ்.... ஸலாமுல்லாஹ்...
அலா தாஹா ரஸூலுல்லாஹ்...
ஸல்லல்லாஹு அலா முஹம்மது 
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்..."  

பக்திப்பாடல் வரிசையில் காற்றில் கலந்து கொண்டிருந்தது இந்தப் பாடல்.

சக பயண நண்பரோடு, இரவெல்லாம் இஸ்லாம் பற்றியும், இறைத்தூதரைப்பற்றியும் வாதம், விவாதம் மற்றும் விளக்கங்கள் என நீண்டநேர சம்பாஷனை இரவின் இறுதிப்பகுதி வரை நீண்டது. அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நண்பரின் தூக்கத்தை மெல்ல கலைத்தது பாடலின் சப்தம்.

"ஆங்... பாருங்க, உங்ககிட்ட கேட்கணும்ன்னு நினைச்ச விஷயங்களில் இதும் ஒன்று.... ஏன் உங்கள் இறைத்தூதருக்கு புகழ் பாடுகிறீர்கள்?, அவரின் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே எல்லா முஸ்லீமும் உருதில் புகழ் பாட்டு பாடுகிறீர்களே?, ஏதோ மந்திரம் சொல்கிறீர்களே?? இந்தப் பாடலின் வரிகள் கூட அவற்றை உறுதிப்படுத்துகிறதே?? தனிமனித புகழ்ச்சி இல்லை என்று சொல்லும் நீங்கள், எப்படி உங்கள் இறைத்தூதருக்கு மட்டும் புகழ்ச்சி கூடும்? அவரும் ஓர் மனிதர்தானே?" என்று கேள்விக் கணைகள் பாயத்தொடங்கின.

புன்னகையுடன் அவரின் கேள்விக்கு பதில் தந்தேன். 

"நிச்சயமாக புகழ் அனைத்தும் நம்மையெல்லாம் படைத்துப் பாதுகாக்கின்ற இறைவன் ஒருவனுக்கே என்பதில் இம்மியளவும் சந்தேகமில்லை. இதில் இருவேறு கருத்துக்கும் இடமில்லை, ஆனால், நீங்கள் எண்ணியவாறு, நபியவர்கள் பெயரைக் கேட்டவுடன் நாங்கள் (முஸ்லீம்கள்) சொல்வது எந்த ஒரு மந்திரமுமில்லை, புகழவுமில்லை. இது ஒரு நன்றிக்கடன் அவ்வளவுதான்" 

'................' அவருடைய மௌனம் எனக்கு சம்மதமாய் தெரியவில்லை.

மௌனத்தைக் கலைத்து பேச ஆரம்பித்தேன். 

'நண்பரே!, நான் சொன்ன பதிலில் நீங்கள் திருப்தியானதாக நான் உணரவில்லை. நீங்கள் விரும்பினால், நீங்கள் பகிர்ந்துகொண்ட உங்கள் வாழ்க்கைச் சம்பவங்களிலிருந்தே விளங்க வைக்கிறேன்." என்றவுடன்..

சிறிது தயக்கத்துடன் தனது கைக்கடிகாரத்தினைப் பார்த்துவிட்டு, "...........ம், சொல்லுங்க..." என்றார்.

"இரவு பேசும்போது,நீங்கள் இளம்வயதில் வறுமை காரணமாக மும்பையிலிருந்து குடும்பத்தோடு தென்இந்தியா வந்ததாக சொன்னீர்கள். அப்படி இங்கு வந்தவுடன் யாரும் முன்வந்து பழகவில்லை, பேசவில்லை ஏன் குறைந்தபட்சம் ஒரு புன்னகை கூட இல்லை என்று வருத்தப்பட்டீர்கள்.

நண்பர்களில்லை, உறவினர்களில்லை. அண்டைவீட்டார்கள் கூட ஆறுவாரம்  கழித்துத்தான் நாங்கள் வந்திருப்பதையே அறிந்து கொண்டார்கள் என்று ஆதங்கப்பட்டீர்கள்."

"ஆம் அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?"  இலேசான கோபம் தெரிந்தது.

"நீங்கள்பட்ட துயரம், வேதனை, வலி ஆகியவற்றை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. 

பாருங்கள், எங்கள் இறைத்தூதர் போதித்திருப்பதை.." என்று பட்டியலிட ஆரம்பித்தேன் 

• முன் பின் தெரிந்திராத அறிந்திராத நபருக்கும் முன்வந்து சலாம் (முகமன்) கூறுங்கள்.
• உன் சகோதரனுக்காக புன்முறுவல் செய்தும் தர்மமே.
• உனக்கு சமைக்கும் போது உன் அண்டை வீட்டாருக்கும் சிறிது சேர்த்துக்கொள்.
• அண்டைவீட்டார் பசியோடிருக்கும் போது தான் மட்டும் புசிப்பவன் நம்மைச்சார்ந்தவனல்லன்.

என்று அவர் போதித்த மனிதநேயப் பண்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஒருவேளை இந்த போதனைகளை ஏற்றுக்கொண்ட ஒருநபர் உங்கள் அண்டைவீட்டுக்காரராய் இருந்திருந்தால், நீங்கள் சென்ற விரக்தியின் எல்லை என்னவென்றே அறியாதிருந்திருப்பீர்கள்.

பாசமிகு சகோதரத்துவம் உங்களுக்கு உத்வேகம் கொடுத்திருக்கும். புதியதோர் உறவு உங்களை சொந்தம் கொண்டாடியிருக்கும்.

'எப்படி சார் இப்படி சகமனிதர்களோடு பழகுவதைக்கூட தவிர்ப்பவர்களை மனிதர்களாக ஏற்றுக்கொள்ளமுடியும்?' என்று உங்களைப் போன்றோர்களின் ஆதங்கத்தினை உடைத்தெறியும் நற்பண்புகளை கற்றுக் கொடுத்தவர்தான் எங்கள் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள். உங்கள் பாஷையில் சொல்லப்போனால் எங்களை மனிதர்களாக மாற்றியவர்.

ஈருலக நாயகர் பெருமானார் (ஸல்) அவர்களின் மீது நன்றியின் பெருக்கால் இதயத்தின் ஆழத்திலிருந்து (எங்களை முழுமனிதானக்கிய) நபி (ஸல்) மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டும்" என்று அவருக்காக இறைவனிடத்தில் இறைஞ்சும் பிரார்த்தனைதான் இது.

சொல்லுங்கள், இது தனிமனித புகழ்ச்சியா? மந்திரமா?.......

அசைவற்று கேட்டுக்கொண்டிருந்த அந்த நண்பரின் உதடுகளை அசைத்த வார்த்தை என்ன தெரியுமா??

"ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்"....!!!!

அல்ஹம்துலில்லாஹ்..

-புதுசுரபி

அதிரைநிருபர் எவ்வகையிலும் இசை மற்றும் அதன் சாயல் தொடும் எதனையும் ஆதரிப்பதில்லை, மாற்றுமதச் சகோதரர்களிடம் இசை வடிவிலும் அறிமுகமான இஸ்லாம் பற்றிய தவறான புரிந்துணர்வை தடம் புரளாமல் கட்டுரையாளர் கையாண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சிறப்பையும் அவர்களுக்கு முஸ்லீம்கள் மத்தியில் இருக்கும் அளவிடமுடியாத நன்மதிப்பையும் எடுத்துரைத்து தெளிவுற வைத்த விதம் அற்புதம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நாடினால் இதனை செவியுற்ற மாற்றுமத சகோதரர் கலிமாவை முன்மொழியும் நாட்களும் வெகு தொலைவில் இல்லை இன்ஷா அல்லாஹ் !

-அதிரைநிருபர்-குழு

பனிப் பொழிவில் என் மொழி.. ! 20

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, பிப்ரவரி 24, 2012 | , , , , ,


மினியருவிக் கிணற்றில்
பனிக் கட்டியாகிய நீரை
பல துண்டாக்கி நிற்க வைத்த
பாங்கு அருவிக்கு அழகு


பனித்துண்டின் மேல்
கொட்டிப்பார்த்த பனித்துகள்கள்
கம்பளியாடு போர்த்திய தோல் போல்
கரையாக் கட்டியும் காட்சி தருகிறது


இலையுதிர்த்த
என் மேல் விழுந்த
பனிப்பொடி
இருளுக்கெதிரான வெண் மென் பொடி
இஞ்ச் அளவில் படிந்திட்டால்
என்
சூரிய சுவாசம் எப்படி?


நட்டுவைத்த பனித்துண்டின் மேல்
கொட்டிப்பர்ர்த்த பனித்துளிகள்
கம்பளியாடு போர்த்திய தோல் போல
கரையாக் கட்டியாய்
காட்சி தருகிறது


வாகனம் நாங்கள்
வழுக்கி ஓடாதிருக்க
வழியெங்கும் உப்பிட்டு
வழக்கமாய் ஓட்ட வைத்த நிர்வாகம்


பாதுகாப்பாய் உள்நிறுத்திய
பயண வாகனத்தை
பல அடுக்கு பாதுகாப்பு அரண் போல்
அழகாய்
வெண் பனிப்பொடி போர்த்தும்
இயற்கைப் பொழிவே!

மரம் மேல் பூத்திட்ட
மல்லிகை போல்
வெண்மையாய்
மனதுக்கு இதம் தரும்
மணக்கா
பஞ்சுப்பனித்தொகுப்பே நான்!


இயற்கை தந்த அழகு காட்சி
இதிலும் அழகிய தமிழ் பெயர்
இத்தைகைய இனிய வெள்ளோட்டத்தில்
இன்னும் எல்லாம் வடிக்கலாம்


கொட்டித்தீர்த்த இப்பனித்துகள்
குடியிருப்போர் வெண்சிறையினுள்
கொஞ்சும் குழந்தைகள் விளையாடிட
பஞ்சு போன்ற பாலைவனம்


-அபுருமானா
படங்கள் : MHJ

அந்நிய முதலீடும் அந்நியர் முதலீடும் 14

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, பிப்ரவரி 24, 2012 | , , , ,


தலைப்பைப் பார்த்ததும் ஒரு தடுமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தலைப்பின் இரண்டு பகுதிகளுக்கும் ஒன்றுக்கு ஒன்று பெரிய முரண்பாடு இல்லாதது போல் தோன்றும் ஆனால் பெரும் முரண்பாடு மட்டுமல்ல இந்தியப் பெருனாட்டின் பொருளாதார சுரண்டலும் அவற்றுள் தொக்கி, மறைந்து நிற்கிறது. 

வெளிப்படையாகப் பார்த்தால் அந்நிய முதலீடு என்பது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை பார்த்து- அரசுகள் அறிவிக்கும் புதுப்புது முதலீட்டு கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு – வளர்ந்து வரும் உள்கட்டமைப்புகளில் மயங்கி- உலகின் பெரும் பணம் படைத்த நாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள் தங்களிடம் தூங்கிக்கொண்டிருக்கும் பணத்தை இந்தியாவில் தொழில்களில் முதலீடு செய்ய மூட்டை கட்டி எடுத்து வருவது போல் தோன்றும்.

ஆனால் உண்மை அதுவல்ல. 

வருவது அன்னியநாட்டின் செலாவணி பணம்தான். உலகின் முக்கிய செலாவணியாக இருக்கக்கூடிய அமெரிக்க டாலரிலோ, யுரோவிலோ, ஸ்டெர்லிங் பவுன்ஸ்களிலோ, சிங்கப்பூர் டாலரிலோதான் நமது நாட்டுக்குள் வந்து பங்கு வர்த்தகம் மூலம் முதலீடு செய்யப்படுகிறது. அந்த வகையில் இது அன்னியப்பணம்தான். 

ஆனால் அது அன்னியர் உடைய அவர்களுக்கு சொந்தமான பணம் அல்ல.  நமது பணமே. இந்தக் கதகளியின் கதை இப்படிப்போகிறது. 

அமெரிக்க, ஐரோப்பிய, சிங்கப்பூர் இன்னும் பிற நாட்டைச்சேர்ந்த முதலாளிகள் அவர்களுடைய பணத்தை நம்நாட்டில் முதலீடு செய்தால் அது அன்னியப்பணமாகவும் இருக்கும் அன்னியர் பணமாகவும் இருக்கும். ஆனால் இந்த நாட்டு ஏழைகளைச் சுரண்டி, ஏமாற்றி, ஊழல் செய்து கோடி கோடியாய் கொள்ளை அடிக்கப்பட்ட பணம் ஹவாலா முறையில் நாட்டை விட்டு வெளியேறி அந்நிய முதலீடு என்ற பெயரில் அரிதாரம் பூசி, முகமூடி போட்டு நமது நாட்டுக்குள்ளே மீண்டும் வருகிறது. புரியும்படி அதிரையின் மொழியில்  சொன்னால் நம் வீட்டில் கிண்டப்பட்ட பணியான் மாவு – திருடப்பட்டு  வெளியே போய் – வேறு இடத்தில் அதியதரமாக சுடப்பட்டு - மறவையில் அடுக்கப்பட்டு ஜெகதாம்பாள் தலையில் தூக்கிவைக்கப்பட்டு  - சீராக சம்பந்தி வீட்டுக்கு வருகிறது. 

நம்மை ஆளும் அதிகாரவர்க்கத்தினர்,அவர்கள் அரசியல்வாதிகளாக இருக்கலாம்- , உயர் அரசுப்பதவி வகிப்பவர்களாக இருக்கலாம் -, முதல்வர்களாகவும் அவர்களின் புதல்வர்களாகவும் இருக்கலாம், மனைவிகளாகவும், துணைவிகளாகவும்,தோழிகளாகவும், தோட்டக்காரர்களாகவும், செயலார்களாகவும், அல்லக்கைகளாகவும், அமைச்சர்களின் ஆசைக்குகந்தவர்களாகவும் இருக்கலாம். அரசுக்கு சேரவேண்டிய பணத்தை அல்லது அரசு திட்டங்களுக்காக ஒதுக்கிய பணத்தில் இருந்து இவர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஒதுக்கிய பணத்தை- கட்டைப்பஞ்சாயத்து செய்து வாங்கிய பங்கை- நிலபேரம் செய்து வாங்கிய கமிஷனை- அரசு ஒப்பந்தங்கள் பெற்றுக்கொடுத்து வாங்கிய கையூட்டுகளை- பணி இடமாற்றம் செய்து கொடுத்து கிடைக்கும் இலஞ்சப்பணத்தை- கல்லூரிகளில் இடம் வாங்கித்தருவதாக பெற்றுக்கொள்ளும் அன்பளிப்புகளை- ஒப்பந்தக்காரர்களிடமிருந்து பெரும் பர்செண்டேஜ்களை- இப்படி கணக்கில் காட்டமுடியாத கறுப்புப்பணத்தை – கணக்கிலே கொண்டு வருவதற்காக கையாளும் சூழ்ச்சிதான் இந்த அந்நிய முதலீடு என்ற ஆளை மறைக்கும் தலைக்கவசம். ஆந்தை விழியனுக்கு அழகு சுந்தரம் என்று பெயர்- மாங்காய் மடையனுக்கு மதியழகன் என்று பெயர். 

திருமறையின்... ஒருவர் மற்றவர் பொருளை தவறான முறையில் உண்ணாதீர்கள்; இலஞ்சம் வாங்காதீர்கள்”  (2:188)  என்ற எச்சரிக்கையை உணராத- அறியாத காரணத்தால் அல்லவா இந்த அவலம்?

லஞ்சப்பணம் மட்டுமல்ல. அதற்கு ஒரு சகோதரியும் உண்டு அவள் பெயர் வரி ஏய்ப்பு. 

2009- 2010  மற்றும் 2010-2011 ஆகிய நிதியாண்டுகளில் வரி ஏய்ப்பு செய்தவர்கள்     22.5 கோடிப்பேர். அவர்கள் ஏய்ப்பு செய்த தொகை இரண்டாயிரம் கோடி. வருமானவரித்துறை இந்த புள்ளிகளை எப்படி கணக்கிடுகின்றன என்றால் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் நடைபெற்ற வர்த்தக பரிமாற்றங்களை கணக்கிட்டு இவ்வளவு வரி வசூலாகி இருக்கவேண்டும் ஆனால் இவ்வளவுதான் வசூல் ஆகி இருக்கிறது என்று பாக்கியை கணக்கிட்டுவிடுகின்றன. வந்திருக்கவேண்டியதில் குறைவுதான் இரண்டாயிரம் கோடி.  இது தவிரவும்  பத்திரப்பதிவு முறைகேடுகள், சுங்கவரி தில்லுமுல்லுகள், உற்பத்திவரி கள்ளக்கணக்குகள் இவைகள் மூலம் பெரும் நிறுவனங்கள் மறைக்கும் ஏய்க்கும் வரிகளின் அளவுகள் கணக்கில் அடங்காதவை ; காட்சிக்கு தெரியாதவை. இப்படி மறைக்கும் உக்திகளையும், ஏய்க்கும் வழிமுறைகளையும் சொல்லித்தருபவர்களுக்கு சிறந்த ஆடிட்டர் என்று பெயர்.  

இப்படி அதிகார துஷ்பிரயோகத்தில் திரட்டப்படும், லஞ்சப்பணமும்,  வரி ஏய்ப்பின் மூலம் உருவாகும் பணமும் சேர்த்து இந்த நாட்டில் உருவாக்கப்பட்டு வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கருப்புப்பணத்தின் அளவு ரூபாய் 25 லட்சம் கோடி. 

இன்னொரு பக்கம் நாம் பார்ப்போமானால் போபர்ஸ் வெளியிடும் உலக நாடுகளின் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த இந்தியர்கள் ஐம்பது பேர். முன்னர் நாற்பதாக இருந்தவர்கள் இப்போது ஐம்பதாகி விட்டார்கள். (சுல்தான் காக்கா காதைக்கடிக்கிறார் இந்த பட்டியலில் சுட்டெரிக்கும் டிவி அதிபர் 136 –  வது இடமாமே என்று. ஆமாம் காக்கா! உலகபட்டியலில் 136- வது இடம்- இந்தியபட்டியலில் 16 வது இடம். அந்த விபரம் இன்னொரு ஆக்கத்தில். பின்னால் வரலாம்.) ஆனால் ஐம்பதுபேர் உலகப்பணக்காரர்களாக இருக்கும் நாட்டின் சொத்துவரி வசூல் எவ்வளவு தெரியுமா வெறும் 500 கோடிதான். 

இப்படி இந்த நாட்டின் செல்வங்கள் சூறையாடப்பட்டு வெளிநாடுகளில் பதுக்கப்படும் கருப்புப்பணம்,  பங்கு வர்த்தக பரிமாற்றம் மூலம் இந்நாட்டினுள் அந்நிய முதலீடாக் நுழைகிறது.  இப்படி பங்கு வர்த்தக பரிமாற்றம் மூலம் வரும் பணத்துக்கு ஒரு வரி விதிக்கலாமே அதன்மூலம் நாட்டுக்கு ஒரு வருமானமாக வருமே என்று நீங்கள் கேட்பது சரிதான். அதுவும் கிடைக்காது என்பதே சட்டரீதியான உண்மை. அதாவது கொப்பரை போட தேங்காய் வாங்கி உடைக்கும்போது அந்த தேங்காயும் அழுகல் தேங்காய் அதன் சிரட்டைகூட அடுப்பெரிக்க கிடைக்காது என்ற நிலை. 

வெளிநாட்டில் நடக்கும் பங்கு வர்த்தக பரிமாற்றத்துக்கு இந்தியாவில் வரி செலுத்த தேவை இல்லை என்று சமீபத்தில் ஓடோபோன் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்லி இருக்கிறது. இந்திய வருமானவரி சட்டத்தின் 163 (1-C)  பிரிவு இத்தகைய பரிமாற்றங்களுக்கு செல்லாது என்பது உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு. அதாவது பணமும் நமது பணம் – அது வரும் வழிக்கு வரியும் விதிக்க முடியாது என்பது ‘ உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா” கதைதான். கருப்பும் வெள்ளையாகும் அதற்கு வரியும் கிடைக்காது. 

மேலும் இந்தியா சில நாடுகளுடன் இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது. சிங்கப்பூர், மொரிசியஸ், மாலத்தீவு, முதலிய நாடுகள் இதில் அடக்கம். நாட்டைவிட்டு ஹவாலா மூலமாக வெளியேறும் பணம் இத்தகைய நாடுகளில் போலி கம்பெனிகள்   தொடங்க பயன்பட்டு, அந்த கம்பெனிகளின் பெயரால் முதலீடும் செய்யப்பட்டு , அந்த முதலீடுகளுக்கான இலாபங்களும் வரிவிதிப்பின்றி வெளியேறுகின்றன. இப்படி நிறுவனங்களை போலியாக தொடங்கி பதிவு செய்து கொடுக்கும் முகவர்கள் அந்நாடுகளில் இருக்கிறார்கள். அவர்களின் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது. இத்தகைய போலி கம்பெனிகளின் சில பெயர்கள்தான் 2- ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் வெளிவந்தன. 

என்றைக்கு உண்மையிலேயே அந்நிய நாட்டவர்கள் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பால் ஈர்க்கப்பட்டு அவர்கள் பணத்தை நம் நாட்டு தொழில்களில் முதலீடு செய்கிறார்களோ அன்றுதான் நாம் அந்நியர் முதலீடுகளை அந்நிய முதலீடுகளாக பெற்றுள்ளோம் என்று மார்தட்ட முடியும். அதுவரை காகிதப்பூவை முகர்ந்து பார்த்துக் கொண்டும் சைத்தானுக்கு தேவதை பட்டம் சூட்டிக் கொண்டும் இருக்க வேண்டியதுதான். 

இந்த முறைகேடுகள் உளவுத்துறையை ஊட்டி வளர்க்கும் அரசுக்கு தெரியாதா? நிதி அமைச்சருக்கு தெரியாதா? நாட்டின் எங்கோ ஒரு மூலையில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து அரைகுறையாக படித்துவிட்டு இப்படி எல்லாம் சிந்திக்கும் நமக்கு தெரிந்தது ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்கும்- முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னருக்கும்- பரம்பரையாக செல்வத்தில் புரண்டு வரும் செட்டிநாட்டு சீமான்களுக்கும் தெரியாதா? நிச்சயம் தெரியும். 

ஆனால் அதைவிட ஒரு கசப்பான உண்மை என்னவெனில் அரசியல் பதவி சுகங்களுக்காக அவர்கள் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன – சிந்திக்கும் சக்தி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய முறைகேடுகளுக்கு அவர்கள் சாட்சியாக மட்டுமல்ல சம்பந்தப்பட்டவர்களாகவும் இருப்பார்களோ என்பது நீதிமன்றத்தில் கேள்விக்குறியாக இருக்கிறது. 

அத்துடன் இந்திய பொருளாதார கொள்கைகளை வகுப்பவர்கள் யார் ? நாம்  நம்பிக்கொண்டிருப்பதுபோல் நமது நிதி அமைச்சகம் அல்ல. அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஜி-8 அமைப்பில் உள்ள நாடுகளும், அந்த நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களின் நிர்வாகிகளுமே.  உலகவங்கியில் என்றைக்கு கடன்வாங்க நாடு கை நீட்டியதோ அன்றே அவர்கள் சொல்லும் இடத்தில் கை எழுத்துப்போடவும், கூறும் கொள்கைகளை அமுல்படுத்தவும் நாம் தயாராகிவிட்டோம். உதாரணத்துக்கு உலகவங்கியின் வற்புறுத்தலால் மின்சாரக் கட்டணம், பேருந்து கட்டணம் ஆகியவை உயர்த்தபட்டதாக வெட்கமில்லாமல் சட்ட மன்றத்தில் அறிவிக்கின்றனர் அனைத்து மாநில ஆட்சியாளர்கள்.  இதனால் நமது நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், மண்ணின் மாண்பு , மக்களின் இயல்பு – பொருளாதார வழக்கில் கூறப்போனால் நுகர்வோர் கலாச்சாரம் (CONSUMER CULTURE)  ஆகியவற்றின்மேல் தாக்குதல் தொடுக்கும் தாக்கங்கள் அதிகரித்துவிட்டன. 

செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள், அவர்களின் குடும்பத்தினர், வேண்டியவர்கள்,  மற்றும் கார்பரேட் நிறுவனங்களின் சுயநல சுரண்டல் போக்குக்கு நாட்டின் பொருளாதாரம், ஏழை, நடுத்தர வர்க்கத்தின் நலன் அடகுவைக்கப்படுகிறது.  ஒருபக்கம் மிகச்சிலர் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றனர். மறுபக்கம் ஏழ்மை வளர்ந்து கொண்டே போகிறது.   இந்த இரு வர்க்கத்தின் எண்ணிக்கையும் வருடா வருடம் கூடிக் கொண்டே போகிறது. இதை தட்டி கேட்கும் நிலையில் இருப்பவர்கள் என்று நாம் நம்பிக்கொண்டு இருப்பவர்களுடைய சுவிஸ் வங்கி கணக்கில் இருப்பு ஏறிக்கொண்டே போகிறது. நாமோ அவர்களுக்கு வாழ்க கோஷம் போட்டு வாழத்துப்பாவும் பாடிக் கொண்டிருக்கிறோம்.   

-இபுராஹீம் அன்சாரி

படிக்கட்டுகள்... ஏற்றம் - 7 20

ZAKIR HUSSAIN | வியாழன், பிப்ரவரி 23, 2012 | , , ,

Image Maker-ஐ பார்ப்பதற்கு முன் சில விசயங்கள்:

வெற்றியடைய நினைக்கும் பலபேர் வெற்றியடைய சிரமப்படுவதின் காரணங்கள் என்ன தெரியுமா?... வெற்றியடைந்தவர்கள் பெற்ற வலியை, அவமானத்தை கடக்க இவர்கள் தயாராக இல்லை. சமயங்களில் சில செமினார்களில் வெற்றியடைந்தவர்கள் தமது அனுபவத்தைப் பேசும்போது கேள்வி நேரத்தில் கேட்கப்படும் கேள்வி.
  • உங்கள் வெற்றியை உங்களால் சிம்பிளாக சொல்ல முடியுமா?
  • எப்படிப்பட்ட பிசினசில் உடன் முன்னேறலாம்.?
இதுபோன்ற ஆட்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றால் வெற்றியை ஒரு சின்ன கேப்ஸ்யூலில் போட்டுக்கொடு, அல்லது ஒரு தாயத்து மாதிரி சின்னதாக்கி கொடு... நீ 10 வருடம் சம்பாதித்ததை நான் சன் டி வி நியூஸ் ஆரம்பித்து முடிப்பதற்குள் சம்பாதித்து விட வேண்டும் !!!

கேட்கும் நமக்கே ஜக்கி யானால் கேள்விகளைச் சந்திப்பவர்களுக்கு எப்படி இருக்கும்.?.

இப்படிக் கேட்பதற்குக் காரணமே சில திரைப்படங்கள்தான். ஒரு பாட்டு ஆரம்பிக்கும்போது ஏழையாக இருக்கும் கதாநாயகன் பாட்டு முடியும்போது Mercedes Benz –S- Classல் வந்து இறங்குவதும். பல தொழிற்சாலைகளுக்கு முதலாளி ஆவதும். 'ஊர்க்காரைய்ங்க" அனைவரும் வேலை வெட்டியில்லாமல் இந்த பணக்காரன் வீட்டில் வந்து  தீர்ப்புக்கும், பணத்துக்கும் நிற்பதும். இதை எல்லாம் உண்மை என்று படிக்காதவனில் இருந்து Ph.D முடித்தவன் வரைக்கும் நம்பி தொலைப்பதும்தான் காரணம்.

வெற்றியடைய [அது பிசினஸ் ஆகட்டும், கல்வியாகட்டும்] சரியான கன்சல்டேசன் முக்கியம். வீட்டை விட்டு வெளியூர் போகவே யோசிக்கும் ஆட்களிடம் எல்லாம் என்ன பிசினஸ் செய்யலாம் / என்ன கோர்ஸ் படிக்கலாம் என்று  கேட்டால் என்னவிதமான பதில் வரும் என்று நான் எழுதி தெரிய வேண்டியதில்லை.

நம் ஊர் போன்ற இடங்களிலும் வெளிநாடு போய் வந்தவர்கள் தரும் தோற்றமும், உண்மையை மறைத்த பேச்சுக்களும் ஊரில் கனவுகளுடன் வாழும் இளைஞர்கள் தனது படிப்பை முழுமையாக முடிக்காமல் ஒரு டிகிரி / ஒரு டிப்ளோமாவுடன் வெளிநாட்டுக்குச் சென்று ஒரளவு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு 10 வருடமாகிறது. நான் அடிப்படை என்று சொன்னதில் சொந்த வீடெல்லாம் அடங்காது.

உதாரணமாக ஒருவர் B.Com படிப்பதாக வைத்துக் கொள்வோம்... அது academic course தான்.ஆனால் மற்றவர் பொறுமையாக இன்னும் ஒரு 5 வருடங்களில் C.A முடித்துவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்...இருவரும் வேலை பார்க்கும் சூழ்நிலையில் இந்த 5 வருடங்கள் பொறுமையாக இருந்து C.A படித்தவர்.. அந்த  B.com graduate ன் ஒரு வருட சம்பளத்தை 3 - 4  மாதத்தில் சம்பாதித்து விடுகிறார்.

வாழ்க்கையில் முக்கியமாக பொருளாதார ரீதியில் வெற்றியடைய நினைப்பவர்களுக்கு   ரொம்ப முக்கியம்THINK BIG.
  • 10 ஸ்டிக்கர் சேர்த்தால் 1 சில்வர் தட்டு இனாம் ,
  • இத்தனை பாயின்ட் கிரடிட் கார்டில் கிடைத்தால் இந்த  லெதர் பேக் இனாம்.
போன்ற மிடில்கிளாஸ் ஃபார்முலா எல்லாம் தொடர்ந்து சின்ன சின்ன விசயத்துக்கு போராடும் மனப்பக்குவத்தைத்தான்  வளர்க்கும். "இதுக்காக நாம ஒன்னும் செய்யலியே...சும்மா தர்ரதெ ஏன் வேணாங்கனும்” என உங்களுக்குள் மறைந்திருக்கும் மிருகத்தை தூங்க வைத்து விட்டால் பிரச்சினை இல்லை..இல்லாவிட்டால் அதற்காக 'பன்ச் டயலாக்" எல்லாம் பேச வேண்டிவரும். Don’t focus on petty matters [benefit] in life. இலவசங்களை எப்படி சொந்தமாக சம்பாதிக்க முடியும் என்று செயல்படுங்கள்...அதுதான் வெற்றி.

ஏன் வாழ்க்கையில் எல்லோரும் பொருளாதார ரீதியாக வெற்றியடைய வேண்டும் என்பதைச் சொல்கிறார்கள்.பொருளாதாரத்தைத் தேடும்போது வாழ்க்கையை கற்றுக்கொள்வீர்கள். ஒரு நிமிடம் வாழ்க்கையில் உங்களுக்கு எந்த விதமான நோக்கமும் இல்லை என்று வைத்துக்கொள்வோம். வாழ்க்கை சந்தோசமாக அமையுமா...வாழ்க்கையின் ப்ராசஸ் என்ன "அறியாததிலிருந்து அறிந்து கொள்வதுதான்". "தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வது” அது எப்போது ஆரம்பிக்கிறது. முதன்முதலில் நீங்கள் பிறந்த நேரத்தில் தாய்ப்பாலுக்கு அழுத அந்த நிமிடம் தான் வாழ்க்கையின் ஆரம்பம்.

எனவே  In Love with Life   வாழ்க்கையை சுமையாக நினைப்பவர்கள் முன்னேறுவதில்லை. வாழ்க்கையில் பயம் எது தெரியுமா, நீங்கள் உங்களை சந்திப்பதுதான். நாம் இதுவரை வாழ்க்கையை திருப்தியாக வாழ்ந்திருந்தால் நன்று.

ஒலப்பிட்டியடா என மனசாட்சி சொன்னால்??? இனிமேல் உள்ள காலங்களை ரிப்பேர் செய்ய திட்டமிட வேண்டும்.  கவனிக்க வளர்ச்சி எளிதாக நடக்கும் நடப்பு அல்ல. வளர்ச்சியில் சவால்கள் இருக்கத்தான் செய்யும். நீங்கள் விரும்பி செயல்பட எதுவும் இல்லை என்ற "மொட்டைத்தனமான வாழ்க்கை" நீங்கள் உலகத்தில் தோன்றவில்லை என்ற உண்மையைத்தரும்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதை கவர்ந்து கொள்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்வதுடன் எதை விரட்ட வேண்டும் என்பதை தெரிந்தும் இருக்க வேண்டும். நான் சொல்லும் விசயம் எல்லாம் உங்கள் மெக்கானிசத்தில் இருக்கும் விசயம் தான் எதையும் நான் புதிதாக சொல்லவில்லை.  நீங்கள் அடையாளம் காணாத எத்தனையோ திறமைகள் உங்களுக்குள் வெளிச்சமில்லாமல் கிடக்கிறது. அதை அடையாளம் காண சொல்வதுதான் என் நோக்கம்.
 
வாழ்க்கையில் உங்கள் பொறுப்பு என்ன என்பதை உணர்வது உங்களின் மிகப்பெரிய கடமைகளில் ஒன்று. அது ஏனோ தெரியவில்லை கல்யாணம் முடித்து பிள்ளைகள் என்று ஆனபின்பும் பொறுப்பு இல்லாமல் காரணங்கள் சொல்லிக்கொண்டு மற்றவர்களிடம் கேட்டுப்பெறுவதைத் தவறு என்று பல வருடங்கள் உணராத ஆட்கள் தமிழ்நாட்டிலேயே நம் ஊரில்தான் அதிகம் இருப்பதாக தெரிகிறது. குழந்தையாய் இருந்த காலங்களில் நமக்கு பொறுப்பு இல்லை..அதை தொடர நினைத்து அதில் ஒரு 'டேஸ்ட்" கண்டுவிட்டால் அதை  விட்டு மீள்வது கொஞ்சம் கஸ்டம். ஆனால் வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்று தீர்க்கம் அடைந்து விட்டால் அது மிக எளிது. உங்களின்  சொந்த வெற்றியை விட எதுவும் பெரிய motivation கிடையாது.

பரீட்சை நேரமாக இருப்பதால் மாணவர்கள் சிலபேர் மின்சாரம் சரியாக இருந்தால் நான் நன்றாக படிக்க முடியும் என்று காரணங்களைக் கண்டுபிடித்து சொல்லிக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். மின்சாரப் பிரச்சினை உங்களுக்கு மட்டும் அல்ல. மொத்த தமிழ்நாட்டுக்கும்தான். உங்களுக்கு ரிசல்ட் வரும்போது  மற்ற மாணவர்களும் நல்ல மார்க் எடுத்து பாஸ் செய்து இருப்பார்கள், அந்த சூழ்நிலையில் "கூடங்குளத்திலிருந்து தனியாக 3 ஃபேசில் அவன் வீட்டுக்கு மட்டும் கரண்ட் வந்தது என சொல்லபோகிறீர்களா?'. முன்பு எழுதியதுதான் உங்கள் மார்க் சீட்டில் இப்போது உள்ள கூடங்குளம் அணு மின்நிலையப் பிரச்சினை”, “தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின் வெட்டு”, “முல்லைப்பெரியாறு அணை விவகாரம் எது பற்றியும்  பிரிண்ட் ஆகி இருக்காது, உங்கள் மார்க்கை தவிர... நீங்கள் வேலை / படிப்பு தேடி போகும் எந்த இடத்திலும் 'இந்த பிரச்சினைகளை" சொன்னால் பாட்டி வடை சுட்டு வித்த கதைக்கு கிடைக்கும் முக்கியத்துவம் கூட கிடைக்காது.

Concentrate on your studies… focus on your development not on finding ‘reasons'.

Tough time won’t last…tough people will…

We will meet in next episode…
ஏற்றம் தொடரும்...
-ZAKIR HUSSAIN
புள்ளையலுவோ பரீட்சைக்கு படிக்குதுவோமா ! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | புதன், பிப்ரவரி 22, 2012 | , , , , ,


ஊட்டு பிள்ளைகளை நன்கு படிக்க விடுங்கள் / தூண்டுங்கள்....

மாணவ, மாணவியர்களுக்குத்தான் எல்லாரும் தன்னால் இயன்ற அறிவுரைகளையும் கடந்த கால நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு வழங்கி வருகிறோம். ஆனால் அதற்கு முன் அவர்கள் எவ்வித தொந்தரவும், தொல்லைகளும், தடைகளுமின்றி தன் தேர்வை நல்லபடி எழுதி முடிக்க வீட்டில் உள்ள அப்பா, பெரியம்மா, வாப்பா, உம்மா, ராத்தா, தங்கை, தம்பி, தங்கிச்சிமார்கள் அவர்களுக்கு உறுதுணையாகவும், உதவியாகவும் தேர்வுகள் முடியும் வரை எவ்வித தொந்தரவும் செய்யாதவர்களாகவும் இருத்தல் மிக,மிக அவசியமான ஒன்று. 

கீழே குறிப்பிட்ட படி தொந்தரவுகள் செய்யக்கூடாது.

* தம்பி செத்த கடெக்கி போயி சாமானுவொ கொஞ்சம் வாங்கிட்டு வர்ரியா?

* போனு பண்ணியும் வரலெ செக்கடிமோட்லெ போயி ஆட்டோ புடிச்சிட்டு வர்ரியா புள்ளெ பெத்த ஊட்டுக்கு சீனி வாங்கிட்டு போகனும்?

* வாப்பா வெளியெ போயிட்டாஹ, கொஞ்சம் கூப்பன் கடையிலெ சாமான் வாங்கி தர்றியா?

* ராத்தாக்கு ஒடம்பு சரியில்லெ ஆஸ்பத்திரி வரைக்கும் தொணைக்கி வர்றியா? (அமெரிக்காவரைக்கும் தனியா போயிட்டு வரத்தெரியுது?)

* வண்ணான்ட்டெ துணி போட்டிக்கிறேன் கொஞ்சம் வாங்கித்தந்துர்ம்மா வாப்பா?

* ஊட்லெ வேலெ செய்றவ இன்னிக்கி பாத்து லீவு போட்டுட்டா கொஞ்சம் கடெத்தெருவுக்கு போயி மீனு வாங்கி தர்றியா?

* மாமா ஊடு குடி போறாஹ, காலைப்பசியாற போயிட்டு வந்துரு போவாட்டி கோவிச்சிக்கிடுவாஹ. (பரிச்சையிலெ ஃபெயிலாப்போனா கோவிச்சிக்கிட மாட்டாஹளா?)

* ராத்தாடெ புள்ளெயெ தூக்கிட்டு போயி சங்கத்துலெ போலியோ சொட்டு மருந்து கொடுக்குறாஹெ போயி போட்டுட்டு வந்துர்மா வாப்பா?

* வர்ர வழியிலெ தங்கச்சி பென்சிலும், அலி லப்பரும் வாங்கி கேட்டா வாங்கிட்டு வந்துர்ம்மா மறந்துராமெ?

* தஞ்சாவூர்லெ எக்ஸ்பிசன் போட்டிக்கிறானுவொ ராத்தம்மாவூட்லெ எல்லாரும் காரு புடிச்சி போறாஹ நாமலும் போயிட்டு வருவோம் அங்கெ சாமானுவொ வெலெ கொறஞ்சி விக்கிம் வாடா போயிட்டு வந்துர்லாம்?

* பைப்பு ஒடஞ்சி போச்சி போயி கபீராக்கா மொவனெ கூட்டிக்கிட்டு வர்றியா?

* தையல்காரன்ட்டெ துணி தக்கெ கொடுத்து பத்து நாளாச்சி. போயி வாங்கிட்டு வந்துர்றியா?

* பஞ்சாயத்து போர்ட்லேர்ந்து வந்து மைக்குலெ சொல்லிட்டு போயிட்டாங்க, செத்த அங்கெ போயி தண்ணி பில்லும், ஊட்டு வரியும் கட்டிட்டு வந்துர்ம்மா வாப்பா? (பரிச்சையிலெ ஃபெயிலா போயிட்டா ஹாஜி முஹம்மது சாரு அடிப்பாருண்டு யான் அவ்வொளுக்கு தெரியமாட்டிக்கிது?)

* நாளையோட கெரண்டு பில்லு கட்ட கடைசி நாளு, இன்னெக்கி எப்புடியாவது கட்டிட்டு வந்துரும்மா? இல்லாட்டி அபராதம் போடுவாஹ. (பரிச்சையிலெ ஃபையிலா போயிட்டா வாழ்க்கையே அபராதமா போயிடும்ண்டு அவ்வொளுக்கு தெரியாதா?) கெரண்ட்டே இருக்கிறது இல்லெ...இதுலெ பில்லு வெற கட்டணுமாக்கும்? என்று அவன் முணங்குவது எல்லோர் காதுகளுக்கும் நிச்சயம் கேட்கும் என்று நெனெக்கிறேன்.

* கெரண்டு அடிக்கடி போறதுனாலெ தண்ணி மோட்டாரும் காயிலு அடிவாங்கி வீணாப்போச்சி, செத்த மோட்ரு எசவு பண்ரவனெ கூட்டிக்கிட்டு வர்றியா?

* ஊட்லெ நெத்தா உழுந்துக்கிட்டு ஈக்கிது, தேங்காய்ப்பறிக்கிறதுக்கு ஊடு, ஊடா வந்துக்கிட்டு ஈந்த அந்த ஆளும் செத்துப்போயிட்டானாம். கொஞ்சம் சேர்மாவாடியிலெ காலையிலெ சுபோடெ போயி ஆளு நிக்கிம் கூட்டிக்கிட்டு வந்துர்றியா? தேங்காய் இல்லாததுனாலெ அடுத்த ஊட்லெ கடன் வங்கனுமா ஈக்கிது? (சுபோடெ படிக்கனும்ண்டு நெனெக்காம தேங்காய் ஞாபகத்துலேயே புள்ளெ படுக்குறதுனாலெ ராத்திரி கனவுல கூட தேங்காய் கொலையா வந்துட்டு போவும்)

* வர்ர வழியிலெ மீரா மெடிக்கல்லெ கொஞ்சம் மாத்திரெ வாங்கிட்டு வந்துரு? பட்டுக்கோட்டையிலெயே நேத்து கெடக்கலெ வாப்பா சொன்னாஹெ. 

* மொபைல்லெ காசு முடிஞ்சி போச்சி (கதகதையா அளந்தா வேற என்னா செய்யிம்?) கடெத்தெருவுலெ மீனு வாங்கிட்டு வரும் போது நூறு ரூபாக்கி ஈ.ஸி. போட்டுட்டு வந்துரு மறந்துராமெ?

* சத்துக்கொறவா ஈக்கிது ஆட்டுக்காலு சூப்பு வச்சி தர்ரேன். கறிக்கடையிலெ கொஞ்சம் நெஞ்செலும்பும், காலும் வாங்கிட்டு வந்துரு.

* இன்வன்டரு பேட்டரி சர்வீஸ் பண்ண ஊட்டுக்கு ஆளு வரும் போன் பண்ணுனானுவொ வந்தா கொஞ்சம் கூட இருந்து பாத்துக்கோ.

* பேரனுக்கு (ராத்தா மொவன்) நாளெக்கு பள்ளிக்கொடத்துலெ ஆண்டு விழாவாம். அவனுக்கு அதுலெ கலந்துக்கிறதுக்கு கொஞ்சம் சாமானுவொ வேனும்ண்டு டீச்சர் சொல்லி அனுப்பி ஈக்கிறாஹெ. அந்த சாமான்வொலெ கொஞ்சம் மெயின் ரோட்ல உள்ள கடையிலெ போயி வாங்கி தந்துரும்மா வாப்பா.

* பெரியம்மாவுக்கு ஒரே ஓங்காரமா ஈக்கிது கொஞ்சம் நாட்டு மருந்து கடெயிலெ போயி கொஞ்சம் சாமானுவொ வாங்கிட்டு வா. அவ்வொளுக்கு குடிநி போட்டு கொடுத்தா நல்லாப்போயிடும்.

இப்படி படிப்பைத்தவிர ஏஹப்பட்ட வேலைகளை அவர்கள் மேல் அசராமல் ஏவி விட்டு தேர்வுக்கு தயாராகும் உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கும், அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் நீங்களே எதிரியாக அவர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள்.

கடெசியிலெ, அல்லாஹ் இந்த புள்ளையலுவொலெ நல்லா படிக்க வச்சி, பாஸாக்கி, வாப்பா மாரி கஸ்டப்படாமெ, பெரிய உத்யோகத்துக்கு போயி ஊட்டு கஸ்டமெல்லாம் தீரட்டும் என்று து'ஆ மட்டும் செய்ய மறக்கிறது இல்லெ.....

பரிச்சையிலெ புள்ளையலுவொ ஃபெயிலாப்போனாலோ அல்லது மார்க்கு கொறச்சி வாங்குனாலோ அது தெரிஞ்சா மொதல்ல அப்பா உங்களத்தான் ஏசுவாஹ....புள்ளையலுவொலெ இல்லெ.....தெரிஞ்சிக்கிடுங்க....ஊட்டு புள்ளையலுவொலெ  செரமம் கொடுக்காம நல்லா படிக்க வைங்க...பிறகு அதன் பலாபலன்களை நீங்களும் அனுபவிப்பீங்க......இன்ஷா அல்லாஹ்...

பரீட்சை எழுதின மாதிரி ஒரே டயர்டா ஈக்கிது.... தேத்தண்ணி குடிக்கனும்... வரட்டா....

-மு.செ.மு. நெய்னா முஹம்மது

பரீட்சைக்கு படிக்கலாமா? - ஓர் நினைவூட்டல் ! 19

அதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், பிப்ரவரி 21, 2012 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் . . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

பரீட்சை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. பத்திரிகையிலும், தொலைக்காட்சியிலும் எப்படி படிக்க வேண்டும் என்ற அறிவுரைகளை தொடங்கி விட்டார்கள். நாமும் நமது பங்கிற்கு எப்படி படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்த இருக்கிறோம். அரசு சலுகை சரிவர கிடைக்காமல் தங்கள் பிள்ளைகளை பல சிரமங்களுக்கிடையில் படிக்க வைத்துக்கொண்டு இருக்கும் பெற்றோர்களுக்காகவும் , மாணவ, மாணவியருக்காகவும் இந்த கட்டுரையை எழுதுகிறோம். கவனமாக படியுங்கள்.

முஸ்லிம்கள் அன்றும் இன்றும்

ஒரு காலத்தில் இந்தியாவையே ஆண்ட சமுதாயம். இந்திய விடுதலைக்காக கடினமாக பாடுபட்ட இஸ்லாமிய சமுதாயம் சிந்திய இரத்தங்கள்தான் எத்தனை. மேலும் விடுதலைக்காக தங்கள் சொத்துக்களை இழந்து, உயிரையும் தியாகம் செய்ததற்கு பரிசாக இன்று தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்தியும், இந்திய நாட்டில் கொத்தடிமைகளாக வாழும் நிலைக்கும், அரபு நாடுகளிலோ இரண்டாந்தர குடிமக்களைவிட எந்த மதிப்பும் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கும் அவல நிலைக்கு நம்மை தள்ளியது ஒரு கூட்டம்.

அந்த கூட்டங்கள் இந்திய விடுதலைக்காக துரும்பளவு கூட தியாகம் செய்தவர்கள் கிடையாது. ஆனால் தியாகச் செம்மல்கள் என்று தம்மை வரலாற்றில் பதிவு செய்து கொண்ட பொய்யின் அடிப்படையில் இந்தியாவின் அனைத்து வளங்களையும் தங்களுக்கு சாதகமாக்கி, முஸ்லீம்கள் எந்த பிரதிபலனும் பார்க்காமல் செய்த தியாகத்தை கொச்சைப்படுத்தி அரசிலும், நாட்டிலும் எந்த சலுகையும் அனுபவித்து விடக்கூடாது என்பதில் மட்டும் மிக கவனமாக இன்று வரை இருந்து கொண்டு இருக்கிறார்கள். மேலும் ஆங்கிலேயன் காலத்தில் நமக்கு இருந்த இட ஒதுக்கீட்டை சுதந்திர இந்தியாவில் அகற்றியும் அன்றும் இன்றும் அரசின் அனைத்து சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு முஸ்லீம் சமுதாயத்தை மட்டும் எந்த விதத்திலும் முன்னேற விடாமல், அரசுதுறைகளில் நுழைய விடாமல் எல்லா துறைகளிலும் திறமையாக பூதக்கண்ணாடி வைத்து பார்த்துக்கொண்டு தன்னை மட்டும் மனித இனம் என்று கூறி தற்பெருமையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறது கயவர்கள் கூட்டம்.

முஸ்லிம் சமுதாயத்தில் படிப்பறிவு என்பது மிக மிக கீழ் நிலையில் படுபாதாளத்தில் இருக்கிறது. சுதந்திரத்திற்கு முன் விடுதலை பெறுவதற்காக படிப்பை நம் முன்னோர்கள் விட்ட காரணத்தால் இன்று வரை கல்வியில் வீழ்ந்தே கிடக்கிறோம். நம்முடைய தியாகத்திற்கு முதல் பரிசு நமக்கு இருந்த இட ஒதுக்கீட்டை பறி கொடுத்தது. இரண்டாம் பரிசு தீவிரவாதி என்ற பெயர் - நாம் பெற்ற இந்த இரண்டு பரிசுகளாலும் கல்வியிலும், வாழ்விலும் பின்தங்கிவிட்டோம்.

பெற்றோர்களின் கவனத்திற்கு:

தங்கள் பிள்ளைகளின் பரீட்சை நேரம் நெருங்கி விட்டது. இதுவரை எப்படி படித்தார்கள் என்பது முக்கியமல்ல வரும் இறுதித்தேர்வில் எப்படி படிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். இன்றுவரை அவர்களின் படிப்பில் தாங்கள் கவனம் செலுத்தாமல் இருந்திருக்கலாம். இந்த இறுதித் தேர்வுக்காக நீங்கள் உங்களின் நேரங்களை அவசியம் ஒதுக்கி அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

முதலில் தங்களின் வரவேற்பு அறையில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டி நிகழ்ச்சிகளை தாங்களும் பார்க்காதீர்கள். பிள்ளைகளையும் பார்க்க விடாதீர்கள். முடிந்தளவு தொலைக்காட்சியை நல்ல நிகழ்ச்சிகளுக்கும், செய்திகளை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தி, ஷைத்தானின் மொத்த உருவமான சினிமா, பாடல்கள், மெகா சீரியல்கள் இவை அனைத்திற்கும் விடை கொடுத்து விடுங்கள். இம்மையிலும் மறுமையிலும் எந்த நன்மையையும் பெற்றுத்தராதவற்றின் பக்கம் நெருங்கலாமா? உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் மேலும் வல்ல அல்லாஹ் கூறுவதைப்பாருங்கள்:

காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.(அல்குர்ஆன் : 103: 1,2,3).

பரீட்சைக்கு நாம் எப்படி தயாராவது:

திட்டமிடும் காரியத்தைத்தான் ஒழுங்காக நாம் செய்ய முடியும். வெளியூருக்கு போகுமுன் டிக்கெட் முன்பதிவு செய்கிறோம். ஊரில் செல்லும் இடங்களை முன் கூட்டியே திட்டமிட்டு விடுகிறோம். அந்த ஊரில் போய் திட்டமிடுவதில்லை. அதுபோல் ஒவ்வொரு தேர்வின் பாடத்திற்கும் குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி ஒரு அட்டவணை தயார் செய்து அதன்படி உங்கள் பாடங்களை பல பகுதிகளாக பிரித்து படித்து முடித்து விடுங்கள். மாணவ மாணவியர்களே! நீங்கள் மிக முக்கியமாக கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது. ஒரு கேள்விக்கான பதிலை படித்து முடித்தவுடன் படித்ததை உடனடியாக ஒரு நோட்டில் எழுதி பார்த்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்களுக்கு பரீட்சையில் கைகொடுத்து உங்களுக்கு வெற்றியை கிடைக்கச் செய்யும். இதை தவிர வெறும் மனப்பாடம் எந்த வகையிலும் பயன் அளிக்காது. படித்ததை இரவு நேரங்களில் எழுதிப் பாருங்கள். எழுதிப்பார்ப்பதில் கவனக்குறைவாக இருந்து விடாதீர்கள்.

நாட்கள் இருக்கிறது படித்துக் கொள்ளலாம் என்று இருந்து விடாதீர்கள். காலத்தை வீண் விரயம் செய்யாமல் படிக்க ஆரம்பித்து விடுங்கள். சென்று போன நாட்கள் திரும்பி வராது என்பதை நினைவில் கொண்டு உங்களின் ஒரு வருட படிப்பிற்காக நீங்கள் பயன்படுத்திய மணித்துளிகள் எத்தனை அந்த மணித்துளிகளில் சில மணி நேரங்கள்தான் உங்களின் தேர்வுக்கான நேரம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

படிக்கும் நேரங்கள்:

பெற்றோர்களே பிள்ளைகளை விடிய விடிய படி படி என்று தொல்லை கொடுக்காதீர்கள். கண் விழித்து படிப்பதால் உடலில் தொந்தரவுகளும், மனச்சோர்வும்தான் ஏற்படும். அப்படி படித்தாலும் மனதில் அதிக நாட்களுக்கு படித்தது ஞாபகம் இருக்காது. அதனால் இரவு 10 அல்லது 10:30க்குள் படித்து முடித்து விட்டு உறங்கச் சொல்லுங்கள். விடியற்காலை 3:30 அல்லது 4 மணிக்கு எழுந்த வெது வெதுப்பான நீரில் குளித்து விட்டு 2 ரக்காஅத் நபில் தொழுது இறைவனிடம் உதவி தேடிய பிறகு படிக்கச் சொல்லுங்கள். இந்த நேரத்தில் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். படிப்பதும் நன்றாக மனதில் பதியும். அதோடு ஃபஜ்ர் நேரம் வந்தவுடன் தொழுது விட்டு தொடர்ந்து படிக்கச் சொல்லுங்கள். காலையில் ஒரு மணி நேரம் படிப்பது மற்ற நேரத்தில் 3 மணி நேரம் படிப்பதற்கு சமம் ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எவ்வளவு நேரம் படிக்கலாம் என்பதை அவரவர் வசதிக்கு தக்கவாறு நிர்ணயம் செய்து கொள்ளலாம். பள்ளி நாட்களில் 7 முதல் 8 மணி நேரமும் விடுமுறை நாட்களில் 10 முதல் 13 மணி நேரம் என்று தனித்தனியாக நேரங்களை பிரித்து அந்த நேரங்களில் படிக்கலாம்.

உடல் ஆரோக்கியம்:

உடலுக்கு தூக்கம் அவசியமான ஒன்று. இரவில் 5 மணி நேரம் தூங்குங்கள். மதியம் அரை மணி நேரம் குட்டித்தூக்கம் போடுங்கள். இது தொடர்ந்து கவனம் செலுத்துவதற்கு உதவியாக இருக்கும்.

எண்ணெய் உணவுகளை அதிகம் சாப்பிட்டால் மந்தம் ஏற்படும். அதனால் எண்ணெய் பொருட்களை மிக குறைவாக சாப்பிடுங்கள். ஹோட்டல் உணவுகள், ஃபாஸ்ட் புட் உணவுகளை அறவே தவிர்த்து விடுங்கள். தூங்காமல் படிப்பதற்கு அடிக்கடி டீ, காபி அதிகம் குடிப்பீர்கள், இதனால் சுறுசுறுப்பு ஏற்படும். அதே நேரத்தில் உடலில் பித்தத்தை அதிகப்படுத்தி விடும். குறைவாக டீ, காபி குடிப்பது நல்லது. இதைவிட சூடான பால் குடிப்பது சிறந்தது. பகல் நேரங்களில் மோர், இளநீர், பழச்சாறுகள் அவரவர் வசதிக்கேற்றவாறு குடிக்கலாம். நொறுக்குத்தீனி எதுவும் சாப்பிடாதீர்கள். எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை மிதமான அளவில் நேரத்திற்கு சாப்பிட்டு விடுங்கள்.

நினைவாற்றல் பெருக:

மனிதர்களின் மூளை சிறியது இது முன்னூறு கோடி நரம்பு செல்களை கொண்டது. நமது மூளையில் உள்ள 'கார்டெக்ஸ்' என்ற பகுதி நாம் கேட்கும் ஒலி, பார்க்கும் ஒளி, நுகரும் மணம், நாவின் சுவை இவைகளை ஆய்வு செய்த பின் நம்மை உணரச் செய்கிறது. தேவையானால் பதிவு செய்தும் வைத்துக்கொள்கிறது. இப்படி பார்க்கும், கேட்கும், உணரும், அறியும் விஷயங்களை ஒன்று சேர்த்து மூளையில் பதிவு செய்வதுதான் 'நினைவாற்றல்' என்பது. வகுப்பில் ஆசிரியர் பாடங்கள் நடத்தும்போது அதிக கவனம் செலுத்தி நம் மனதில் தேவையற்ற கவனச்சிதறல்கள் ஏற்படுவதை தவிர்த்துக் கொண்டு உன்னிப்பாக கவனித்து மனதில் உள்வாங்கிக்கொண்டால் இன்ஷாஅல்லாஹ் பலன் அளிக்கும். இப்படி பாடங்களை மனதில் பதிய வைத்து மீண்டும், மீண்டும் பாடங்களை படிக்கும்பொழுது நம் மனதில் மறந்து போகாத அளவுக்கு பதிந்து விடும்.

நம்முடைய கவனத்தை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி கவனமாக படித்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மாணவ மாணவியர்களே! நீங்கள் படிக்கும் பாடங்களை ஆர்வத்துடன் கவனித்து நீங்கள் என்னவாக வர வேண்டும் என்பதை டாக்டர், இன்ஜீனியர், ஆசிரியர், வக்கீல் இப்படி எந்த துறையை விரும்புகிறீர்களோ அதை அடிக்கடி மனதில் நினைத்து மிக ஆர்வத்துடன் படிக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக பருக வேண்டும். நீர்தான் உலகில் உயிர் வாழ முக்கியம். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள நீர் அதிகம் தேவை. உடல் குளிர்ச்சியாய் இருக்கும்பொழுது கவனம் மிக சுலபமாகி விடும்.

நினைவாற்றலுக்கு கை கொடுக்கும் உணவு

மூளை நரம்பில் நியூரான் என்ற செல் உள்ளது. இந்த செல்தான் கேட்பது, பார்ப்பது, உணர்வது போன்றவற்றை ஒருங்கிணைக்கும். இதற்கு பி1 வைட்டமின் தேவை. இதில் உள்ள தியாமின் என்ற புரதம் நினைவாற்றல் பெருக உதவி செய்கிறது. தியாமின் குறைபாடு ஏற்பட்டால் நினைவாற்றலில் குறை ஏற்படும். அதனால் தியாமின் அதிகமுள்ள கோதுமை, கடலை, தானியங்கள், பச்சைபட்டாணி, சோயாபீன்ஸ் போன்றவைகளை அதிகம் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பழங்களையும் அதிக அளவு சாப்பிட வேண்டும்.(எங்க உம்மாவே காய்கறி சாப்பிடமாட்டார்கள் எனக்கு எப்படி இதையெல்லாம் தருவார்கள் என்று நினைக்க வேண்டாம் - உம்மாவிடம் அவசியத்தை எடுத்து கூறுங்கள்). உணவுதான் இயற்கை மருந்து முடிந்தளவு அவரவர் வசதிக்கேற்றவாறு தியாமின் உணவுகளை சாப்பிட முயற்சித்தால் மூளையின் சக்தி குறையாது. நினைவாற்றலும் பெருகும். தங்களால் முடிந்தவரை பின்பற்றுங்கள்.
(வைத்தியனிடம் கொடுக்கும் பணத்தை வாணிபனிடம் (அரிசி,மளிகைபொருட்கள், காய்கறி, பழங்கள் விற்பவர்)கொண்டு போய் கொடுத்து ஆரோக்கியமாக இருங்கள் என்பது பழமொழி).

மேலும் : ‘‘ ரப்பி ஜித்னி இல்மா ’’ ‘‘இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக! ’’ (அல்குர்ஆன் : 20:114) என்று அடிக்கடி பிரார்த்தனை செய்து வாருங்கள்.

மனதை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்:

மாணவ மாணவியரின் மனது ஷைத்தானின் ஆதிக்கமான தொலைக்காட்சியின் மீது ஒன்றி விட்டது. இந்த தொலைக்காட்சிகள் சமூக நலனில் அக்கரை கொண்டு செயல்படவில்லை. பணத்தை குறிக்கோளாக கொண்டு தன்னை, தன் குடும்பத்தை வளப்படுத்திக்கொள்ள மட்டுமே என்று செயல்படுகிறது. அதனால் இதன் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுங்கள். கடந்த காலங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவியரிடம் தங்களின் அதிக மதிப்பெண்ணுக்கும் பரீட்சையில் பெற்றி பெறவும் உதவியாக இருந்த காரியங்களை பற்றி கூறுங்கள் என்று கேட்டபொழுது படித்ததை அனைத்தையும் எழுதிப்பார்ப்பது எங்கள் கட்டாய பழக்கம் என்றார்கள். மேலும் 9ஆம் வகுப்பு முதல் எங்கள் வீட்டில் கேபிள் டிவியை கட் செய்து விட்டோம். பரீட்சைக்கு 4 மாதங்களுக்கு முன்பே கேபிள் டிவியை கட் செய்து விட்டோம் என்று சொன்னார்கள். வாழ்க்கைக்கு எந்த வகையிலும் உதவி செய்யாத காட்சிகளைத்தான் இந்த தொலைக்காட்சிகள் காட்டுகின்றன என்பதை புரிந்து கொள்ளுங்கள். சிறந்த முறையில் படித்து முன்னேற்றம் அடைவதே உங்களுடைய முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
அதோடு தாங்களும் தன்னிறைவு பெற்று இந்த சமுதாயத்தில் வீழ்ந்து கிடப்பவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று அடிக்கடி மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் ஒரு லட்சியம் இருக்க வேண்டும். கல்வி பலவிதங்களிலும் எட்டாத சமுதாயத்தில் இருக்கிறோம். நாம் சிறப்பான முறையில் படித்து வெளி வந்து மற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு இருங்கள். எக்காரணத்தை கொண்டும் தாழ்வு மனப்பான்மைக்கு இடம் கொடுத்து விடாதீர்கள். எனக்கு மறதி இருக்கிறதே என்று கலங்கி நின்று விடாதீர்கள். தாழ்வு மனப்பான்மையோடு இருந்தால் எந்தக் காரியத்திலும் வெற்றி கிட்டாது. என்னால் முடியும் எனக்கு இறைவன் உதவி செய்வான் என்ற தன்னம்பிக்கையை அதிகம் வளர்த்துக்கொள்ளுங்கள். இறைவனின் உதவி கிடைக்க தினமும் பிரார்த்தனை செய்து வாருங்கள். வல்ல அல்லாஹ் உதவி செய்வான். மேலும் படிப்பின் மேல் தாங்கள் செலுத்தும் ஆர்வமும், கவனமும் கைகொடுக்கும்.

பரீட்சைக்கு செல்வதற்கு முன்:

பரீட்சைக்கு முன் தினம் அதிக நேரம் விழித்திருக்க வேண்டாம். விடியல் காலை 4 மணிக்கு எழுந்து குளித்து தொழுது இறைவனிடம் உதவி தேடிய பிறகு அன்றைய தினத்தின் பரீட்சைக்கான பாடத்தை மீண்டும் படியுங்கள். மிதமான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். வயிறு முட்ட சாப்பிட்டால் தூக்கம் வரும். வீட்டை விட்டு கிளம்பும் முன் 2 ரக்காஅத் தொழுது பிரார்த்தனை செய்து விட்டு கிளம்புங்கள். சுத்தமான உடை அணிந்து கொள்ளுங்கள். பள்ளிக்கு அரைமணி நேரம் முன்னதாக சென்று விடுங்கள். இது தேவையற்ற பதற்றத்தை உண்டாக்காது. பேனா, பென்சில், ரப்பர் எவையெல்லாம் தேவையோ அவைகளை ஒவ்வொன்றிலும் இரண்டு வைத்திருப்பது நல்லது. மேலும் பரீட்சை ஹால் நுழைவுச் சீட்டு, பரீட்சைக்கான அனைத்து பொருட்களையும், தங்களின் ட்ரெஸ்ஸையும் முதல் நாள் இரவே தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். பரீட்சைக்கு புறப்படும் நேரத்தில் பொருள்களை காணவில்லை என்று தேடிக் கொண்டு இருந்தால் டென்ஷனாகி வீட்டில் பெற்றோரிடமும் திட்டு வாங்கி பரீட்சையில் கவனக்குறைவை ஏற்படுத்தும்.

பரீட்சை ஹாலில்:

பரீட்சை பேப்பர் வாங்கியவுடன் முதலில் தேர்வின் எண், பெயர், பாடம், நாள் இவைகளை தெளிவாக பேப்பரில் எழுதி விடுங்கள். பிறகு கேள்வித்தாளை வாங்கியவுடன் பதற்றபடாமல் விடை தெரிந்த கேள்விகளை டிக் செய்து கொள்ளுங்கள். பிஸ்மில்லாஹ் சொல்லி முதலில் தெரிந்த கேள்விகளுக்கு கேள்வித்தாளில் உள்ள எண்களை கவனமாக பேப்பரில் எழுதி கையெழுத்து அடித்தல், திருத்தல் இல்லாமல் அழகான முறையில் பதிலை எழுதுங்கள். பிறகு தெரியாத கேள்விகளை யோசித்து எழுதுங்கள். எல்லாம் எழுதி முடித்த பிறகு அண்டர்லைன் இட வேண்டிய இடங்களில் அண்டர்லைன் போடுங்கள். பெல் அடிக்கும் வரை ஹாலில் இருந்து மீண்டும் மீண்டும் கேள்வித்தாளையும் எழுதிய பேப்பரையும் படித்து பாருங்கள். விட்ட கேள்விகளுக்கும் பதில் ஞாபகம் வரும். தவறாக எழுதி இருந்தால் திருத்திக் கொள்ளலாம். பெல் அடிப்பதற்கு முன் பேப்பரை கொடுத்து விடாதீர்கள். பரீட்சை முடிந்து வெளியே வந்தவுடன் விடுபட்ட போன கேள்விகளுக்கு பதில் ஞாபகம் வந்து எழுதாமல் போய் விட்டோமே என்ற கவலை தங்களுக்கு வரலாம். அப்படி வந்தால் கவலையை தூர எறிந்து விட்டு வல்ல அல்லாஹ் போதுமானவன் என்ற நினைப்புடன் அடுத்த பரீட்சைக்கு தங்களை தயார்படுத்துங்கள்.

பெற்றோர்களின் உதவி:

தங்கள் பிள்ளைகள் படிப்பதற்கு வீட்டின் சூழ்நிலைகளை அமைதியாக்கிக்கொடுங்கள். தாங்கள் செய்ய வேண்டிய உதவிகள் அதிக அளவு அவர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்க வேண்டும். மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பேசாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமையை வல்ல அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அதனால் வல்ல அல்லாஹ் மேல் பாரத்தை போட்டு விட்டு நாம் படித்தோமா? நம் பிள்ளை படிப்பதற்கு என்று சும்மா இருந்து விடாமல் உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யுங்கள். நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து விட்டுத்தான் வல்ல அல்லாஹ் மேல் பொறுப்பு சாட்ட வேண்டும்.

எழுத்துப்பயிற்சி:

மாணவ, மாணவியர்களே! நீங்கள் எழுத்துப்பயிற்சியில்தான் கவனக்குறைவாக இருக்கிறீர்கள். அதனால் மீண்டும் உங்களை வலியுறுத்துகிறேன். நாம் மனப்பாடம் செய்வதை தேர்வில் ஒப்பிக்க போவதில்லை. பேப்பரில்தான் எழுதுகிறோம். ஆகையால் படிப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் அதிகமாக எழுதி பார்ப்பதற்கு கொடுக்க வேண்டும். அதனால் படித்ததை எழுதிப் பார்ப்பதுதான் சிறந்தது. எழுதுவது வீண் வேலை என்று இருந்து விடாதீர்கள். எழுத அவசியம் முயற்சி செய்யுங்கள். (ஆரம்பத்தில் சிரமமாகத்தோன்றும், பிறகு சுலபமாகிவிடும்). நல்ல பலன் கிடைப்பதை உணர்வீர்கள். எழுதியதை வீட்டில் உள்ளவர்களிடம் அல்லது நண்பர்களிடம் கொடுத்து திருத்தச்சொல்லுங்கள். யாரும் கிடைக்காத நேரத்தில் தாங்களே திருத்திக்கொள்ளுங்கள். மாணவ, மாணவியரே வல்ல அல்லாஹ்வின் மேல் நம்பிக்கை வைத்து, தன்னம்பிக்கையுடன் படியுங்கள். தாங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் : 58:11)

- S.அலாவுதீன்


குறிப்பு : சென்ற வருடம் நான்கு பக்கத்தில் தரமான காகித்தில் அச்சடித்து அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும், பள்ளி, மற்றும் வீடுகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டது அதேபோல் இவ்வருடமும் இதனை பிரசுரமாக வினியோகிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு