
தலை சீவப்பட்ட இளம் நுங்கில் கைப்பெருவிரல் கடப்பாறை போல் உள் சென்று நுங்கை வெளிக்கொண்டு வந்து வாயிற்குள் இலகுவாக உட்செலுத்தும். அப்பொழுது பீறிட்டு அடிக்கும் நுங்கின் நீர் முகம், சட்டையை வேதனை ஏதுமின்றி நன்கு பதம் பார்க்கும். (ஒன் மேன் சோ அடிக்கும் உங்களுக்கு அதுவும் ஆசைக்கு ஸ்ப்ரே செய்யும் ஊட்லெ போயி நல்லா சட்டையெ கழுவிக்கிடுங்க.....இல்லாட்டி கரைபுடிச்சிடும்.....)
சீவப்பட்ட நுங்கின் கண் போன்ற இளஞ்சுளைகளை பனை ஓலையில் வாங்கி வந்து துவர்க்கும் அதன் வெண் தோலை சேதாரம் ஏதுமின்றி அகற்றி பாத்திரத்தில் இட்டு தேவையான அளவு பசும்பால் ஊற்றி அதற்கு சுவை கூட்ட பன்னீரும் கொஞ்சம் இட்டு, இனிப்பு சுவை கூட்ட சீனியும் கொஞ்சம் சேர்த்து அதற்கு குளிரூட்டி நல்ல உச்சி வெயில் வரும் சமயம் (உச்சி உரும நேரம்) ஒரு கிளாஸ் பருகினால் உடலுடன் உள்ளமும் குளிர்ச்சியடையும். (கரண்டு போனாலும் வந்த தூக்கம் கலையாது....அப்படி ஒரு சுகம் பருகியதும்)
நல்ல இளம் நுங்காக பார்த்து வாங்க வேண்டும். முற்றிய கடுக்காயை வாங்கி சாப்பிட்டு விட்டால் பிறகு வயிறு கடுக்க ஆரம்பித்து விடும். பிறகு காலைக்கடனை செலுத்த வேண்டிய இடத்திற்கு கண்ட நேரத்திலும் செல்ல வேண்டி வரும்.
ரசாயன பொருட்கள் கலந்த செயற்கை குளிர்பானங்களான பெப்சி, கொக்ககோலா, சவன்அப் போல் பருகும் சமயம் இதமான சூழலை தந்து பிறகு பக்க விளைவுகள் (கேன்சர், சிறுநீரக, இதயக்கோளாறுகள்) ஏராளம் தராத இயற்கையாக பருவ மாற்றங்களுக்கு ஏற்ப இறைவன் மனித குலத்திற்கு மருத்துவ குணங்கள் அடங்கிய காய்கறி, பழவர்க்கங்கள் நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் மாறுபட்டு நமக்கு தடையின்றி அளித்துக்கொண்டிருக்கிறான். (எல்லா மரங்களும் மக்கள் பெருக்கத்தைக்காரணம் காட்டி ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு வெட்டப்பட்டு மெல்லமெல்ல அழிக்கப்பட்டு வருவதால் இனி வரும் காலங்களில் மாம்பழம், பலாப்பழம், நுங்கு திண்ண கூட விமானம் ஏறி அமேஜான் காட்டிற்குத்தான் செல்ல வேண்டும்)
பனை மரத்தில் நன்கு முற்றிய நுங்குகள் பனம் பழமாக ஆகி அதை நம் மக்கள் வாங்கி அடுப்பில் சுட்டு பனம்பழமாக சாப்பிடுவர். (காக்கை உக்காந்தாலும் உக்காராட்டியும் நேரம் வந்துடுச்சிண்டா பனம்பழம் ஆட்டோமேட்டிக்கா கீழே விழுந்துடும். உடனே வேணும்டா மரத்துலெ ஏறித்தான் ஆக வேண்டும்)
பனை மரத்தின் இளம் பாளைகளை சீவி அதிலிருந்து வடியும் சுனை நீர் தான் பதநீர் என்றழைக்கப்படுகிறது. அதில் கொஞ்சம் சுண்ணாம்பிட்டு பானையில் கிராமப்புறங்களிலிருந்து கொண்டு வந்து நம்மூரில் விற்பர். அதுவும் உடலின் உஷ்ணம் போக்கும் நறுமணம் வீசும் நல்ல இயற்கை பானம். (இப்போ எங்கே கெடக்கிது பதநி? இனி வரும் காலங்களில் பெரிய சூப்பர் மார்க்கட்டில் டின்களில் அடைத்தாவது பதநி கிடைக்குமா? என்று தெரியவில்லை. பதநி எடுத்த ஆட்களெல்லாம் இன்று பாலிடெக்னிக் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் எப்படி கிடைக்கும்?)
பிறகு பனங்கொட்டைகளை தரையில் ஊன்றி அதிலிருந்து வரும் வேர்களே தக்க சமயத்தில் பிடுங்கப்பட்டு நமக்கு பனங்கிழங்காக விற்கப்படுகிறது. அதை வாங்கி வெண்ணீரில் அவித்து தோல் நீக்கி (சம்சாப்பையில்) சுரண்டி அத்துடன் கொஞ்சம் தேங்காய் துருவி போட்டு இனிப்புக்கு சீனியும் சேர்த்துக்கொண்டால் நல்ல கமகமக்கும் இனிப்பு உணவாக அது மாறிவிடுகிறது. (இதன் சுவையை மறக்க முடியாத, தவிர்க்க முடியாத நம் மக்கள் எத்தனையோ பேர் இன்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன் மற்றும் அரபு நாடுகள் போன்ற உலகின் எந்த பிரதேசத்தில் இருந்த போதிலும் பருவமறிந்து ஊரிலிருந்து வரும் ஆட்கள் மூலம் தருவித்து அதை முறையே உண்டு ஊரிலிருக்கும் உணர்வை அங்கேயும் பெற்றுக்கொள்கின்றனர். முன்னாடி எல்லாம் ஊரிலிருந்து பனியான் சுட்டு வந்தது. அதை திண்டு திண்டு சலித்து விட்டது. எனவே எங்கிருந்தாலும் பருவ கால இயற்கை உணவுகளை விரும்பி உண்ணத்தொடங்கி விட்டனர் மக்கள்).
எல்லாம் முடிந்து இறுதியில் சிறுவர்கள் பக்கம் வருவோம். முக்கண்கள் தோண்டப்பட்ட இரண்டு நுங்குகளை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு இன்ச் தடிமனுள்ள ஒரு அடி கம்பு ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். கம்பின் இரு நுனிகளையும் கிட்டிக்கம்பு போல் சீவிக்கொள்ளுங்கள். பிறகு இரண்டு நுங்கின் மையப்பகுதியில் சீவிய கம்பின் இரு முனைகளையும் ஒரு முனைக்கு ஒரு நுங்கின் மையப்பகுதி என சரிசமமாக செருகிக்கொள்ளுங்கள். பிறகு வீட்டின் கொல்லையில் உள்ள முருங்க மரத்தில் ஏறி நுனியில் அட்டபில் கவை போன்று இரண்டு, மூன்று அடிகள் உள்ள கம்பை உடைத்துக்கொள்ளுங்கள். பிறகு நொங்கு வண்டி ரெடி. ஒடித்த கம்பின் இரு பிளவாக உள்ள பகுதியை நொங்கு வண்டியின் மையப்பகுதியில் வைத்து நகர்த்துங்கள். மெல்லமெல்ல நகர்த்தி ஊரைச்சுற்றி வந்து உல்லாசத்தை இலவசமாய் அனுபவியுங்கள். (வெலெவாசி கூடுதலா இருக்கும் இந்நேரத்தில் வாப்பா, உம்மாட்டெ அது வேனும், இது வேனும் என வாங்கி கேட்டு அடம் பிடிக்காதீர்கள்.......நல்ல பிள்ளைகளாக வளர்ந்து வீட்டிற்கும் நாட்டிற்கும் கண்குளிர்ச்சியைத்தாருங்கள்.......)
திடீர்ண்டு நொங்கு நெனப்பு வந்துச்சா அதான் இப்புடி.........
படிச்சிட்டு சுவையான உங்கள் கருத்துக்களை இங்கு பதிய மறக்காதீர்....
-மு.செ.மு. நெய்னா முஹம்மது.