Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label நோன்பு. Show all posts
Showing posts with label நோன்பு. Show all posts

ரமளானின் கடைசி பத்து - பழைய நினைவுகளிலிருந்து... 1

அதிரைநிருபர் பதிப்பகம் | June 15, 2016 | , ,

நினைவுகளோடு நீசசல்...
இறையருட்கொடைகளை நம்மீது குறைவின்றி பொழியும் இந்த புனித ரமழான் நம்மை விட்டு மெல்ல,மெல்ல நகர்ந்து கொண்டிருப்பதை அறியாமல் இறுதியில் நாம் ஒரு மாதம் செய்த நல்லமல்களுக்கு இறைவன் கொடுக்கும் கூலியாய் வரும் ஈத் பெருநாளை புதிய சட்டை, வேட்டி, தொப்பி, கைக்குட்டை, செருப்பு, நறுமண செண்ட், கைக்கடிகாரத்திற்காக சிறுவயது உள்ளம் பெருமிதம் கொண்டு பேரானந்தம் அடைந்து அந்த நாளை எண்ணி ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ஒரு காலத்தில்.

ஊரில் ஒவ்வொரு பள்ளிகளும் ஒரு மாத இரவுத் தொழுகையில் ஓதி வந்த திருக்குர்'ஆனை மெல்ல,மெல்ல முடித்து இறுதியில் 30வது ஜூஸ்வின் சிறிய சூராக்களை ஓத ஆரம்பிக்கும்.

ஊரில் சில பள்ளிகள் அலங்கரிக்கப்பட்டு 27ம் இரவு தொழுகைக்காகவும் அதற்குப்பின் இரவுத் தொழுகையில் ஓதி முடிக்கப்படும் திருக்குர்'ஆன் "தம்மாம்" விடப்பட்டு (சவுதி தம்மாம் அல்ல) இதுவரை தொழுகைக்கு கட் அடித்த பெருசு, சிறுசுகள் யாவும் பேணுதலுடன் அனைத்து ரக்காத்துக்களுடன் பிளஸ் மூன்றையும் தொழுது முடிக்கும். நல்ல பிரியாணி நார்சாவாய் பிளாஸ்டிக் பைக்குள் நைந்து கிடக்கும். வீடு செல்லும் வரை காத்திருக்காத சில உள்ளங்கள் மொளனமாய் அதை அங்கேயே பிரித்து மேயும்.

ஒரு பள்ளியில் வாங்கிய நார்சாவுடன் அடுத்த பள்ளிக்கு செல்ல நேரம்/வாய்ப்பு தேடும். கிடைத்தால் அதையும் நன்கு பயன்படுத்திக்கொள்ளும்.

தெரு தையல்கடைக்காரரின் கடையோ நியாயவிலைக்கடை (ரேசன்)போல் கூட்டம் அலைமோதி நிற்கும். சொன்ன தேதியில் அவர் துணிமணிகளை தைத்து கொடுத்து விட்டால் உள்ளம் அவரை கின்னஸ் புத்தகத்தில் வர வேண்டியவர் என வெறும் வாயில் புகழ்ந்து தள்ளும்.

பெரும்பாலும் ஜகாத் கடைசி பத்தில் நம் ஊரில் விநியோகிக்கப்படுவதால் அதை நன்கறிந்த மாற்று மத வெளியூர் கூட்டம் கூட தலையில் தொப்பியுடன், கிழிந்த மேல்துணி அணிந்து பஸ், ரயில் ஏறி எப்படியும் ஊர் வந்து சேரும். தெரிந்த சில இஸ்லாமிய வார்த்தைகளை நாவில் அரைகுறையாய் உச்சரித்து காசு கேட்டு வாங்கிச்செல்லும்.

சென்னையிலிருந்து வந்த தொழிலதிபர்களின் பிள்ளைகளும் உள்ளூர் தொழிலதிபர்களின் பிள்ளைகளுடன் ஒன்று சேரும். உற்சாகம் ஊரில் கலைக்கட்டும் இதனால் சில சிறு சண்டைகளும் அரங்கேறும்.

ஏழை, பணக்காரர் ஏற்ற இறக்கமின்றி எல்லோரிடமும் காசு நிரப்பமாய் வந்து சேரும்.

பெருநாளுக்கு எடுக்கும் வேட்டி 80x80, 60x60, 60x40  என்று பள்ளிக்கூட கணக்கு பாடம் நடத்தும். அந்த குழப்பத்திலும் உள்ளம் குறைந்த காசு எது என்று பார்த்து அதையே வாங்கி உடுத்தி மகிழும்.

பெருநாள் இரவு ஊர் சுற்ற கடைத்தெரு பரீதா, வின்னர் வாடகை சைக்கிள் கடைகளில் முன் பதிவு செய்யும். 
வரும் வழியில் தலைக்கேற்ற தொப்பியை இலியாஸ், அன்சாரி கேப் மார்ட்டில் வாங்கி அணிந்து மகிழும். தொழுகை முடிந்ததும் அதை மடித்து எக்களில் சொறுகி வைக்கும்.

வருடத்தில் செல்லாத சொந்த பந்த வீடுகள் செல்ல உள்ளம் துடிக்கும் வர இருக்கும் (பெருநாள் காசு) வருவாயை எண்ணி பெருமிதம் கொள்ளும்.

பெருநாள் இரவு பிறை பார்ப்பதில் ஏற்பட்ட குழப்பம் இறுதியில் முஹல்லாப்பள்ளியில் (மரைக்காப்பள்ளி) உலமாக்களின் முடிவுக்கு கொண்டுவரப்படும். அவர்களின் நல்ல முடிவுக்கு பொறுமையின்றி காத்திருக்கும். நாளை பெருநாள் இல்லை நோன்பு என்று முடிவானால் சந்தோசப்படவேண்டிய உள்ளமோ கனத்த இதயத்துடன், கவலையுடன் வீடு திரும்பும்.

பெருநாள் பிறையை பார்க்க உள்ளம் பரவசம் அடைந்து அவசரப்படும். அது பார்க்கப்படாவிட்டாலும் ஏன் பார்க்கப்படவில்லை? என்று அறியாமல் உள்ளம் கேள்வி கேட்கும்.

பெருநாள் இரவு இறைச்சிக்கடைகளெல்லாம் பேரிரைச்சல் அடையும். ஆட்டின் உறுப்புகளை தனித்தனியே கூறுபோட்டு ஆடர் செய்யும். இது வரை வேண்டாவெறுப்பாய் இருந்த இறைச்சிக்கடைக்காரனும் வேண்டப்பட்டவனாய் ஆகிப்போவான். உள்ளம் வருடம் முழுவதும் அவனிடம் கறி வாங்குவது போல் பவ்வியமாக பேசி காரியம் சாதிக்க கிட்னி பக்கம் கண் திரும்பும்.


பெருநாளுக்கு எடுத்த வேட்டியில் ஒட்டப்பட்ட லேபிள் அவசரத்தில் கிழிக்கப்பட்டு அவ்விடத்தில் கருங்காக்கை ஒன்று போட்ட வெள்ளை எச்சம் போல் காட்சி தரும்.

கண்ட இடத்தில் உட்கார்ந்து எழ கருப்பு கம்பாயம் போட்ட வேட்டி கை கொடுக்கும். இன்று கம்பனையும் காணவில்லை கம்பாயம் போட்ட வேட்டியணிந்தவர்களையும் காண இயலவில்லை.

புது சட்டை அவசரத்தில் பிரிக்கும் பொழுது எடுத்த குண்டூசி சில சமயம் கையை நன்கு பதம் பார்க்கும். ஆடு அறுக்கும் முன்பே நம் கையில் காவு வாங்கும்.

சல்லடை போன்ற பனியனும் அது வெளியில் தெரிய கண்ணாடி போல் அணிந்த மார்ட்டின் சட்டையும் அதன் பாக்கெட்டில் வைத்த சலவை பத்து, இருபது ரூபாய் நோட்டுக்களும், சப்தம் வர அணிந்த சோலப்புரி செருப்பும் அந்த காலத்தின் சரித்திரக்குறியீடுகள்.

எவ்வித பிரயோஜனமும் இல்லாமல் இரவு நேர ஓவர்டைம் வேலையை பெண்கள் அனல்பறக்கும் அடுப்பங்கரையில் பார்த்து நல்ல ருசிக்கு பொறித்த ரொட்டி சுட்டெடுத்து, வட்லப்பம், கடல்பாசி, இடியப்பம், கறியாணம் என கலைக்கட்டும் அடுப்பங்கரை சளைக்காத வீட்டுப்பெண்கள். (ஜப்பானாக இருந்தால் பை நிறைய பார்த்த ஓ.டி.க்கு பணம் பார்த்திருப்பார்கள் பாவம்)

மல்லிகைப் பூக்காரி கூட இரவு நேரத்தில் நம் தெரு வீதி உலாவருவாள். நல்ல வியாபாரத்தையும் செய்து முடிப்பாள்.

பெருநாள் இரவு முழுவதும் பேய்பிசாசு பயமின்றி நண்பர்களுடன் சுற்றி விட்டு பெருநாள் காலை சுபுஹ் தொழுக்கைக்கு எழும்ப அலும்பு பண்ணும். வீட்டினரின் ஓலத்தில் வேண்டா வெறுப்பாய் எழுந்து கண்சிமிட்டி கூசும். வீட்டுப்பெரியவர்களின் அதட்டலில் கடைசியில் பல் துலக்காமல் பள்ளி வந்து சேரும்.

குளித்து புத்தாடை அணிந்து நறுமணத்தைலம் அங்குமிங்கும் உடலில் தடவி பள்ளிக்கு வந்து தொழுகைக்கு அமரும். பெரியவர்களுடன் சேர்ந்து கலிமாவும் கூறும். தொழுகை முடிந்ததும் பள்ளியின் வெளியே விரிக்கப்பட்ட விரிப்பில் தன் பாக்கெட்டிலிருந்து பள்ளி சாபுக்கு சலவை நோட்டு பத்தோ, இருபதோ அல்லது இயன்றதைப்போட்டு மகிழும்.

காலை மெல்ல, மெல்ல பொறித்த ரொட்டி சுவையுடன் பெருநாளும் நம்மை விட்டு மெல்ல, மெல்ல எட்டப்பார்வை போல் மறையத்துவங்கும். தெருவில் விற்கும் ஜஸ்கிரீம் உண்டு ஆசைத்தாகம் தீரும். பெருநாள் பகல் நல்ல பிரியாணி உண்டு அயர்ந்து போகும். சாய்ங்காலப்பெருநாள் சக நண்பர்களுடன் மல்லிப்பட்டினம் மனோரா காணத்தூண்டும்.

எல்லாம் முடிந்து வீடு திரும்பியதும் சென்ற ரமழானுக்காக வருந்தத்துவங்கும் செய்வதறியாது விழிக்கும். வருடம் முழுவதும் ரமழானாய் இருக்கக்கூடாதா? என உள்ளத்துக்குள் கேள்வி எழுப்பி பதிலின்றி மொளனமாய் உறங்கிப்போகும்.

சென்ற ரமழான்களை எண்ணிப்பெருமிதம் கொள்வதுடன் கையில் இருக்கும் ரமழானை நன்கு அமல்கள் செய்து பயன்படுத்துவோம். இறைவனின் பொருத்தத்தைப்பெருவோம் இன்ஷா அல்லாஹ்...

நம்மை விட்டு பிரிந்து இறைவனடி சேர்ந்த அனைவருக்காகவும் இறைஞ்சுவோம்...

மலரும் நினைவுகளுடன் நிகழ்கால நிகழ்வுகளுடன்..
மெய்யாலுமே இது ஒரு நினைவு மீள்பதிவுதானுங்க !
மு.செ.மு. நெய்னா முஹம்மது.

நம்மூர்ல நோன்பு (மலரும் நினைவுகளிலிருந்து சில.....) 15

அதிரைநிருபர் பதிப்பகம் | June 02, 2016 | , , , , ,

கடந்த கால புனித ரமழான் மாதத்தில் நம்மூரில் மக்களால் புழங்கப்பட்ட சில சொற்கள் நம்மூர் வட்டார மொழியிலிருந்து...

பொறையப்பாத்தாச்சாம்முள்ள.... ஆம்மா பள்ளியாசல்லேர்ந்து நகரா அடிக்கிற சத்தமும் கேக்குது.... அப்பொ இன்னக்கி த்ராவியா தொழுஹப் போகனும்....

ஊட்ல ஒட்ரெ அடிக்கனும் ஆள அனுப்பி உடு நாளக்கி...

இன்னக்கி ஊட்ல வாடா சுடனும் கடெத்தெருவுக்கு போயி கொஞ்சம் ராலு வாங்கிக்கிட்டு வர்ரிரியா?

நோன்புக் கஞ்சி காய்ச்சிறத்துக்கு எறெச்சிக்கடையில ஆட்டுத்தலையும், கொஞ்சம் நெஞ்செலும்பும் வாங்கிக்கிட்டு வர்ரியா?

அதுக்குள்ள சவுரு பக்கிர்சா வந்துட்டாரு சீக்கனம் எழும்புங்கல்வ்வோ...சஹருக்கு சோறு ஆக்கனும்.

இந்தம்மா அசரு தொழுவிட்டு பள்ளியாசல்லுக்கு டிப்பன் பாசு எடுத்துக்குட்டு போயி கொஞ்சம் கஞ்சி வாங்கிக்கிட்டு வந்துர்ரியாம்மா?

சஹருக்கு தயிரு ஒரக்கனும் அவ்வூட்ல கொஞ்சம் ஒர மோரு வாங்கிக்கிட்டு வந்திர்ரியா?

பேரிச்சம் பழம் முடிஞ்சி போயிரிச்சி....கிரானிக்கடையில வாங்கிக்கிட்டு வந்திர்ரிய்யா?

மாப்ளே, அசரு தொழுவிட்டு (செக்கடி, செடியன், வெட்டி) கொளத்துல குளிக்கப்போவோம் என்னா?

செத்த வாடாக்கார ஊட்டுக்கு போயி சம்சாவும், வாடாவும் வாங்கிக்கிட்டு வந்திர்ரிய்யாம்மா?

சர்வத்து கலக்கனும் இவ்வூட்லேர்ந்து கொஞ்சம் ஐஸ் கட்டி வாங்கிக்கிட்டு வாம்மா....

பரு மாவு முடிஞ்சி போச்சி நாளெக்கி அந்த மாவு இடிக்கிற பொம்புளைய ஊட்டுக்கு அனுப்புரியளா?

தையக்கடையில துணி தக்க குடுத்து எவ்ளோவ் நாளாச்சி? இப்புடி இன்னக்கி, நாளக்கிண்டு இழுத்தடிக்கிறாம்மா?

இன்னக்கி புள்ள தல நோன்பு புடிச்சிக்கிது....கலச்சி போயி என்னன்டோ போயிட்டாம்மா? கழுத்துல நெக்லஸெ போட்டு உடுவுளே....சாங்காலம் வாப்ச்சா ஊட்டுக்கு பத்தரமா கூட்டிக்கிட்டு போயிட்டு வாங்க...

கடப்பாசிய தட்டையில ஊத்தி ஆற வைய்யி நோன்புத்தொறக்க நேரமாச்சி.....

நாளக்கி சஹருக்கு உண்டக்கலியா செஞ்சிற வேண்டியது தான்....

பதுரு படைக்கி அரிசி மாவு ரொட்டியும், தேங்காயும் எடுத்து வைய்யிவுளே.....

த்ராவியா தொழிவிட்டு ஊட்டுக்கு வந்து பசியாறிட்டு வெளையாட போவலாம்.....

ஒரு நாளக்கி ரெண்டு ஜுசு ஓதுனாலே நோன்புக்குள்ள ரெண்டு குர்வான் முடிக்கலாம்..

சக்காத்து குடுக்க பேங்ல கொஞ்சம் சில்ரெ மாத்திக்கிட்டு வாம்மா..

நூர் லாட்ஜ்ல வாட் சம்சா (கறி சம்சா) இருவது ரூவாக்கி வாங்கிக்கிட்டு வாங்கங்க....

அப்புடியே மறந்துராமெ ரோஸ் மில்க் சர்வத்துக்கு ஜம்ஜா வெதெ கொஞ்சம் வாங்கிக்கிட்டு வாங்க...

நோன்பு நேரத்துல இப்புடி நொன்கு கடுக்காயா வாங்கிக்கிட்டு வந்திருக்கிர்ரியளே??? வயித்தெ கடுக்காது???

அவ்வொளுக்கு நோன்பு தொறந்ததும் தேத்தண்ணி குடிக்கனும்....நல்லா சுக்கு தட்டி போட்டு தேத்தண்ணி போட்டு சூட்டுக்கிளாஸ்ல ஊத்தி வைய்யி...

நோன்பு கடைசியில ஒரு மூணு நாளக்காச்சும் நம்ம முஹல்லா பள்ளியாசல்ல இஹ்திகாஃப்பு இரிக்கனும்ண்டு ஹாஜத்தா இரிக்கிது.

இன்னக்கி நம்ம பள்ளியில தம்மாம் உட்ராங்க....யார் ஊட்டு நார்சா? என்னா நார்சா?

மாப்ளே வர்ரியா அங்க போயி போர்வீட்டா, ஹார்லிக்ஸ், கல்கண்டு பாலு எதாச்சும் குடிச்சிட்டு வந்துர்லாம்மா???

நோன்பு நேரத்துல ராத்திரியில வெளியில சும்மா சுத்தாதிய ஆஹாது....

அந்த அஞ்சறெ பெட்டியெ எடு கஞ்சிக்கு கொஞ்சம் நச்சிரமிஞ்சிரம் அரச்சி போடனும்.

சின்னப்புள்ளயல்வொல்லாம் அங்கிட்டு போயி ஓரமா நிண்டு தொழுவுங்க.... பள்ளியாசல்ல ஓ ஓண்டு சத்தம் போடக்கூடாது.

மொம்க்ரபாஜியாரு (பரக்கத் ஸ்டோர்ஸ்) கடையில ரெண்டு குத்ரெ மார்க்கு வெள்ளெ வேட்டி எடுத்திக்கிட்டு வாங்க....

இன்னக்கி கவாபு சரியா வேவலெ....

வாசல்ல சாபரு நிக்கிறாஹ சில்லரெ காசு எடுத்துப்போடுவுளே....

நோன்புல காலையில ஒரு ஒஹமான வெயிலு அடிக்கிதும்மா...

அடுப்பு சரியா எரியல...பொகையா வருது...அப்புறம் கஞ்சியில பொகச்சுத்தி வாடெ வரப்போவுது....நல்லா அடுப்பெ எரிச்சி உடுங்க.....

எல்லாரும் சஹருக்கு எழும்பாமெ தூங்கிட்டாஹ..அதுனாலெ இன்னக்கி எங்கூட்ல எல்லாரும் பட்னெ நோம்பு.

இன்னக்கி தண்ணி கொஞ்சம் தான் உட்டானுவோ...

நகரா அடிக்கிற கம்பெ சாபு ஒளிச்சி வச்சிட்டாரு..எங்கெங்க ஒளிச்சி வச்சியெ??

கரெக்டா பாங்கு சொல்ற நேரத்துல கெரண்டே வேணும்டே அமத்திப்புட்டானுவோ.....இருட்டுக்கசமா இரிக்கிதும்மா....அந்த முட்டவெளக்கெ ஏத்துவுளே....நெருப்பட்டியெ காணோம்.....

பாங்கு சொல்லப்போறாஹ சீக்கினம் தண்ணிய குடிச்சிட்டு நிய்யத்து வச்சிக்கிடுங்க....

இப்படி ஏராளம் சொல்லிக்கொண்டே போகலாம்.

சென்ற நோன்பில் நம்முடன் இருந்தவர்கள் இந்த நோன்பில் இல்லை. இந்த நோன்பில் இருக்கப்போகுபவர்கள் அடுத்த நோன்பில் இருப்பார்களா? நிச்சயமில்லை. எப்படியும் ஒரு நாள் அவனிடமே மீள வேண்டியுள்ளது. 

யா அல்லாஹ்! காலஞ்சென்ற நம்மவர்களையும், மிச்சம் மீதியாய் எஞ்சியிருக்கும் எல்லோரையும் வர இருக்கின்ற புனித ரமழானின் பொருட்டு காத்தருள்வாயாக! பாவங்கள் யாவற்றையும் மன்னித்தருள்வாயாக! எஞ்சியிருக்கும் எங்கள் வாழ்க்கையை சிறப்பாக்கி, எல்லாம் சலாமத்தாக்கி வைப்பாயாக!

கப்ராளிகளின் எல்லாப்பாவங்களையும் இந்த சங்கை மிகுந்த ரமழானின் பொருட்டால் மன்னித்து பிழைபொறுத்தருள்வாயாக...சுவனபதியில் அவர்கள் அனைவரையும் சந்தோசமாய் சேர்த்தருள்வாயாக....ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

நல் நினைவுகளுடன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது

நோம்பு வருது.... 2

அதிரைநிருபர் பதிப்பகம் | May 23, 2016 | , ,

இஸ்லாமிய மாத வரிசையில்
ஒன்பதாம் மாதமாம் உன்னதமாய்
சங்கைமிகு ரமளானும் நம்மை
சீராட்டி இறைப்புகழ் பாராட்ட வருது

தெளிவாக வானம் தென்பட்டாலும்
தெரியாமல் போன அப்பிறையை
இலங்கை ரேடியோ கண்டெடுக்கும்

அதனால் நோன்பும் ஊரில் ஆரம்பமாகும்
முதற்பிறையை கண்டதுமே
எம் முகமலர்ச்சி பெற்றிடுமே
பெரியவர் சிறியவருக்கெல்லாம்

பெரும் மகிழ்ச்சி வந்திடுமே
பிறையைக்காணும் முன்னே
நம் வீட்டு பெண்டிரும்
ஒரு மாத தேவைகளை

அது வருமுன்னே செய்திடுவர்
வீட்டை கழுவி ஒட்டடை அடித்து
மாவிடித்து பூபோல் வறுத்தெடுத்து
வீட்டு ஆண்களின் அகம்புறம் குளிர

அனைத்தையும் செய்து வைப்பர்.
பள்ளிகளெல்லாம் வெள்ளையடித்து
தன்னழகை மெரு கூட்டி நிற்கும்
காற்றில் கரைந்து வரும் பாங்கின்ஒலி

தொழுகைக்கு நம்மை தயார் படுத்தும்
கஞ்சி கீற்று கொட்டகையிடம்
பிஞ்சு உள்ளம் கெஞ்சிக்கேட்டிடும்
இன்னும் பதினொறு மாதங்களும்

நீ பள்ளியிலேயே தங்கிடுவாயாவென.
நோன்பு கால தண்ணீர் தாகம்
வீம்பின்றி பொறுமை கொள்ளும்
பசிகளெல்லாம் பறந்து போகும்

நோன்பு திறக்கும் சமயத்தை எண்ணி.
கண்சிவக்க குளித்து வந்த குளக்கரையும்
உள்ளம் குளிர உம்மா தந்த சர்பத்தும்
பார்வையால் உண்டுமகிழும் பதார்த்தங்கள்

பசித்தலால் உருவாகும் பல ருசித்தல்கள்
பள்ளிவாசல் நஹராவோ
பகல்நேர சூரியக்குளியல் எடுக்கும்
பகலவன் மறையும் மக்ரிபில்

இடிமுழக்கமென ஊருக்கு பறைசாற்றும்
ஆங்காங்கே வாடா,சம்சா கடைகள்
திடீர் காளானாய் முளைத்து நிற்கும்
வாடாவில் புதையுண்ட இறாலை

கண் பார்வை பெயர்த்தெடுக்கும்
இராக்கால வீண் விளையாட்டு
போர்க்களம் போல் நடந்தேறும்
தேவையற்ற தெரு சண்டைகளும்

தேடாமல் தெருவுக்கு வந்து சேரும்
தலை நோன்பில் கொடுத்த சீனி சோறு
நினைக்கும்பொழுதெல்லாம் தித்திக்கும்
சில்லரையில் நிறையும் சட்டைப்பை

நிறைமாத கர்ப்பிணியாய் வழிந்திருக்கும்
முதல் நாள் ஆசையாய் தொழுத தராவீஹும்
இரண்டாம் நாள் ஆசையே மோசம் செய்யும்
மூன்றாம் நாள் இடுப்பொடிந்த கிழவன் போல்

அமர்ந்து கொண்டே நார்சாவுக்கு நேரம் கடத்தும்
அட்டூழியம் புரியும் சைத்தான்கள் கட்டப்பட்டு
கபடியும்,கிளித்தட்டும் கட்டவிழ்த்துவிடப்படும்
இராக்கால வணக்க வழிபாடாய் உள்ளம்

தவறாக வீண்விளையாட்டை புரிந்துகொள்ளும்
பவுடர் போட்ட கேரம் போர்டில்
கருப்புவெள்ளையை சிகப்பு விரட்டும்
குழிக்குள் விழும் காய்களோ

குழந்தையாய் தொட்டில் உறங்கும்
அதிகாலையிலிருந்து அமைதியுற்ற இதயம்
அஸருக்குப்பின் அங்குமிங்கும் அலைபாயும்
வாடா,சம்சா வேண்டியதை சேமித்து வைக்கும்

வாங்கி வரும் வரை கஞ்சியும் காத்திருக்கும்
பேரீத்தம்பழம் கிடைத்து உள்ளம் பேரானந்தமடையும்
அதன் கொட்டை எடுக்க கைகள் பட்டை தீட்டும்
பசியின் உச்சத்தில் நோன்புதிறக்க ஓதும் து'ஆவும்

ஏனோ மறந்து போகும் பாதியில் மறைந்து போகும்
கஞ்சி குடிக்கும் முன் உள்ளம்
பசியில் கோட்டை கட்டும்
குடித்ததுமே ஆசையில் சேமித்தவை எல்லாம்

அடுத்த நாள் வேலைக்காரிக்கு போய் சேரும்
திருக்குர்'ஆனும் சிறப்புடன் ஓதி முடித்து
பள்ளிகளை வண்ண விளக்குகளால் அலங்கரித்து
வருவோருக்கு நல்ல நாக்கு ருசியாய் நார்சாவும்

நிரப்பமாய் வந்து சேரும் வயிறுண்டு வாழ்த்தும்
முதல் பத்தில் உள்ளம் சிறு மூச்சு விடும்
இரண்டாம் பத்தில் அரை கடலை தாண்டும்
மூன்றாம் பத்தில் பெருநாளுக்கு தயாராகும்

முடிவில் வேதனையுடன் ஆனந்தமடையும்
ஏழைகளின் ஏக்கம் தீர்ந்து காசும் சேரும்
பயனடைந்தவர்களின் உள்ளமோ இன்னும்
பன்னிரண்டு மாதமும் ரமளானை வேண்டும்

இராப்பகலாய் ரஹ்மத்தும் ரஹ்மானிடமிருந்து வந்துசேரும் காலஞ்சென்ற ரமளான் நினைவுகளை கண்முன்னே கொண்டு வந்தேன்.

இன்னும் இரு மாதங்களில் புதுக்குழந்தையாய் பிறக்க இருக்கும் புனித ரமளானே! நீ எங்களுக்கு வாழ்வில் பரக்கத்தும், ரஹ்மத்தும் தந்து எஞ்சி இருக்கும் எம் வாழ்நாட்களை இனிமையாக்கி இறுதியில் இன்முகத்துடன் இறைவனடி வந்து சேர உன்னையும், என்னையும் படைத்த அந்த வல்லோனிடம் இறைஞ்சிடுவாயா!

என புதுக்குழந்தையாய் பிறக்க இருக்கும் ரமளானை பாசத்துடன் கேட்டுக்கொண்டவனாக..

இனிய நினைவுகள் தொடரும் இன்ஷா அல்லாஹ் இறைவன் அதற்கு வாய்ப்புகள் கொடுக்கும் வரை.....

மு.செ.மு. நெய்னா முஹம்மது

அதிரையில் பெருநாள் - மறுநாள் மந்தி எனும் வீண் விரயம் ! 25

அதிரைநிருபர் | July 30, 2014 | , , , , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… 

அருட்கொடையாளன் அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால், இந்த வருட ரமளான் மாதம் மிகச் சிறப்பாக அமைந்ததற்காக நம்மை எல்லாம் படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ்வின் உதவியால் வெளிநாடு மற்றும் வெளியூர்களில் உள்ள நம் அதிரைச் சகோதர சகோதரிகள் தங்களின் நண்பர்கள், மற்றும் சொந்தங்களுடனும், அவர்களோடு தங்கியிருக்கும் சக முஸ்லிம் சகோதரர்களோடும் பெருநாளை சந்தோசமாக கொண்டாடி மகிழ்ந்திருப்பார்கள். இதற்கு மேல் ஊரில் உள்ள நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகள், குடும்ப சொந்தங்கள், நண்பர்கள் அனைவருடன் அன்பும் நட்பும் பாராட்டி வழக்கம் போல் ஈகைத் திருநாளை கொண்டாடி மகிழ்ந்திருப்பார்கள் அல்ஹம்துலில்லாஹ்!

'ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'இஸ்லாத்தில் சிறந்தது எது' எனக் கேட்டதற்கு, '(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என்றார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.  புகாரி 12.  Volume :1 Book :2

அதிரையில் நம்மோடு நெருங்கிப் பழகும் சகோதரர்களின் நட்பு பாராட்டும் ஏற்பாட்டால், பெருநாள் விருந்து என்று 400க்கு மேற்பட்டவர்களுக்கு விருந்து பரிமாறி தங்களின் உணவு உண்ணும் நிகழ்வை நடத்தி ஈகை திருநாளின் புனித நோக்கத்திற்கு மாற்றாக அமையப் பெற்றதை ஒட்டு மொத்த அதிரை முஸ்லீம்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த ‘மந்தி’ விருந்தோம்பலில் கலந்து கொண்ட 90% சதவீதத்திற்கு மேற்பட்ட சகோதரர்கள் தங்களின் அன்றைய உணவுக்கு திண்டாடுபவர்களல்ல. 

பெருநாள் தினத்தன்று அதனைத் தொடரும் விடுமுறை நாட்களில் தாய் தந்தை, மனைவி, குழந்தைகள், உடன்பிறந்த சகோதர சகோதரிகள் என்று ஒன்று கூடி சந்தோசமாக கொண்டாடப்பட வேண்டிய நாட்கள், இந்த மந்தி விருந்திற்கு அழைக்கப்பட்டவர்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் தங்களுக்கென்று வீடு குடும்பம் இல்லாமல் இருப்பவர்களுமல்ல !

குடும்பங்கள் ஒன்று கூடும் வீட்டில் தாய், தந்தை, சகோதர சகோதரிகள், மனைவி, குழந்தைகளை விட்டு விட்டு இவ்வாறான விருந்தோம்பல் அவசியம் தானா ?

ஒன்று கூடல் பெருமைக்கும் பகட்டுக்காகவும் இவ்வகை விருந்து வீண் விரையங்கள் நடைபெறுகிறதே, இதனை எடுத்துக் கூறி நல்வழியில் செலவிடச் சொல்ல ஊரில் எந்த ஒரு இயக்கத்திற்கும் அல்லது மார்க்க அறிஞர்களுக்கும் தோன்றவில்லையா?

அனாச்சாரங்களை தட்டிக்கேட்க வேண்டியவர்களே பம்மிக் கொண்டு நமக்கொரு அழைப்பில்லையே என்று ஏங்கிக் கொண்டிருகிறார்களா? என்னவோ ! அவர்களெல்லாம் எங்கே ? பொதுக் காரியங்களில் ஈடுபடும் சகோதரர்கள் இவ்வாறான பகட்டுக்காக புகைப்படமெடுத்து விளம்பரப்படுத்தப்படும் விருந்துகளில் கலந்து கொள்வது அவர்களின் பொதுநலச் சேவைகளை கேள்விக் குறியாக்காதா?

பெருநாள் பகல் தினத்திலோ அல்லது பெருநாள் முடிந்த அடுத்தடுத்த நாட்களிலோ ஏழைக் குடும்பங்களின் திருமணத்தை நடத்தி வலிமா என்ற பெயரிலா இவ்வாறான மந்தி விருந்து கொடுக்கப்பட்டுள்ளதா?

கடந்த சில வருடங்களாக தங்களின் பொருளாதாரத்தை அர்த்தமற்ற இது போன்ற பொழுதுபோக்கு மற்றும் பகட்டுக்கான விருந்துகளுக்கு பண உதவி செய்பவர்கள் அதற்கு உடந்தையாக செல்பவர்கள் பின்வரும் இறைவசனத்தை கொஞ்சம் நிதானமாக வாசித்துப் பாருங்கள்.

மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. குர் ஆன் 4:36. 

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. குர் ஆன் 7:31

(ஒருவேளை உணவுக்கு அண்ணல் நபி(ஸல்) அவர்களும், அவர்களின் குடும்பமும், சத்திய சஹாபாக்களும் எவ்வளவு கஷ்டப்பட்டிருபார்கள்? அந்த கஷ்டத்தில் ஒரு துளி உணவின்றி நாம் கஷ்டப்பட்டிருப்போமா? நம் கண்களின் கண்ணீர் வர வைக்கும் அந்த சம்பவங்களை  சிறிதளவேனும் அறிந்து கொள்ள இங்கே சுட்டிப் பாருங்கள் http://adirainirubar.blogspot.in/2013/05/8.html)

இது போன்ற அனாச்சார விருந்துக்கு செலவு செய்யும் பணத்தில், ஊரில் எத்தனையோ பேர் வட்டி என்ற கொடுமையால் அறிந்தோ அறியாமலோ விழுந்து கஷ்டப்படுகிறார்கள், அவர்களில் வருடத்திற்கு ஒருவரையாவது மீட்டெடுக்க முன் வரக்கூடாதா?

ஊரில் எத்தனையோ எழை கன்னிப் பெண்கள் தங்களது திருமணச் செலவு செய்ய நாதியற்று இருக்கிறார்களே, இது போன்ற பெருநாள் தினத்தில் மந்திக்காக ஒன்று கூடுபவர்கள் அந்த ஏழைகளுக்கு பெருநாள் தினத்தில் திருமணம் நடத்தி வலிமா விருந்தை அல்லாஹ்வுக்காக ஒன்றுகூடி மந்தி சமைத்து அந்த ஏழை குடும்பங்களிடம் மகிழ்ச்சியை வரவழைக்க  முன்வரக் கூடாதா?

அனாதை பிள்ளைகள் உள்ள நமதூர் எத்தீம்கானா மதர்ஸாவுக்காகவது அன்றைய தினம் இது போன்ற மந்தி சமைத்துக் கொடுத்து அந்த அனாதைகளின் முகத்தில் மகிழ்ச்சியை மிளிரவிட்டு நன்மையை அள்ள முந்தக் கூடாதா?

பல வருடங்களாக இஸ்லாமியர்கள் ஏற்றம் பெறவும் முஸ்லீம் ஏழைகளுக்கு உதவுவதற்காகவே இயங்கி வரும் அதிரை பைத்துல்மாலை அணுகி நாங்கள் 400 ஏழைகளுக்கு உணவளிக்க இருக்கிறோம் என்று சொல்லி அவர்களின் ஆலோசனையின் பேரில் ஏழைக் குடும்பங்களுக்கு பெருநாள் தினத்திலோ அல்லது அடுத்த நாளோ மந்தி சமைத்து உணவளிக்க முன்வரக் கூடாதா?

ஊரில் பெருளாதார ஏற்றத்தாழ்வுகளாலும், குலப்பெருமையாலும் பிரிந்து கிடக்கும் பிறதெரு சொந்தங்களை அழைத்து ஒற்றுமையின் அவசியத்தை வழியுறுத்தி உறுக்கமான, கவலையான மார்க்க உபதேசங்கள் செய்து சந்தோசமாக ஒருவருக்கு ஒருவர் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த மந்தி சமைத்து ஊர் ஒற்றுமையை நிலை நாட்ட முயற்சிகள் செய்யக் கூடாதா?

முஸ்லீம்கள் என்றால் பிரியானி, ஆட்டுக்கறி தின்பவர்கள் என்று சொல்லும் பிற மதத்தவரை அழைத்து, பெருநாள் விருந்து என்று நம்முடையை அழகிய விருந்து உபசரிப்பை காட்டி, அவர்களுக்கு நாங்கள் இஸ்லாத்தில் இருப்பதால் எவ்வளவு சந்தோசமாக உள்ளோம் என்பதை சொல்லி தூய இறை மார்க்கத்தை எத்தி வைக்க ஓர் வாய்ப்பாக மந்தி சமைத்து முந்திக் கொண்டு நன்மையின் பக்கம் அழைக்கக் கூடாதா?

உணவுப் பழக்கமோ அல்லது சுகாதரச் சூழலோ எதன் விளைவோ அல்லது வேறு எதனாலோ ஊரில் நிறைய பேர் உயிர்கொல்லி நோயான கேன்சரில் பாதிக்கப்பட்டுள்ளார்களே, அவர்களை கண்டறிந்து அவர்களின் நோய்கான செலவுகளுக்கு இதுபோன்ற அனாச்சார செலவுகளுக்கு கிடைத்த தொகையை கொடுத்து உதவ முன்வரக் கூடாதா?

வசதி வாய்பின்றி கல்வி பயில கஷ்டப்பட்டு வெளியில் சொல்ல முடியாத எத்தனையோ இஸ்லாமிய சொந்தங்கள் உள்ளார்கள், ஏன் சில தினங்களுக்கு முன் கல்வி உதவி கேட்டு வலைப்பூக்களில் நிதியுதவி வேண்டி கோரிக்கை வைத்துள்ளார்கள், இது போன்றவர்களின் கல்வி செலவுக்கு மந்திக்கு ஆகும் செலவை கொடுத்து நன்மையை அள்ளிக் கொள்ளக்கூடாதா?

ஊரில் எத்தனையோ மனநோயாளிகள் சரியான பராமரிப்பின்றி அன்றாடம் சிரமத்துக்கு உள்ளாகிறார்களே, குறைந்த பட்சம் பெருநாள் தினத்திலாவது நல்ல உடையுடுத்தி, நல்ல உணவு கொடுத்து கவுரவித்து சந்தோசப்படக் கூடாதா?

எத்தனையோ நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் பல சிரமத்துக்கு மத்தியில் உள்ளார்கள், இது போன்ற பெருநாள் தினத்தில் அவர்களை சந்தித்து நலம் விசாரித்து, அவர்களுக்கு உணவோ அல்லது உதவியோ செய்து, இஸலாமியர்கள் இவ்வளவு கருணையாளர்கள் என்று அவர்களின் சிந்தனையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி தூய இஸ்லாத்தை நாடி அவர்கள் நம் வழி நாடி வர ஒரு தூண்டுகோலை ஏற்படுத்தக்கூடாதா? 

என்னதான் நடக்கிறது ஊரில்? 

ஒவ்வொரு பெருநாள் காலங்களில் என்ன ஆனது நமதூர் ஊர் செக்கடிமேடு நண்பர்களுக்கும், இளைஞர்களுக்கும் எத்தனை நாட்களுக்கு இப்படியே சாப்பாட்டையும் அரட்டையையும் முன்னிருத்தி பெருமையடிப்பார்கள்? இன்னுமா திருந்தவில்லை? ஏன் இந்த அவசியமற்ற பெருமை? நாளை நமது பிள்ளைகள் இவ்வாறே தொடர்ந்தால் அதன் விளைவாய் ஏற்படும் அந்த வலியை சொல்லிக்காட்ட ஆள் இருக்காது கிள்ளிப் போடத்தான் சுற்றியிருக்கும் கூட்டம்.

தேர்தல் நேரத்தில் கட்சிகளுக்காக ஓட்டு கேட்கவும் கூட்டுகளை உடைக்கவும் பல கூட்டணிகளில் பங்கெடுக்கும் நம் சகோதரர்கள், மந்தியென்றதும் முந்திக் கொண்டு இந்த சாப்பாட்டுக் கூட்டணி ஏன்? [ஒற்றுமையின் அவசியம் அறிந்துதான் செயல்படுகிறோம் என்றால் இதில் மட்டுமல்ல இன்னும் ஏனைய காரியங்களிலும் முன்னிருத்தி காட்டுவதுதான் சிறந்தது].
காஸாவில் முஸ்லீம்களுக்குஎதிராக இஸ்ரேல் நடத்தி வரும் பயங்கரவாதத்தில் நாளுக்கு நாள் மக்கள் கொல்லப்படும் இந்த சூழலில் செக்கடிமேடு சார்ந்த சில  சகோதரர்கள் இப்தார் நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்கள். ஆனால் அதே சகோதரர்கள் இந்த மந்தி விருந்தை அங்கீகரித்திருப்பது எவ்வகையான நிலைபாடு என்பது புரியவில்லை.

வீண் பெருமை, வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை என்று தனது திருமறையில் தெள்ளத் தெளிவாக அறிவித்து விட்டானே, வீண் பெருமைக்காக, தேவையின்றி வீண் விரயமாக செய்யப்படும் இவ்வாறான செயல்களால் அல்லாஹ்வின் நேசம் நெருங்குமா என்பதை நம் சகோதரர்கள் அனைவரின் சிந்தனைக்கே விட்டு விடுகிறோம்.

மேற்கண்ட கேள்விகள் உங்களின் சிந்தனையை சிதைக்கவல்ல, சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயே எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

அன்பான எங்கள் நண்பர்களே, சகோதரர்களே மேலே சொன்னவை எந்த ஒரு தனி நபர்கள் மேல் வெறுப்பு கொண்டு எடுத்து வைக்கப்பட்டது அல்ல. மாறாக நாம் எங்கே செல்கிறோம்? நம்முடைய வருங்கால சமுதாயத்திற்கு எவ்வகை அனாச்சார செயலை நற்செயலாக முன்னுதாரனமாக காட்டுகிறோம்? நாளை நமது பிள்ளை இதே வழியை நாடினால் பெருமைப்பட்டுக் கொள்ளும் நிலையில் இருப்போமா? அல்லது அவர்களின் நேர்வழி வேண்டி இறைஞ்சுவதில் இருப்போமா? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

நோன்பு காலத்தில் நீங்கள் கேட்ட மார்க்க சொற்பொழிவுகளில் நபி(ஸல்) அவர்களும், சத்திய சஹாபாக்களும் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை ஒரு கணம் சிந்தித்து பாருங்கள். பர்மா, சிரியா, பாலஸ்தீன், ஈராக் போன்ற நாடுகளில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டு நாளுக்கு நாள் உண்ண உணவிற்கு எண்ணிலா துயரங்களை சந்திக்கிறார்களே என்று எண்ணி, அல்லாஹ் நம்மை இந்த அளவுக்கு வைத்திருக்கிறானே என்று அவனுக்கு அதிகமதிகம் நன்றி செலுத்துங்கள்.

இது போன்ற வீண் விரய விருந்துகளை புறக்கணியுங்கள், நீங்கள் அறிந்தோ அறியாமலோ இதற்கு ஆதரவு கொடுத்திருந்தால் அதற்காக, அல்லாஹ்விடம் தவ்பா செய்யுங்கள். இந்த வீண் விரய உணவு உபசரிப்பில் கலந்து கொண்டிருந்தால் அதற்காக பரிகாரம் தேடுங்கள். இந்த வீண் விரய விருந்தை முதன் முதல் ஆரம்பித்து வைத்த சகோதர்களுக்கு இதன் தொடர் பாவங்கள் அவர்கள் கணக்கில் சேர்ந்து வருகிறது என்பதை உணர்ந்து அவர்களும் அல்லாஹ்விடம் பரிகாரம் தேடட்டும்.

அல்லாஹ் நம் எல்லோரையும் இது போன்ற வீண் விரையங்களை ஏற்படுத்தும் விருந்து உபசரிப்புகளிருந்து தடுத்து அனைவரையும் பாதுகப்பானாக. ஆமீன் !

அதிரையின் செய்தி ஊடகங்களில் பங்கெடுக்கும் சகோதர்களுக்கு மீண்டும் அன்பான வேண்டுகோள், நீங்கள் ஊரின் அன்றாட நிகழ்வுகளை சுடச் சுட செய்திகளாக பல இன்னல்களுக்கு மத்தியில் வெளியிட்டு வருகிறீர்கள் மாஷா அல்லாஹ்!, இதனை மிகப்பெரும் நற்பணியாக செய்து வருகிறீர்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால்  இது போன்ற வீண் விரய அனாச்சார நிகழ்வுகளை வெறும் செய்தியாக மட்டும் போடாமல், அந்த அனாச்சாரங்களை திட மனத்திடத்துடன் கண்டித்தும் வெளியிடுங்கள். இதுதான் இஸ்லாமிய ஊடகக்காரர்கள் செய்ய வேண்டிய துணிச்சலான செயலாக இருக்க முடியும். சமுதாய பெறுப்புணர்வுடன், எதிர்கால சந்ததிகளுக்கு நாம் எதை பதிந்து வைக்கிறோம் அவர்களுக்கு வரலாற்றில் ஏடாக எதைக் கொடுக்கப் போகிறோம் என்ற கவலையுடன் செய்திகளை வெளியிடுங்கள். கேடுகெட்ட தினசரிகளைப் போன்று இஸ்லாமியர்கள் பங்கெடுக்கும் ஊடகங்களும் அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதை வேண்டுகிறோம்.

இது போன்ற விரயங்களை தற்பெருமையாக இணையத்தில் வெளியிட்டு இதனை படிப்பவர்கள் சந்தோசமடைவார்கள் என்று தவறான நோக்கத்துடன் இருக்கிறார்கள் மந்தி விருந்து ஏற்பாட்டாளர்கள். இதற்கு விதிவிலக்காக அதிரையில் மார்ர்கத்திற்கு புறம்பான வீண் விரயங்களை சுட்டிக்காட்டி அதிலிருந்து நம்மக்களை தவிர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படும் இன்ஷா அல்லாஹ். இதனை பிற வலைப்பூக்கள் செய்யத் தவறினாலும் நாம் அதிலிருந்து பிறழாமல் எவருக்கும் அஞ்சாமல் செயல்படுவோம், மவுனமாக இருக்க மாட்டோம் என்பதற்கு இந்த பதிவும் முந்தைய பதிவுகளும் சாட்சி பகரும்.

இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மிக நெருக்கமானவர்களே அவர்கள் ஒவ்வொருவரையும் நேரிலோ அல்லது அலைபேசி வாயிலாகவோ அழைத்து எடுத்துச் சொல்வது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் இதனை ஒரு கண்டன பதிவாகவே பொதுவில் உங்கள் அனைவரின் முன் வைக்கிறோம். 

இஸ்லாமிய சமுதாய, நம்மக்களுக்கு ஒவ்வாத, புறம்பான செயல்கள் எதுவாயின் அதனை விமர்சிக்கவும், அவற்றிலிருந்து நம்மக்களை தவிர்த்திட வைக்கவும் அதிரைநிருபர் தளம் தயவு தாட்சனைகளின்றி செயல்படும் இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் பதிப்பகம்
editor@adirainirubar.in

நோன்பாளிகளே - 1 0

அதிரைநிருபர் பதிப்பகம் | July 01, 2014 | , , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

வல்ல அல்லாஹ்வின் அருளால் நோன்பு மாதத்தை அடைந்து நோன்பு வைப்பவர்களாக நாம் இருக்கிறோம். எல்லாப்புகழும் இறைவனுக்கே! (அல்ஹம்துலில்லாஹ்!) நாம் நோன்பிலும், பொதுவாகவும் கடைபிடிக்கும் காரியங்களைப் பற்றி பார்ப்போம்.

குர்ஆன்:

ரமலானின் தனிச்சிறப்பே இந்த மாதத்தில் குர்ஆன் அருளப்பட்டதுதான். அதனால் தினமும் குர்ஆனை நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் ஓதி வாருங்கள். ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் அவசியம் ஓதுங்கள்.

முதல் நோன்பு தொழுகை:

முதல் நோன்பு ஆரம்ப தொழுகையில் பள்ளி முழுவதும் நிரம்பி வழிந்த தொழுகையாளிகளை காண்பதற்கு மனதிற்கு நிறைவாக இருந்தது. தினமும் தொடர்ந்து வருபவர்களுக்கு இடம் இல்லாமல் பல சப்கள் கடந்து நிற்கும் அளவுக்கு இஷா தொழுகை, இரவுத்தொழுகை, பஜ்ர் தொழுகைகளுக்கு வந்த மக்களை பார்க்கும்பொழுது ஜூம்ஆவின் ஞாபகம் வந்தது. இத்தனை கூட்டமும் மற்ற நேரங்களில் எங்கு போனார்கள். வல்ல அல்லாஹ் அனைவருக்கும் ஹிதாயத் வழங்கட்டும்.

ஆடை அலங்காரம்:

நம் சகோதரர்கள் ஒரு விருந்துக்கு செல்வதென்றாலும், ஆபிஸ்க்கு செல்வதென்றாலும் வாசனை திரவியங்களை பூசிக்கொண்டு நல்ல ஆடைகளை அணிந்து செல்கிறார்கள்.

ஜூம்ஆ தினத்தன்று சாதாரண ஆடைகளையோ, கசங்கி போனதையோ அணிந்து வருகிறார்கள்.

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்.   (அல்குர்ஆன் : 7:31)

வல்ல அல்லாஹ் ஆடைகளால் உங்களை அழகாக்கிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறான். அதனால் வல்ல அல்லாஹ்வின் முன் தொழுகையில் நிற்கும்பொழுது சிறந்த ஆடைகளை அணிந்து நல்ல வாசனை திரவியங்களை பூசிக்கொண்டு வருவது சிறந்தது.

கொட்டாவி :

தொழும்பொழுது சிலர் வாயை பிளந்து ஆவென கொட்டாவி விடுவதை பார்த்திருக்கிறேன்.  (நீங்கள் தொழும்பொழுது பக்கத்தில் உள்ளவர்களை எப்படி பார்த்தீர்கள் என்று நினைக்கவேண்டாம். நான் தொழுது விட்டு வரும்பொழுது சுன்னத் மற்றும் 2வது ஜமாத் தொழுபவர்களை கவனிக்க நேரிடுகிறது).  (தொழுகையில் நம்மை படைத்த வல்ல அல்லாஹ்வுக்கு முன் நிற்கிறோம் என்ற உள்ளச்சம் இருக்க வேண்டும்) சிலர் சத்தத்துடனும் கொட்டாவி விடுவார்கள். இது நல்ல பண்பாக தெரியவில்லை. தொழும்பொழுதும் மற்றவர்களிடம் பேசிக்கொண்டு இருக்கும் நேரங்களிலும், தனியாக இருக்கும் நேரங்களிலும் கொட்டாவி வந்தால் வாயை ஆவென பிளக்காமல் சத்தம் இல்லாமல் கொட்டாவி நம்மை விட்டு அகலும்வரை நமது கையை கொண்டு வாயில் மூடிக்கொண்டு இருப்பது நல்ல பண்பாக இருக்கும். (கொட்டாவி நம்மோடு எல்லா காலங்களிலும் இருப்பது, அதனால் நாமும் கவனமாக இருக்க வேண்டும்).

சாக்ஸ் அணிபவர்களுக்கு:

ஊரில் பள்ளிக்கு சாக்ஸ் அணிந்து வருபவர்கள் குறைவாகவே இருப்பார்கள். வளைகுடா நாடுகளில் சாக்ஸ் அணிந்து தொழ வருபவர்கள் அதிகம் பேர். தொழும்பொழுது சுஜூதுக்கு சென்றால் கார்பெட்டில் உள்ள சாக்ஸ் வாடை நம்மை சிரமப்படுத்தும். சாக்ஸ் பயன்படுத்துபவர்கள் வேலை செய்யும் இடங்களில் குறிப்பாக ஆபிஸ்களில் வேலை செய்பவர்கள் ஷூவிலிருந்து காலை வெளியில் எடுத்து வைத்துக்கொள்ளலாம். ஷூவிற்குள் காற்று போக வாய்ப்பு இல்லாத காரணத்தால் காலில் உள்ள வேர்வை சாக்ஸிலிருந்து பள்ளியில் உள்ள கார்பெட்டில் ஈர்த்துவிடுகிறது.

சாக்ஸ் வாடை நம்மால் பள்ளிக்கு செல்வதிலிருந்து தடுப்பதற்கு தினமும் ஒரு சாக்ஸ் அணியலாம். ஒளு எடுத்த பிறகு மீண்டும் வேர்வை சாக்ஸை அணிந்து கொண்டு பள்ளிக்கு வருகிறார்கள். சாக்ஸை பள்ளிக்கு வெளியில் வைத்து விட்டு வருவது நலம் அளிக்கும். நிறைய பேர் சாக்ஸ் வாடையை பற்றி கண்டுகொள்வதில்லை.

பல்துலக்குவது:

நோன்பு வைத்திருக்கும் நேரத்தில் வாயை சுத்தம் செய்வது பற்றி சிலர் சந்தேகத்தில் இருப்பார்கள். மற்ற காலங்களை விட நோன்புக் காலங்களில் அதிகம் வாயை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

நோன்புக் காலங்களில் நாம் சாப்பிடாமல் இருப்பதால் வாயிலிருந்து வாடை அதிகமாக வரும். நம் வாயிலிருந்து வரும் வாடை நம் அருகில் உள்ள மனிதர்களை சிரமமப்படுத்துவதோடு, மலக்குமார்களையும் சிரமமப்படுத்தும். அதனால் ஸஹருக்கு எழுந்திருக்கும்பொழுதும், பின் தூங்கி எழுந்திருக்கும்பொழுதும், அஸருக்குப் பிறகு தூங்கி எழும்பொழுதும் நோன்பு திறப்பதற்கு முன்பாகவும் பல் துலக்குங்கள். தூங்கி எழுந்திருக்கும் நேரத்தில் பேஸ்ட் கொண்டும் மற்ற நேரங்களில் கை விரல் அல்லது மிஸ்வாக் குச்சி கொண்டு பல் துலக்கி வாயை மிகச் சுத்தமாக வைத்திருக்கலாம். (ஒரு சிறு துளி அளவு பேஸ்ட் எடுத்து நேரம் இருந்தால் எல்லா நேரங்களிலும் உபயோகப்படுத்தலாம்).

சில சகோதரர்கள் பஜ்ர் தொழுகைக்கு எழுந்திருக்கும்பொழுது வாயை மட்டும் கொப்பளித்து விட்டு தொழுச் செல்கிறார்கள். காரணம் தூக்கம் போய்விடுமாம். தூங்கி எழுந்தவுடன் வாய் வாடை போகும் அளவுக்கு பல் துலக்குவதுதான் சிறப்பு.

பல்துலக்குவதை பற்றி கீழ்க்கண்ட நபிமொழிகள் விளக்குவதை கவனியுங்கள்

என் சமுதாய மக்களுக்கு சிரமமாக இருக்கும் என நான் பயப்படவில்லையானால், ஒவ்வொரு தொழுகையின் போதும் பல்துலக்கும்படி அவர்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: (அபூஹுரைரா(ரலி) அவர்கள். நூல்: புகாரி,முஸ்லிம் - ரியாளுஸ்ஸாலிஹீன்).

நபி(ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து எழுந்தால், பல்துலக்கும் குச்சியால் பல் துலக்குவார்கள். (அறிவிப்பவர்: ஹுதைஃபா(ரலி) அவர்கள். நூல்: புகாரி,முஸ்லிம் - ரியாளுஸ்ஸாலிஹீன்).

(நபி(ஸல்) அவர்கள் வீட்டிற்கு வந்தால் முதலில் என்ன செய்வார்கள் என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். ''பல்துலக்குவார்கள்' என்று அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஷுரைஹ் இப்னு ஹானீ(ரஹ்)அவர்கள். நூல்: முஸ்லிம் ரியாளுஸ்ஸாலிஹீன்).

பல் துலக்குவது, வாயை சுத்தப்படுத்தும். இறைவனை திருப்தி படுத்தும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) அவர்கள். நூல்: நஸயீ, ரியாளுஸ்ஸாலிஹீன்).

எச்சில்(உமிழ்நீர்):

எச்சிலை சிலர் துப்பிக்கொண்டே இருப்பார்கள். எச்சிலை விழுங்குவதால் நோன்பு முறியாது. வாயில் உள்ள உமிழ்நீர் காய்ந்துவிட்டால் வாய் வரண்டு போய் நமக்கு சிரமத்தை ஏற்படுத்தும் அதனால் உமிழ்நீரை(எச்சில்) துப்ப வேண்டியதில்லை. சளியைத்தான் துப்ப வேண்டும்.

வாசனை திரவியங்கள்:

நோன்பு வைத்திருக்கும் நேரங்களில் வாசனை திரவியங்கள் சிலர் பயன்படுத்த கூடாது என்று சொல்லி வருகிறார்கள். ஆல்ஹகால் கலக்காத அத்தர் வகைகளை பயன்படுத்தலாம், பவுடர், எண்ணெய், சோப்பு இவைகளை தாரளமாக பயன்படுத்தலாம்.  தாராளமாக வாசனை சோப்பு போட்டு குளிக்கலாம்.

நம்முடைய சமுதாயத்தில் பிற மதக் கலாச்சாரத்தில் இருந்து நம் மக்களிடையே பரவி காலம் காலமாக நல்லது என்று பின்பற்றப்படும் காரியங்களில் பிறந்த நாள் விழாகாதணி விழாபூப்பெய்த விழாவரதட்சணை விழாதர்கா கந்தூரி விழாமௌலூது விழா போன்ற மார்க்கம் காட்டித்தராத விழாக்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்தக்காரியங்கள் நமக்கு நன்மையை பெற்றுத்தருமா?

சகோதரசகோதரிகளே! நோன்பை பற்றி சொல்லாமல் நமக்கு தெரிந்த சாதாரண காரியங்களைப்பற்றியாகூறப்போகிறீர்கள் என்று தாங்கள் நினைக்கலாம். மக்களால் உணரப்படாத தீமையான காரியங்கள் அனைத்தும் நம்மை விட்டு அகலும் வரை சொல்லிக்கொண்டே இருந்தால்தான் நானும், நீங்களும் இதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்ற அச்சம் ஏற்படும்.

நாம் வைத்திருக்கும் நோன்பு நம்முடைய தீமைகளை அகற்றி தூய்மையான இறையச்சத்துடன் கூடிய மக்களாக நம்மை மாற்ற வேண்டும்.

பிற மதத்தில் இருந்து இஸ்லாத்திற்கு இறக்குமதியான பழக்கங்கள்:

பிறமதத்தில் இருப்பது
இஸ்லாமியர்கள் பின்பற்றுவது
தேர் திருவிழா
சந்தனக் கூடு திருவிழா
காது குத்து விழா
காதணி விழா
வளைகாப்பு
ஒப்பிச்சு பார்ப்பது
கொடிமர விழா
கொடிமர கந்தூரி விழா
பிறந்த நாள் விழா
பிறந்த நாள் விழா
மஞ்சள் நீராட்டு விழா
பூப்பெய்த நீராட்டு விழா
கல், மரம், புனிதம்
தர்கா,மரம்,நார்சா புனிதம்
தவசம்,திதி
மூன்று,ஏழு,நாற்பது பாத்திஹா
வரதட்சணை
கைக்கூலி
தலை தீபாவளி
தலை பெருநாள்

பிறமதத்தில் இருந்து இறக்குமதியானதை மார்க்கம் அறியாமல் பின்பற்றி வந்த சிலர் தூய்மையான மார்க்கம் அறிந்த பிறகு இதிலிருந்து விலகி விட்டார்கள். என்னதான் விலகினாலும் குடும்பத்திற்குள் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் மற்றவர்களும் விலக வேண்டும் என்று.

பிறந்த நாள் விழா:

பிள்ளைகள் ஆசைப்பட்டார்கள் என்று பிற விழாக்களை புறக்கணிப்பவர்கள் கூட இந்த விழாவை அதிக இடங்களில் கொண்டாடி வருவதை பார்த்து வருகிறேன். மார்க்கத்தில் இல்லாத ஒன்றை செய்கிறீர்கள் என்று கூறினால் - நாங்கள் இணைவைக்கும் காரியம் செய்யவில்லையே என்று பதில் சொல்கிறார்கள். வளைகுடாவில் குடும்பத்தோடு உள்ள சகோதரர்கள் அதிகமான பேர் கொண்டாடி வருகிறார்கள். பிற மத நண்பர்கள் வீட்டு பிறந்த நாள் விழாவுக்கும் சென்று வருகிறார்கள். நாமும் இதிலிருந்து விலகி பிறர் கொண்டாடும் இடங்களுக்கும் செல்லாமல் இருப்பது நமக்கு நன்மையை பெற்றுத் தரும்.

காதணி விழா:

பெண் குழந்தை பிறந்து 2 வயது அல்லது 3 வயது வந்து விட்டதாகாதணி விழா அவசியம் செய்ய வேண்டும். அடி பத்திரிக்கையைகொடு ஊரைக் கூட்டி பிரியாணி விருந்தை. பகுத்தறிவு மார்க்கத்தில் இருந்து கொண்டு சகோதர சகோதரிகள் எங்கு சென்று கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

பூப்பெய்த நீராட்டு விழா:

ஒரு பெண் 10 வயதிலிருந்து 15 வயது வரைக்குள் (அதற்கும் மேலும் ஆகலாம்) இயற்கையாக வயதிற்கு வரும் நிகழ்ச்சி நடைபெறும். பல ஊர்களில் இந்த விழா பத்திரிக்கை அடித்து அழைக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறது. நமது ஊரில் கூப்பாடு மட்டும்தான் என்று நினைக்கிறேன். என் மகள் வயதிற்கு வந்து விட்டால் என்பதை ஊருக்கு அறிவித்து விருந்து போடும் நிகழ்ச்சியா இது.

நேற்று வரை பாவாடை சட்டைசுடிதார் அணிந்த பிள்ளைக்கு விலை உயர்ந்த பட்டு சேலை எடுத்து அந்த பிள்ளைக்கு கட்டி விடுவார்கள் (பொம்மைக்கு சுற்றுவது போல்). இந்தப்பிள்ளையை அனைவரும் வந்து பார்த்து விட்டு அன்பளிப்புகளை செய்து விட்டு விருந்திலும் கலந்து கொள்வார்கள்.

வெளியூரைச் சேர்ந்த என் உறவினர் வீட்டில் வயதிற்கு வந்த விழா பத்திரிக்கை அடித்து நடத்தப்போகிறார்கள் என்று கேள்விப்பட்டவுடன் போன் செய்து இந்த விழா மார்க்கம் காட்டித்தராததுஇதை செய்யாதீர்கள் என்று சொன்னேன். பிள்ளையின் தந்தைதாத்தா விருந்து வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். மேலும் தெருவில் உள்ளவர்கள் விருந்து வைக்கவில்லை என்றால் கேவலமாக பார்ப்பார்கள் என்ற பதில்தான் வந்ததது. மார்க்கத்தை விட இவர்களின் போலி கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டுமாம்.

வசதி உள்ளவர்கள் இந்த விழாவை நடத்தி விடுகிறார்கள். ஏழை வீட்டுப் பிள்ளைகள் நமக்கும் நம் வீட்டில் இந்த விழா நடத்தப்பட வேண்டும் என்று தங்கள் தாயாரிடம் சொல்லி வைத்து விடுகிறார்கள்.

ஒரு பெண் வயதிற்கு வந்து விட்டால் யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை. பெரிய அளவு செலவு எதுவும் செய்ய வேண்டியதில்லை. வயதிற்கு வந்த பெண்ணை பார்க்க போகிறேன் என்று அன்பளிப்பு எதுவும் செய்ய வேண்டியதில்லை.

வயதிற்கு வந்த பெண்ணிற்கு ஆரோக்கிய உணவுகள் அளித்து 7 நாள் அல்லது 10 நாள் வீட்டில் வைத்து நல்லபடியாக கவனித்து பிறகு சாதாரணமாக எப்பொழுதும் போவது போல் பள்ளிக்கூடம் அனுப்பி வைக்கலாம். சாதாரணமாக சென்ற பெண் புர்க்கா அணிந்து வெளியில் சென்றாலே இந்த பெண் வயதிற்கு வந்து விட்டது என்று புரிந்து கொள்வார்கள். ஊரைக் கூட்டி செய்யப்படும் காரியம் இது இல்லை.

தர்கா கந்தூரி விழா:

இதைப்பற்றி தாங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். தெருவுக்கு ஒரு புனித தர்கா. கந்தூரிக்கு செல்வதற்கு பிள்ளைகளுக்கு புது துணி உடுத்தி அழைத்துச் சென்றதை போன வருடத்தில் கூட பார்த்தேன். ஆனால் இஸ்லாம் காட்டித்தராத இந்த விழா வருடா வருடம் முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னால் குறைந்து கொண்டு வந்தது இப்பொழுது சில மெருகேற்றத்துடன் ஷைத்தானின் துணையுடன் நலமாக நடந்து கொண்டு இருக்கிறது. பிள்ளைகளை கவர்வதற்காக ராட்சத ராட்டினங்களும் உண்டு. பிள்ளைகள் வந்தால்தானே தாய்மார்களும் வரமுடியும். கந்தூரியை நடத்துபவர்கள் பார்த்தீர்களா கந்தூரிக்கு உள்ள கூட்டத்தை என்று பெருமைப்பட??? முடியும்.

ஒரு தடவை (1999ஆம் வருடம்) ஆட்டோவில் அறிவிப்பு கந்தூரி நிகழ்ச்சியில் ஒரு நடிகையின் பெயர் கூறி நாட்டியம் நடக்க உள்ளதுஅனைவரும் வந்து கலந்து கொண்டு அவுலியாவிடம் ஆசி பெற்று செல்லுங்கள் என்பதாகநடிகையின் நாட்டியத்தை பார்த்து விட்டு அவுலியாவிடம் ஆசி??? வாங்க வேண்டுமாம். இந்த அறிவிப்பை கேட்டு இதற்கு செல்லும் இஸ்லாமியர்களை என்ணி வருத்தப்படத்தான் முடிந்தது. (ஏகத்துவ மணம் வீச ஆரம்பித்தவுடன் தர்காவுக்கு செல்லும் கூட்டம் அதிகளவில் குறைந்திருப்பது உண்மையே).

வரதட்சணை விழா (பெண் வீட்டில் பகல் கொள்ளை):

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை (மஹர்) கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும்மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (அல்குர்ஆன் : 4:4)

வல்ல அல்லாஹ் கூறியதை நம் மக்கள் அலட்சியப்படுத்தி விட்டார்கள்.

ஆனால் பெண் வீட்டில் எல்லோரும் விழித்திருக்கும் சமயத்தில் மாப்பிள்ளையின் தந்தைதாய்சகோதரிகள் அனைவரும் ஒன்று கூடி வந்து பெண்ணின் பெற்றோர் சம்மதத்துடன் (மனவேதனைப்படுத்தி வலுக்கட்டாயமாக) பெண்ணிற்கு வேண்டிய வீடுநகைகளை கொள்ளையடித்து சென்று கொண்டு இருக்கிறார்கள். இந்த கொடுமையைப் பற்றி அதிகம் விளக்க வேண்டியதில்லை உங்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

மௌலூது விழா:

மௌலூது மாதம் என்று கணக்கு வைத்து மௌலூது ஓதப்படுகிறது. வீடு குடி போனாலும் ஓதப்படுகிறது. பரக்கத் வேண்டியும் ஓதப்படுகிறது. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஓதுகிறார்கள். யார் காட்டித் தந்தது. இதுவும் மார்க்கத்தில் இல்லாத காரியம்.

மார்க்கத்தில் இல்லாத பழக்கங்கள் இன்னும் நம் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளதற்கு ஓர் உதாரணம்: வளைகுடாவில் பல வருடங்கள் வேலை செய்து வந்த நண்பர் ஒருவர் வேலை பிடிக்காத காரணத்தாலும் உடல் நலம் கருதியும் ஊரோடு போய் தங்கி ஒரு சிறு கடை நடத்தி சிரமத்தோடு வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

மார்க்கம் அறியாத காலத்தில் கந்தூரி, மௌலூது போன்ற காரியங்களில் ஈடுபட்டவர். இவரின் உறவினர்கள் யாரும் மாறவில்லை. இவர் மட்டும் மாறியதால் உறவினர் அனைவரும் நீ நஜாத்(தவ்ஹீது)காரனாகி விட்ட காரணத்தால் உனக்கு முஸீபத்து பிடித்து விட்டது. எங்களைப்போல் மௌலூது ஒதுதர்காகளுக்குச் செல் என்று அறிவுரை கூறுகிறார்களாம். எனக்கு அல்லாஹ் உதவி செய்வான் என்று உறுதியோடு இருக்கிறார்.

இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதாமார்க்கம் காட்டித்தந்துள்ளதாஎன்று கேட்டால் எங்கள் முன்னோர்கள் செய்தார்கள் அதனால் செய்கிறோம் என்ற பதில் வரும். தூதர்தான் வழிகாட்டியே தவிரமுன்னோர்கள் வழிகாட்டியாகி விடமாட்டார்கள்.

எவர் ஒருவர் பிறமத கலாச்சாரத்தை பின்பற்றுகிறாரோ அவர் நம்மை சார்ந்தவரல்ல என்பது நபிமொழி (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி))

இந்த நபிமொழியை மனதில் வைத்து மார்க்கம் காட்டித்தராத காரியங்களை செய்து வரும் சகோதர, சகோதரிகள் தவ்பா செய்துவிட்டு இதிலிருந்து விலகி தூய்மையான மார்க்கத்தை அறிந்து அதன்படி வாழ முயற்சி செய்ய வேண்டும்.

மேலும் ஏகத்துவத்தை பிறருக்கு சொல்லும் சகோதரர்கள் கூட சில நேரங்களில் மேற்கண்ட காரியங்களில், (தர்காவுக்கு செல்லமாட்டார்கள்மௌலூது ஓத மாட்டார்கள்) தன் மனைவிஉறவினர்களுக்கு அடிபணிந்து சிலவற்றை செய்து விடுகிறார்கள். அவர்களுக்கு வல்ல அல்லாஹ்வின் எச்சரிக்கை:

வேதத்தை படித்து கொண்டே உங்களை மறந்து விட்டுமக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களாநீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன் : 2:44)
இன்ஷாஅல்லாஹ் வளரும்!
S.அலாவுதீன்
இது ஒரு ரமளான் ஸ்பெஷல் மீள்பதிவு

அதிரையில் பெருநாள் மறுநாள் மந்தி எனும் வீண் விரயம் ! 56

அதிரைநிருபர் பதிப்பகம் | August 11, 2013 | , , , , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… 

அருட்கொடையாளன் அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால், இந்த வருட ரமளான் மாதம் மிகச் சிறப்பாக அமைந்ததற்காக நம்மை எல்லாம் படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ்வின் உதவியால் வெளிநாடு மற்றும் வெளியூர்களில் உள்ள நம் அதிரைச் சகோதர சகோதரிகள் தங்களின் நண்பர்கள், உறவுக்கார சொந்தங்களுடனும், அவர்களோடு தங்கியிருக்கும் சக முஸ்லிம் சகோதரர்களோடும் பெருநாளை சந்தோசமாக கொண்டாடி மகிழ்ந்திருப்பார்கள். இதற்கு மேல் ஊரில் உள்ள நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகள் குடும்பத்து சொந்தங்கள், நண்பர்கள் அனைவருடன் அன்பும் நட்பும் பாராட்டி வழக்கம் போல் ஈகைத் திருநாளை கொண்டாடி மகிழ்ந்திருப்பார்கள் அல்ஹம்துலில்லாஹ்!

'ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'இஸ்லாத்தில் சிறந்தது எது' எனக் கேட்டதற்கு, '(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என்றார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.  புகாரி 12.  Volume :1 Book :2

அதிரையில் நம்மோடு நெருங்கிப் பழகும் சகோதரர்களின் நட்பு பாராட்டும் ஏற்பாட்டால், பெருநாள் விருந்து என்று 300க்கு மேற்பட்டவர்களுக்கு விருந்து பரிமாறி தங்களின் உணவு உண்னும் நிகழ்வை நடத்தி ஈகை திருநாளின் புனித நோக்கத்திற்கு மாற்றாக அமையப் பெற்றதை ஒட்டு மொத்த அதிரை முஸ்லீம்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த ‘மந்தி’ விருந்தோம்பலில் கலந்து கொண்ட 90% சதவீதத்திற்கு மேற்பட்ட சகோதரர்கள் தங்களின் அன்றைய உணவுக்கு திண்டாடுகிறவர்களா? 

பெருநாள் தினத்தன்று அதனைத் தொடரும் விடுமுறை நாட்களில் தாய் தந்தை, மனைவி, குழந்தைகள், உடன்பிறந்த சகோதர சகோதரிகள் என்று ஒன்று கூடி சந்தோசமாக கொண்டாடப்பட வேண்டிய நாட்கள், இந்த மந்தி விருந்திற்கு அழைக்கப்பட்டவர்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் தங்களுக்கென்று வீடு குடும்பம் இல்லாமல் இருப்பவர்களா !?

குடும்பங்கள் ஒன்றும் கூடும் வீட்டில் தாய், தந்தை, சகோதர சகோதரிகள், மனைவி, குழந்தைகளை விட்டு விட்டு இவ்வாறான விருந்தோம்பல் அவசியம் தானா ?

ஒன்றுகூடல் பெருமைக்கும் பகட்டுக்காகவும் இவ்வகை விருந்து வீண் விரையங்கள் நடைபெறுகிறதே, இதனை எடுத்துக் கூறி நல்வழியில் செலவிடச் சொல்ல ஊரில் எந்த ஒரு ஆலிமுக்கும் தோன்றவில்லையா? அல்லது வெளியூர் ஆலிம்(கள்) சொன்னால் கேட்போம் என்று கொடிதூக்கும் சகோதரர்களும் இந்த மந்தியில் கலந்து கொண்டதை கண்டித்து அந்த வெளியூர் ஆலிம் அவர்களும் இதற்கு வாய் திறக்கவில்லையா?

அனாச்சாரங்களை தட்டிக்கேட்க வேண்டியவர்களே பம்மிக் கொண்டு நமக்கொரு அழைப்பில்லையே என்று ஏங்கிக் கொண்டிருகிறார்களா ? அவர்களெல்லாம் எங்கே ? பொதுக் காரியங்களில் ஈடுபடும் சகோதரர்கள் இவ்வாறான பகட்டுக்காக புகைப்படமெடுத்து விளம்பரப்படுத்தப்படும் விருந்துகளில் கலந்து கொள்வது அவர்களின் பொதுநலச் சேவைகளை கேள்விக் குறியாக்காதா ?

பெருநாள் பகல் தினத்திலோ அல்லது பெருநாள் முடிந்த அடுத்தடுத்த நாட்களிலோ ஏழைக் குடும்பங்களின் திருமணத்தை நடத்தி வலிமா என்ற பெயரிலா இவ்வாறான மந்தி விருந்து கொடுக்கப்பட்டுள்ளது !?

கடந்த சில வருடங்களாக தங்களின் பொருளாதாரத்தை அர்த்தமற்ற இது போன்ற பொழுதுபோக்கு மற்றும் பகட்டுக்கான விருந்துகளுக்கு பண உதவி செய்பவர்கள் அதற்கு உடந்தையாக செல்பவர்கள் பின்வரும் இறைவசனத்தை கொஞ்சம் நிதானமாக வாசித்துப் பாருங்கள்.

மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. குர் ஆன் 4:36. 

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. குர் ஆன் 7:31

ஒருவேளை உணவுக்கு அண்ணல் நபி(ஸல்) அவர்களும், அவர்களின் குடும்பமும், சத்திய சஹாபாக்களும் எவ்வளவு கஷ்டப்பட்டிருபார்கள்? அந்த கஷ்டத்தில் ஒரு துளி உணவின்றி நாம் கஷ்டப்பட்டிருப்போமா? நம் கண்களின் கண்ணீர் வர வைக்கும் அந்த சம்பவங்களை  சிறிதளவேனும் அறிந்து கொள்ள இங்கே சுட்டிப் பாருங்கள் http://adirainirubar.blogspot.in/2013/05/8.html

இது போன்றவைகளுக்கு செலவுகள் செய்யும் பணத்தில், ஊரில் எத்தனையோ பேர் வட்டி என்ற கொடுமையால் அறிந்தோ அறியாமலோ விழுந்து கஷ்டப்படுகிறார்கள், அவர்களில் வருடத்திற்கு ஒருவரையாவது மீட்டெடுக்க முன் வரக்கூடாதா?

ஊரில் எத்தனையோ எழை கன்னிப் பெண்கள் தங்களது திருமணச் செலவு செய்ய நாதியற்று இருக்கிறார்களே, இது போன்ற பெருநாள் தினத்தில் மந்திக்காக ஒன்று கூடுபவர்கள் அந்த ஏழைகளுக்கு பெருநாள் தினத்தில் திருமணம் நடத்தி வலிமா விருந்தை அல்லாஹ்வுக்காக ஒன்றுகூடி மந்தி சமைத்து அந்த ஏழை குடும்பங்களிடம் மகிழ்ச்சியை வரவழைக்க  முன்வரக் கூடாதா?

அனாதை பிள்ளைகள் உள்ள நமதூர் எத்தீம்கானா மதர்ஸாவுக்காகவது அன்றைய தினம் இது போன்ற மந்தி சமைத்துக் கொடுத்து அந்த அனாதைகளின் முகத்தில் மகிழ்ச்சியை மிளிரவிட்டு நன்மையை அள்ள முந்தக் கூடாதா?

பல வருடங்களாக இஸ்லாமியர்கள் ஏற்றம் பெறவும் முஸ்லீம் ஏழைகளுக்கு உதவுவதற்காகவே இயங்கி வரும் அதிரை பைத்துல்மாலை அணுகி நாங்கள் 300 ஏழைகளுக்கு உணவளிக்க இருக்கிறோம் என்று சொல்லி அவர்களின் ஆலோசனையின் பேரில் ஏழைக் குடும்பங்களுக்கு பெருநாள் தினத்திலோ அல்லது அடுத்த நாளோ மந்தி சமைத்து உணவளிக்க முன்வரக் கூடாதா?

ஊரில் பெருளாதார ஏற்றத்தாழ்வுகளாலும், குலப்பெருமையாலும் பிரிந்து கிடக்கும் பிறதெரு சொந்தங்களை அழைத்து ஒற்றுமையின் அவசியத்தை வழியுறுத்தி உறுக்கமான, கவலையான மார்க்க உபதேசங்கள் செய்து சந்தோசமாக ஒருவருக்கு ஒருவர் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த மந்தி சமைத்து ஊர் ஒற்றுமையை நிலை நாட்ட முயற்சிகள் செய்யக் கூடாதா?

முஸ்லீம்கள் என்றால் பிரியானி, ஆட்டுக்கறி திங்கிறவர்கள் என்று சொல்லும் பிற மத்தத்தவரை அழைத்து, பெருநாள் விருந்து என்று நம்முடையை அழகிய விருந்து உபசரிப்பை காட்டி, அவர்களுக்கு நாங்கள் இஸ்லாத்தில் இருப்பதால் எவ்வளவு சந்தோசமாக உள்ளோம் என்பதை சொல்லி தூய இறை மார்க்கத்தை எத்தி வைக்க ஓர் வாய்ப்பாக மந்தி சமைத்து முந்திக் கொண்டு நன்மையின் பக்கம் அழைக்கக் கூடாதா?

உணவுப் பழக்கமோ அல்லது சுகாதரச் சூழலோ எதன் விளைவோ அல்லது வேறு எதனாலோ ஊரில் நிறைய பேர்உயிர்கொல்லி நோயான கேன்சரில் பாதிக்கப்பட்டுள்ளார்களே, அவர்களை கண்டறிந்து அவர்களின் நோய்கான செலவுகளுக்கு இதுபோன்ற அனாச்சார செலவுகளுக்கு கிடைத்த தொகையை கொடுத்து உதவ முன்வரக் கூடாதா?

வசதி வாய்பின்றி கல்வி பயில கஷ்டப்பட்டு வெளியில் சொல்ல முடியாத எத்தனையோ இஸ்லாமிய சொந்தங்கள் உள்ளார்கள், ஏன் சில தினங்களுக்கு முன் கல்வி உதவி கேட்டு வலைப்பூக்களில் நிதியுதவி வேண்டி கோரிக்கை வைத்துள்ளார்கள், இது போன்றவர்களின் கல்வி செலவுக்கு மந்திக்கு ஆகும் செலவை கொடுத்து நன்மையை அள்ளிக் கொள்ளக்கூடாதா?

ஊரில் எத்தனையோ மனநோயாளிகள் சரியான பராமரிப்பின்றி அன்றாடம் சிரமத்துக்கு உள்ளாகிறார்களே, குறைந்த பட்சம் பெருநாள் தினத்திலாவது நல்ல உடையுடுத்தி, நல்ல உணவு கொடுத்து கவுரவித்து சந்தோசப்படக் கூடாதா?

எத்தனையோ நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் பல சிரமத்துக்கு மத்தியில் உள்ளார்கள், இது போன்ற பெருநாள் தினத்தில் அவர்களை சந்தித்து நலம் விசாரித்து, அவர்களுக்கு உணவோ அல்லது உதவியோ செய்து, இஸலாமியர்கள் இவ்வளவு கருணையாளர்கள் என்று அவர்களின் சிந்தனையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி தூய இஸ்லாத்தை நாடி அவர்கள் நம் வழி நாடி வர ஒரு தூண்டுகோலை ஏற்படுத்தக்கூடாதா? 

என்னதான் நடக்கிறது ஊரில்? 

என்ன ஆனது நமதூர் ஊர் செக்கடிமேடு நண்பர்களுக்கும், இளைஞர்களுக்கும் எத்தனை நாட்களுக்கு இப்படியே சாப்பாட்டையும் அரட்டையையும் முன்னிருத்தி பெருமையடிப்பார்கள்? இன்னுமா திருந்தவில்லை? ஏன் இந்த அவசியமற்ற பெருமை? நாளை நமது பிள்ளைகள் இவ்வாறே தொடர்ந்தால் அதன் விளைவாய் ஏற்படும் அந்த வலியை சொல்லிக்காட்ட ஆள் இருக்காது கிள்ளிப் போடத்தான் சுற்றியிருக்கும் கூட்டம்.

தேர்தல் நேரத்தில் கட்சிகளுக்காக ஓட்டு கேட்கவும் கூட்டுகளை உடைக்கவும் பல கூட்டணிகளில் பங்கெடுக்கும் நம் சகோதரர்கள், மந்தியென்றதும் முந்திக் கொண்டு இந்த சாப்பாட்டுக் கூட்டணி ஏன்? [ஒற்றுமையின் அவசியம் அறிந்துதான் செயல்படுகிறோம் என்றால் இதில் மட்டுமல்ல இன்னும் ஏனைய காரியங்களிலும் முன்னிருத்தி காட்டுவதுதான் சிறந்தது].

வீண் பெருமை, வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை என்று தனது திருமறையில் தெள்ளத்தெளிவாக அறிவித்து விட்டானே, வீண் பெருமைக்காக, தேவையின்றி வீண் விரயமாக செய்யப்படும் இவ்வாறான செயல்களால் அல்லாஹ்வின் நேசம் நெருங்குமா என்பதை நம் சகோதரர்கள் அனைவரின் சிந்தனைக்கே விட்டு விடுகிறோம்.

மேற்கண்ட கேள்விகள் உங்களின் சிந்தனையை சிதைக்கவல்ல, சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயே எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த மந்தி உணவு விருந்துக்கு மட்டுமல்ல, நோன்பு காலங்களில் இஃப்தார் நிகழ்ச்சி என்று, வீட்டில் நோன்பு திறக்க அல்லது பள்ளிவாயில்களில் எல்லா வசதி வாய்ப்புகள் உள்ளவர்களுக்கு தெருக்களிலும், பொது இடங்களிலும், விளையாட்டு திடல்களிலும் வீண் பெருமைக்காக ஏற்பாடு செய்து விளம்பரங்கள் தேடும் நம் சகோதரர்கள் அனைவருக்குமே இங்கே பதிக்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் பொருந்தும்.

அன்பான எங்கள் நண்பர்களே, சகோதரர்களே மேலே சொன்னவை எந்த ஒரு தனி நபர்கள் மேல் வெறுப்பு கொண்டு எடுத்து வைக்கப்பட்டது அல்ல. மாறாக நாம் எங்கே செல்கிறோம்? நம்முடைய வருங்கால சமுதாயத்திற்கு எவ்வகை அனாச்சார செயலை நற்செயலாக முன்னுதாரனமாக காட்டுகிறோம்? நாளை நமது பிள்ளை இதே வழியை நாடினால் பெருமைப்பட்டுக் கொள்ளும் நிலையில் இருப்போமா ? அல்லது அவர்களின் நேர்வழி வேண்டி இறைஞ்சுவதில் இருப்போமா ? என்பதை சிந்தித்துப்பாருங்கள்.

நோன்பு காலத்தில் நீங்கள் கேட்ட மார்க்க சொற்பொழிவுகளில் நபி(ஸல்) அவர்களும், சத்திய சஹாபாக்களும் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை ஒரு கணம் சிந்தித்து பாருங்கள். பர்மா, சிரியா, பாலஸ்தீன், ஈராக் போன்ற நாடுகளில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டு நாளுக்கு நாள் உண்ண உணவிற்கு எண்ணிலா துயரங்களை சந்திக்கிறார்களே என்று எண்ணி, அல்லாஹ் நம்மை இந்த அளவுக்கு வைத்திருக்கிறானே என்று அவனுக்கு அதிகமதிகம் நன்றி செலுத்துங்கள்.

இது போன்ற வீண் விரய விருந்துகளை புறக்கணியுங்கள், நீங்கள் அறிந்தோ அறியாமலோ இதற்கு ஆதரவு கொடுத்திருந்தால் அதற்காக, அல்லாஹ்விடம் தவ்பா செய்யுங்கள். இந்த வீண் விரய உணவு உபசரிப்பில் கலந்து கொண்டிருந்தால் அதற்காக பரிகாரம் தேடுங்கள். இந்த வீண் விரய விருந்தை முதன் முதல் ஆரம்பித்து வைத்த சகோதர்களுக்கு இதன் தொடர் பாவங்கள் அவர்கள் கணக்கில் சேர்ந்து வருகிறது என்பதை உணர்ந்து அவர்களும் அல்லாஹ்விடம் பரிகாரம் தேடட்டும். இவ்வாறான விருந்து உபசரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட அந்த வீட்டின் பெறுப்பாளர்கள் அல்லாஹ்விடம் தவ்ஃபா செய்யட்டும்.

அல்லாஹ் நம் எல்லோரையும் இது போன்ற வீண் விரையங்களை ஏற்படுத்தும் விருந்து உபசரிப்புகளிருந்து தடுத்து பாதுகப்பானாக. ஆமீன் !

அதிரையின் செய்தி ஊடகங்களில் பங்கெடுக்கும் சகோதர்களுக்கு அன்பான வேண்டுகோள், நீங்கள் ஊரின் அன்றாட நிகழ்வுகளை சுடச் சுட செய்திகளாக பல இன்னல்களுக்கு மத்தியில் வெளியிட்டு வருகிறீர்கள் மாஷா அல்லாஹ்!, இதனை மிகப்பெரும் நற்பணியாக செய்து வருகிறீர்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இஸ்லாமிய மார்க்கத்துக்கு விரோதமான இது போன்ற விரயங்களை, புறம்பான நிகழ்வுகளை வெறும் செய்தியாக மட்டும் போடாமல், அந்த அனாச்சாரங்களை மனத்திடத்துடன் கண்டித்தும் வெளியிடுங்கள். இதுதான் இஸ்லாமிய ஊடகக்காரர்கள் செய்ய வேண்டிய துணிச்சலான செயலாக இருக்க முடியும். சமுதாய பெறுப்புணர்வுடன், எதிர்கால சந்ததிகளுக்கு நாம் எதை பதிந்து வைக்கிறோம் அவர்களுக்கு வரலாற்றில் ஏடாக எதைக் கொடுக்கப் போகிறோம் என்ற கவலையுடன் செய்திகளை வெளியிடுங்கள். கேடுகெட்ட தினசரிகளைப் போன்று இஸ்லாமியர்கள் பங்கெடுக்கும் ஊடகங்களும் அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதை வேண்டுகிறோம்.

ஊரில் நடைபெரும் இது போன்றவைகளை சுட்டிக்காட்ட உங்களுக்கு வாய்ப்புகள் இல்லையா? தாராளமாக அதிரைநிருபர் தளத்தின் நெறியாளரோடு மின்னஞ்சல் வழி (editor@adirainirubar.in) தொடர்பு கொள்ளுங்கள், விரைவில் அல்லாஹ்வின் உதவியுடன் உண்மையை ஊராருக்கு எடுத்துரைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறோம். இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஆதரவாகவும் உங்களுக்கு பக்க பலமாக இருந்து செயல்பட தயாராக இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ். [தனி மனித தரக் குறைவு, வார்த்தை தாக்குதல் அவர்களின் நடத்தைகள் பற்றிய விமர்சனம் தவிர்த்திடுங்கள்].

இது போன்ற விரயங்களை தற்பெருமையாக இணையத்தில் வெளியிட்டு இதனை படிப்பவர்கள் சந்தோசமடைவார்கள் என்று தவறான நோக்கத்துடன் இருக்கிறார்கள் மந்தி விருந்து ஏற்பாட்டாளர்கள். இதற்கு விதிவிலக்காக அதிரையில் மார்ர்கத்திற்கு புறம்பான வீண் விரயங்களை சுட்டிக்காட்டி அதிலிருந்து நம்மக்களை தவிர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படும் இன்ஷா அல்லாஹ். இதனை பிற வலைப்பூக்கள் செய்யத் தவறினாலும் நாம் அதிலிருந்து பிறழாமல் எவருக்கும் அஞ்சாமல் செயல்படுவோம், மவுனமாக இருக்க மாட்டோம் என்பதற்கு இந்த பதிவும் முந்தைய பதிவுகளும் சாட்சி பகரும் என்பதை நினைவுருத்துகிறோம்.

இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மிக நெருக்கமானவர்களே அவர்கள் ஒவ்வொருவரையும் நேரிலோ அல்லது அலைபேசி வாயிலாகவோ அழைத்து எடுத்துச் சொல்வது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் இதனை ஒரு கண்டன பதிவாகவே பொதுவில் உங்கள் அனைவரின் முன் வைக்கிறோம். 

இஸ்லாமிய சமுதாய, நம்மக்களுக்கு ஒவ்வாத, புறம்பான செயல்கள் எதுவாயின் அதனை விமர்சிக்கவும், அவற்றிலிருந்து நம்மக்களை தவிர்த்திட வைக்கவும் அதிரைநிருபர் தளம் தயவு தாட்சனைகளின்றி செயல்படும் இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் பதிப்பகம்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு