அது ஒரு சின்னக் குடும்பம்! செல்வக் குடும்பம்! திரண்ட சொத்து. கணவன்-மனைவி, ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு ஒரே ஒரு பெண்பி ள்ளை வயது’ பதினாறு கூடக் கூடப் போனால் பதினெட்டுக்கு மேல் போகாது. தாயும் தந்தையும் நடுத்தர வயதினரே!
கணவருக்கு அரசாங்கத்தில் பெரிய வேலை. பெரிய சம்பளம், மாத்ச் சம்பளம் வாங்கித்தான் குடும்பம் ஓட்ட வேண்டும் என்ற நிலை இல்லை. பூர்வீக சொத்துக்கள் நகை நட்டுகள் குவிந்து கிடக்கிறது. இதையெல்லாம் ஆள ஒரு ஆண்பிள்ளை இல்லாத குறை ஒன்றே அவர்கள் குறை. மற்றதுக்கு எல்லாம் சுக்கூர் அல்லா!
ஆண்பிள்ளை கேட்டு தவமா தவமிருந்தார்கள். பெண்பிள்ளை ஒன்றுக்கு பிறகு தாய் வயிற்றில் பூச்சிபுழு எதுவும்உசும்பவில்லை. காட்டாத டாக்டரிடமெல்லாம் காட்டினார்கள். திங்காத மருந்தெல்லாம் திண்டார்கள். போகாத பள்ளிவாசல் இல்லை. நேராத நேத்திக் கடன் இல்லை. காசை காசென்று பார்க்காமல் தண்ணீர்’ செலவு செய்தார்கள். ஒன்றும் கைகூடவில்லை. ’கல்லசை-என்னசை’ என்று சொல்லி விட்டது அடிவவுறு. ஆம்புளே வாரிசு இல்லே. பொம்புளே புள்ளே ஒன்னே ஒன்னுதான். ‘’தலைலே போட்டு வச்ச விதி யாராலே மாத்த முடியும்’! என்று சும்மா இருந்து விட்டார்கள். திரண்டு கெடக்கும் எல்லா சொத்துக்கும் ஒரே ஒரு பெண் பிள்ளைதான் வாரிசு. குடும்பம் ஓடியது.
வீட்டில் பெரிய கொல்லை. அங்கே ஒரு கீத்து கொட்டகை! கறுக்கு மட்டையில் செய்த படல் [கதவு] கொட்டகைக்குள் ஒரு வயதான கிழவி. வயது எழுபத்தைந்து அல்லது எழுபத்து ஏழு இருக்கும்.
வீட்டுக்கார அம்மா ஒரு மண்சட்டியில் சோறும் சோத்துக்கு மேலேகறியும் ஆணமும் ஊத்தி கிழவிக்கு கொண்டு போய் கொடுக்கும். யார் அந்த கிழவி என்று பெண் பிள்ளைக்கு தெரியாது. கிழவி ‘கருப்பா? செவப்பா? கட்டையா? நெட்டையா?’ என்றும் தெரியாது!. யாரோ ஒரு வயதான கிழவி!. பொம்புளைக்கு வயசானா அவகிழவிதானே!
ஒருநாள் ‘’நீ சோறு போடுறீயே! அந்த கெளவி யாரும்மா?’’ பிள்ளை கேட்டது.
’’அதெல்லாம் தெரிஞ்சு நீ என்ன பண்ணப் போறே? பேசாமே போயி உன் வேலையைப் பாரு!’’ அம்மாவின் காட்டமான பதில்!
சில நாள் கழித்து பொம்புளே புள்ளே அதே கேள்வியை திரும்பவும் கேட்டது ’’என்னா? நீ கிளிப்பிள்ளை மாதிரி கேட்டதேயே கேட்டுகிட்டு இருக்கே? ஒருக்கா சொன்னா தெரியாதா?” பிள்ளை மேல் அம்மா எரிஞ்சு விழுந்தாள்! பிள்ளை ஒன்னும் பேசாமே வாயை மூடிகிட்டு போச்சு!
இன்னும் சில நாள் கழித்து புள்ளே அதே கேள்வியை கேட்டது.
அம்மாவின் அதே பதில் வந்தது. ஆனால், பிள்ளையோ அம்மாவின் பதிலைக் கேட்டு வழக்கம் போல் சும்மா இருக்கவில்லை. வயசு வந்துடுச்சுல்ல! சும்மா இருக்குமா?’’ நீ பதில் சொன்னாத்தான் சோறு உம்பேன்!. இல்லேனா பட்டினி கிடப்பேன்! பள்ளிக்கூடம் போக மாட்டேன்.” என்று சத்தியாகிரக அறிக்கை வெளியிட்டது.
உண்ணாவிரதம் தொடங்கியது.. “பசி தாங்க மாட்டா! இன்னும் கொஞ்ச நேரஞ்செண்டு போட்டுக் கொடுத்தா பேசாம வாயே மூடிகிட்டு உண்டுட்டு போயிடுவா!” என்று தாய் போட்ட கணக்கு தப்பா போச்சு! உண்ணாவிரதம் போல் தொடர்ந்தது.
இது சென்னை அண்ணா சிலையில் இருக்கும் உண்ணாவிரதம் அல்ல!.
காலை ஆறு மணிக்கு தொடங்கி ஆறு இருபத்தொரு நிமிஷத்திலேயே முடித்து ஆறே முக்காலுக்கு வீட்டுக்கு பிரேக் பாஸ்ட் எடுக்க போகும் உண்ணாவிரதம் அல்ல!? [அதாவதுBed-Coffeeகும் Break-fastக்கும் இடையே கொஞ்சம் மெரீனா காத்து வாங்கும் உண்ணாவிரதம் அல்ல!]
இது வீட்டிற்குள் நடந்த உண்ணா நோன்பு! அங்கே வங்க கடலோரம் தங்க மனம் கொண்ட அண்ணா துயில் கொள்ளும் அண்ணாசமாதியும், அவரின் சிலையும் இல்லை. மெரீனா பீச்இல்லை!.
இந்த சிறு பெண் பிள்ளையின் உண்ணாவிரதம் எதிர்வரும் தேர்தலில் ஒட்டு வாங்க வியூகம் வகுத்து மேற்கொண்ட ‘கண்கட்டி’ உண்ணாவிரதம் அல்ல! ஒரு வயதான மூதாட்டிக்கு தன் தாய்-தந்தையரே இழைக்கும் கொடுமையை எதிர்த்து நடத்தும் மனித உரிமை போராட்டம். ஒரு மணி நேரம் தொடர்ந்தது உண்ணா நோம்பு!
தாய் மனம் அல்லவா! பத்து மாதம் சுமந்து தவமிருந்து பெத்த பிள்ளையாச்சே! தாய் மனம் கேக்குமா! மகளின் பசி பார்த்து தவித்தது தாய் மனசு. “சோத்தை உண்ணு! நான் சொல்றேன்!” சொன்னது தாய்.
’’ஊஹூம்! முடியாது; முதலில் நீ சொல்! பிறகு நான் உன்கிறேன்!” இது பிள்ளையின் குரங்கு பிடி!
தாயின் ’பாச்சா’ பெற்ற பிள்ளையிடம் பலிக்கவில்லை. ‘’சரி! சொல்றேன் கேளு!” தாய் தொடங்கினாள் அந்த கதையை.
“நான் சின்ன புள்ளையா இருந்தப்போ இந்த பொம்புளே இங்கே வேலை தேடி வந்தாளாம். ’’உம்மா, வாப்பா சொந்தகாரங்க யாருமில்லே; நான் ஒரு அநாதை ஆதரிப்பார் யாருமில்லே! உன்கச் சோறும், உடுத்த துணியும், தங்க இடமும் தாங்க! நேரங்காலம் பாக்காமே சொன்ன வேலையும் பாக்குறேன்; சொல்லாத வேலையும் பாக்குறேன்னு சொல்லி வேலை கேட்டு உன் பாட்டியோட காலை கட்டி புடிச்சு அழுதாலாம்! பார்த்தா இரக்கமா இருந்துச்சாம்! உன் பாட்டி வேலைக்கு சேர்த்துக்கிட்டா. அன்னேயிலேயிருந்து அவ நம்ம ஊட்டுலே வேலை செஞ்சுக்கிட்டு இருக்கா.
எனக்கு கல்யாணம் கொஞ்ச நாளைலே உன் பாட்டிக்கு ஏலாமை வந்து படுத்த படுக்கையா கெடந்தா! எல்லாத்தையும் இவதான் பாத்தா! ஒருநாள் என்னை கூப்பிட்டு, அந்த வேலக்காரி நம்மாலே நம்பி நம்மட்டேயே இருந்துட்டா! அவளே நீ நல்லா வச்சுக்கோ! அவளுக்கும் வயசாச்சு! ஏலாமை எடஞ்சல் எதுவந்தாலும் காசு பணத்தை பார்க்காமே நல்ல டாக்டர்ட்டே காட்டு! அல்லாஹ்வோட விதி வந்து அவ மவுத்தா போனா நல்லபடியா மையத்து எடுத்துடு’’ண்டு உன் பாட்டி ஒசியத்து சொல்லிட்டு கண்ணை மூடிட்டா! ஒன் பாட்டி போன ரெண்டு மூனு வருசத்திலே இவளும் கொணங்கிட்டா!” என்றுஉம்மா சொன்னாள்!
‘கொணங்கிட்டா’ என்றால் என்னாமா?’’ பிள்ளை கேட்டது.
‘’அதா?! வயசாயி சீக்கு வந்து வேலை செய்ய முடியாமே போறது!’’ அம்மா சொன்னாள்.
’’கொஞ்ச நாள்ளே அவளுக்கு ஒடம்பெல்லாம் எலைக்க ஆரம்பிச்சுடுச்சு. ‘லொக்கு-லொக்கு’ இரும வேறே வந்து இருமி-இருமி கண்ட-கண்ட எடத்துலே எச்சியே துப்புனா! டாக்டர்டே கொண்டுபோய் காட்டி என்னாண்டு கேட்டோம். டாக்டர் டிகிரி வச்சு பாத்துட்டு ‘டிபி’ண்டு சொன்னாரு’’.
டி.பி.ண்டா என்னா?’’ண்டு கேட்டோம். ’’அதா! அது காச நோய்! ஒரே இருமலா இருமும். சளி சளியா வாயாலே கக்கும். கெட்ட சீக்கு கிட்டே யாரும் போகாதீய. ஒட்டிக்கிடும்’’ என்றார்.
அதான் அந்த பொம்புலேயே கொல்லையிலே கொட்டகை போட்டு தனியா வச்சுருக்கேன்! நீ கிட்டே போயிடாதே! ஒட்டிக்கிடும்’’ என்று அம்மா சொன்னாள்.
இதைக் கேட்ட பிள்ளை தன் ஒன்னரை மணி நேர உண்ணாவிரதத்தை ‘கை’விட்டு செம்புலே இருந்த தண்ணியிலே கை கழுவி சோறு உண்டது. எல்லா உண்ணாவிரதமும் ஆக கடைசியில் ‘கைவிடப்பட்ட’ அநாதை ஆகிப்போச்சு! பாவம் உண்ணாவிரதம்!. உண்ணாவிரதம் முடிஞ்சா அடுத்தது உங்கிற வேலைதானே உண்ணாவிரதம் இருந்துட்டு சோத்துலே உக்காந்தா நல்லா ஒரு புடிபுடிக்கலாம். தன் சொந்த வவுத்தே Activate பண்றதுக்குதான் தலைவைங்க உண்ணாவிரதம் இருக்கான்யா!
’’நான் ஜோடித்து சொன்ன பொய் நல்லா வேலை செஞ்சுருச்சு’’ தாய் மனசுக்குள்ளேயே சந்தோஷபட்டுகிட்டா! பொய் எப்பொழுதும் தன்னை தானே அலங்காரம் செய்தே மற்றவரை கவரும்.
கொஞ்ச நாள் ஓடியது. ஒரு நாள் உம்மா, வாப்பா, மகள், எல்லோரும் ஷாப்பிங் போனார்கள். விலை உயர்ந்த சாமான்களை வாங்கினார்கள். பிறகுஒருசட்டி-பானை கடையில் ஒரு மண்சட்டியும் வாங்கினார்கள்.
அம்மா கையில் மண்சட்டி இருப்பதை கண்டபிள்ளைக்கு ஆச்சரியம்! ’எப்பொழுதுமே விலைஉயர்ந்த சாமான்களை வாங்கும் உம்மா இன்று ஏன் மண் சட்டி வாங்கியது?’ என்ற கேள்வி எழுந்தது .’’ஏம்மா இந்த மண்சட்டி வாங்குனே?’’
‘’நம்ம ஊட்டு கொல்லைலே கிடக்குறாள்ல ஒருகிளவி அவளுக்குத்தான்! பழைய சட்டியே ஓடச்சுப் புட்டலாம்!. அதான் புது சட்டி வாங்கியாந்தேன். இப்புடி வருசத்துக்கு அஞ்சாறு சட்டி ஒடச்சு ஒடச்சு குமிக்கிது., ஒரு நாளைக்கி மூனு நாலு சட்டிசோறு திண்டு அழிக்கிது! எப்போ சாவுவாளோ’? அள்ளி போட்டு பொதச்சுட்டு அல்லான்டு நிம்மதியா உக்காரலாம்!’ என்று உம்மா அலுத்துக்கிட்டா!
மாதங்கள் பல ஓடியது. உம்மா, வாப்பா, மகள் – மூவரும் ஷாப்பிங் போனார்கள். வீட்டுக்கு தேவையான சாமான்கள் வாங்கினார்கள்.
’’உனக்கு ஏதும் தேவைப்பட்டால் வாங்கி கொள்ளேன்’’ மகளிடம் தாய் சொன்னாள்.’ ’’’ஆமாம் நானும்தான் வாங்கணும்!.’ இங்கேயே கொஞ்சம் நில்லும்மா! நான் போய் வாங்கி வருகிறேன்’ என்று மகள் எங்கேயோ போனாள். கொஞ்ச நேரம் கழித்து திரும்பினாள்! கையில் இரண்டு மண்சட்டிகள் இருந்தது.
மகள் கையில் மண்சட்டிகளை கண்ட தாய்க்கும் தந்தைக்கும் மனதுக்குள்ஒரு குழப்பம். ’’இந்த ரெண்டு மஞ்சட்டியும் கெளவிக்கா? நாந்தான் அன்னிக்கே வாங்கிட்டேனே! நீ வேறே எதுக்கு வீணா ரெண்டு சட்டிவாங்குனே!’’ என்று அம்மா கேட்டாள். ‘’அந்த கெழவிக்கு நான் வாங்கலேம்மா! அவளுக்குத்தான் நீ வாங்கி கொடுத்துட்டியே!’’ என்று மகள் சொன்னாள்.
’’பின்னே! இந்த ரெண்டு சட்டியும் ஏன் வாங்குனே?’’ அம்மா கேட்டாள்! இன்னும்கொஞ்ச காலத்துலே நம்ம ஊட்டுக்கு ஒரு கெழவியும் கெழவனும் வரப்போறாங்க! அவங்களுக்கு கொடுக்கத்தான் இதை வாங்கினேன்’’ என்று மகள் சொன்னது.
வாப்பாவுக்கும் உம்மாவுக்கும் பிள்ளை சொல்வது ஒன்றும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ’’நீ என்னம்மா சொல்றே? ஒன்னும் புரியலேயே? ’இன்னும் கொஞ்ச காலத்துலே நம்ம ஊட்டுக்கு வர்ற! கெழவனும் கெழவியும்யாரு?’’ என்று அம்மா கேட்டாள்.
‘’ஒ! ‘அந்தக் கெழவன் கெழவி’ யாருன்னு கேக்றியா? அது வேற யாருமில்லேம்மா! அது நீயும் வாப்பாவும்தான். நீங்க கெழவன்-கெழவியானதும் உங்களை கொட்டகையில் அடைத்து சோறு போடத்தான் இந்த ரெண்டு மண்சட்டியேயும் வாங்கினேன்’’ என்று பிள்ளை சொன்னது.
இதைகேட்டு தாயும் தந்தையும் திடுகிட்டார்கள். ’’என்னாது? நீ எங்களை கீத்துக் கொட்டகையில் அடைத்து மண்சட்டியில் சோறு போடப்போறியா?’’ அம்மா ஆச்சரியத்துடன் கேட்டாள்.
.’’ஆமாம் அம்மா!’’ இது மகளின் அமைதியான பதில்.’ ‘’பெத்து பாலுட்டி செல்லமா வளத்த எங்களுக்கா நீ பிச்சைகாரர்களுக்கு சோறு போடுவது போல் சோறு போடப்போறே?’’ என்று நீ கேக்குறே இல்லையா? நம்ம ஊட்டு கொல்லைலே கொட்டகை போட்டு ஒதுக்கி வச்சு எல்லாரும் திண்டு மிஞ்சின கடைசி சோத்தை நாய்க்கி போடுறது போல ஒருவயதான பொம்புலைக்கு போட்டியே ‘அவயாருன்னு எனக்கு தெரியாது’ன்னு நெனச்சுயா?அவதான் பத்துமாதம் சுமையா சுமைசுமந்து உன்னை பெற்றெடுத்த தாய்!.
ராத்தூக்கம் பாக்காமே பகத்தூக்கம் பாக்காமே படாத பாடுபட்டு உன்னை வளத்த தாய்! ‘’அவ ஒரு வேலக்காரி. அவளுக்கு காச நோய் அவ கிட்ட போகாதே!’’ என்று என்னிடம் சொன்னா! ஆனா அது நீ கட்டிய பொய் கதை. ஒருநாள் நீவீட்டில் இல்லாத நேரம் கொட்டகைக்கு போய் பேசினேன். அவங்க ஒன்னு விடாமே எல்லாத்தையும் புட்டுபுட்டு வச்சுட்டாங்க !உன் பகட்டு வாழ்கைக்கு இந்த பொக்கை வாய்காரி வீட்டு நடு கூடத்தில் இருந்தது கௌரவ குறைவா இருந்துச்சு அதுனாலே கொல்லைப் பக்கமா ஒதுக்கிட்டே சரிதானா? நீ ஒன் தாய்க்கு செய்த கொடுமையே உனக்கு செய்யவே இந்த மண்சட்டி! இது ஆரம்பம்’’ என்றது பிள்ளை.
அம்மாவின் கண்ணில் நீர் ஓடியது. ‘’நீ சொன்னதெல்லாம் உண்மை! நீ கொடுக்கும் தண்டனையே எனக்கு கொடு! அந்த தண்டனைக்குரியவள் நான்’ என்றாள் அம்மா.
உனக்கு தண்டனை கொடுப்பதும், அல்லது மன்னிப்பதும் உன் தாயின் கையிலேதான் இருக்கிறது!வீட்டுக்கு வந்து உன்தாயிடமே மன்னிப்புகேள்!’’என்றாள்மகள்.
வீட்டுக்கு வந்த மூவரும் நேரே கொட்டகைக்குள புகுந்தார்கள். தரையில் பனை ஓலை பாயில் அம்மா நன்றாக தூங்கி கொண்டிருந்தாள். அம்மா கிட்டே சென்று’’அம்மா! அம்மா!’’ என்று கூப்பிட்டாள்.
பதில் இல்லை மகள் மீது அம்மாக்கு கோபமோ! அல்லது நல்ல தூக்கமோ! உசிப்பினாள்.
அம்மா எழுந்திருக்கவில்லை, கண் திறந்து மகளை பார்க்கவில்லை. அம்மாவின் கண்களிலிருந்து ஈக்கள் பறந்தது. விழித்த விழிகள் விழித்தபடி இருந்தது.’’ அம்.......மா....ஆஆஆஅ.......!!!!!!!.’’அம்மா! தாருல் பனாவை விட்டு தாருல் பக்ரா சென்று விட்டாள்.
இன்னா லில்ஹி வஇன்னா இளைஹி ராஜூவுன். இன்னும் ஒரு மணிநேரம் அம்மா தாமதித்திருந்தால் மகளுக்கு சொர்கத்தின் கதவுகள் திறந்தே இருந்து திருக்கும். இன்னும் ஒருமணி நேரம் மகளே முந்தி இருந்தாலும் சொர்க்கத்தின் கதவுகள் மூடாமல் திறந்தே இருக்கும். இதில் முந்தியது யாரோ? பிந்தியது யாரோ?விடை காணமுடியாத கேள்விகள்!
ஆனால் அல்லாவின் அழைப்பு யாருக்காகவும் காத்திருப்பதுமில்லை; முந்திக் கொள்வதும் இல்லை. ஒரு மண்சட்டி உடைந்தது.
இன்னும் எத்தனையோ சட்டிகள் உடைய காத்திருக்கிறது. அவைகள் மண்ணிலிருந்தே வந்தது!. மண்ணுக்கே போகும்!
S.முஹம்மது ஃபாருக்

