(*) உலகில் சிறியதுஅணுவா?
ஆண்டு விடுமுறையா?
பதில் தேடும் பிஞ்சுகள்..
(*) இமை துடிக்கும்
இம்மி பொழுதாமோ
இந்த விடுமுறை நாட்களும்?
வினா தொடுக்கும்
விடலைகள்.
(*) தேர்வு முடிந்ததும்
சோர்வும் முடிந்தது,
விடுமுறை நாட்களில்
வீடே மறந்தது..!!
(*) எப்படி கழியும்
விடுமுறை? என்பதல்ல வருத்தம்.
மறுபடி பள்ளி
திறப்பார்களே என்பதே
மாபெரும் வருத்தம்!!
இருப்பினும்...
(*) நகரத்து பிள்ளைகளுக்கு
பாட்டிகளும், சொந்த ஊரும்
நினைவுக்கு வரும்
நாட்கள் இவை!!
போய் வருவர்
பாட்டிவீடு..
பல ஊரு..விடுமுறையை
சாட்டி செல்லும்
சுற்றுலாக்கள்.
(*) உள்ளூர் பொடிசுக்கோ..
கால்பந்து, கைபந்து
குடும்பத்து
கல்யாணம்,
மட்டை பந்து,
மாங்காய்த் திருட்டு-இவை
விடுமுறை நாட்களின்
விழாக்கோலம்.
(*) வீட்டு வாசலில்
மிட்டாய்க் கடை,
முறுக்கு, கடலைமிட்டாய்
மோர், இல்லையேல் சர்பத் சப்ளை.
குறைந்த முதலீடு
கொள்ளை சந்தோஷம்!!
(*) பட்டம், பளிங்கு
பம்பரம், கில்லியோடு
கிட்டி கம்பு,
கேரம் பலகை.
பட்டியலில் சில
பழக்கத்தில் இல.
(*) சைக்கிள் வாடகை,
சறுக்கி வீழ்தல்,-இன்று
பைக்-கும் வாடகைக்கு-
வீழ்தல் மட்டும் அப்படியே!!
(*) தேர்வு முடிவுக்கான
தேதி வரும்...
தபால்காரர் வழி முடிவு
தேடி வரும்..
(*) முடிவுகள் தேர்வுகளுக்கானதேயொழிய
திறமைகளுக்கு அல்ல என்னும்
தெளிவு என்று வரும்?
(*) பரீட்சை முடிவுக்கும்
பள்ளி மறுதிறப்பிற்கும்
இடைப்பட்ட நாட்கள்..
விடுமுறையின் கணக்கை விட்டும்
விலக்கப்பட்டவை.
(*) அடுத்த வகுப்பிற்கு
ஆயத்தம்.
புது சீருடை,
புதுத்தகம்,
புது காலணி,
புது இருக்கை,
புது வகுப்பு,
புது ஆசிரியர்,
வாப்பாவுக்கு மட்டும்
பழைய வருமானம்!!
(*) எல்லாம் இருக்கட்டும்.
யாருக்கேனும் பதில் தெரியுமா
என் கேள்விகளுக்கு?
மருத்துவம் பொறியியலுக்கு
நுழைவுத்தேர்வு உண்டா? இல்லையா?
பள்ளிகள் திறந்தும் நாங்கள்
படிக்கப் போவது
சமச்சீரா இல்லையா?
சரி.. சரி...
குறைந்தபட்சம் சொல்லுங்கள்,
"சமமும்" "சீரும்"
சமமா இல்லையா?
- அதிரை என்.ஷஃபாத்

