மழைவந் தாச்சு! மழைவந் தாச்சு!
மனமகிழ் வூட்ட மழையும் வந்தாச்சே!
உழவர் அனைவர் உளமகிழ் வோடே
உழுது பயிர்செய உடனே வந்தாச்சே! (மழை)
படைத்த நாயன் பரிவோ டிந்தப்
பாரைப் பயிரால் பசுமை யாக்கிடவே
கிடைத்த மழையால் நாடு செழித்துக்
கேடுக ளெல்லாம் ஓடி ஒழிந்திடவே. (மழை)
வானில் மேகம் வளமாய்க் கூடி
வல்லோன் புகழை வாயால் பாடுவதால்
தேனின் இன்பம் தெவிட்டா விதமாய்
தேடிப் பெய்யும் தேவை மழையாகும்! (மழை)
இறந்த பூமி எழுந்து நின்றே
ஏழ்மை நீங்கி இனிமை ஓங்கிடவே
பறந்து செல்லும் பறவை முதலாம்
படைப்புக ளெல்லாம் பாடி மகிழ்ந்திடவே! (மழை)
பசுமை நிலத்தைப் பார்த்து மகிழ்ந்து
பக்குவ மாகப் படைத்த வல்லவனைச்
சிசுவைப் போன்ற சிந்தை கொண்டு
செழுமை வழங்கச் சிறப்பாய் வேண்டுவமே! (மழை)
அதிரை அஹ்மது


