Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தலைவர் எதிர்கொள்ளும் சவால்கள் 0

அதிரைநிருபர் பதிப்பகம் | July 31, 2015 | ,

::::: தொடர் - 32 :::::

தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தை உயர்த்தும் ஒரே நோக்கில் செயல்பட்டால், எந்தத் தலைவரும் வெற்றி பெற வாய்ப்புண்டு.  தலைவரும் அவரைப் பின்பற்றும் தோழர்களும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வின் அடிப்படையில் செயல்பட்டால், முழுமையான வெற்றி கிட்டுவதற்கான வாய்ப்புகள் அமைந்து,  வெற்றிப் பாட்டையில் வீறுநடை பயிலலாம். 

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கவலையெல்லாம், தம்மைச் சார்ந்தோர், தம் தோழர்கள், உலக மக்கள் அனைவரும் நரக நெருப்பை விட்டுக் காப்பாற்றப்பட வேண்டும் என்பது   மட்டுமே.  மறுவுலகக் கவலையை விடுத்து, இம்மையின் இன்பங்களுக்காக மட்டுமே தலைமைப் பொறுப்பை ஏற்ற தலைவர்கள் அள்ளிக் கொடுத்தால், உலகில் ஏராளமான தோழர்கள் கிடைப்பார்கள்.  ஆனால், நிலையான மறுமை வாழ்வை நோக்கி மக்களை அழைத்தால், அத்தகைய தலைவரை எதிர்ப்பார்கள்;  சண்டை போடுவார்கள்;  அவர்மீது கல்லெறிந்து காயம் உண்டாக்கும் அளவுக்கும் போவார்கள்;  எல்லா வழிகளிலும் எதிர்த்து நிற்பார்கள்!

இதுதான் நடந்தது, இறைத்தூதரின் வாழ்க்கையில்!  பல முறை, பல வழிகளில் அவர்களின் எதிரிகள் தொல்லை கொடுத்துத் துரத்த நினைத்தார்கள்!  நபி அவர்களும்  தாமும் மக்களும் ஈடேற்றம் பெறவேண்டுமே என்று, அளவுக்கு மீறிக் கவலைப் பட்டார்கள்.  அல்லாஹ்வின் அருட்கதவைத் தட்டியது, அந்தக் கவலை.  இதைத்தான், தனது வேத வரிகளில் இவ்வாறு வெளிப்படுத்தினான் அந்த அருளாளன்: 

“(நபியே!) அவர்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருக்கவில்லையே என்ற கவலையால் உம்மையே நீர் மாய்த்துக்கொள்வீர் போலும்” (26:03) என்று கூறினான்.  இன்னும்,

“(நபியே!) இவ்வேதத்தை அவர்கள் நம்பாவிட்டால், அவர்களு(டைய புரக்கணிப்பு)க்குப் பின்னால் ஏற்படும் கவலையால், உம்மையே நீர் அழித்துக்கொள்வீர் போலும்!”      (18:6) 

இத்தகைய வசனங்களுக்குப் பின்னால், அதுவரை இஸ்லாத்தைத் தழுவாதிருந்த பலர், நபி (ஸல்) அவர்களின் மனோநிலையைப் புரிந்து, இஸ்லாத்தைத் தழுவினார்கள். நபி (ஸல்) போருக்கு அழைத்தாலும், போகத் துணிந்தார்கள்; உயிரைக் கொடுத்துத்தான் இஸ்லாத்தை வளர்க்க முடியும் என்றிருந்தால், அதையும் செய்ய ஆயத்தமாய் இருந்தார்கள்!  அந்த நபித்தோழர்களைப் பற்றி அல்லாஹ் புகழ்ந்து கூறுவதைப் பாருங்கள்:  

“(இறை நம்பிக்கையாளர்களே!) உங்களிலிருந்தே இறைத்தூதர் ஒருவர் வந்திருக்கின்றார்.  நீங்கள் துன்பப்படுவது அவருக்கு மிக்க வேதனையாக இருக்கும்.  (நீங்கள் நேர்வழி பெற்று நன்மையடைய வேண்டுமென்று) உங்கள் மீது பேரன்பு கொண்டவர் அவர்.  அன்றியும், மூமின்கள் மீது இரக்கமும் கருணையும் கொண்டவர்.”                           (9:128)

இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி, தலைவர் எனும் அடிப்படையில், தெளிவாக ஒன்றைக் கூறவேண்டும் என்றால், அது அவர்களின் பொறுமையும் சகிப்புத் தன்மையுமேயாகும்.  அவர்களின் அண்மையில் பலதரப்பட்ட தோழர்கள் இருந்துள்ளனர்.  சிலர் அறிவில் குறைந்தவர்கள்.  முரட்டுத் தனத்துடனும் முட்டாள் தனமாகவும்   நபியிடம் நடந்துகொண்ட எதிரிகளுக்குத் தக்க பாடம் புகட்ட, அண்ணலாரின் அன்புத் தோழர்கள் ஆவேசமாக  வாளை உருவிச் சண்டையிடவும் தயாராயிருந்தார்கள். ஆனால், அந்தத் தோழர்களை அவ்வாறு செய்ய ஒருபோதும் நபியவர்கள் அனுமதித்ததில்லை.  முட்டாள் தனமாகவும் முரட்டுத் தனமாகவும் தம்மிடம் நடந்துகொண்ட எதிரிகளிடம், அண்ணல் நபி (ஸல்) அமைதியுடனும் சகிப்புத் தன்மையுடனும் புன்முருவலுடனும்தான்  நடந்துகொண் டார்கள்!

அல்லாஹ் கூறுகின்றான்:  “(நபியே!) அல்லாஹ்வின் அருளின் காரணமாகவே நீர் அவர்களிடம் மிருதுவாக நடந்துகொண்டீர்.  கடுகடுப்பானவராக நீர் இருந்திருப்பீராயின், உம்மிடமிருந்து அவர்கள் வெகுவாக விலகிப் போயிருப்பார்கள்.  ஆகவே, அவர்(களுடைய குற்றங்)களை நீர் மன்னித்து, அவர்களுக்காக (இறைவனிடம்) மன்னிப்பும் கேட்பீராக!  உங்கள் செயல்பாடுகள் பற்றி அவர்களுடன் கலந்தாலோசனையும் செய்வீராக.  ஆகவே, நீர் (ஒரு செயலைச் செய்ய) உறுதி கொண்டால், அல்லாஹ்வின் மீது பொறுப்புச் சாட்டுவீராக.  நிச்சயமாக, அல்லாஹ் (தன் மீது) பொறுப்புச் சாட்டுவோரை நேசிக்கின்றான்.”                                                  (3:159)

வரலாற்றில் பதிவான செய்தியொன்று உண்டு.  அதன்படி, மக்காவில் பெண்ணொருத்தி, நபியவர்களின்மீது வெறுப்புக் கொண்டு, அன்னார் கஅபாவுக்கு வரும் நேரத்தில் தனது வீட்டு மேல்மாடியில் நின்றுகொண்டு, அவ்வழியைக் கடந்து நபியவர்கள் போகும்போது தன் வீட்டுக் குப்பையை அண்ணலாரின் தலைமீது கொட்டுவாளாம்.  மாறாக, நபியவர்கள் ஒன்றும் சொல்லாமல், தம் மீது விழுந்த குப்பையை உதறித் துடைத்துவிட்டு, அன்னார் செல்லவேண்டிய பாதையில் செல்வார்களாம்.  இந்தத் தீய செயலைப் பல நாட்களாக அப்பெண் செய்வதும், அண்ணலார் அதைத் துடைத்துவிட்டுச் செல்வதுமாக இருந்தது.  வழக்கத்திற்கு மாற்றமாக, ஒரு நாள் குப்பை கொட்டும் நிகழ்வு நடக்கவில்லை.  கஅபாவிலிருந்து திரும்பி வரும்போது, நபியவர்கள் அவ்வீட்டுக் கதவைத் தட்டி, அந்தப் பெண்ணைப்பற்றி விசாரிக்க, அவள் நோயுற்றுப் படுக்கையில் கிடப்பதாக பதில் வரவே, அப்பெண்ணைச் சந்திக்க அனுமதி பெற்று உள்ளே சென்று, அப்பெண்ணிடம் நலம் விசாரித்தார்கள் நபியவர்கள்!  

விசாரித்தவரை ஏறிட்டுப் பார்த்த அப்பெண், தன்னருகில் அமர்ந்திருப்பவர், தான் தினமும் யார்மீது குப்பை கொட்டிவந்தாரோ, அந்த முஹம்மதுதான் என்று அறிந்தபோது, தான் செய்த படுபாதகச் செயலுக்காக வெட்கி வருந்தி, நபியிடம் மன்னிப்புக் கேட்டு, முஸ்லிமாக மாறினார்!

நபிவரலாற்றில் கூறப்படும் இன்னொரு செய்தி:  மக்கத்து வீதியொன்றின் ஓரத்தில் வயது முதிர்ந்த பெண்ணொருத்தி நின்றுகொண்டிருந்தார்.  அவருக்கருகில் கனமான பொதியொன்றை வைத்துக்கொண்டு, யாராவது தனக்கு உதவி செய்வார்களா என்று, வருவோரையும் போவோரையும் கெஞ்சிய வண்ணம் நின்றுகொண்டிருந்தார்.  அந்த வழியாக வந்த அண்ணலார் (ஸல்) அவர்கள், அப்பெண்ணிடம் விசாரித்தபோது, தான் மக்காவை விட்டுப் போக முடிவு செய்ததாகவும், மக்காவின் புறநகர்ப் பகுதிக்குச் சென்று, அங்கிருந்து புறப்படும் பயணிகளுடன் சேர்ந்துகொள்ள அப்பொதியைத் தூக்கிவர யாராவது தனக்கு உதவுவார்களா என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார். 

அதைக் கேட்ட அண்ணலார் (ஸல்) அவர்கள் தாம் உதவி செய்ய முடியும் என்று கூறி, அப்பொதியைத் தூக்கித் தலையில் வைத்து, அந்த மூதாட்டியுடன் நடக்கத் தொடங்கினார்கள்.  போகும் வழியில் அப்பெண், தான் மக்காவை விட்டுச் செல்வதற்கான காரணத்தை இவ்வாறு விவரித்தாள்:  “நான் மக்காவை விட்டு வெளியூருக்குப் போவதற்குக் காரணமே, முஹம்மது என்ற ஒருவர்தான்.  தான்தான் இறுதி நபி என்றும், தம் முன்னோர்கள் வணங்கிவந்த பல கடவுள்களை வணங்காமல், அல்லாஹ் என்ற ஒரே கடவுளை மட்டும் வணங்கவேண்டுமாம் தம்பி! அந்த ஆள் விரிக்கும் சதிவலையில் நீயும் விழுந்திடாதே!  உன்னையும் அந்த ஆள் கெடுத்துவிடுவார்.  நீ நல்ல இளைஞனாகத் தெரிகிறாய்.  முடியாத நிலையில் இருக்கும் எனக்கு உதவுகிறாய்.”

இவ்வாறு பேசிக்கொண்டே வந்து, வாகனக் கூட்டத்தோடு செல்வதற்கான இடத்தை வந்தடைந்த கிழவி, “மகனே!  நீ நல்ல பிள்ளையாகத் தெரிகிறாய்!  உன் பெயர் என்னப்பா?” என்று கேட்டாள்.

“தாயே!  என் பெயர் முஹம்மது” என்று கூறியவுடன், கிழவி அதிர்ந்து போனாள்!  தனது பொதியைத் தூக்கிக்கொண்டு, அதுவரை தனக்கு உதவி செய்தவராக, தான் கூறிய பொய்த் தகவல்களைப் பொறுமையோடு கேட்டு மறுப்புக் கூறாமல், தன்னைப்பற்றிக் கூறப்பட்ட ஏச்சுப் பேச்சுகளைத் தாங்கிக்கொண்டு வந்த இளைஞரா இந்த முஹம்மத்? உண்மையை அறிந்தபோது, அதிர்ச்சியடைந்து நின்றாள் அந்த மூதாட்டி!  

“அந்த ‘முஹம்மது’ என்பவர் நீதான் என்றால், நீதான் இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேனப்பா! வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவன்தான் என்றும், முஹம்மது அவனுடைய தூதர் என்றும் நான் சாட்சி பகர்கின்றேன் அப்பா!” இறுகி நின்ற கிழவி, இளகிப் போனார்!

மக்காவை விட்டு மதீனாவுக்கு ‘ஹிஜ்ரத்’ செய்து வந்த பின்னர், ‘மஸ்ஜித் நபவி’யில் நடந்த நிகழ்வை நபித்தோழர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) விவரிக்கின்றார்:    

ஒரு நாள் நாங்கள் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களைச் சூழ்ந்து ‘மஸ்ஜித் நபவி’யில் அமர்ந்திருந்தோம்.  அப்போது பார்வை இழந்த முதிய கிராமவாசி ஒருவர் மஸ்ஜிதுக்குள் நுழைந்து சிறுநீர் கழித்தார்.  அப்போது எங்களில் சிலர் அவரைத் தடுக்க முனைந்தனர்.  அதைக் கண்ட நபியவர்கள்,”நில்லுங்கள்!  அவரை முழுமையாகக் கழிக்க விட்டுவிடுங்கள்” என்று கூறித் தோழர்களைத் தடுத்தார்கள்.  அம்முதியவர் கழித்து முடித்ததும், “இப்போது அவ்விடத்தில் ஒரு வாளித் தண்ணீரை ஊற்றித் தூய்மைப் படுத்திவிடுங்கள்” எனக் கூறி, நிலைமையைச் சரிப்படுத்தினார்கள். 

நபியவர்களுக்குத் தெரியும், அவரை இடையில் தடுத்தால் என்னவாகும் என்று.  சிறுநீர் கழிப்பவரைத் தடுத்தால், அவர் அந்த இடத்திலிருந்து தப்பியோடுவார்.  அந்த நேரம், அவர் பெய்துகொண்டிருந்த சிறுநீர், மஸ்ஜிதின் மற்றப் பகுதிகளில் சிந்தி, அசிங்கப்படுத்திவிடும். நபியவர்களின் இந்தத் தொலைநோக்குப் பார்வையால், பெரிய விளைவு தடுக்கப்பட்டது.  அந்தக் கிராமவாசி சிறுநீர் கழித்து முடிந்த பின்னர், அவரை வெளியில் செல்ல வழி காட்டிவிட்டு, மக்கள் தொழும் இடமான பள்ளிவாசலில் சிறுநீர் கழிக்கக் கூடாது என்று அவருக்கு நற்போதனை புரிந்தார்கள்.

நாம் இதற்கு முன்பு தெளிவுபடுத்தியது போன்று, இறைக் கட்டளைகளைப் பிழையில்லாமல் பின்பற்றித் தீர்க்கமான முடிவெடுத்துச் செயல்படுத்துவதற்கு முன்னால், நபி (ஸல்) அவர்கள் தம் அருமைத் தோழர்களிடம் ஆலோசனை செய்வார்கள்.  இது பலருக்கு வினோதமாகத் தெரியலாம்.  இதற்குக் காரணம், ‘வஹி’ என்னும் வேத இறைக்கட்டளையைப் பெறுபவர்களாக நபி அவர்களே இருந்தும், தோழர்களினும் மேலான அறிவையும் அனுபவத்தையும் பெற்றவர்களாக இருந்தும், தம் தோழர்களுடன் கலந்தாலோசனை செய்ததன் தேவை யாது?  இதுவே அவர்களின் கேள்வி. 

தலைவருக்கும் தொண்டர்களுக்கும் இடையிலான கருத்துப் பரிமாற்றத்தின் பயன்கள் இதோ:

  • முற்ற முற்றத் தலைவரைப் பின்பற்றும் தொண்டர்களுக்கும் தோழர்களுக்கும், தம் கருத்துக்கும் மதிப்புண்டு என்ற மகிழ்ச்சியும் ஏற்பட்டு, ஒரு செயல்பாட்டில் விளையும் முடிவில் தமக்கும் பங்குண்டு என்ற பொறுப்புணர்ச்சி ஏற்படுகின்றது.
  • அவர்கள் தலைவரால் மதிக்கப்பட்டு, தமது கருத்தையும் பதிவு செய்வதால், ஒன்றித்த கருத்து வலுப்பெற வாய்ப்புண்டு.
  • சில வேளை, உள்ளூர் நிலவரங்களைத் தொண்டர்களும் தோழர்களும் தலைவரைவிடக் கூடுதலாக அறிந்திருப்பார்கள்.  அவ்வடிப்படையில், அவர்களின் கருத்துப் பதிவு பயனுள்ளதாக அமைய வாய்ப்புண்டு.
  • இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இறப்பிற்குப் பின்னர், ஒரு வேளை, அத்தோழர்கள் முடிவெடுக்க வேண்டிய தலைமைப் பொறுப்பைச் சுமந்தவர்களாக முன்னேற்றம் பெற வாய்ப்புண்டு.  அதற்கான பயிற்சியாக இக்கலந்தாலோசனை பயன்படக் கூடும்.
  • தலைவருக்கும் தொண்டர்களுக்கும் இடையில் கருத்து ஒன்றித்த ஈடுபாடு உண்டாகும்.  அவரவர் சமூக இயல்புகளைப் பகிர்ந்துகொண்டு, பொதுவான நலனுக்காகவும், இஸ்லாத்தைப் பரப்பும் முயற்சியாகவும் அமைய அதிக வாய்ப்புண்டு.
எந்தப் பணிக்கு யார் பொருத்தமானவர் என்றும், எவர் அதற்கான கூடுதல் பயிற்சியை எடுத்துள்ளார் என்றும் தெரிவு செய்வதில், ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள், ஒன்றல்ல, தானைத் தலைவர்கள் பலரை ஏற்படுத்தி வைத்துவிட்டே இறப்பெய்தினார்கள்.  அவர்கள்தாம் அரபுத் தீபகற்பத்துக்கு வெளியில் இஸ்லாத்தை அறிமுகம் செய்தவர்கள். நபியவர்களின் இறப்பிற்கு முப்பதாண்டுகளுக்குப் பின், அவர்களின் விருப்பத்திற்கு மாற்றமான நிகழ்வுகள் நடந்தன என்பது வரலாற்று உண்மைதான்.  என்ன செய்வது?  இறை நாட்டம் வேறாக இருந்தது!  இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வகுத்த ஒற்றுமை நெறியில்  முனைந்து பாடுபடுவது தொடர்ந்தால் மட்டுமே, இறுதித் தூதுத்துவத்தின் இனிய பயனைப் பெற முடியும் என்பது வேத வாக்கின் பதிவல்லவா?

உலக வரலாற்றில் நடந்தவை எதுவானாலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற மகத்தான முன்மாதிரி மிகத் தெளிவாக உள்ளது.  அதைக்கொண்டு பயன் பெற விழையும் எவருக்கும், அது கலங்கரை விளக்கமாக ஒளியுமிழ்ந்து வழி காட்டிக்கொண்டு இருக்கின்றது.  முஹம்மத் (ஸல்) அவர்கள் வாழ்ந்த உலகைவிட, கற்பனை செய்ய முடியாத அளவில் தற்கால உலகம் மிகப் பெரும் மாற்றங்களைக் கண்டுள்ளது உண்மைதான்.  சமூகங்களின் மாற்றத்துக்கு ஒப்பாக இயற்கையின் பருவநிலை மாறாதது போன்று,  இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற வழிகாட்டல்கள் மாறாமல், வழி காட்டிக்கொண்டுள்ளன.

புவி ஈர்ப்பும் வான்வெளிப் பயணமும் எவ்வாறு நம் கண் முன்னால் உண்மையாக இருக்கின்றனவோ, அது போன்றே முஹம்மத் (ஸல்) அவர்களால் வகுக்கப்பட்ட இவ்வுலக வெற்றியும் மறுமை வெற்றியும் மாறா நிலையில் நிற்கின்றன.  இதைத்தான் இவ்வுலக மக்களுக்குக் கற்றுக் கொடுக்க முஹம்மத் (ஸல்) அவர்கள் இறுதித் தூதராக அனுப்பப்பட்டார்கள்.  அந்தத் தூதுத்துவத்தை ஏற்றுச் சான்று பகர்ந்து, இறுதித் தூதரின் வழியைப் பின்பற்றுவோராக இருக்கவே நாம் அல்லாஹ்விடம் இறைஞ்ச வேண்டும். 

அதிரை அஹ்மது

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) 0

அதிரைநிருபர் பதிப்பகம் | July 30, 2015 | ,

ஆரம்ப கட்டத்திலேயே இஸ்லாத்தை வாஞ்சையுடன் வாரித் தழுவிக் கொண்ட முக்கியமான அன்சாரிகளுள் ஒருவர் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி). ஜாபிரின் தந்தையான அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) புனித பத்ருப்போரில் வெற்றிக் களம் கண்ட முக்கியமான நபித் தோழர்  ஆவார். இவர் இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பிரபலமான உஹத் யுத்தத்தில் கலந்து கொள்ளும் ஆவலுடன் மகனை அழைத்தார். 

"ஜாபிரே! என் மனைவி மக்களில், பிள்ளைகளில் நீயே எனக்கு மிகவும் பிரியமானவன். இந்தப் புனிதப் போரில் நான் ஷஹீதாகி விடுவேன் என்று எனக்குப் படுகின்றது. என் மீதான கடன் சுமைகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டியது உன் பொறுப்பேயாகும். உன் சகோதரிகளோடு நன்முறையில் நடந்துகொள். அவர்களை நன்கு பராமரித்துக் கொள்வது உன் கடமை" என்று உபதேசம் செய்துவிட்டு அறப்போரில் ஈடுபட்டு, அவர் சொன்னவாறே உஹத் களத்தில் ஷஹீதானார். 

தந்தைக்கேற்ற தனயனாக, தந்தையின் சொல்படி, தம்  தங்கைகளின் நலனுக்காக தம்மையே  தியாகம் செய்துகொண்டார் இளைஞர் ஜாபிர் (ரலி) அவர்கள். 

ஜாபிரின் தந்தைக்குக் கடன் கொடுத்த யூதன் அவருக்கு அவகாசம் அளிக்க மறுத்து,  'முப்பது வஸக்' பேரீத்தம்  பழங்களையும் உடன் திருப்பித்தருமாறு கேட்டு நின்றான். கருணை  நபி (ஸல்) அவர்களின்  கவனத்திற்கு இந்த வழக்கு வந்தது!

நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரு (ரலி), உமர் (ரலி) இருவருடனும், ஜாபிரின் தோட்டத்திற்குச் சென்றார்கள். அங்கு நின்று பேரீத்த மரங்களைப் பார்த்தார்கள். மிகச் சொற்ப மரங்களே கொஞ்சம் கனிகளைக் கொண்டிருந்தன! உடனே, மரங்களுக்கிடையே சுற்றிவரத் தொடங்கினார்கள். பிரார்த்தித்தார்கள். அதன்பிறகு, ஜாபிரிடம் 'இம்மரங்களின் கனிகளை எல்லாம் கொய்துவிடு! கடன்களை அடைத்துவிடு! உன் பிரச்னைகள் தீர்ந்துவிடும் இன்ஷா அல்லாஹ்!' என்று சொல்லிவிட்டு மஸ்ஜிதுக்குச் சென்றுவிட்டார்கள்.

அவ்வாறே ஜாபிர் (ரலி) மரங்களின் பழங்களைப் பறித்தார். என்ன அற்புதம்! எண்ணிப் பார்க்க இயலாத அளவுக்கு ஏராளமாக இருந்தன.

அந்த யூதன் உட்பட, தம் தந்தை கடன் பட்டிருந்த அனைவரையும் அழைத்து, ஒருவர் விடாமல், அனைவருக்கும் செலுத்த வேண்டிய கடன்களை எல்லாம் நிறைவேற்றினார். அவ்வாறு எல்லோருக்கும் கடன்களை நிறைவேற்றிய பிறகும் அவரிடம் பனிரெண்டு 'வஸக்'குகள் (ஏறத்தாழ 2,150 கிலோ) பேரீத்தம் பழங்கள் எஞ்சி விட்டன! ஜாபிருக்கு பயங்கரமான ஆச்சரியம்!

சிரித்துக் கொண்டே ஓடிப்போய், அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) உடைய உடன்பிறந்த சகோதரியும் தன் அத்தையுமான ஃபாத்திமா பின்த் அம்ரு (ரலி) விடம் விவரத்தைச் சொன்னார். அத்தைக்கும் அளவிட முடியாத ஆச்சர்யம்! 

'நீ உடனடியாக அண்ணலாரிடம் திரும்பிச் செல்! நிகழ்ந்தவற்றைச் சொல்!' என்றார் அத்தை உள்ளப்  பூரிப்புடன்!

திகைப்பும் மகிழ்ச்சியுமாக தியாகத் திருநபி (ஸல்) அவர்களிடம் சென்றவர் 'கடன்கள் எல்லாம் அடைந்துவிட்டதென்றும் 'பன்னிரண்டு வஸக்குகள்' எஞ்சிவிட்டன அல்லாஹ்வின் தூதரே! என்றும்   மூச்சுவிடாமல் மொழிந்தார்! 

புன்னகைத்த பெருமானார் (ஸல்) சிரித்துக்கொண்டே, “அபூபக்ருவிடமும் உமரிடமும் செல்! நிகழ்ந்ததைச் சொல்!” என்றார்கள்.

அவர்கள் இருவரிடமும் சென்றுரைத்தபோது,

'எங்களுக்கு அப்போதே இதன் முடிவு என்னவாகும் என்று தெரியும்!

மெய்யானவரும் மெய்ப்பிக்கப் பட்டவருமாகிய உண்மைத் தூதர் (ஸல்) “உன் தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி வரும்போதே, என்ன நிகழும் என்பதை நாங்கள் கிரகித்துக் கொண்டோம்” என்றனர் புன்னகையுடன்! (1) 

இத்தகைய  அற்புதமான மாமனிதரைத்தான் மதீனாவின் அன்சாரிகள் அடிக்கடி சந்திப்பதிலும் அவர்களோடு அளவலாவுவதிலும் போட்டி போட்டு நின்றார்கள். மேலும் நபியைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாடினார்கள். அதிலும் ஜாபிர் (ரலி) அவர்களுக்கோ, அண்ணலார் தம் தந்தைக்கு  நெருக்கமானவர் என்ற அலாதியான உரிமையும் கூடவே இருந்தது!

இத்தனைக்கும் அன்று தம் சொந்த மண்ணின் பூர்வீக நாட்டாண்மைகளால் 'சூன்யம் வைக்கப்பட்டவர்' என்றும் 'மறை கழன்றவர்' என்றும் 'மனிதர்களை மயக்குபவர்' என்றும் ஏசி ஒதுக்கப்பட்ட ஓர் எளிய மனிதர், 

இன்றோ முழு அரேபியாவையே ஆளும் மன்னராக மட்டுமின்றி, மதீனத்து மக்களின் மனங்களில் வீற்றிருக்கும் மனச் சாட்சியின் காவலராக, இளைஞர்கள் மத்தியில் இலட்சிய புருஷராக, வயதானோர் வாக்கெடுப்பில் வெற்றி வேந்தராக, விசுவாசிப் பெண்களின் விடிவெள்ளியாக, தம் மழலை நண்பர்களுக்கு வழிகாட்டும் ஓர் ஒளி விளக்காக, மொத்தத்தில் அந்த எல்லோருக்கும் சுவனத்தைப் பற்றிச் சொல்லி, தங்கள் கவனத்தைக் கவர்ந்த ஒரு காந்தப் புள்ளியாகவே நம் கண்மணி நாயகம் (ஸல்) தோன்றினார்கள்.

இஸ்லாமிய சரித்திரத்தில் 'தாத்துர் ரிகா' எனக் குறிப்பிடப்படும் படையெடுப்பிலிருந்து திரும்பும் வழியில் கனமழை பிடித்துக் கொள்ள, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உட்பட முஸ்லிம்கள் அனைவரும் முற்றிலுமாக நனைந்து போனார்கள். குறிப்பிட்ட ஓர் இடத்தை அடைந்தபோது, பெருமானார் (ஸல்) அவர்கள், தம் நனைந்த உடைகளைக் களைந்து ஒரு மரத்தில் காயப்போட்டு விட்டு, அவர்களின் போர்வாளை ஒரு கிளையில் தொங்கப் போட்டுவிட்டு அந்த மரத்தின் நிழலிலேயே அசதியில் அயர்ந்து உறங்கிவிட்டார்கள். 

பனீ முஹாரிப் கூட்டத்தைச் சார்ந்த 'கௌராத்' என்பவன் அண்ணல் நபியைக் கொல்லும் நோக்கத்துடன் திடீரென்று அங்கு தோன்றினான். வந்த வேகத்தில் வள்ளல் நபியின் வாளைக் கையில் எடுத்துக் கொண்டான். சலசலப்புச் சப்தம் கேட்டு விழித்தெழுந்த சத்தியத் தூதரைப் பார்த்து,

நீ 'முஹம்மது' தானே? என்று அகங்காரத்துடன் கேட்டான்.

“ஆம். நான்தான்!” என்றனர் நபியவர்கள். 

“இந்த நேரத்தில் யாரால் உம்மைக் காப்பாற்ற முடியும்?” என வாளை உயர்த்தி மிரட்டினான்.

அல்லாஹ்வை மட்டும் அஞ்சுபவர்கள், இந்த பூமியில் வேறு எவனுக்கும் அஞ்சத் தேவையில்லை! என்பதற்கிணங்க, சிறிதுகூடக் கலவரப் படாமல், உறுதி மிகுந்த தொனியில் அமைதியாக அந்த 'ஒற்றைச்சொல்லை' உத்தமத் தூதர் (ஸல்) அவர்கள் உச்சரித்தார்கள்.
'அல்லாஹ்'
சர்வ சக்தியும் ஒன்று திரண்டு நின்ற அந்த ஒற்றைச் சொல் 'கௌராத்' என்ற அந்தக் கொலை பாதகனைக் குலை நடுங்கச் செய்துவிட்டது. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு விதமான பயங்கர நடுக்கம் அவனை ஆட்கொண்டதால், அவனை அறியாமலேயே, அவன் கையில் இருந்த வாள் நழுவிக் கீழே விழுந்தது!

இப்போது, தமது வாளைக் கையில் எடுத்துக் கொண்ட பெருமானார் (ஸல்) அவர்கள், சற்றுமுன் அவன் கேட்ட அதே கேள்வியை அவனிடமே திருப்பிக் கேட்டார்கள். அவன் கண்களில் மரண பீதியுடன் கண்கள் கலங்க,

'என்னைக் காப்பாற்ற யாரும் இல்லை.  நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்' என்றான்.

அப்படியல்ல! உன்னையும் அந்த 'அல்லாஹ்' தான் காப்பாற்றுவான். வந்த வழியே நீ  திரும்பிச்சென்று விடு!

நான் கொலைகாரனல்லன்! 'நான் சத்தியத்தின் தூதுவன். சமாதானத்தின் காவலன்!' என்று கூறி அவனைப் போகச் சொன்னார்கள்.

இந்த மனிதாபிமான மிக்கப் பெருந்தன்மையால், நெகிழ்ந்து போய் நின்ற அவன், அங்கேயே இஸ்லாத்தைத் தழுவினான்!

தன் கூட்டத்தாரிடம் நபியைக் கொல்வதாகக் கூறி சூளுரைத்து வந்தவன், தன் சகாக்களிடம் திரும்பிச் சென்றபோது, 'இந்த உலகத்திலேயே உயர்வகையான ஓர் உத்தமரிடமிருந்து உண்மையைக் கண்டு வருகின்றேன்!' என்றான். 

சத்திய நபியின் சாந்த முகமும் காந்த விழிகளும் கனிவான பார்வையும் கற்கண்டு மொழியும் கண்டு அவன்  ஒரு கண்ணிய மனிதனாக அல்லாஹ்வின் அருளால் ஆகிப்போனான்! 

காலையில் இஸ்லாமியப் படையினர் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தபோது, ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) வின் பேரீத்த மரங்களுக்கு நீர் சுமக்கும் ஒட்டகம் மிகவும் களைப்படைந்து நடக்க முடியாமல் அனைவருக்கும் கடைசியாக வந்து கொண்டிருந்தது. 

நபி (ஸல்): யாரது? ஜாபிரா?

ஜாபிர் (ரலி): ஆமாம். நான்தான், யா ரசூலல்லாஹ்!

நபி (ஸல்): உன் ஒட்டகத்திற்கு என்ன ஆயிற்று?

ஜாபிர் (ரலி) : அது களைப்படைந்து விட்டது. ஆதலால், நான் பின் தங்கி விட்டேன், யா ரசூலல்லாஹ்.

(அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சற்றுப் பின்தங்கி அந்த ஒட்டகையை அதட்டி அதற்காகப் பிரார்த்தித்தார்கள். உடனே, அது தனக்கு முன் சென்று கொண்டிருந்த ஒட்டகத்தை எல்லாம் முந்திக் கொண்டு ஓடத் துவங்கியது)

நபி (ஸல்): ஜாபிர். நீ திருமணம் முடித்து விட்டாயா?

ஜாபிர் (ரலி): ஆமாம். அல்லாஹ்வின் தூதரே. நான் புது மாப்பிள்ளை!

நபி (ஸல்) : அட. அப்படியா! யாரை மணமுடித்தாய்? கன்னிப் பெண்ணையா?

ஜாபிர் (ரலி): இல்லை. வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணைத்தான், அல்லாஹ்வின் தூதரே!

நபி (ஸல்): நீ கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உன்னுடனும் நீ அவளுடனும் கூடிக் குலாவி மகிழ்ந்து விளையாடலாமே? (எனச் சிரித்துக் கொண்டே கேட்டார்கள்)

ஜாபிர் (ரலி): அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சிறு வயதுடைய தங்கைகள் ஏழு பேர் இருக்கும் நிலையில் என் தந்தை உஹத் போரில் ஷஹீதாகிவிட்டார்கள். எனவே, என் தங்கைகளுக்கு ஒழுக்கமும் கல்வியும் கற்றுக் கொடுப்பதற்காகவும் அவர்களை நல்ல முறையில் தலைவாரிப் பராமரித்து வருவதற்காகவும் வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணை மணக்க விரும்பினேன்.

நபி (ஸல்): மிக்க நல்ல காரியம்தான் செய்திருக்கின்றாய். அது சரிதான். (சிரித்துக் கொண்டே) இப்போது ஊர் செல்லப் போகின்றாய்! ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்து கொள்வாயாக! நிதானத்துடன் நடந்து கொள்வாயாக! ஜாபிரே! ஊர் வந்து சேர்ந்துவிட்ட தகவல் உன் வீட்டுப் பெண்களை அடைய நீ இஷா நேரம்வரை பொருத்திருப்பாயாக. உன் வரவைப் பற்றிக் கேள்விப்படும் உன் மனைவி தலை வாரிக் கொள்ளட்டும். மேலும், மெத்தைகளை எல்லாம் தூசு தட்டிப் போட்டுவைக்க அவகாசமளிப்பாயாக!

ஜாபிர் (ரலி): மெத்தைகள் எதுவும் எங்களிடம் இல்லையே, அல்லாஹ்வின் தூதரே!

நபி (ஸல்): விரைவில் வரும்; விரைவில் வரும் இன்ஷா அல்லாஹ். நீ வீடு திரும்பியதும் செய்ய வேண்டியதைச் செய்!

(ஜாபிரின் தந்தைக்காக இருபத்தைந்து முறை இறையருள் வேண்டிப் பெருமானார் (ஸல்) இறைஞ்சினார்கள்)

நபி (ஸல்): உன் ஒட்டகத்தை நீ இப்போது எப்படிக் காண்கிறாய் ஜாபிர்!

ஜாபிர் (ரலி): அதை நான் மிக நல்ல முறையில் இப்போது காண்கிறேன். தங்களின் பிரார்த்தனைப் பேற்றை  அது பெற்றுள்ளது, அல்லாஹ்வின் தூதரே!

நபி (ஸல்): அதை எனக்கு விற்று விடுகின்றாயா?

ஜாபிர் (ரலி): அதைவிட, என் ஒட்டகத்தை உங்களுக்குப் பரிசாக அளிப்பதில் நான் மகிழ்வுறுவேன்.

நபி (ஸல்): அதெல்லாமில்லை. ஒரு 'களஞ்சிப் பொன்' அதன் விலை. சரிதானா, ஜாபிர்?

ஜாபிர் (ரலி): சரிதான், யா ரசூலல்லாஹ். இந்த ஒட்டகம் உங்களுடையது இப்போது. ஆனால், மதீனாவரை இதன்மீது சவாரி செய்து சென்றடைய தாங்கள் என்னை அனுமதிக்க வேண்டும். நான் புதுமாப்பிள்ளை. சீக்கிரமாகச் செல்ல வேண்டும்.

நபி (ஸல்): ஓ, தாராளமாக!

(அடுத்த நாள் காலை எழுந்ததும் சுபுஹ் தொழுதுவிட்டு, முதல் வேலையாக தம் ஒட்டகத்தை அன்பு நபியிடம்  கொண்டுவந்தார் ஜாபிர் (ரலி). ஒட்டகத்தைக் கற்கள் பரப்பப்பட்ட பள்ளிவாசலின் நடைபாதையில் கட்டிவிட்டு), '

ஜாபிர் (ரலி): அல்லாஹ்வின் தூதரே, இதோ  தங்களின் ஒட்டகம்.

(நபியவர்கள்  வெளியே வந்து ஒட்டகத்தை ஆராயும் வகையில் சுற்றிவரத் தொடங்கினார்கள்) 

நபி (ஸல்): ஆம். நிச்சயமாக, இந்த ஒட்டகம் நம்முடைய ஒட்டகம்தான். யா ஜாபிர், பள்ளிக்குச் சென்று இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு வா!

யா பிலால்! இங்கே வாரும். ஒட்டகத்தின் விலை ஐந்து ஊக்கியாக்கள் தங்கத்துடன் சற்றுக் கூடுதலாக நிறுத்து 'இதை ஜாபிரிடம் கொடுத்து அனுப்புவீராக. (பிறகு சற்று நேரத்தில்), ஜாபிரே, ஒட்டகத்தின் விலை முழுவதையும் பெற்றுக் கொண்டாயா?' 

ஜாபிர் (ரலி): ஆம். பெற்றுக் கொண்டேன், யா ரசூலல்லாஹ். போய் வருகிறேன்.

நபி(ஸல்): நில் ஜாபிர். (புன்னகையுடன்) 'விலையும் உனக்கே உரியது. இந்த ஒட்டகமும் உனக்கே உரியது. இரண்டையும் நீயே வைத்துக் கொள்!’

ஜாபிர் (ரலி): (திகைப்புடன்) வள்ளலே! வான் மதியே! இருள் நீக்க வந்த நிலவே! ஈகையின் வடிவான இறைத் தூதரே! தேவை அறிந்து உதவும் தங்களின் இதயத்தை விட, வேறு எந்த இதயமும் இத்தனை விசாலம் பெற்று இருக்கவே முடியாது! உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீங்கள் அல்லாஹ்வின் தூதர்தாம் என்று நான் சாட்சி பகர்கின்றேன்! (2) 

இவ்வாறு 'மகிழ்ச்சி' என்பதை மற்றவர்களுக்கு எதிர்பாராத ஓர் இன்ப அதிர்ச்சியாக 'பளிச்' சென்று அளிப்பது பண்பாளர் நபியின் பழக்கமாக இருந்தது.

இப்படித்தான் ஒருதடவை, ஒரு கிராமத்து மனிதர் மாநபியிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே, நான் ஏறிச் செல்ல வாகனமாக ஓர் ஒட்டகம் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டு நின்றார்.

அவரை ஏறிட்டு நோக்கிய ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் "சரி. உம்மை ஓர் ஒட்டகைக் குட்டியின் மீது ஏற்றி அனுப்புகின்றேன்" என்றார்கள். அவருக்கு ஒரு மாதிரி ஏமாற்றமாகப் போய்விட்டது. வெறும் ஒட்டகைக் குட்டியை வைத்துக் கொண்டு இருப்பதில் என்னதான் பயன் என்று வெறுத்துப் போய் வந்த வழியே திரும்பி நடக்கத் தொடங்கிவிட்டார்!

அவரை மீண்டும் அழைத்துவரப் பணித்தார்கள் மாறா அன்பின் பிறப்பிடமான மாண்பு நபி (ஸல்) அவர்கள்;

"ஒவ்வொரு ஒட்டகமும் அதனை ஈன்றெடுத்த தாய்க்குக் குட்டிதானே?"

என்று மந்தகாசப் புன்னகையுடன் அவரை அன்பாக நோக்கிக் கேட்கவே, அப்போதுதான் எழில் மிகுந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தன்னுடன் நகைச்சுவையுடன் உரையாடுகிறார்கள் என்று விளங்கிக் கொண்டு, அவரும் அண்ணலுடன் சேர்ந்து சிரிக்கத் தொடங்கினார். வாஞ்சை நபியின் நகைப்பால், அங்கே வாடிய நெஞ்சம் மகிழ்ந்தது!(3) 

அகழிப் போர்: நபித்தோழர்களின் நிலைமை ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அகழி  நிர்மாணப் பணியின் கடுமை. போதிய உணவு இல்லாமல் மிகவும் சிரமப் பட்டார்கள். குறிப்பாக, அண்ணலாரின் மெலிந்த, வலிமை குன்றிய தோற்றம் ஜாபிரின் மனத்தை வருத்தி எடுத்தது! வீட்டுக்குச் சென்றார். இருந்த ஒரே ஒரு செம்மறி ஆட்டை அறுத்துப் பொறிக்க ஏற்பாடு செய்தார். மீதம் இருந்த சிறிது வாற் கோதுமையைக் கொண்டு மனைவியிடம் ரொட்டி செய்யச் சொல்லிவிட்டு, இருள் கவியத் தொடங்கியபின், அண்ணலாரைக் காணச் சென்று, மெல்லிய குரலில், "உணவு தயார் செய்திருக்கின்றேன். என் வீட்டுக்குத் தாங்கள் வரவேண்டும், யா ரசூலுல்லாஹ்" என அழைத்து நின்றார்.

ஆனால், அண்ணல் நபி (ஸல்) அவர்களோ, ஜாபிரின் உள்ளங்கையை அவர்களின் உள்ளங்கையோடு பொருத்தி, ஜாபிரின் விரல்களை நபியின் விரல்களால் முடிச்சுப் போட்டதுபோல் இறுக்கிப் பிடித்துக் கொண்டு, ஆங்கே நின்ற ஆயிரக் கணக்கானவர்களையும் பார்த்து 'தோழர்களே! ஜாபிருடைய வீட்டில் எல்லோருக்கும் உணவு தயாராக உள்ளது. ஜாபிர் உங்களை அழைக்கின்றார். அவர் வீடு நோக்கி எல்லோரும் விரையுங்கள்' என்றார்கள்.

ஜாபிர் (ரலி) அவர்களுக்கோ, ஒரு பக்கம் வெட்கம் பிடுங்கித் தின்றது. இன்னொரு பக்கம் பயம் பற்றிக் கொண்டது! இக்கட்டான சூழலில் 'இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்' என்று சொல்லிக் கொண்டே மனைவியை எச்சரிக்க வீட்டை நோக்கி விரைந்தார். 

மனைவி கேட்டார்: ‘அவர்கள் அனைவரையும் நீங்கள் அழைத்தீர்களா அல்லது அல்லாஹ்வின் தூதர் அழைத்தார்களா?’

‘அல்லாஹ்வின் தூதர்தாம்!’

'அப்படியானால் அவர்கள் வரட்டும். நீங்கள் கவலையை விடுங்கள்' என்றார்.

சாந்தம் கமழும் காந்த நிலவாய் சத்தியத் தூதர் (ஸல்) வீட்டிற்குள் நுழைந்தார்கள். நபியவர்களின் முன்னால் உணவு வைக்கப்பட்டது. இறுதித் தூதர் (ஸல்) அமர்ந்து இறைவனிடம் இறைஞ்சினார்கள்.

தோழர்களிடம், 'அல்லாஹ்வின் பெயர் கூறி உண்ணுங்கள்' என்றார்கள். அன்று அகழில் பணியாற்றிய அத்தனைத் தோழர்களும் ஒருவர் விடாமல் வயிறார உணவுண்டு முடித்தார்கள். பின்னரும் சிறிது ரொட்டியும் மாமிசமும் மீதமிருந்தது. ஜாபிரின் வீட்டில் அல்லாஹ் கிருபையாளனின் அருள் மழை 'பரக்கத்' ஆகப் பொழிந்து கொண்டிருந்தது!

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். அண்ணல் எங்கள் ஆருயிர் நபி  (ஸல்) அவர்கள், பின் வருமாறு இறைஞ்சுவார்கள்:

'இறைவா! என் குற்றங்களைவிட உன் மன்னிப்பு விசாலமானது. என் செயல்களைவிட உன் அருள் ஒன்றே நான் பெரிதும் எதிர்பார்ப்பது' (4) 

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தமது 94 ஆவது வயதில் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃபின் ஆட்சிக் காலத்தில் மதீனாவில் இறப்பெய்தினார். மதீனாவில் இறப்பெய்திய கடைசி நபித் தோழரும் ஜாபிர் (ரலி) அவர்கள் தாம். 

o o o 0 o o o
ஆதாரங்கள்:
(1) புஹாரி  2127 : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி)
(2) புஹாரி 2967: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி)
(3) அபூதாவுத் 4998: அனஸ் இப்னு மாலிக் (ரலி) 
(4) ஹாக்கிம் முஸ்தத்ரக்
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
இக்பால் M. ஸாலிஹ்


படிக்கட்டுகள் - 21 0

அதிரைநிருபர் பதிப்பகம் | July 29, 2015 | , , ,

[It is not a light reading…Please pay attention]

யூகத்தின் அடிப்படையில் ஒரு மனிதன் இயங்குவது, மற்றவர்களின் வாழ்க்கைக்குள் பிரச்சினையை உருவாக்க வாய்ப்புகள் அதிகம். இது தொழிலுக்கும் உதவாது, குடும்பத்திற்கும் உதவாது. அதனால் தான் "ஜென்' தத்துவங்களில் LIVE IN PRESENT என்ற பயிற்சியே உண்டு.

நாம் பெரும்பாலும் கடந்தகால நினைவுகளில் வாழ்கிறோம், இல்லையென்றால் எதிர்கால நினைவுகளில் வாழ்கிறோம். இதனாலேயே We Forget to Live. மனிதர்களைப் பற்றி நமக்குள் இருக்கும் யூகம் நாமாகவே ஒரு முடிவுடன் அவர்களைப் பார்க்க ஆரம்பிக்கிறோம். நமது யூகம் சமயங்களில் தொழிலும், குடும்பத்திலும் தவறான முடிவு எடுக்கவே காரணமாகிவிடுகிறது. எந்த மனிதனும் தான் நல்லவன் என்றுதான் நினைப்பான்.. மற்றவன் மட்டும்??

சில இன மக்களைப் பற்றி சில கமென்ட்ஸ் நிறந்தறமாக இருப்பதற்கான காரணம் " யூகம்" தான்.

விற்பனைத் துறையில் யூகத்துடன் அனுகுவதை தவறாகவே சொல்லப்படுகிறது.

குடும்பத்தில், தொழிலில் சிலர் செய்யும் தவறுகளை மட்டும் சொல்லிக் காட்டிக் கொண்டிருந்தால் இளையவர்கள் உங்களை பார்த்தவுடன் 'நடிக்க ஆரம்பிக்கலாம்... வாய்ப்பு கிடைத்தால் உங்களின் கண்ணில் படாமல் கம்பி நீட்ட அவர்களுக்கு தெரியும் என்பது உங்களுக்கு தெரியுமா? . உங்கள் வயதும் அனுபவமும் எப்போதும் விரும்பிக் கேட்கும் விசயமாக இருக்க நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். வாங்க , வாங்க என்று கூப்பிட்டு மனதுக்குள் ' என் நேரம் சரியில்லை இன்னிக்கு இவன் கிட்டே மாட்டிக்கிட்டேன்" என்று வாய்க்குள் முனங்குவது  மாதிரி நாம் அட்வைஸ் மழை பொழிவதால் எந்த பயனும் இல்லை.

பெரும்பாலான சமயங்களில் நம்முடைய கருத்தை மற்றவர்களிடம் திணிக்க நினைக்கும் ஆட்களின் ரேடியசில் எந்த உயிரினமும் அன்டாது. எதற்கெடுத்தாலும் விவாதம், எதற்கெடுத்தாலும் விமர்சனம் என்று வாழும் மனிதர்கள் "தொடர்ந்து தீர்ப்புவழங்கும் மெசின்" மாதிரி மதிக்கப்படுவார்கள். தொடர்ந்து தீர்ப்பு வழங்குபவர்கள் உண்மையை விட்டு விழகி வாழக்கூடும். இவர்களிடம் காது கொடுத்து கேட்கும் மிகப்பெரிய பலம் இருக்காது.  தொழிலில் இருப்பவர்கள் இப்படி இருந்தால் நான் இங்கிருந்தே அவர்களின் 'நஷ்ட கணக்கை" எந்த விதமான கேபிளும் இல்லாமல் பார்க்க முடியும். குடும்ப வாழ்க்கையில் இளையவர்களாக இருந்தால் நிறைய எதிரியையும் , பெரியவர்களாக இருந்தால் நிறைய வெறுப்பையும் சம்பாதித்தவர்களாக இருப்பார்கள்.

வாழ்க்கையில் நடுவயதை / ரிட்டயர்மன்ட் வயதை நெருங்கும்போது ஒரு  insecure Feeling இருக்கும். இறைவன் மீது மனிதனின் நம்பிக்கை குறையும் போதெல்லாம் இதன் மீட்டர் முள் “FULL”  காண்பிக்கும். நாம் நல்ல நேரத்தையெல்லாம் தவற விட்டு விட்டோமோ என்ற குற்ற உணர்வு இருக்கும். அனைத்தும் 100 % மாயை. இந்த எண்ணங்களுக்கு தீனி போட்டு வளர்த்துவிட்டால் தரித்திரம் டெனன்ட் அக்ரீமன்ட் போடாமல் உங்களுக்குள் குடிவந்து ரேசன் கார்டுக்கு அப்ளை செய்துவிடும்.

வாழ்க்கையில் நம்பிக்கை இழந்த சூழல் பெரும்பாலும் கிடையாது... நம்பிக்கை இழந்த மனிதர்கள்தான் இருக்கிறார்கள் .

ஒரு தனிமனிதன் பொருளாதார சூழல்களால் முடக்கப்படும் போதுதான் அவன் முன்னேற வேண்டும் என நினைக்கிறான். இன்றைக்கு வாழ்க்கையில் பணக்காரர்கள் ஆன எல்லோருடைய வாழ்க்கை வரலாற்றிலும் இந்த உண்மை இருக்கிறது. மற்றும் உழைத்து முன்னேறியவர்களின் வாழ்க்கையில் எப்போதுமே வெற்றி நிச்சயம்தான். நீங்கள் உழைக்க சோம்பேறித்தனப்படாத மனிதராக இருந்தால் கவலையே பட வேண்டாம். உங்களுக்கு வரும் கஷ்டம் எல்லாம் ஒரு மலைபோல் தெரிந்தாலும் உடனே விலகி விடும்.

வேசம் போடாமல் எதையும் எதிர்கொள்ளலாம்.

ஒரு மனிதனின் வெற்றியை தூரமாக்குவது அவன் இதுவரை போடும் வேசம்தான். அது சரி நாம் என்ன நாடகத்திலா நடிக்கிறோம் வேசம் போடுவதற்கு என்று நினைக்க வேண்டாம்.

தெரிந்தோ தெரியாமலோ நாம் வளரும் சூழலில் நாம் இப்படித்தான் என்று சில விசயங்கள் நம்மிடம் ஒட்டிக்கொள்ளும். அதில் சில :
  • நான் இந்த இனம்,இதனால் இவனிடம் உதவி கேட்க முடியாது.
  • நான் இந்த குடும்பம் அதனால் இவனிடம் பேச மாட்டேன்.
  • நான் இந்த மதம், அதனால் அடுத்த மதத்தை சார்ந்தவர்கள் எல்லாம் என்னுடன் பழக முடியாது.
இது கடைசியில் எங்கே கொண்டு போய் விடும். குடும்பம் கஸ்டத்தில் இருக்கும்போது கூட கெளரவம் பார்த்து கெளரவம் பார்த்து வரும் வாய்ப்புகளை எல்லாம் தட்டி விட்டு பின்னாலில் தன்னை நம்பியிருக்கும் மனைவி, பிள்ளைகளையும் கஷ்டத்தில் நிறுத்தி இருக்கவே இருக்கிறான் இறைவன், இவனுடைய போலிவேசத்தால் வந்த வினைக்கு குற்றம் சாட்ட. 

உங்களுக்கு இறைவனின் கருணை கிடைக்குமாஅனைத்தும் அறிந்த இறைவன் தான் பதில் சொல்ல முடியும். தனக்கு தானாகவே உதவிக்கொள்ள முடியாதவன் மற்றவர்களின் கஷ்டத்தில் மனமுவந்து உதவி செய்ய முடியுமா என்பது கேள்விக்குறிதான். 

உங்களையும், உங்கள் குடும்பத்தையும் தூக்கி நிறுத்த சிரமப்பட்டால் மற்ற குடும்பத்தை தூக்கி நிறுத்த வாக்குறுதிகளை அள்ளி வீச வேண்டாம். கேட்பவர்கள் உங்களை ஈசியாக சந்தேகப்படுவார்கள்.

ஆக முன்னரே பயிற்சிகளில் ஒன்று உங்களிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் வேசம் என்ன என்பதை கண்டுபிடிப்பது.

ஒட்டிக்கொண்டிருக்கும்  வேஷத்தை வைத்தே கோபமும் ஒரு ஊற்றுபோல் வந்து கொண்டிருக்கிறது, எப்போதும் வற்றாமல்.

கோபத்தின் தாக்கம் உங்கள் பக்கம் திரும்பினால் நீங்கள் பணம் சம்பாதிப்பதில், மாணவப் பருவத்தில் இருந்தால் மிகப்பெரிய சாதனைகளை செய்யும் மனிதனாக மாறலாம். 

கோபம் மற்றவர்கள் மீது திரும்பும்போது அது உங்களுக்கு பெரும்பாலும் நஷ்டத்தையே கொண்டு வந்து சேர்க்கும். சிலர் சின்ன வயதிலிருந்து தனக்குள் போட்டுக்கொண்ட சிறைக்குள்ளேயே வாழ்ந்து விட்டு அதன் ஜன்னல் வழியே எட்டிப்பார்க்கும் போது தன் சிறைக்கு பக்கத்திலேயே இவ்வளவு பெரிய பரந்த உலகம் குதூகலத்தோடு இயங்குகின்றது என்பதை தனது வயதான காலத்தில்தான் தெரிந்து கொள்கிறார்கள். காலக் கடிகாரத்தை மறுபடியும் ஆரம்பத்தில் இருந்து ஓட வைக்க முடியுமா?.

அதனால்தான் சொல்கிறேன் நாம் போட்டுக் கொண்டிருக்கும் வேஷமும் வெறுப்பும் வாழ்க்கையை சிதைத்து விட வேண்டாம். ரோஜா மலர்களை நிலக்கரித் தீயில் எரிப்பது போன்ற உணர்வுதான் எனக்கு வருகிறது. மீண்டும் சொல்ல வேண்டுமென்றால் Do Not Forget to Live

சில சமயங்களில் நாம் போட்டிருக்கும் வேஷம் நம் ஈகோவை சந்தோசிக்க வைக்கலாம், அவை அனைத்தும் போலி.

மரணமும், நோயும் , வறுமையும் சுத்தமாக ஈகோவை வடித்து எடுத்துவிடும்.

அந்த தருணங்களில் உங்களுக்கு அன்பு தேவை , அப்போது ஏற்கனவே ஈகோ பார்த்து விரட்டியடிக்கப் பட்டவர்கள் உங்கள் பக்கத்தில் இல்லாவிட்டால் நீங்கள் இன்னும் உடைந்து போகலாம்.

முன்னாடியே நம் வேசம் எது என்று தெரிந்து விட்டால் ஈகோ தலை தூக்க வாய்ப்பு இல்லை. மனிதர்களும் உங்களிடம் சேர்ந்து அன்பு செலுத்த முடியும்.

இதை தொழில், குடும்பம், நட்பு எதில் வேண்டுமானாலும் பொறுத்தி பார்த்து கொள்ளுங்கள். ரூல்ஸ் எல்லாவற்றிற்கும் ஒன்றுதான்.

மனிதனுக்குள் பில்ட்-இன் ஆக இருக்கும் இன்டலிஜென்ட்சி  எப்போதும் மாற்றத்தை நோக்கி பயணித்து இருக்கும். இதற்கு துணையாக சுற்றுப்புற சூழல்கள் இருந்தாலும் அப்படி ஒரு சூழல் இல்லாத போது தானாகவே இயங்க ஆரம்பிக்கும். இதனால்தான் புதிய கண்டுபிடிப்புகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. அதற்கு வயது ஒரு தடை இல்லை.

சிலர் உழைப்பையும் , வயதையும் ஒன்றாக போட்டு குழப்பிக் கொள்வதும் உண்டு. 

இனிமேல் நம்ம காலம் முடிஞ்சிடுச்சி... இனிமேல் போன வயது திரும்பி வராது என்ற விரக்தியில் இத்தனை நாள் தான் சேர்த்த இன்டலிஜென்ட்சியை தூர தூக்கி போட்டு விடுவார்கள்.

இன்றைக்கு நகர்ப்புரங்களை ஒட்டி உருவான பல நகர்கள் ஒரு சில மனிதர்களின் இன்டலிஜென்ட்சில் உருவானது. பொட்டலாக கிடக்கும் நிலங்களை மனிதர்கள் வாழ நகர்களாக உருவாக்குவதன் நோக்கம் “Land Banking “ வெளிநாடுகளை பொறுத்தவரை மிகப்பெரிய பிஸினஸ். இதை முதலீட்டு நிறுவனங்கள் மிகப்பெரிய நெட் வொர்க்கில் “Land Banking Investments”என்று கோடி கோடியாக லாபம் சம்பாதிக்கிறது.

உழைப்பு என்றால் மண் வெட்டியை கையில் பிடித்துமண்ணை சட்டியில் அள்ளி,  மண்ணை தலையில் சுமந்து மாலையில் வரிசையில் நின்று கூலி வாங்குவது என்று நாம் தவறாக நமது மைன்டை ஃபார்மேட் செய்திருக்கிறோம். 

Hard work some time do not pay!!  Some time SMART WORK also pay !!

கடின உழைப்பில் மட்டும்தான் வருமானம் என்றால் உயர்ந்த கட்டிடங்களில் நின்று சிமென்ட் பூசும் கூலித் தொழிலாளியை விட கீழே நின்று சேஃப்டி தொப்பி போட்டு டை கட்டி சில பெரிய தாள்களை பார்க்கும் Engineer க்கு ஏன் அதிக வருமானம்??

ZAKIR HUSSAIN

எங்கே செல்லும் இந்தப் பாதை…? 10

அதிரைநிருபர் பதிப்பகம் | July 28, 2015 | , , , , ,

நீங்கள் மாற்று மதச் சகோதரர்களிடம் இஸ்லாத்தை எத்தி வைப்பவரா? 

‘தாஃவா” பணியை தலையாயப் பணியாகச் சிரமேற்றுச் செய்பவரா? 

ஊணுறக்கம் துறந்து தொலை தூரங்கள் பயணித்து இஸ்லாம் சென்றடையாத இடங்களுக்குச் சென்று, தங்கி மார்க்கம் போதிப்பவரா? உங்களுக்காகத்தான் இந்தப் பதிவு.

ஒரு சம்பவத்தை விளக்கி விட்டு இந்தத் தலைப்பை ஞாயப்படுத்துவதாக இருக்கிறேன்.

நான் பணிபுரியும் நிறுவனத்தின் வளாகத்திற்குள்ளேயே இங்கு வேலை செய்வோரின் வசதிக்காகவும், நேரப்படி தொழுவதற்காகவும் ஒரு மஸ்ஜிதைக் கட்டித்தந்திருக்கிறார் எங்கள் (அர்பாப்) நிர்வாக இயக்குனர்.  சரியாகச் சொன்னால் இரும்பு வேலைகளில் துவங்கி உள் வேலைப்பாடுகள் வரை நானே முன்னின்று உருவாக்கியது இந்தப் மஸ்ஜித், அல்ஹம்துலில்லாஹ். இங்கு ஐந்து வேளைத் தொழுகை நடத்த பிரத்யேக இமாம் நியமிக்கப்பட்டு, வேலை நேரம் போக மற்ற எல்லா நேரங்களிலும்கூட தொழுகை நடக்கும். நிறுவனத்தின் கேம்ப்பில் வசிக்கும் இந்தியர்கள், பாக்கிஸ்தானியர், வங்க தேசத்தவர் மட்டுமல்லாது அரேபியர்களும் தொழும் இந்த மஸ்ஜித் 50க்கு 50 அடி பரிமாணத்தில் போர்ட்டபிளாக அமைக்கப்பட்டது.  ஷார்ஜாவின் GECO SIGNAL எனும் இடத்தில் உள்ளதால் தினமும் ஓரளவு வரிசைகள் நிரம்பவே தொழுகை நடக்கும்.

எனக்கு இங்கு லுஹர் மற்றும் அஸர் தொழவும், குளிர் காலங்களில் மஃரிபும் தொழவும் வாய்க்கும்.  நான் அஜ்மானில் வசிப்பதால் மற்ற வக்துகள் இங்கு வாய்ப்பதில்லை. ஒரு அஸர் நேர ஜமாத்தை, வேலை நிமித்தம் தவறவிட்ட நான் தனியாகத் தொழுதுவிட்டு வெளியேறும்போது புதிதாக ஒரு மனிதரைப் பார்த்தேன்.  35 வயது மதிக்கத்தக்கவராக தாடி வைத்துச் சற்றுத் தடியாக இருந்த அவரை அதற்குப் பிறகு பலமுறை மஸ்ஜிதில் காண நேரிட்டது. 

சட்டென்ற பார்வையில் துவங்கி சற்று நிதானித்தப் பார்வையாக வளர்ந்து, மெல்லிய புன்னகை என்று துவங்கிய அறிமுகம் ஒரு முறை அழகிய முகமனாக, “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கனிந்தது. “வ அலைக்குமுஸ்ஸலாம்” என்றவரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவரைப் பற்றிய விவரங்களையும் கேட்டு அறிந்து கொண்டேன்.

அதற்குப் பிறகு, காணும்போதெல்லாம் சற்றுநேரம் நின்று பேசிவிட்டுத்தான் செல்வோம். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் ஊரைச்சேர்ந்தவர், நன்கு படித்து நல்ல வேலையில் இருப்பவர் எனும் விவரங்களைத்தவிர மேற்கொண்டு எந்த விவரம் சொன்னாலும் அது அவரைப்பற்றியப் புறம் பேசுவதற்குச் சற்றே நெருக்கத்தில் வந்துவிடும் ஆதலால் என்னைப் பாதித்த விவரங்களை மட்டும் கீழே விவரிக்கிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நான் வேலை முடிந்து கம்பெனியைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்த வேளை எதிரே நடந்து வந்துகொண்டிருந்த அவரைக் கண்டதும் காரை நிறுத்தி அவரை நிற்கச் சொல்லி ஹார்ன் அடித்தேன்.  நின்ற அவரிடம், காரைவிட்டு வெளியே வந்து,

“அஸ்ஸலாமு அலைக்கும். நலமா?” என்றேன்

“அலைக்குமுஸ்ஸலாம். நல்லார்க்கேன்” என்றார்.  என் காரில் எப்போதும் வைத்திருக்கும் “தோழர்கள்” புத்தகத்தின் ஒரு பிரதியை அவரிடம் கொடுத்து,

“இதைத் தருவதற்காகத்தான் உங்களை நிற்கச் சொன்னேன். வாசியுங்கள். அருமையானப் புத்தகம்” என்றேன்.

“யார் எழுதியது?” என்று கேட்டார்

“நம் சகோதரர் நூருத்தீன் என்பவர் எழுதியது” என்றேன் புன்னகையோடு

“யாரூ….? என்று இழுத்தவரிடம்

“நூருத்தீன் எனது நண்பர். ஸியாட்டிலில் வசிக்கிறார். சத்யமார்க்கம் என்னும் தளத்தில் அவர் எழுதி தொடராக வெளிவந்து வரவேற்பு பெற்றது இந்நூல்.  புத்தகமாக வெளிவந்து பலரால் பாராட்டப்பட்டது.  அதிகம் அறியப்படாத சகாபாக்களைப்பற்றியத் தகவல்களை சுவாரஸ்யமாகச் சொல்லும் நூல்” என்றேன்

“இல்லை. நான் கேட்பது… எந்த அடிப்படையில் எழுதப்பட்டது என்று” முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு கேட்டார்.

“குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்” என்றேன் இயல்பாக.

“இல்லை. எந்த கிதாப்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது என்று கேட்கிறேன்” என்றார். குரலில் சற்று சப்தம் கூடுவதைக் கவனித்தேன்.

“குர் ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு” என்றேன் அப்பாவியாக.

“நேராகவே கேட்கிறேன். சுன்னத் ஜமாத் அடிப்படையிலா தவ்ஹீதா?’ என்று வினவினார்

“அல்லாஹ் ரசூல் போதனைகளின் அடிப்படையில்” என்றேன், என் குரலில் சற்றே கேலித் தொணியோடு.

“சுன்னத் ஜமாத்தா?” என்றார்.

“ஆமாம். ஆனால், ஜமாலி, ரஷாதி என்கிற வலிமையான பின்புலம் இல்லை” என்றேன்.

“தவ்ஹீதா?” என்றார்

“ஆமாம். ஆனால், ட்டி என் ட்டி ஜே என்கிற இயக்கப் பின்னணி இல்லை”  என்றேன் சிரித்துக்கொண்டே

“மத்ஹப்களை நம்புபவரா நீங்கள்?” என்றார்.

“நான் வழிபடும்போது ஏதாவது அல்லது எல்லா மத்ஹப்களிலிருந்தும் ஒரு சில அசைவுகள், தோரணைகள் சேர்ந்து கலந்து கட்டி இருக்கும்.  தவ்ஹீத் சிந்தனை கொண்டவன்” என்றேன்.

குழம்பியவராக, “தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நான் நான்கு மத்ஹப்களை நம்புபவன். ஒன்றைப் பின்பற்றுபவன். மத்ஹப்களை மறுக்கும் எந்தப் புத்தகத்தையும் நான் படிக்கத் தயாராக இல்லை. இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.” என்று என்னிடமே திருப்பி நீட்டினார். 

“இந்தப் புத்தகம் மத்ஹப்களை மறுப்பதாக நான் சொல்லவில்லையே” என்றேன்.

“இல்லை வேண்டாம்” என்று திருப்பித் தந்துவிட்டார். 

எனக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது என்னவெனில், இதே புத்தகத்தை நான் மாற்று மத நண்பர்களுக்குக் கொடுத்தபோது இன்முகத்தோடு வாங்கிக்கொண்டு நன்றி சொன்னது நினைவுக்கு வந்தது.  சிரிப்பதா அழுவதா என்று அறியாமல் புத்தகத்தைத் திருப்பி வாங்கிக்கொண்ட நான் மேலும் பேச முனையும்போது அவர் நடையைக் கட்டிவிட்டார்.  எனக்கு சரியான எரிச்சலாகவும் கோபமாகவும் வந்தது. யார்மேல் கோபம் எதன்மேல் ஆத்திரம் என்று எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை.  நன்றாகக் கற்றுத்தேர்ந்தவர்களே இப்படி இங்கிதமின்றி முகத்தில் அடித்தாற்போல பேசி சஹாபாக்களைப் பற்றிய ஒரு நூலை வாங்க மறுக்கும் மனோநிலையில் இருப்பது எனக்கு அச்சத்தைத் தந்தது.  

மார்க்கம் சொல்லும் மகா மனிதர்களை எண்ணி கலக்கம் ஏற்படுகிறது. குணம்நாடி குற்றமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொள்ளும் மனோபாவம் அற்றுப் போய்விட்டது.  இரண்டு தரப்பையும் தெரிந்துகொண்டால்தானே எதைத் தேர்ந்தெடுப்பது என்பதை நம் அறிவைக்கொண்டு தீர்மாணிக்க இயலும்.  ஒரு தரப்பைப் பற்றி அறிந்துகொள்ளவே மாட்டேன் என்பது என்ன ஒரு மனநிலை? 

இந்த உள்குத்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பதாக எனக்குப் பயமாக இருக்கிறது.  நாளுக்கு நாள் இந்த விரிசல் விரசமாகவும் வினையாகவும் வக்கிரமாகவும் பெரிதாகிக் கொண்டே போவதைக் கவலையோடு கவனிக்கிறேன்.  “என்னப்பா இப்டி செய்றீங்களே?” என்று கேட்டால் லாப்டாப், மைக், மேடை, ப்ரொஜெக்டர், நிபந்தனைகள் என்று நாட்கணக்கில் உட்கார்ந்து விவாதம் செய்யக் கூப்பிட்டு விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. இனிமையான இறைவனையும் எளிமையான ரசூலை(ஸல்)யும் பின்பற்றும் எனக்கு எத்தனை பந்தாவான, ஆர்ப்பாட்டமான, அலங்காரமான, அடாவடியான தாயிகள்!!!  தற்கால சினிமாவின் முன்னனி நடிகர்களின் மீது மோகம் கொண்ட ரசிகர்களைவிட மார்க்கத் `தலை`களிடம் மோகம் கொண்டு கண்மூடித்தனமாக பின்பற்றும் சகோதரர்களை எண்ணிப் பார்க்கிறேன். தல எல்லாம் அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையில் தெளிவாகத்தான் இருக்கிறது. தொண்டர்கள்தான் நவீன ஜாஹிலாவில் வாழ்கிறார்கள் என்று தோன்றுகிறது.

எனவே, தாஃவா என்று மாற்று மத மக்களை அனுகுவோர், சற்றே நிதானித்து உங்கள் அடுத்த வீட்டு, பக்கத்துத் தெரு, மற்ற ஊர்களில் உள்ள நம் சகோதர/சகோதரிகளை அனுகுவது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.  

காரில் உட்கார்ந்து எஃப் எம்மை ஆன் செய்து செய்தி கேட்கலாம் என்று முயல…உடைந்த குரலில் யாரோ பாடிக்கொண்டிருந்தார்கள்: “எங்கே செல்லும் இந்தப் பாதை?”!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

அதிரைநிருபரின் நிழல்கள் ! [பழசுதான் இருந்தாலும் மவுசுதான்] 12

அதிரைநிருபர் பதிப்பகம் | July 27, 2015 | , , ,


அதிரைநிருபரில் வெளிவரும் பதிவுகள் மட்டுமல்ல அதன் பின்னூட்டங்களும் பேசுபொருளாக மாறி ஏராளமான இதயங்களில் இடம்பிடித்து வீடுகட்டி வாழ்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதெற்கெல்லாம் முத்தாய்ப்பாக அமைதியின் ஆளுமையில் ஆராவரமாக அசத்திய ஏராளமான சகோதரர்களை சட்டென்று நினைவு கூறும் நேரத்தில் ஏராளமானோர் நினைவில் வராவிட்டாலும் பேச்சு வழக்கில் சிக்கிய சகோதரர்களின் சந்திப்பு ஒன்று நடந்தால் எப்படியிருக்கும் என்று ஒரு ரசனையான கற்பனையொன்றை அதிரைநிருபர் குழு மின்னாடல் சுற்றுக்கு விட்டது. அதன் பிரசவம் தான் இங்கே.... இந்த வலி எங்களோடது அதன் சிரிப்போ உங்களோடது..

இந்தப் பதிவில் நடைபோடும் உரிமையோடும் உறவாடியிருக்கிறோம், ரசனையின் உணர்வுகளை உள்வாங்கி ரசிக்கத் தெரிந்தவர்களோடு ரசனையாடியிருக்கிறோம். குட்டலோ, வெட்டலோ இருப்பின் இதோ மின்னஞ்சல் comments@adirainirubar.in அங்கே எழுதி கேட்டு ஃபோன் நம்பர் வாங்கி அப்புறம் திட்டுங்க. வேனும்னா அட்ரஸ்கூட தருகிறோம் டிக்கெட் போட்டு வந்து அடிச்சிட்டுப் போயிடுங்க... அதுக்காக கோபமாக மட்டும் இருப்பேன்னு இருந்திடாதீங்க ப்ளீஸ்...

நாங்கள் அதிரை நிருபர்கள்:

அந்தக் கனவு அழகாய் உதித்து அருமையாய்த் தொடர்ந்தது. ஓர் ஓளரங்க நாடகம்போல காட்சிகளாய் விரிந்தன அந்த உரையாடல்கள்:

சபீர்: என்ன ஜாயிரு
          இந்த நேரத்தில்
          வந்து நிற்கிறே?

ஜாகிர்: நேரம் முக்கியமல்ல, அதை எப்படி உபயோகிக்கிறோம் என்பதுதான் முக்கியம். ஒரு நிமிஷத்தைக்கூட ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் கழித்தால் அவனுக்கு அன்னை தெரசா ஆஸ்ரமதில்கூட அட்மிஷன் போடமாட்டாங்க 

சபீர்: சரிடா
          ஏன்
          கோபப்பட்றே?

ஜாகிர்: பிறகென்னடா? “நாங்கள் அதிரை நிருபர்கள்”னு நிகழ்ச்சியைப் ப்ரோப்போஸ் பண்ணிட்டு இன்னும் கிளம்பாம, மூனு ஆயுள் தண்டனை வாங்கின பிரேமானந்தா மாதிரி கிடக்கிறியே என்ன அர்த்தம்?

சபீர்: சரிசரி
         வாவா
         போவோம்
         போபோய்
         வருவோம்

ஜாகிர்: பார்த்தியாடா, எல்லோரும் நமக்காக காத்திருக்காங்க. அஸ்ஸலாமு அலைக்கும் அபு இபுறாஹிம். நல்லாருக்கியலா?

அபு இபுறாஹிம்: நா(ன்) நல்லா(த்தான்) இருக்கேன் காக்கா. நீங்க? அஸ்ஸலாமு அலைக்கும் (கவி)க்காக்கா.

சபீர்: வ அலைக்குமுஸ்ஸலாம்
          அபு இபுறாஹீம்
           நலம்தானே ?

ஹமீது: என்ன எல்லோரையும் வரச்சொல்லிட்டு நீங்க மட்டும் ராக்கெட் உட்றிய? நான் கெளம்பி அப்பர் கோதையாறு போய்டவா?

யாசிர்: சரியாச் சொன்னிய காக்கா. புருஷன் பொன்டாட்டிக்குள்ள ஒரு அண்டர்ஸ்டேண்டிங் இருந்தா இப்படியெல்லாம் தாமதமா வரமாட்டாஙக. நான் வேணும்னா கட்டம்போட்டு விளக்கவா?

சபீர்: யாசிர்,
          அடங்குங்க.
          எம் ஹெச் ஜே
          என்ன
          மெளனமாயிட்டிய?

எம் ஹெச் ஜே: அதான் அங்கேயே கருத்துச் சொல்லியாச்சே காக்கா, இங்கேயும் எதுக்கு வரிக்குக்கீழ் வரின்னு மடக்கி மடக்கிப் பேசுறீங்க. அவஅவன் கொட்டுற பனிலே நடுங்குறான்.

அபு இபுறாஹிம்: அன்பு(ள்ள) தம்பி. உங்கள் குளிரை விரைவில் பதிவுக்கு(ள்) கொண்டுவ(ருகிறோம்)ர முயல்வோம்

எம் எஸ் எம்: எடிட்டராக்கா. இப்ப நான் சொல்றதையும் ஏற்கனவே சொன்னதோடு சேர்த்துக்கோங்க. அதாவது, நம்ம பெரியாப்பா மக்க சின்னாப்பா மக்களையும் உடன்பிறந்தவங்க மாதிரிதான் பாக்கனும். இல்லாட்டி நம்ம பிள்ளைலுவோ நமக்கு சோறு தண்ணி தராதுவோ. காசு பணத்தக் காட்டாதுவோ. விசிறி எடுத்து வீசாதுவோ.

எல் எம் எஸ்: அதத்தான் இப்பவே நிறைய கண்கூடாப் பாக்குறோமே. “விசிறி எடுத்து வீசாதுவோ” .நெய்னா,வெளிச்சம்போட்டு காட்டிட்ட.

அலாவுதீன்: என்ன வேணா பேசிக்கோங்க. ஆனா, கடன் வாங்காதீங்க. அல்லாஹ் ரசூல் சொன்னதை அருமருந்தாக பக்கத்திலேயே வச்சிக்கோங்க.

அர.அல: அலாவுதீன் காக்கா பேசுறது மட்டும்தான் பேச்சு. மத்தவங்கல்லாம் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்.

ஜாகிர்: அப்ப நான் என்ன மணிமண்டபத்திற்கா “படிக்கட்டு”கிறேன்?

அர.அல: ஜாகிர் காக்காவையும் அலாவுதீன் காக்காவையும் மட்டுமே பேசச் சொல்லி அதிரை நிருபரில் ஆதாரபூர்வமான அறிவுப்புகள் இருக்கு.

அதிரை அஹ்மது காக்கா: "நான் வேனும்னா, 'பேச்சு' - ஒரு பதிவரின் பார்வை"யைத் தொடங்கவா?

சபீர்: அருமை கவியன்பன். அழகான கவிதை. கலக்கிட்டிய

கவியன்பன்: நான் இன்னும் ஒன்னும் சொல்லவே இல்லையே?

சபீர்: உங்கள் மெளனம்கூட வாய்ப்பாடும் விருத்தமுமாய் அழகாய்த்தான் இருக்கிறது.

தலைத்தணையன்: மாப்ளே கலாம், நீ இங்கேயா இருக்கே. நான் உன்னையத் தேடி யு எஸ் வரைப் போயிட்டு வந்தேனே?!

கவியன்பன்: மச்சான், 
            நான் காண்பது கனவா நெனவா?
            நீதானா இது நீதானா
            நிஜம்தானா சொல் நிஜம்தானா
            வேர்போல என் வாழ்வுதனில்
            ஊரி லிருந்தது நீதானா

அர அல : கவிஞர்களை வழிகேடர்களே பின்பற்றுவர்

…சலஃபி: “ஹு வல்லாஹு அஹத்” அல்லாஹ் ஒருவனே என்று விளங்கிக்கொண்டால் சர்ச்சை வராது

சபீர்: நல்ல வேளை
          நான்
          பேசுவது
          கவிதை
          இல்லை

கிரவுன்: ஏற்றுக்கொள்ள முடியாது. நல்லவேளை எனும் சொல்லுக்குள் நல்ல ஆளைப் பார்க்கிறோம்; நல்ல வேலைப்போல விருட்சம் பார்க்கிறோம்; நல்ல வேலென கூர்மையைப் பார்க்கிறோம்

அபு இபுறாஹிம்: கிரவுன்(னு), எங்கேடா(ப்பா) ஆளை(யே) காணோம்?

என்.ஷாஃபாத்: எலெக்ட்ரான் ப்ரொட்டான்
            என எத்தனை அணுக்கள்
            பொக்ரானிலும் போட்டுடைத்தது போதாதா
            கூடங்குளத்தின்
            சிறு அங்குலமும் சிதைய விடமாட்டோம்

அபு இஸ்மாயில்: இந்த மீட்டிங்கை ஊரில் நடத்தி போராடினால் ஜெயிக்கலாம். எதற்காக போராடனும் என்பதை பிறகு தீர்மாணிக்கலாம்.

சபீர்: யாசிர், யாரது எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறது?

யாசிர்: ரஃபீக் காக்கா மாதிரிதான் தெரியுது

சபீர்: உள்ளே வாங்களேன்

ரஃபீக்: நடத்துங்க நடத்துங்க. நான் மட்டுமில்லை. என்னைப் போல பலபேர் இங்கிருந்து சைலன்ட்டா வாட்ச் பண்ணிட்டிருக்கோம்.  நாங்கெல்லாம் உள்ளே வந்தால் நீங்க எல்லோரும் வெளியாக வேண்டியிருக்கும் பரவால்லயா? வந்தமா பேசுனோமா புறாக்கறியைத் திண்ணமா போனாமான்னு இருங்க.

தாஜுதீன்: சபீர் காக்கா நல்லாயிருக்கியலா? ஜாகிர் காக்கா நலமா? ஹமீது காக்கா பார்த்து ரொம்ப நாளாச்சு? கோவை அயூப் அவர்களை நேரா வரச்சொல்லிடுவோம். இதோ இப்ப வந்துட்டேன்.

யாசிர் & ஹமீது: இருங்க நாங்களும் வந்துர்றோம்.

சபீர்: இருங்கப்பா. எல்லோருமே இன்னும் கொஞ்ச நேரத்தில போயிடலாம். உஷ்ஷ்ஷ்…அமைதி அமைதி…காக்கா வர்ராஹ.

ஜமீல் காக்கா: பேசும்போது பிழை இல்லாம பேசனும். கொஞ்சமாப் பிழையாப் பேசுறவங்களை மட்டும்தான் லேஸா அதட்டுவேன். உங்கள மாதிரி நிறைய தப்பாப் பேசினா அப்புறம் கண்டுக்கவே மாட்டேன்.

N.ஜமாலுதீன் : நான் என்னமோ புதுசா ஆரம்பிச்ச இயக்க கூட்டமோன்னுல மெதுவா வந்தேன், நானும் உள்ளே வரவா ?

அபுஇபுறாஹிம் : (அட!) வாங்க தம்பி ! எங்கள் உள்ளம் என்றுமே திற(ந்தே இரு)க்கிறது... தெரிந்ததுதானே உங்களுக்கு

சபீர் : நீங்கள் வோ
           தெளிவாத்தான்
           இருக்கிய !

மர்மயோகி: (நல்லவேளை, நாம இருக்கிறத யாரும் கவனிக்கல. நடத்துங்க மக்களே. நாளைக்கு வச்சிக்கிறேன் தனி மெயில்ல).

யாசிர்: வாங்க மாமா, இங்கே வந்து பேசுங்க

இபுறாஹிம் அன்சாரி காக்கா: என்ன நடக்குது இங்கே? கொஞ்ச நேரம் குறுந்தாடி ஒதுக்கிட்டு…சாரி…குறுந்தொடர் எழுதிட்டு வருவதற்குள் இந்த 16 பேரும் 26 நிமிடம் 48 நொடிகளில் ஆயிரத்தி இருநூறு வார்த்தைகளைப் பேசியிருக்கீங்க. தாங்குமா இந்த சபை?

ஹமீது: மாமா பேச்சைச் சின்னப்பிள்ளைலேயே கேட்டிருந்தா சபீர் ஜாயிர் மாதிரி கழிசறைட சகவாசம் இல்லாம சுவிட்ஸர்லான்ட்லே செட்டிலாயிருப்பேன்.

சபீர்: ஹமீது, யார் வந்திருக்கான்னு பாருங்க.

ஹமீது: அடடே வாங்கண்ணே. சட்டையெல்லாம் ஐயன் பண்ணி இன் பண்ணிக்கிட்டு எங்கே கிளம்பிட்டிய. பாஸெஞ்சரா இருந்துக்கிட்டே பின் சீட்டிலேர்ந்து பைக் ஓட்டுனத மறக்க முடியலண்ணே

என் ஏ எஸ் சார்: ஹாய் கேவலப்பயல்ஸ். சபீர், யு ஆர் ரியலீ அமேஸிங் யா. ஜாகிர்ஸ் பீஸ் ஆஃப் ரைட்டிங் இஸ் அப்சொல்யூட்லி சூப்பர்ப். கலாம் ராக்கிங். எம் எஸ் எம்ஸ் ரைட்டிங் இஸ் மைன்ட் ப்லோயிங்யா. அக்ச்சுவலி ஐ டோன்ட் ஹேவ் டைம். அதர்வைஸ் ஐ வில் ரைட் அபவுட் மை டேட்ஸ்…சாரி… டேய்ஸ் இன் வியட்நாம்.

நூர் முஹம்மது காக்கா: கி.மு. நாநூறுல துவங்கப்பட்டது அதிராம்பட்டினம். அப்ப எனக்கு ஏழு வயசு. ரெண்டாம் நம்பர் ஸ்கூல்ல படிச்சிக்கிட்டிருந்தேன். ஈ எம் ஹனீஃபாவோட ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாதான் எங்கேயும் ஒலிக்கும்.

ஜப்பர் காக்கா: இங்கே எவனாவது தொப்பி போட்டிருக்கானா? பேராண்டிவொலா, ராத்திரிக்கு முர்தபா வாங்கித் தரேன், போய் மார்க்கெட்டுல தேசப் பொடி இருந்தா வாங்கியாரியலா. யாருப்பா அது அபு ஈசா பேராண்டியா?

அபுஈசா: தொப்பி போட்டாத்தான் தொழ முடியும்னா யாரும் பள்ளிக்கே வர மாட்டங்க. பிச்சைக்காரவர்கள்தான் வருவார்கள். ஆனா, அவர்களுக்குப் பிச்சை போட்டால் பிச்சையை ஒழிக்க முடியாது.

சேக்கனா M.நிஜாம்: இந்த சப்தம் குறைவதே சமூகத்துக்கு நல்லது. அதற்கு நாம் செய்ய வேண்டியது.
      01) எல்லோரும் வரிசையா உட்காருங்க 
      02) ஒவ்வொருத்தரா கையைத் தூக்கி அனுமதி கேளுங்கள். 
      03) பேசி முடித்ததும் சோடா கேட்காதீர்கள்

அபுபக்கர் அமேஜான் : ஜாகிர் காக்கா நீங்கதான் ஆரம்பிச்சு வச்சியா. சபீர் காக்க பதில் சொன்னாக. வரிசையா எல்லோரும் பேசுறாங்க. அதனால்தான் நானும் துபாய் வந்துட்டேன்.

இர்ஃபான் சி எம் பி: இதேபோலொரு சந்திப்பை ஐ நா சபையில் நிகழ்த்தினால் நம்ம பிரச்னைகளைத் தீர்த்துவிடலாம். ஏற்பாடு செய்யுமா அதிரை நிருபர்?

யாசிர்: ச்சான்ஸே இல்ல. காக்கமார்களெல்லாம் அசத்துறீங்க. யாருமே பரோட்டா மட்டும் சாப்ட்டுடாதிய. பரோட்டாய்ட் பீடியா(Parotta pedia) எனும் நோய் தாக்கிடும். பொன்டாட்டிப் பேச்சுக்கு ஆமாம் சொல்றவங்களைத் தவிர மற்ற எல்லோரையும் தாக்கிடுமாம்.

சபீர்: அப்ப எனக்கு வராதுப்பா.

ஹமீது: ப்பாயாவோடு தொட்டு திண்ணாலுமா? எனக்கு அண்டவே செய்யாது.

ஜாகிர்: ஆட்டு பார்ட்ஸ் சாப்பிட்டா நம்ம பார்ட்ஸ் கெட்டுடும். சொன்னா பைதிக்காரேம்பாய்ங்க. நான் மேல்மாடிக்குப் போறேன். படிக்கட்டுகள் எங்கேப்பா.

சபீர்: இருடா நானும் வரேன். யாராவது என் கம்ப்யூட்டரை ரிப்பேர் பண்ணித்தாங்களேன்.

புதுசுரபி: கொஞ்சம் லேட்ட்டாயிடிச்சு. வர்ர வழியிலே ஒரு டாக்ஸி ட்ரைவருக்கு “இறைவனிடம் கையேந்துங்கள்”பாடலுக்கு விளக்கம் சொல்லிட்டு வர தாமதமாயிடிச்சு.

ராஸிக்: எல்லோரும் சொல்லிட்டீங்க. நான் ஏதாவது சொன்னா ஏற்கனவே சொல்லியாச்சுன்னு ஒன்னுமே சொல்ல விடமாட்டேங்கிறீங்களேப்பா.

அப்துல் மாலிக்: சாதிக்கனும்னா அதற்காக முயற்சி செய்யனும். அவ்வ்வ்வ்வ்!

அப்துல் ரஹ்மான்: வண்ணத்துப்பூச்சியின் வர்ணங்கள் வரைந்ததா விலைகொடுத்து வாங்கி யணிந்ததா?

அதிரை முஜீப்: ஆக்கபூர்வமான பேசுபொருள் இல்லாததால் இந்த சபையிலிருந்து வெளிநடப்புச் செய்கிறேன்.

(நியூ காலேஜ் புற்பூண்டுகளை வளர்த்ததோ இல்லையோ நல்ல கழிசடைகளை வளர்த்து விட்டிருக்கு)

NM.மீரா : என்ன தம்பி எண்டரன்ஸ் எக்ஸாமுக்கு பசங்கள தயார் செய்றதுக்குதான் கூடியிருக்கீங்கன்னு வந்தா என்ன இது ? சரி சரி சீக்கிரம் பேசுங்க கல்வி மாநாட்டு தேதியை முடிவுபன்னுவோம்...

அதிரை அஹ்மது காக்கா : 'தம்பி மீரா செயல் வீரர்'

குதுப்: ஏதாவது சொல்லவந்தா நீங்க அவரான்னு கேட்டு ஓச்சிப்பிடறாய்ங்களேப்பா.

ஃபதுதீன்: மேற்கொண்டு விளக்கங்களுக்கு ப்ளீஸ் விசிட் டபிள்யு டபிள்யு டபிள்யு...

சபீர்: காப்பரிட்சையோடு கழண்டுக்கிட்ட மச்சான் ஜலால் வந்திருக்கானா?

ஜலால், யு எஸ்: இங்கேதான் மச்சான் இருக்கேன். பேச்சக்குறைச்சிட்டேன் அவ்ளோவ்தான்.

சபீர்: ஏன் மச்சான் ஆம்பிளப் பிள்ளையா பொறந்தே? பொம்பிளப்பிள்ளையாப் பொறந்துருந்தா உன்னயதான் கல்யாணம் செய்து வச்சிருப்பேன்னு ஆத்தா சொன்னிச்சு தெரியுமா?

ஜலால்: உன்னயத்தான் கட்டிக்கிடனும்னா நான் மாறுவேஷம் போட்டுக்கிட்டு ஊரைவிட்டே ஓடிப்போய்டுவேன். வெளங்குமா?

இர்ஷாத்: காமெடி தூக்கலா இருக்கு. ஆனா, இதை நான் சொல்லல.

ஷாஃபி: பாசக்காரப் பயலுவன்னு மட்டும்தான் நெனச்சேன். பயங்கரமா கலாய்க்கிறாய்ங்களே.

தாஜுதீன்: எங்கே ஒரு காக்காமாரையும் காணோம். லேட்டா வந்துட்டேனோ?! ஓ வெளியே நிக்கிறீங்களா. கொஞ்சம் வேலை ஜாஸ்தியாப் போச்சு. மீட்டிங்கை ஆரம்பிப்போமா?

ரியாஸ் சிங்கப்பூர்: மீட்டிங்குன்னு சொன்னானுவ, என்ன ஒருத்தரையும் காணோம். ரொம்பத்தான் லேட்டா வந்துட்டமோ?

பி.கு.: ச்சும்மா மனச லேசாக்க மட்டும்தான் இந்தப் பதிவு. மீறியும் யார் மனத்தையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். மனசுல வச்சிக்காம என் மேல் உள்ள கோபத்தை நெறியாளரின் அலைபேசி எண்ணுக்கு அழையுங்கள் இரண்டு நாட்களுக்கு மட்டும் அவருடைய அலைபேசியை நான் தான் வாங்கி் அவரிடமே அதனை வைத்திருக்க சொல்லியிருக்கிறேன் என்ன வேணும்னாலும் திட்டிக்கோங்க. எனக்கு கோபமே வராது பாருங்களேன்.

மின்னஞ்சல் வழி : இந்த புள்ளயளுவோ நல்ல புள்ளையலுவொலாதானேமா இருந்திச்சு ஏம்மா சேட்டை செய்திட்டு இருக்குதுவோ, சேர்மன் கிட்டே சொல்லி சரி செய்ய சொல்லனும் அவ்வோதான் கச்சல கட்டிகிட்டு இறங்கிறவொ

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
comments@adirainirubar.in


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு