நெஞ்சிலாடும் ஊஞ்சல் கட்ட
நிழல்மரங்கள் அறுகுமுன்பே
பிஞ்சுமரம் கொஞ்சமேனும்
பசுமைக்காக நடுதல் வேண்டும்
சருகெனவே கருகிவரும்
சுற்றுவட்டப் பச்சையெல்லாம்
சொந்தஊரின் செழிப்புக்கண்டு
சொர்க்கமென்று வியக்க வேண்டும்
காவியாலும் காக்கியாலும்
காணுமெங்கும் குறுதி நிறம்
கண்குளிர மண்மிளிர
களையெடுத்து மரம் வளர்ப்போம்
இணக்கமனம் வணக்கத்தளம்
இடித்துடைத்தல் வெறி போதை
இளங்கன்று இடங்கண்டு
இட்டு வளர்த்தல் கர சேவை
பசுமேய பசுமையாகப்
பச்சிலைகள் பதியம்போட்டு
புல்வெளியில் பொதுவழியை
பகுத்துப் பாதைப் பண்செய்வோம்
நஞ்சையென்றும் புஞ்சையென்றும்
நன்மை நட்டு நிலமெல்லாம்
நன்றியோடு இன்றியமையா
நன்னீர்ப் பாய்ச்ச வழிசெய்வோம்
முகிழ்கருக்க மழைமுகிழ்க்க
முடிந்தவரை மரம்வளர்ப்போம்
முகம்நகைக்க அகம்நிறைய
முழுமனதாய் முயன்றிடுவோம்
நாடுசெழிக்க காடுவளர்த்தல்
நல்லதொரு மதியாகும்
நாலுகன்றை நாளும்விதைத்தால்
நமக்குப் பசுமை விதியாகும்
பசியறிய ருசியறிய
பட்டினிதான் வழியாகும்
பசுமை அதிரை 2020 க்கு
பாடு பட்டாலே பலனாகும்!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
theme painting: ஷாஹிபா சபீர் அஹ்மது
WE SUPPORT