(எங்கள் N A S ஸார்)
தெரியாதவற்றைப் பற்றி
விரிவுரை யாற்றும்
பேராசிரியர்களுக்கு மத்தியில் – இவர்
புரிய வைத்து
அறி வமுதம்
அள்ளித் தருபவர்
நான் இவரிடம்
படித்த மாணவன் அல்லன் – இருப்பினும்
பிடித்த மானவன்!
பாடம் நடத்துவதும்
பாராயாணம் கற்பிப்பதுவும்
பேராசிரியர் வழி – இவரோ
பாடங்களை இதயங்களில்
நட்டு வைப்பவர்;
பின்னர்
களை எடுப்பது
இவருக்குக்
கைவந்தக்
கலை!
உதைத்துப் போதிக்காமல்
பாடங்களை
மூளைக்குள்
விதைத்துச் சாதிப்பவர்
பாடங்களை
வாசித்துக் காட்டுவதைவிட
பையன்களை
நேசித்துப் புகட்டுபவர்
இயற்பியல் விற்பண்ணர்
இயல்பில் நற்பண்பர்
ஒரு விநாடிப் புன்னகை
ஒரு மில்லிமீட்டர் வளர்ந்து
மேலுதட்டிற்கும் கீழுதட்டிற்கும்
இடையே
ஒரு மில்லிமீட்டர் பிளப்பதே
மனித நேயத்திற்கான
முதல் விதி
என்று
பெளதீக ரீதியில்
புன்னகைக்கச் சொல்பவர்
மலைபோல் கஷ்டத்தையும்
சிறிய தீர்வு கொண்டு
பனி போல் நீக்க
நெம்புகோல் தத்துவத்தை
நம்புங்கள் என்பவர்
காந்தத்தைப் போன்ற
சாந்தப் பேச்சால்
எதிர் முனைகளையும் ஈர்ப்பவர்
நேர் முனகள் விலக நேர்ந்தால்
தன் முனைப்பால்
முனை மாற்றி கவர்பவர்
இழிவானவற்றை நிந்திக்கும்
தெளிவான சிந்தணை;
மொழி ஆற்றல் மிக்க
பொளிவான பழகுமுறை!
மூத்தோரை மதிப்பவர்
இளையோரால் மதிக்கப்படுபவர்
எதிரிக்குக் கூட
இன்னல் எண்ணாத
மின்னல் ஒளியொத்தத்
தூய அன்பாளர்
துவக்கத்தில்
பெளதீகப் பட்டம்
பின்னர்
கணினிச் சட்டத்தில் தேர்ந்து
கல்லூரியின்
கணினித்துறைக்குத் தலைவரான
கனி நீ என்றி னிப்பவர்
எளிமையில்
இவர் ஒரு கோட்டோவியம்
எனினும்
அறிவுக்கோட்டைக்கு அரசன்
இவருக்கு அதிரை
பிறந்த வீடுமல்ல புகுந்த வீடுமல்ல
'அண்ணே' என்று அன்பைப்
பகிர்ந்த ஊர்!
இவரின் வாழ்நாட்களில்
அதிக விடியல்கள்
அதிரையிலேயே உதித்தன
அண்ணமிட 'அக்கா'க்களும்
உண்ணீர் உண்ணீர் என ஊட்ட
ஊர்க்காரர்களும்
ஆதரிக்கும் செல்லம் இவர்!
பந்து விளையாட்டில் - இவர்
வந்து தலைகாட்ட
ஆட்டம் கலைகட்டும்!
தீராத விளையாட்டுப் பிள்ளை – எனினும்
மாற்றான கொள்கைக்கு
தலை யாட்டுவ தில்லை!
இந்தப்
புன்னகை மன்னர் - இன்னும்
புகழோடு
நீடூழி வாழ (வாழ்த்த வயதில்லை)
ஆண்டவனை வேண்டுகிறேன்!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்


