Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label இறக்கை கட்டிப் பறக்குதய்யா. Show all posts
Showing posts with label இறக்கை கட்டிப் பறக்குதய்யா. Show all posts

இறக்கை கட்டிப் பறக்குதய்யா ! - அருண்ஜெட்லி பட்ஜெட். 0

அதிரைநிருபர் பதிப்பகம் | February 13, 2017 | , ,

Union Budget 2017 - 2018

வழக்கத்துக்கு மாறான நடைமுறைகளைக் கொண்டுவருவதே வாடிக்கையாகிவிட்ட இன்றைய மத்திய அரசின் ஆட்சியில், 2017- 18 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையும் பிப்ரவரி ஒன்றாம்தேதியே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பலவகைகளில் பார்த்தால் இந்த  பட்ஜெட் சில தனித்தன்மைகளைக் கொண்டிருப்பதை தொடக்கத்திலேயே சுட்டிக் காட்டலாம். முதலாவதாக , ரயில்வேக்கான தனி பட்ஜெட் போடும் நடைமுறை மாற்றப்பட்டு ஒன்றிணைக்கப்பட்ட ஒற்றை பொது பட்ஜெட் ;         ஜி எஸ் டி என்ற  சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான மாற்றங்கள் மாநிலங்களுக்கிடையே விவாத நிலையில் இருக்கும் நிலையில் போடப்பட்டுள்ள  பட்ஜெட்; பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு அதாவது ஒரு பொருளாதாரப் புயல் அடித்துக் கொண்டு இருக்கும்போதே  போடப்பட்ட பட்ஜெட்; இவைகளுடன் நாம் முன்னரே குறிப்பிட்டபடி பிப்ரவரி மாதக் கடைசிக்கு பதிலாக தொடக்கத்திலேயே சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட். 

இந்த பட்ஜெட்டுக்குப் பிறகு இந்த அரசுக்கு தனது அரசின் ஆயுள் காலத்தில் சமர்ப்பிக்க, இன்னும் ஒரே ஒரு முழுமையான பட்ஜெட்டே மிச்சம் இருக்கிறது ( 2018-19 ) என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதால் அப்போது சமர்க்கபடும் பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாகமட்டுமே இருக்கும். இந்தக் கருத்தை கவனப் படுத்துவதோடு அருண் ஜெட்லி அவர்களின் இந்த பட்ஜெட் பற்றி சுருக்கமாக விமர்சிக்கலாம். 

முதலில் , இந்த பட்ஜெட்டில் கருத்தைக் கவரும் சில குறிப்புகள்    இருக்கின்றனவா என்று பார்த்தால் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில குறிப்பிடத்தக்க குறிப்புகள் தென்படுகின்றன என்றுதான் சொல்லவேண்டும். 

அவற்றுள் முதலாவதாக இதுவரை இரண்டரை இலட்சம் ரூபாய்க்கு மேல், ஐந்து இலட்சம் வரை வருமானம் ஈட்டும்  தனிநபர் வருமானவரிக்கான அளவு,  இந்த விலைவாசி ஏற்றத்தில்- பணவீக்கச் சூழலில் -  இன்னும் சற்று அதிகப் படுத்தப்படும் என்ற பரவலான  எதிர்பார்ப்பில் ஏமாற்றத்தைத் தவிர, பயன் ஒன்றும் இல்லை என்பதாகும். ஆயினும் இதுவரை ரூபாய் இரண்டரை இலட்சம் முதல் ஐந்து இலட்சம்  வரை வருமானம் ஈட்டுவோருக்கு விதிக்கப்பட்ட பத்து சதவீத வரி ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது இது சற்றே ஆறுதல் தரும் செய்திதான்.

அடுத்ததாக, ரூபாய் ஒரு கோடிக்குள் வருமானம் உள்ளவர்களுக்கு 10 % மும் ஒரு கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு   15% சர்சார்ஜ் என்று புதிதாக போடப்பட்டிருப்பதும்  அரசுக்கு வருமானத்தை கூடுதலாக ஈட்டித்தரும் என்று கூறப்பட்டாலும், இன்னும் அதிகமான வரி ஏய்ப்புகளுக்கே வழி  வகுக்கும் என்று தோன்றுகிறது. 

தொடர்ந்து,  50 கோடிக்கு அதிகமாகாமல் மொத்த விற்றுமுதல் அதாவது TURN OVER  செய்யும் கம்பெனிகளுக்கு  30% சதவீதத்தில் இருந்து  25% சதவீதமாக வருமானவரி குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் பணமில்லா பரிவர்த்தனையை பாலூட்டி வளர்ப்பதற்காக 3. 00. 000/= ரூபாய் வரை மட்டுமே ரொக்கமாக பரிவர்த்தனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அளவை மீறினால் மொத்தப் பணத்துக்கும் அபராதம் கட்டவேண்டும் என்று அபாயச் சங்கும் ஊதப் பட்டு இருக்கிறது. 

மாதம் ரூ. 50,000/= க்கு மேல் வாடகையாகத் தரவேண்டிய நிலையில் உள்ளவர்கள் இனி இடத்தின் சொந்தக்காரர்களிடம் இருந்து டி டி எஸ்        ( TAX DEDUCTION AT SOURCE)  ,  என்ற முறையில் 5%  பிடித்தம் செய்து கொடுக்க வேண்டும். தனது வாழ்நாள் உழைப்பில் வாடகைக்கு விடுவதற்காக கட்டிடங்கள் கட்டி விட்டுள்ள ஓய்வு பெற்றவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இந்த  முறையில் இழப்பு ஏற்படும்; மன உளைச்சல் ஏற்படும்.   மூத்த குடிமக்களுக்கு இந்த  முறையில் இருந்து விதிவிலக்கு அளிப்பதை அரசு பரிசீலிக்கலாம். 

இந்த பட்ஜெட்டில் இன்னொரு வித்தியாசமான அணுகுமுறையாக  நாம் காண்பது அரசியல் கட்சிகள், தனிநபர்களிடமிருந்து  பெறும் நன்கொடைகள் பற்றிய உச்சவரம்பாகும். தனிநபர்களிடம் இருந்து ரூ. 2000/= க்கு மேல் நன்கொடையாகப் பெறக்கூடாது என்று விதி வகுத்திருக்கிறது இந்த பட்ஜெட். ஆற்றில் போவதை அய்யா குடி! அம்மா குடி!  என்று அள்ளிக் குடித்துக் கொண்டு இருந்ததை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயன்று இருப்பதை பாராட்டலாம் என்று நினைத்தாலும் , நடைமுறையில் எந்த அளவுக்கு இதை சாத்தியமாக்கப் போகிறார்களோ என்று ஒரு சந்தேகக் கண்ணுடன்தான் இதைப்பார்க்க வேண்டி இருக்கிறது. தங்களுக்குத் தெரிந்தவர்களின் பெயர்களை எல்லாம் போட்டு இரசீது போட நமது அரசியல் கட்சிகளுக்கு சொல்லியா  கொடுக்க வேண்டும்? ஊதித்தள்ளிவிடுவார்கள். 

ரயில்வே பட்ஜெட் என்று தனியாக  பட்ஜெட்  போட்ட காலங்களில் ஒவ்வொரு வருடமும் புதிய புதிய இரயில் சேவைகள் அறிமுகமாகும்; புதிய இரயில் பாதைகள் அறிவிக்கப்படும். ஆனால் இந்த ஒருங்கிணைந்த பட்ஜெட்டில் புதிய ரயில் திட்டங்களோ பாதைகளோ அறிவிக்கப்படவில்லை. ரயில் கட்டணங்கள் இப்போது உயர்த்தப்படவில்லையே தவிர ஐந்து மாநிலத் தேர்தல்கள் நிறைவுற்ற பிறகு கட்டணங்கள் உயர்த்தப்படாது என்று சொல்ல இயலாது. 

IRCTC என்கிற  ரயில் முன்பதிவு சேவைகளுக்கு இப்போது வசூலிக்கப்பட்டு வரும் சேவைக் கட்டணங்கள் இரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இது யானைப் பசிக்கு சோளப்பொறி என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் IRCTC பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டு ஒரு நிறுவனமாக ஆக்கப்பட்டு பங்குவர்த்தகம் செய்யும் என்பது ஒரு புதிய அறிவிப்புதானே தவிர,  இதில் என்ன  புரட்சி செய்ய நினைக்கிறார்கள் என்பது அவர்களுக்கு வெளிச்சம்.  

அத்துடன் புதிய மெட்ரோ இரயில் சேவைகளிலும் வழித்தடங்களிலும்  தனியார்துறையையும் இணைத்துக் கொண்டு திட்டங்கள் போடப்படும் என்ற அறிவிப்பு இந்த அரசின் தனியார்மயமாக்கும் தாகத்துக்கு தண்ணீர் தருவதாகும். மெல்ல மெல்ல இரயில்வேத் துறை தனியார்மயமாவதற்கான முதல் கதவை  இத்தகைய நுழைவு மூலம் திறந்துவிட மத்திய அரசு நினைக்கிறது என்றே நினைக்கவேண்டி இருக்கிறது.    

நாட்டின் மூலத்  தொழிலும் முதுகெலும்புத் தொழிலுமான விவசாயத்தை ஊர்விலக்கு செய்து இருப்பது போல இந்த பட்ஜெட் பிரேரணைகள் ஒதுக்கிவைத்து இருக்கிறது என்று வேதனையுடன் குறிப்பிடவேண்டி இருக்கிறது. விவசாயத்தின் முதல்தேவையான தண்ணீர் இல்லாமல் மழை இல்லாமல் நாடு முழுதும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், வரலாறு காணாத அளவுக்கு விவசாயிகள் நாடெங்கும் பரவலாக விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கும் சூழலில் வருடாந்திர மத்திய அரசு இவைகளைக் கண்டுகொள்ளவில்லை என்பது ஒரு பெரிய குறைமட்டுமல்ல; குற்றமும் ஆகும். 

நதிநீர்  இணைப்பு பற்றி வாயளவில் பந்தல் போடுகிற அரசும், பிரதமரும் வாய்ப்புகள் வருகிறபோது அந்தப் பணியை தொடங்கிவைப்பதற்காகக் கூட நிதி ஒதுக்கவில்லை என்பதும், வறட்சி நிவாரணத்துக்காக நிதி ஒதுக்கவில்லை என்பதும், விவசாயக் கடன்களை ரத்துசெய்வதற்காக நிதி ஒதுக்கப்படவில்லை என்பதும் ,  தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளையும் அவர்களது தற்கொலைக்கான காரணங்களைக் களையும்வகையில் அடிப்படைகளை கண்டுகொள்ளவில்லை என்பதும், நிலச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாததுடன் விவசாயிகளிடம் இருக்கும் நிலத்தையும் கையகப்படுத்தவும் அரசு முயல்கிறது என்பதும், விவசாய உற்பத்திக்காக புதிய நவீன முறைகளை அமுல்படுத்த ஆர்வம் தரவில்லை என்பதும் நாம் வைக்கும் கடுமையான விமர்சனங்கள் ஆகும்.

வெறுமனே கிசான் கார்டுகளை( KISAN CARD)  ரூபே ( RU PAY) கார்டுகளாக  மாற்றி விவசாயிகளின் கைகளில் கொடுப்பது அவர்களுக்கு நாக்கு வழிக்க உதவுமே தவிர, நாற்று நட உதவாது. 

நவீன விவசாயம் என்ற பெயரில் மரபணுமாற்ற பயிர்களை உற்பத்தி செய்து மக்களின் பொது நலன்களுக்கும் ஆரோக்கியத்துக்கும்  குந்தகம் விளைவிக்க அரசே துணைபோகும் திட்டங்களே அதிர்ச்சி அளிப்பதாகும்.  

நாடெங்கும் 5 இலட்சம் குளங்களை வெட்டப் போவதாக ஒரு அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் காணப்படுகிறது. இருக்கும் குளங்கள் வருடாந்திரப் பராமரிப்பு இல்லாமல் தூர்ந்து போய் கிடக்கின்றன; பல குளங்கள் தனியாரால் மட்டுமல்ல அரசாலும் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றன. நீர் மேலாண்மையில் குளங்களைப் பராமரிப்பதாக அரசு சொன்னால்,  அதை ஓரளவு ஏற்றுக் கொள்ள இயலும். ஆனால் புதிய  குளங்கள் வெட்டுவதாகச் சொல்வது அந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை, அரசியல்வாதிகள்  வேட்டுவிடுவதற்காக இருக்குமோ என்ற  ஐயத்தைக் கிளப்புகிறது. 

பிஜேபியின் தேர்தல் அறிக்கையிலும் பின்னர்  மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்    பிரச்சாரங்களிலும் வேலைவாய்ப்புகள் உருவாவதைப் பற்றி வாய்கிழியப் பேசிய பிரதமரும் அரசும் வேலைவாய்ப்பை உருவாக்க இந்த பட்ஜெட்டில் குறிப்பிட்டு சொல்லும்படியாக ஒன்றுமே செய்யவில்லை. 

இன்று உலகெங்கும் உள்ள பல நாடுகள் ,அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றம்,  அவ்வப்போது கொக்கரிக்கும் கொள்கை பற்றி கவலைப் பட்டு வருகின்றன. அதாவது அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே வேலை என்றே முழங்கப் படுகிறது. அவ்விதம் ஒரு அதிர்ச்சி அளிக்கப்படுமானால்,  இன்று அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெற்றுள்ள பல இந்தியர்கள் நாட்டுக்குத்  திரும்பி வர நேரிடலாம்; அத்துடன் புதிய H B 1 விசாவும் வழங்கப் படுவதில் சிக்கல் ஏற்படும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் கணிக்கிறார்கள்.  இந்த மாற்றங்கள் ஏற்பட்டால் அதனால் வேலைவாய்ப்பில் இந்தியர்களுக்கு ஏற்படும் தாக்கத்தை தணிக்க இந்த அரசு என்ன பரிகாரம் வைத்திருக்கிறது என்பதுதான் இருட்டறையாக இருக்கிறது. இந்த இருட்டறைக்கு இந்த பட்ஜெட் ஒரு சிறிய  மெழுகுவர்த்தி கூட  ஏற்றிவைக்கவில்லை. 

DEMONISATION என்கிற செல்லாத நோட்டு அறிவிப்பு என்கிற ஆழ்கடலில் இருந்த அரக்கனை வெற்றிலை பாக்குவைத்து அழைத்துவந்து நாட்டில் உலவவிட்டதன் காரணமாக இந்த பட்ஜெட் ஆண்டில் என்னென்ன பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை இந்த பட்ஜெட்டால் கணக்கிட  இயலவில்லை. இதனால் நாட்டின் ஒட்டு மொத்த  GDP என்கிற நாட்டின் மொத்த வளர்ச்சி வீதம் 1 முதல்  2 சதவீதம் வரை குறையும் என்று பொருளியல் வல்லுனர்கள் கணக்கிட்டு இருக்கிறார்கள்.  1 சதவீதம் என்பது ரூ 1,50,000 கோடி யாகும். வளர்ச்சி வீதத்தில் இவ்விதம் குறைவு ஏற்படுவதற்கு பட்ஜெட்டில் பரிகாரம் கண்டு இருக்கவேண்டும் . ஆனால் பூசி மெழுகப்பட்டு இருக்கிறதே தவிர , உருப்படியான  பிரேரணைகள் காணப்படவில்லை. 

இதைக் குறிப்பிடக் காரணம் ,    செல்லாத நோட்டு அறிவிப்பு என்கிற புயல் ஏற்படுத்திய சேதங்கள் எவ்வளவு என்கிற  அளவீடு இந்த பட்ஜெட்டால் சொல்ல இயலவில்லை. காரணம், (Demonisation  not estimated &  growth rate not accurate) அதாவது செல்லாத நோட்டு அறிவிப்பு சரியாக திட்டமிடப்படாததாலும் இலக்கு நிரணயிக்கப் படாததாலும் வளர்ச்சிவிகிதம் சரியான அளவில் இல்லாததாலும்  உற்பத்தி இழப்பு, சம்பளம் மற்றும் கூலி இழப்பு ஆகியவற்றால் ஏற்றுமதி இழப்பு வாங்கும் சக்தி குறைவு ( Loss of Production , Loss of Wages& Salary , Loss of Export, Loss of Purchasing Power ) ஆகிய  ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளுமே ஸ்தம்பித்துவிட்டது.   இந்த பட்ஜெட் விமர்சனத்தில் நாம் குறிப்பிடுவது என்னவென்றால் சரி செய்யவே இயலாத இழப்புகளை ஏற்படுத்திவிட்ட செல்லாத நோட்டு விவகாரத்தில் வந்தது எவ்வளவு, வராதது எவ்வளவு என்ற (Survey)   துல்லிய கணக்கைக் கூட தருவதற்கு இந்த பட்ஜெட் அருகதையற்றுப் போய்விட்டது என்பதைத்தான். 

முதலீடுகள்,  40 சதவீதத்தில் இருந்து  29 சதவீதமாக குறைந்துவிட்டது என்பதை இந்த பட்ஜெட் வெளிப்படையாக, ஆனால் வெட்கமில்லாமல் ஒப்புக் கொள்கிறது. 

ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருப்பதாலும் ஜி எஸ் டி  வரி இனி வர இருப்பதாலும் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை. உற்பத்தி வரி மட்டும்  30 சதவீதத்தில் இருந்து   20 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. அதானிகளும் அம்பானிகளும் 

“ நன்றி சொல்ல  உனக்கு வார்த்தை இல்லை எனக்கு “ என்று பாடவே இந்த  ஏற்பாடு என்று சந்தேகிக்க வேண்டி இருக்கிறது.  

எண்ணெய் விலையை நிர்ணயிப்பதில்  நிறுவனங்களின் கரங்களில் இருக்கும் அதிகாரத்தைப் பிடுங்க இந்த  பட்ஜெட் வழி வகுக்கவுமில்லை; அதைப் பற்றி சிந்திக்கவுமில்லை. உற்பத்தி செலவில் , வாழ்க்கை செலவில், விலைவாசிகளில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தும் எண்ணெய் விலை கொள்கையைப் பற்றி கண்டுகொள்ளாமல் , அந்த  மாட்டை தோட்டம் மேய விட்டு இருக்கும் இந்த மாட்டுக்காரவேலனாகிய மத்திய அரசு,  அடுத்த பட்ஜெட்டிலாவது இதுபற்றி ஆலோசிக்க வேண்டும்.     

பொதுச் செலவுகளை திட்டம், திட்டமில்லாத செலவுகள் என்று இருமுனைகளாக பிரித்து செலவிடுவது இந்த  பட்ஜெட் முதல் நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதற்குக் காரணம் பண்டித ஜவஹர்லால் நேருகாலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்த  பொருளாதார திட்டங்களை வகுத்துக் கொடுக்கும் திட்டக் கமிஷன் ( Planning Commission)  கலைக்கப்பட்டு அந்த இடத்தில் “நிதி ஆயோக்” என்ற ஆலோசனைக் குழுவை  உருவாக்கி , திட்டமிட்ட பொருளாதார கொள்கைகளுக்கு மத்திய அரசு மூடுவிழா நடத்தி இருப்பதுதான்.  இதன் உள்நோக்கம் மத்திய அரசு,  தனக்கு வேண்டிய மாநில அரசுகளுக்கு வாரி வழங்கவும் வேண்டாத மாநிலங்களை வஞ்சிக்கவும்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

பட்ஜெட் என்பது ஒரு அரசின் குறிப்பிட்ட ஆண்டின் செயலபாடுகள் பற்றிய  ஒரு முன்னோட்டம். பட்ஜெட்டைப் பார்த்துத்தான் எந்த ஒரு அரசும் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் என்னவெல்லாம் செய்ய இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இயலும். பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் பட்ஜெட்டின் அடிப்படையில்தான் தங்களின் செயல்பாடுகளை வடிவமைத்துக் கொள்வார்கள். துரதிஷ்டவசமாக இந்த பட்ஜெட் காலம் வரும் நேரத்தில் இந்த அரசு எடுத்த சில திட்டமிடாத நடவடிக்கைகள் காரணமாக பட்ஜெட்டின் உண்மையான  நோக்கம் நிறைவேறுவதில் இடையூறுகள் ஏற்பட்டுவிட்டன. 

பட்ஜெட் என்கிற  ஆங்கில வார்த்தையை  BUDGET என்று எழுதலாம். இந்த வார்த்தையை இரண்டாகப் பிரித்தால் BUD
GET என்று பிரியும். BUD  என்றால் மொட்டு என்று பொருள். GET என்றால் அந்த மொட்டு மலர்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். ஒரு வருடத்தின் பொருளாதார மலர்  எப்படி மலரப் போகிறது என்ற பார்வையே   பட்ஜெட் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் திரு. அருண் ஜெட்லி தந்துள்ள இந்த வருட பட்ஜெட் ஒரு மணம் வீசாமலேயே மலர் போன்ற தோற்றத்தில் உருவாக்கப்பட்ட காகிதப்பூ . இந்த காகிதப் பூ ஒரு காட்சிப் பூ மட்டுமே. இந்த காகிதப் பூவில் மகரந்தம் இல்லை; இந்த காகிதப்பூவில் தேன் இல்லை; இந்தக் காகிதப் பூவை நோக்கி வண்டுகள் வராது.

மொத்தத்தில் ஆண்டொன்று போனது; வளர்ச்சியோ வளமையோ இல்லாத ஒரு பட்ஜெட்டும் வந்து போகிறது   அவ்வளவே.

அதிரை - இப்ராஹீம் அன்சாரி M.Com.,


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு