Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label சித்தீக் பள்ளி. Show all posts
Showing posts with label சித்தீக் பள்ளி. Show all posts

அதிரையில் ஆபத்தான ஆட்டோ கட்டணம்! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | October 24, 2012 | , , , ,


நீண்ட நாட்கள் கழித்து எதோ ஒன்று ஆரவாரமாய் எழுத வேண்டும் என தோன்றியது இந்த பதிவு. அது என் சோம்பேறித்தனமா, இல்லை உங்கள் நல்ல நேரமா எனத் தெரியவில்லை!. இவ்வளவு நாள் எழுதாமல், இணையத்தில் அதிகம் படிக்காமல் விட்டதால்,  மண்டையில் ஒட்டடை படிந்து நானே, எதோ பழசான பொருளாய் மாறிப்போனது போல ஒரு உணர்வு. இனியும் நேரம் கடத்துவதாய் இல்லை.

அதிரை - புதுமனைத்தெரு வழியே நான் சென்று கொண்டிருக்கும் பொழுது "தம்பி" என்ற ஒரு குரல் திரும்பிப் பார்த்ததும் வயதான நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெரியம்மா (மூதாட்டி) இருந்தார். அவர் என்னிடம் வேண்டியது "தம்பி என்னாலே நடக்க முடியலே நீ.. நேராக போனால் ஒரு ஆட்டோ இருந்தா வர சொல்லுமா" என்றார். நானும் "சரியென்று" என்று அங்கே ஒரு ஆட்டோவை வரச்சொல்லி விட்டு சென்றுவிட்டேன். 

மறுநாள் அந்த பெரியம்மாவை மீண்டும் பார்க்க நேர்ந்தது அவன் என்னை அழைத்து "நீ ஒரு ஆட்டோ வரச்சொன்னியே அவர் நெருப்பு விலை கேட்கிறான்" என்றார். "எங்கே சென்றீர்கள்" என்று நானும்  கேட்க, அவர் "சித்திக் பள்ளியிலேர்ந்து செக்கடிமோடு கூப்பன் கடைக்கு செல்ல 40 ரூபாய் கேட்கிறான்" என்று சொல்லி ஆதங்கப்பட்டார் 

மற்றுமொரு அனுபவம் நானும் என்னுடைய நண்பனும் பட்டுக்கோட்டை செல்லலாம் என்றெண்ணி ஆட்டோவை நெருங்கி நாங்கள் செல்லுமிடத்திற்கு எவ்வளவு என்று கேட்டதற்கு, என்னிடமும், நண்பன் தன் இடுப்பில் (பர்சில்) முடிந்து வைத்திருக்கும் பணத்தையும் தவிர, மூன்றாவதாக இன்னொருவரிடம் கேட்டு வாங்கும் தொகையையே அந்த ஆட்டோக்காரர் கூறினார். என் நண்பன் 'அதிகபட்சமாக 250 ரூபாய்க்கு மேல் வராது (வரமாட்டோம்)' என்றதால், அந்த ஆட்டோவை தவிர்த்து இன்னொரு ஆட்டோவிடம் சென்றோம். அந்த ஆட்டோக்காரரிடம் சென்று பேசுவதற்கு முன்பாகவே. முதலாவது ஆட்டோகாரர் இரண்டாவதாக இருக்கும் ஆட்டோக்காரருக்கு ஒரு குரல் கொடுத்து "ஏற்றாதே" என சொல்ல. தொடர்ந்து அடுத்த ஆட்டோவிடம் சென்றோம்.. அங்கயும் அதே  குரல். எல்லா ஆட்டோகாரர்களும் கூட்டாக இருப்பதை கண்டு வெறுப்பாகி முதல் ஆட்டோகாரனிடமே சரணடைந்தோம்.

ஏகப்பட்ட இழுபறிகளுக்கு பின் 350 ரூபாய்க்கு அவன் ஒப்புகொள்ள ஏறி அமர்ந்தோம். ஆட்டோ கிளம்பி ஒரு ஐந்து  கிலோ மீட்டர் சென்றிருக்கும். தீடிரென ஆட்டோ டிரைவர் "பெட்ரோல்" தீர்ந்து விட்டதாய் சொல்லி வண்டியே ஓரம் கட்டி நிறுத்தி விட்டான்.  நீண்ட நேர முட்டி மோதல்களுக்கு பிறகு வேறொரு ஆட்டோவை அந்த டிரைவர் பிடித்து கொடுக்க. ஒரு வித சந்தேகத்துடனே அந்த ஆட்டோவில் ஏறினோம். (தேவையற்றது இருந்தாலும் அவர்களால் ஏற்படும் சிரமங்கள், மன உளைச்சல்கள் தெரிந்து கொள்ளவே இச்சம்பவம்.).

அரசின் தகவல் அறிக்கை : தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் எந்நேரத்திலும் உயர்த்தபடலாம். ஆனால் இந்த கட்டண உயர்வு மக்களை பாதிக்காத வண்ணம் இருக்குமாம்(என்னவொரு அக்கறையான அறிக்கை).

தமிழக அரசு ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்து பல வருடங்கள் ஆகின்றன. அப்போது துவக்கமாக இரண்டு கிலோ மீட்டருக்கு குறைந்த பட்சமாக பதினான்கு ரூபாய் என்றும் அடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஆறு ரூபாய் என்றும் அரசு கட்டணத்தை நிர்ணயித்தது. ஆனால் அரசு நிரணயித்த அந்த கட்டணத்தை எந்த ஆட்டோக் காரரும் பின்பற்றவில்லை. மீட்டர் போட்டு யாரும் ஓட்டவில்லை. ஓடுதூரத்துக்கு ஏற்றார்போல் நிர்ணயிக்கப்பட்டிருந்த கட்டணத்தை மட்டும் வாங்க எந்தவொரு ஆட்டோ டிரைவரும் முன் வருவதில்லை. பயணம் செய்ய விரும்பி ஆட்டோ டிரைவரிடம் குறிப்பிட்ட இடத்தை கூறினால், அப்போது மனதில் தோன்றும் கட்டணத்தை மக்களிடம் கேட்கிறார்கள். 

குறைந்த பட்சமாக 2 கிலோ மீட்டர் தூரம் செல்வதற்கான கட்டணம்; அதைத் தொடர்ந்து செல்லும் தூரத்துக்கான கட்டணம், என்றெல்லாம் அரசு எந்தவொரு கட்டண விகிதத்தையும் இதுவரை புதிதாக நிர்ணயிக்கவில்லை. எனவே மிக அதிகமாக கட்டணங்களை ஆட்டோ டிரைவர்கள் கேட்கும்போது, அவர்களுடன் மக்கள் தகராறு செய்கின்றனர். இதனால் தேவையற்ற சண்டை,  மன உளைச்சல்,  மனவலிகள் ஏற்படுகின்றன.

எனவே ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டண விகிதத்தை அரசு நிர்ணயித்து உடணடியாக உத்தரவிட வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட மீட்டர்களை பொருத்தவும், அதில் காட்டப்படும் கட்டணத்தை மட்டும் மக்களிடம் இருந்து வசூலிக்கவும் ஆட்டோ டிரைவர்களுக்கு ஆணை பிறப்பிக்கும்படி சட்டங்கள் கடுமைப் படுத்தப்பட வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறை பெட்ரோல் விலை ஏறிய போதும் எல்லா ஆட்டோ ஓட்டுனர்களும் கட்டணத்தை உயர்த்திக் கேட்கிறார்கள் அதிக கட்டணமே வாங்கினார்கள். இதை முறைப்படுத்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

பெட்ரோல் விலை இரண்டு முறை குறைக்கப்பட்டது. ஆனால் ஆட்டோ கட்டணம் மட்டும் குறைக்கப்படவில்லை ஏறியது ஏறியதுதான். இப்போது குறைந்தபட்ச கட்டணமாக நாற்பது ரூபாய் என்று வாய்க்கு வந்ததை கட்டணமாகக் கேட்கிறார்கள். இந்த திடீர் கட்டண உயர்வால் ஆட்டோக்களில் தினமும் பயணிக்கும் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பொது மக்களுக்கு சுமை ஏற்பட்டுவிடாமலும், அதே சமயம் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் இப்பொழுதாவது ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த அரசு முன் வருமா? நமதூரில் நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யலாமா? உடனடியாக ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். எல்லா ஆட்டோக்களுக்கும மீட்டர் பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும். இதை கடைபிடிக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க முன்வருமா?,

சற்று சிந்தியுங்கள் எதற்கெடுத்தாலும் ஆட்டோவில் செல்லும் நாம் ஏன் நடை போட முன் வருவதில்லை, 

நடையின் சிறப்பை பற்றி என் தளத்தில் முன்பே ஒரு ஆக்கமாக பதிந்துள்ளேன் அதை காண்க :நடைப்பயிற்சி அவசியம் ஏன்? http://adiraithenral.blogspot.in/2011/01/blog-post.html

அதிரை தென்றல் (Irfan Cmp)

சித்தீக்பள்ளி கமிட்டி மற்றும் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் தன்னிலை விளக்கம்! 61

அதிரைநிருபர் பதிப்பகம் | September 12, 2012 | , , ,

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்,.

அன்பான சித்தீக் பள்ளி முஹல்லா மற்றும் அதிரைவாசிகளுக்கு,

கடந்த சில நாட்களாக ஊரில் உள்ள மக்களிடமும் வெளிநாடுகளில் வசிக்கும் அதிரை மக்களிடமும் பேசப்பட்டு வருபவை, சித்தீக் பள்ளி மற்றும் சித்தீக் பள்ளி நிர்வாகத்  தலைவர் மரியாதைக்குரிய ஹைதர் அலி ஆலிம் அவர்களைப் பற்றிய செய்திகளே. ஊரிலும் இணையத்திலும் இது தொடர்பாகப் பேசப்படும் செய்தி எங்களுக்கு வருத்தமளிக்கிறது. சித்தீக் பள்ளி தொடர்பான விசயங்களில் ஏனோ ஒரு சில மக்கள் வாய்க்கு வந்தபடி பேசிவருகிறார்கள். அதனால், நடந்த சம்பவங்களைப் பற்றி எங்களுடைய விளக்கத்தை மக்கள் மத்தியில் வைப்பது எங்கள் கடமை என்பதை உணர்ந்தே இம்மடலை வரைகின்றோம்.

சித்தீக் பள்ளிக்கும், சித்தீக் பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களுக்கும் இடையே நிலப் பிரச்சினை கடந்த சில மாதங்களாக இருந்து வருகிறது. இந்நிலையில், பள்ளிக்குச் சொந்தமான இடத்தைப் பொதுப் பாதையாக்க ஒரு சிலர் முயற்சியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நிகழ்ந்த சம்பவங்களினால் பள்ளிக்குரிய நிலத்தில் தெருப்பாதை வேண்டும் என்று வாதிடும் சிலர் வெளித் தெருவைச் சேர்ந்த ஒரு சகோதரருடன் சேர்ந்து, அநாகரீகமாகத் தகாத வார்த்தை பேசி, மிகவும் கேவலமாக சித்தீக்பள்ளி நிர்வாகத்தை கண்ணியக் குறைவாக நடத்தினார்கள். இது தொடர்பாக ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திலும் கடிதம் கொடுக்கப்பட்டு, சித்தீக்பள்ளிக்கு ஒத்துழைப்புத் தருமாறு வேண்டுகோளும் வைக்கப்பட்டது.

அன்று இரவே சித்தீக்பள்ளி சம்பந்தபட்ட அனைத்துத் தரப்பு மக்களும் கூடி ஆலோசனை செய்தார்கள். அதில், பள்ளிவாசல் நிலத்தில் பாதை விடவேண்டாம் என்று ஒரு மனதாக முடிவு செய்து கையொப்பமிட்டார்கள். யார் யார் எல்லாம் இதில் உடன்பட்டார்கள் என்ற விபரம் சித்தீக்பள்ளி நிர்வாக மினிட்ஸ் புத்தகத்தில் உள்ளது. 

பிறகு இரண்டு நாட்கள் கழித்து,  பள்ளிவாசல் வேலியை, தெருவில் உள்ள பெண்களை தூண்டிவிட்டு உடைத்து, சமூக விரோதச் செயல்களில் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சில சகோதரர்கள் ஈடுபட்டுப் பதற்றத்தை ஏற்படுத்தினார்கள். இதில், ஒரு சில சகோதரர்கள் சுவர் கட்டலாம் என்று கை எழுத்து போட்டவர்களும் சுவரை இடிக்கும் வேலையையும் செய்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இருப்பினும் அன்றைய தினமே அல்லாஹ்வின் உதவியால் சித்தீக்பள்ளிக்குச் சொந்தமான நிலத்தின் சுவர்கள் வெகுவிரைவாகக் கட்டி எழுப்பட்டன.

இந்த சம்பவம் நடைபெற்ற பிறகு சில நாட்கள் கழித்து சம்சுல் இஸ்லாம் சங்கத் துணைத்  தலைவர் அவர்கள், சித்தீக்பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத்தின் கூட்டம் ஒன்றில் அஜெண்டா இல்லாமல் எடுத்து வைத்ததன் காரணத்தால், சித்தீக் பள்ளி நிர்வாகிகள் அனைவரும் சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளை சங்கத்தில் சென்று சந்தித்துப் பேசினோம். “எங்கள் மீது ஏன் நடவடிக்கை  எடுக்கப் போகிறீர்கள்?” என்று வினவியதோடு அல்லாமல் அன்று வரை நடைபெற்ற அனைத்தையும் முழுமையாக சொல்லிக்காட்டப்பட்டு செய்திகளை அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். அந்த உரையாடலில் சங்கத் தலைவர் அவர்கள், வெளியூர்க்காரர் ஊர் நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பதில் தவறில்லை என்று கூறியதோடு அல்லாமல், சங்க உலமா இபுறாஹீம் ஆலிம் அவர்களிடமும் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு இபுறாஹீம் ஆலிம் அவர்கள் முஹல்லாவாசிகள் அதை விரும்பினால் தவறில்லை என்று விளக்கம் கூறினார்கள். மேலும் சித்தீக்பள்ளி இடம் மீட்கப்பட வேண்டும் என்று சங்கத் தலைவர் அவர்களும் தன்னுடைய கருத்தைத் தெரிவித்தார்கள். 

அதுவரை சங்கம் இது தொடர்பாக எந்தவித ஆட்சேபனையையும் தெரிவிக்கவில்லை. சித்தீக்பள்ளிக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது என்பதை மக்கள் தெரியவந்த சூழலில், சித்தீக்பள்ளித்   தலைவராக இருக்கும் ஹைதர் அலி ஆலிம்சா அவர்களைப் பதவியிலிருந்து விலக்க ஊரில் உள்ள ஒரு சிலர் மும்முரமாக முயற்சி செய்து பல தொந்தரவுகளை ஹைதர் அலி ஆலிம்சா அவர்களுக்கும், சித்தீக் பள்ளி நிர்வாகத்துக்கும் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். சித்தீக்பள்ளிச் சொத்து விவகாரத்திற்குள்ளான  பிரச்சினையில் சம்பந்தபட்ட நபரான தக்வா பள்ளி நிர்வாகி அவர்கள்(தக்வா பள்ளி நிர்வாகிகளில் ஒருவர்) சித்தீக்பள்ளி நிர்வாகிகளைச்  சந்தித்துப் பேசினார். பேச்சுவார்த்தையில் எந்த சுமூகமும் ஏற்படாத நிலையில்,  அந்த நிர்வாகி ஒரு மிரட்டலும் விட்டுச் சென்றார்.

இப்படி மாதங்கள் கடந்து கொண்டே சென்றன, கடந்த ரமழானில் தக்வா பள்ளி நிர்வாக கமிட்டியின் செயலாளர் அவர்கள் சித்தீக் பள்ளி கமிட்டி தலைவர் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மேல் ஒரு பொய் வழக்கு - அதாவது ஆலிம்சா அவர்கள் இளைஞர்களை வைத்து தீவிரவாத செயலில் ஈடுபடுகிறார் என்று இல்லாதவைகளை அவர் மீது சுமத்தி  நீதிமன்றத்தில் 13 குற்றசாட்டுகளை வைத்து பொய் வழக்குத் தொடுத்துள்ளார்.  பொய்யான குற்றச்சாட்டுக்களை வைத்து ஹைதர் அலி ஆலிம்சா அவர்களைக் காவல் நிலையத்திற்குச் செல்ல வைத்தார். பிறகு சித்தீக்பள்ளி நிர்வாகத்தின் முயற்சியால் காவல் நிலையத்தில் தக்வா பள்ளி நிர்வாகி அவர்களால் கொடுக்கபட்ட பொய் புகார்  இதுவரை வாபஸ் பெறப்பட்டது. இந்த சம்பவம் ஊரில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

அதன் பின் ஹைதர் அலி ஆலிம் அவர்களை (29-08-2012) காலை 10:30 மணியளவில் வீட்டிற்குத் தனியாக வருமாறு சங்கத் தலைவரின் அழைப்புடன் வந்த சங்க பிரதிநிதி சகோதரர் சாலிஹ் அவர்களிடம், "தக்வா பள்ளி நிர்வாகிகளில் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத்  தொடர்ந்திருப்பதால் வழக்கமான நிகழ்வுகளை தவிர மற்ற எந்தக் கூட்டத்திற்கும் செல்ல வேண்டாம் என்று வழக்கறிஞர் அறிவுறுத்தியிருக்கிறார், ஆகையால் வழக்கு முடிந்த பிறகு நானே நேரில் வந்து சந்திக்கிறேன்” என்று சொல்லி அனுப்பினார். ஆனால் அசர் தொழுகைக்கு பிறகு சங்க பிரதிநிதி சாலிஹ் மீண்டும் வந்து, “நீங்கள் வர இயலவில்லை என்றால், நாங்கள் வந்து சந்திக்கிறோம் என்று தலைவர் சொல்லியனுப்பினார்கள்” என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு ஹைதர் அலி ஆலிம், அவர்கள், "சங்கத் தலைவர் வந்து என்னை சந்திப்பதற்கு நான் பெரிய ஆள் இல்லை.  இன்று தக்வா பள்ளி பயான் முடித்துவிட்டு போன் பேசிவிட்டு சந்திக்கலாம்" என்று சங்க பிரதிநிதியிடம் சொல்லி அனுப்பிய சில நிமிடங்களிலேயே  சங்க தலைவர், பேரூராட்சித் தலைவர், சங்கத் துணைத் தலைவர்,  துணைச் செயலாளர் மற்றும் இரண்டு பிரதிநிதிகள்  ஹைதர் அலி ஆலிம் அவர்களின் வீட்டிற்குச் சென்று சந்திக்க முற்பட்டார்கள்.

சித்தீக்பள்ளியில் வைத்துப் பேசலாம் என்று சொல்லி, வந்தவர்களை சித்தீக்பள்ளியில் அமருமாறு ஹைதர் அலி ஆலிம் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அதே சமயத்தில் ஹைதர் அலி ஆலிம் பள்ளிக்கு வருவதற்குள் சித்தீக்பள்ளிக்கு கமிட்டி சகோதரர்கள் 4 பேர்  வந்துள்ளார்கள். அவர்களிடம் சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் அவர்கள், “இனி எத்தனை பேர் வருவீர்கள்?  நீங்களா அல்லது நாங்களா என்று பார்த்துக்கொள்வோம்” என்று கூறினார்கள். அவர்கள் சித்தீக்பள்ளிக்கு வந்த 5 நிமிடத்திற்குள் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் சலாம் கூறி சித்தீக்பள்ளி உள்ளே வருகிறார்கள். உடனே சங்கத் தலைவர்கள் அவர்கள், “நீங்கள் வெளியூர்க்காரர். நாங்கள் உள்ளூர்வாசிகள். ஊரை இரண்டாகப் பிரித்துவிடாததீர்கள்” என்று சொன்னார். அருகில் இருந்த சித்தீக்பள்ளி கமிட்டி நிர்வாகி ஒருவர், சங்கத் தலைவர் அவர்களிடம், “சலாத்திற்கு பதில் கூறுங்கள் காக்கா” என்று சொல்லியும், அதை அவர் பொருட்படுத்தவில்லை. பள்ளியில் இருந்த முஹல்லா சகோதரர் ஒருவர், “நீங்களும்  வெளியூர்தானே” என்று சங்கத் தலைவரைப் பார்த்துக் கூறினார். இதன் பிறகு ஏற்பட்ட சலசலப்பால், நடைபெறவிருந்த சந்திப்பு தடைபட்டது. சங்கத் தலைவர் மற்றும் அவருடன் வந்தவர்கள் அனைவரும் வெளியே சென்றுவிட்டார்கள். வெளியே செல்லும் முன், அனைவரும் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மனம் புண்படும்படியான வார்த்தைகளைப்  பேசிவிட்டுச் சென்றார்கள். திரும்பத் திரும்ப ஹைதர் அலி ஆலிம் அவர்கள், “வாருங்கள் பேசலாம்” என்று கேட்டுக் கொண்டும், சந்திக்க மறுத்துவிட்டு வெளியேறினார்கள். 

30-08-2012 அன்று இரவு சித்தீக்பள்ளி முஹல்லா சகோதரர்கள் சிலரை  ஷம்சுல் இஸ்லாம் சங்கத்  தலைவர், துணைத் தலைவர், துணைச் செயலர், பேரூராட்சித் தலைவர் ஆகியோர் அழைத்துப்  பேசினார்கள். இதில் முஹல்லா சகோதரர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு, சங்கத்தில் உள்ளவர்கள் முன்னுக்குப் பின்  முரணான தகவல்களைத் தெரிவித்து,  ஹைதர் அலி ஆலிம்சா அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள்.  “ஹைதர் அலி ஆலிம் அவர்களை சங்கத்தின் சார்பாக சந்திக்கவில்லை,  விளக்கம் கேட்கவே சென்றோம்.  ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சொற்பொழிவில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று சங்கத் தலைவர், துணைத்  தலைவர், துணைச் செயலர், பேரூராட்சித் தலைவர் ஆகியோர் ஒருமனதாக வந்தவர்கள் முன்னிலையில் ஒத்துக்கொண்டார்கள். 

ஆனால். சம்சுல் இஸ்லாம் சங்கம் ஆயிசா மகளிர் அரங்கம் மற்றும் மேலத்தெரு ஜும்மா பள்ளிக்கும் 9 முஹல்லாக்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு தொடர்பான காரணங்களைக் கூறியே அவரை வைத்து மார்க்க சொற்பொழிவாற்ற வேண்டாம் என்று கூறிப்பிட்டுள்ளார்கள். இறுதியாக, தற்காலிகமான முடிவு என்றாலும், இதை மறுபரிசிலனை செய்ய வாய்ப்பே இல்லை என்று சங்கத்  துணைத் தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.  மேலே குறிப்பிட்ட அனைத்து முடிவுகளும் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய இருவரையும் கலந்தாலோசிக்காமல் எடுக்கபட்டது என்பது எங்கள் கமிட்டி நடத்திய விசாரனையில் தெரியவந்துள்ளது.

தக்வா பள்ளி நிர்வாகத்தில் இருக்கும் தனி நபர் ஒருவரால் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொய் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என ஷம்சுல் இஸ்லாம் சங்கம் சொல்லி உள்ளாதாக ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் கூறினார்கள், ஆனால் இதுவரை தக்வா பள்ளி நிர்வாகியிடம் வழக்கை வாபஸ் வாங்கவில்லை. அடுத்த மாதத்திற்கு வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இந்தப் பொய் வழக்கால் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார்கள்

ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு விதிக்கபட்டுள்ள தடை பற்றி எந்தவிதக் கடிதமும் இது நாள் வரை சித்திக்பள்ளி கமிட்டிக்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திலிருந்து  வரவில்லை. ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு என்று தனிப்பட்ட முறையில் வந்த கடிதம் மட்டும் தான் வந்துள்ளது என்பதை இங்கு குறிப்பிட்டுச்  சொல்ல விரும்புகிறோம்.

மரியாதைகுறிய ஹைதர் அலி ஆலிம் அவர்கள் எந்த ஒரு இயக்கத்தினரையும்  வைத்து எந்தவித இயக்க வேலையோ அல்லது எந்தவிதத் தீய காரியங்களோ இதுவரை செய்யவில்லை என்பதை அழுத்தமாக கூறிக்கொள்கிறோம். ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மேல் பொய் வழக்குத் தொடர்ந்துள்ள சகோதரரை வன்மையாகக் கண்டிக்கிறோம்.  இதற்கு துணை நிற்கும் அனைவரையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். 

சித்தீக்பள்ளி கமிட்டித் தலைவர் பொறுப்பு வேண்டாம் என்று மூன்று முறை ராஜினாமா கடிதம் கொடுத்தார்கள் ஹைதர் அலி ஆலிம் அவர்கள். ஆனால் பள்ளி கமிட்டியில் உள்ள நாங்கள்  மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே  இந்தப் பொறுப்பில் இது நாள் வரை இருந்து வருகிறார்கள். பதவி ஆசையால் அல்ல என்பதை உறுதியாக எல்லோருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த  03-09-2012 அன்று பொதுப் பாதையை சித்தீக்பள்ளி நிர்வாகிகள்  அடைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தஞ்சை கலெக்டர் அவர்களுக்கு சென்னையிலிருந்து ஒரு நபர் அவசர மனு கொடுத்து, ஆர் டி ஓ, தாசில்தார், வி ஏ ஒ ஆகியோர் சித்தீக்பள்ளிக்கு வந்து விசாரனை நடத்தி, அப்படி ஒரு சம்பவம் அன்று நடக்கவில்லை என்று விபரங்கள் சேகரித்துத்  திரும்பி சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு சம்சுல் இஸ்லாம் சங்கம் தனிபட்ட முறையில் எழுதிய கடிதத்தில் சித்தீக்பள்ளிக்குத் தொழ வருவதற்கு மக்களுக்கு அச்சமாக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது!  அப்படி என்ன அச்சம் ஏற்படும் சூழல் சித்தீக் பள்ளியில் நிகழ்கிறது என்பதை சம்சுல் இஸ்லாம் சங்கம் மக்களுக்குக் கட்டாயம் தெளிவுபடுத்த வேண்டும். அப்படி ஏதாவது அச்சம் ஏற்படும் சூழல் இருந்திருந்தால், இந்த ரமளானில் 40க்கும் மேற்பட்ட நபர்கள் ‘இஃதிகாப்’ எப்படி இருந்திருப்பார்கள்? 

சித்தீக்பள்ளிக்கான  சொத்து விவகாரத்தை வைத்து நடந்து வரும் நிகழ்வுகளுக்கு,  தனி நபரான ஹைதர் அலி ஆலிம் மட்டும் தான் பொறுப்பு என்று சித்தரித்து வருகிறார்கள், ஆனால் இதில் சித்தீக்பள்ளி நிர்வாகம் தான் முழு பொறுப்பு, என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறோம். ஆகையால் மரியாதைக்குறிய ஹைதர் அலி ஆலிம்சா அவர்களை மட்டும்  குறிவைத்து, நீதிமன்றத்தில் பொய் வழக்கு, பொய் பிரச்சாரம், வீண் பழியை சுமத்தி அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படுவதை சித்தீக்பள்ளி கமிட்டி எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாது.  ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொய் வழக்கை உடனே வாபஸ் பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

சித்தீக் பள்ளி விவகாரத்தில் நாங்கள் எந்த நிலையிலும் ஷரியத்து முறைப்படி இணைக்கமாகவும் சுமூகமாகவும் நடந்துகொள்ளவே விரும்புகிறோம் என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறோம்.

சித்தீக்பள்ளி நிர்வாகத்தில் எந்த ஒரு முடிவாக இருந்தாலும், அனைத்தும் மசூரா அடிப்படையில் எடுக்கப்படுகிறது. எந்த ஒரு தனிநபருக்கு முடிவை தீர்மானிக்கும் அதிகாரம் இல்லை என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறோம்.

இறுதியாக வரும் 13.09.2012 அன்று பட்டுக்கோட்டை RDO அலுவலகத்தில் சித்தீக்பள்ளி நில விவகாரம் தொடர்பாக சமாதான கூட்டம் நடைபெறுகிறது. இந்த சமாதான கூட்டத்திற்கு தற்போது சித்தீக்பள்ளி நிர்வாகத்தில் உள்ள முக்கிய நபர்கள் ஒருவரை கூட அழைக்கப் படவில்லை. ஆனால் மரியாதைக்குரிய அப்துல் காதர் ஆலிம்சா அவர்களை மட்டும் சித்தீக்பள்ளி நிர்வாகி என்று குறிப்பிட்டு அழைப்பு விடுத்துள்ளார்கள். இது முழுக்க முழுக்க ஒரு தலைபட்சமான போக்கு என்பதை இங்கு எல்லோருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.

சித்தீக்பள்ளி நிர்வாக கமிட்டி தலைவர் மரியாதைக்குரிய ஹைதர் அலி ஆலிம் அவர்களின் தன்னிலை விளக்க ஒழிப்பேழையையும் இதோ கேளுங்கள்.

மேலோ சொல்லபட்ட அனைத்திற்கும் சாட்சியாளன் அல்லாஹ் ஒருவனே.

மேலதிக தகவல்களுக்கு சித்தீக்பள்ளி நிர்வாகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

இப்படிக்கு 

சித்தீக்பள்ளி நிர்வாகம்,
புதுமனைத்தெரு, அதிராம்பட்டினம் – 614 701

சித்தீக் பள்ளி நிர்வாகத்தின் தன்னிலை விளக்கம் இன்று மின்னஞ்சல் வழியாக கிடைக்கப்பெற்றது அதனை அதிரைநிருபரின் நெறியாடலுக்கு உட்படுத்தி அவ்வாறே பதியப்பட்டுள்ளது


** உண்மை (ஹக்) எந்தப்பக்கம் நிலைத்திருக்கிறதோ அதனைச் சார்ந்து அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக அல்லாஹ்வின் திருப் பொருத்ததை நாடி அதன் வழியில் இருப்பதே தனித் தன்மையுடன் கூடிய உண்மைநிலை ! மாற்றுக் கருத்துடையவர்கள் நெறியாளரின் தனி மின்னஞ்சலுக்கு அனுப்பித் தரலாம்.

அவரவர் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் ஒருவனே நன்கறிவான்.


பின்னூட்டங்களில் கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் சகோதரர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள், தனிமனித, அல்லது அமைப்பு  தாக்குதல் இல்லாமல் நியாய உணர்வுடன் கருத்துகளை பதியுங்கள், வரம்பு மீறல் இருக்குமாயின் உடணடியாக அவ்வகை கருத்துகள் நீக்கப்படும்.


நெறியாளர்

editor@adirainirubar.in


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு