ஒரே நிறுவனத்தில், அல்லது அடுத்தடுத்த பிரிவுகளில் பணியாற்றுவோர், அவரவர் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை மிக விரையில் தெரிந்துகொள்ள, நடைமுறைப் படுத்த வாய்ப்புகள் ஏராளம். அவரவரின் மொழியைவிட, பண்பாட்டுப் பழக்கவழக்கங்களை நாம் வெளிப்படுத்தும்போது, அவர்களின் வியப்பு, கண்களின் மூலம் வெளிப்பட்டு, சொற்களில் பாராட்டாக வந்து வீழும்.
பொதுவாக அரபுகள் மற்றவர்களுடன் கை குலுக்கும்போது நன்றாக அழுத்திப் பிடிப்பார்கள். அவர்களிடம் நாமும் அதே முறையைப் பின்பற்றிக் கைலாகு செய்யும்போது, அப்போதுதான் அவர்களின் முக மலர்ச்சியைக் காணலாம். பிடி இருக்கும் அளவுக்குப் பிரியமும் மிகுந்து வெளிப்படும். அவர்களின் பழக்க வழக்கங்களை ஊன்றிக் கவனித்து, அவர்களைப் போன்றே, அவர்களின் முன்னால் நாம் வெளிப்படுத்தினால், அவர்களின் உண்மையான முக மலர்ச்சியை அப்போது காண முடியும்! இந்தியா, பாக்கிஸ்தான் முதலிய நாட்டவர்கள், இரு கைகளைக் கொண்டு ‘முஸாஃபஹா’ செய்வார்கள். அதுவும், பட்டும் படாமலும், ஒப்புக்காகச் செய்வது போல் இருக்கும். இறுக்கமாகச் செய்யும்போதுதான் நட்பு வலிமை பெறும்.
ஒவ்வொரு மொழிக்கும் இருப்பது போல அரபிக்கும் ‘லஹ்ஜா’ (Style) உண்டு. அது நாட்டுக்கு நாடு வேறுபடும். நல விசாரிப்பைப் பொருத்தவரை, சஊதிகள், கத்தரிகள், குவைத்திகள், "கைஃப் ஹாலக்?” என்பதை இலகுவில் புரிந்து கொள்வார்கள். அதே அரபி இனத்தவர்களான லெபனான், சிரியா, இராக், ஃபலஸ்தீன் ஆகிய நாட்டவர்கள், அதே நலன் விசாரிப்பை, “கீஃப் ஹாலேக்?” என்று நீட்டுவார்கள். எகிப்தியர், “ஜெய் ஹாலேக்?” அல்லது “ஜெய்யக்?” என்பார்கள்.
அவர்களின் அடுத்த நாடான சூடான் நாட்டவர், அதே முறையினை ஒன்றல்ல, பலமுறை கேட்டு, அதிலிருந்து விடுபட ஒரு மூன்று நிமிடமாவது ஆகும். அந்த அளவுக்கு இருக்கும் அவர்களின் விசாரிப்பு! சூடானிகள் தமக்குள் நலன் விசாரிப்பைச் செய்யத் தொடங்கும் முன்பு, shake hand செய்வதற்கு முன்பு, தமது வலக் கையை மற்றவரின் நெஞ்சுக்கும் தோள் புஜத்திற்கும் இடையில் வைப்பார்கள். மேலதிகமாக ஒரு shake hand. அதே முறையை நாம் கடைப்பிடித்தால், நம்மை மெச்சுவார்கள். எல்லாவற்றுக்கும் முதலாவதாக, “அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற முகமன் கண்டிப்பாக இருக்கும்.
அரபியல்லாத பிற நாட்டவர்கள் சஊதி மற்றும் பிற அரபு நாடுகளில் வேலை பார்க்க வந்தவர்கள் இஸ்லாம் மார்க்கம் அதன் தூய வடிவில் பின்பற்றப்பட்டும், உபதேசம் செய்யப்பட்டும், இஸ்லாமிய வாழ்வு நெறியின் அருமையை உணர்ந்து, இஸ்லாத்தைத் தழுவுகின்றார்கள். அதைத் தொடர்ந்து, முழுமையான வாழ்க்கை நெறியைப் புரிந்து வாழத் தொடங்குகின்றார்கள்.
‘தஅவா’ சென்டர்கள் வழியாக இஸ்லாமிய அறிமுகம் கிடைக்கப்பெற்று, முறையாக அதைத் தன் வாழ்க்கை நெறியாக்கிக்கொண்ட பலரை உண்மையான முஸ்லிம்களாகப் பார்த்து வியந்துள்ளேன் நான். முஸ்லிமாக மாறிச் சில மாதங்களே ஆன ‘அஹ்மத்’ என்ற பிலிப்பைன் நாட்டுச் சகோதரர், அந்த வாரப் பயிற்சிக்காக வந்தவர் கையில் கட்டுப் போட்டவராக வந்தார்! “என்ன நடந்தது?” என்று விசாரித்தபோது, “Every thing from Allah” என்று பதிலளித்து, என்னை வியப்பில் ஆழ்த்தினார்!
அரபு நாட்டு வாழ்க்கையால், நாம் பல பயன்களைப் பெற முடிந்தது. இஸ்லாம், ஈமான், ஓரிறை நம்பிக்கை போன்ற கொள்கைகள் அவற்றின் எதார்த்த நிலையில் பின்பற்றப் பெற்றதை நாம் கண்கூடாகக் காண முடிந்தது அங்கே. இஸ்லாத்தின் அறிமுகம் கிடைத்து, அதன் மீது ஆர்வம் உண்டாகி, ஈடுபாட்டுடன் அதன் கொள்கைகளைக் கற்று, அல்லாஹ்வின் நேசத்திற்கு உரியவர்களாக மாறிய ஆயிரக் கணக்கானோரை அங்கே காண முடிந்தது.
1977 ஆம் ஆண்டில் சஊதிக்கு வந்து, கடினமான பணியில் அமர்த்தப்பட்டு, “இது நமக்கு லாயக்கில்லை; இரண்டாண்டு ஒப்பந்தம் முடிந்தவுடன் இந்தியாவுக்குத் திரும்பிவிட வேண்டியதுதான்” என்று எண்ணிய எனக்கு, முப்பதாண்டுகள் எப்படிக் கழிந்தன என்பதை மீள்பார்வை செய்து பார்த்தபோது, ‘இது அல்லாஹ்வின் ஏற்பாடு’ என்பதை மட்டும் எனக்குள் கூறி, ஆறுதல் அடைந்தேன்.
அரபு மொழி, அரபுகளின் பண்பாடு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டு இருந்த உண்மை நிலையால், அந்த நாடு என் இதயத்தில் இடம் பிடித்ததை இன்றும் உணர்ந்து பார்த்து, நெஞ்சார்ந்த நன்றியை இறைவனுக்குக் கூறி, ஆறுதல் அடைகின்றேன்.
அல்ஹம்து லில்லாஹ்!
அதிரை அஹ்மது




